[ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்!

February 17, 2016

ஹாஸன் ரட்வான் அவர்கள், லண்டனில் உள்ள இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் பதினைந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். முஸ்லீம் குழந்தைகளுக்காக, நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இஸ்லாம்/கடவுள் என்பவற்றைப் பொறுத்தவரை தன்னை ஒரு அறியவொண்ணாக் கொள்கையாளன் (=அக்நோஸ்டிக், agnostic) என விவரித்து, விரித்துக்கொள்கிறார்.
Screenshot from 2016-02-17 15:10:02
தன்னுடைய சுயசரிதையை, பளிச்சிடும் நேர்மையுடன் எழுதியிருக்கிறார் – அது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.

-0-0-0-0-0-0-

மாதவன் சேகர் எனும் அண்மையில் அறிமுகமான நண்பர் ஒருவரால் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு இணையக் கட்டுரை இது; இதனை எழுதியவர், மேற்கண்ட ஹாஸன் ரட்வான்: (Muslims can reinterpret their faith: it’s the best answer to Isis –  Hassan Radwan)

இம்மொழிமாற்றத்தில் சில  திருத்தங்களை, நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான். மாதவன் சேகர் அவர்களுடைய உதவிக்கு என் நன்றி.

-0-0-0-மொழிமாற்றம் ஆரம்பம்-0-0-0-

முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்!
[ஹாஸன் ரட்வான்]

…ஒரு மதமானது, காலப் போக்கில் தோன்றி வளரவும், மாறவும், முதிரவும்  வேண்டும்; இஸ்லாமும் அத்தகையதே. அடிப்படை வாதிகள் உலகத்தை நேசிக்கும் இஸ்லாமின் கருவை இல்லாமல் செய்கிறார்கள்…

அடிப்படைவாதிகளை எதிர்கொள்ள, இஸ்லாமியமத மறுபுரிதல், சீர்திருத்தம், சீரமைப்பு பற்றிய பேச்சு,  இக்காலங்களில் அடிபடுகிறது.

குரானையும், சுன்னாவையும் இன்றைய பார்வையில் காண, அதே வாசகங்களை புதிய அர்த்தங்களில் புரிந்து கொள்ள விழைவது என்பது, அதே அடிப்படைவாதிகளுக்கு அடி பணிவதே ஆகும். நம்முடைய இப்படிப்பட்ட விழைவினால் –  அவர்கள்  வார்த்தைச் சிந்து விளையாடி கூட்டி பெருக்கிப் பார்த்தால் அது இதுதான் என்று அவர்கள் சொல்லி சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப் பட்டது என்று முத்திரையும் குத்தி தம் ஆட்டத்தை தொடர ஒரு மேடை போட்டுக் கொடுக்கிறோம்; இறை வசனம் என்று ஜல்லி அடிக்கக் கை கொடுக்கிறோம்.

நான் சொல்வது என்னவென்றால் – முஸ்லிம்களாகிய நாம்,  தைரியமாக, முன்னேற்றப் பாதையில் காலடி வைத்து  நடக்க ஆரம்பிக்க வேண்டும்; அதாவது – குரானும், சுன்னாவும் மாற்றப் படக்கூடியவை தான் என்று. இது ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கும் விஷயம்தான். சிறு வயதிலிருந்தே “குரான் இறைவன் வாக்கு — அதனால் தவறற்றது — திருத்தப் படக்கூடாதது” என்று  கேட்டுக் கேட்டு, நம்பி, மீண்டும் மீண்டும் சொல்லி வந்த நம் அனைவருக்கும், இதனைக் கேட்டால் அதிர்ச்சி வரும் தான்.

ஆனால் இது,  இப்படிக் கூறப்படுவது ஒன்றும் புதிதல்ல – காலம் காலம் காலமாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லி வந்தது தான். அப்துல் கரீம் ஸௌரௌஷ் (இரான் ), ஸையத் அஹமத் அல் -க்வப்பாஞ்ஜி (இராக்), ஸையீத் நஷீத் (மொராக்கோ) போன்ற இஸ்லாமியச் சான்றோர்கள் சொன்னது தான்.

நஷீத் தம் அண்மைய நூலில் (மத நம்பிக்கைக்கான சுதந்திரம்: தனி மனிதனின் சுதந்திரத்துக்கான அடிப்படை) சொல்வது:

குரான் – இறைவன் தம் வாயால் சொல்லக் கேட்டு எழுதியது அல்ல; வஹியாக வந்த கருத்துக்களை நபி தம் புரிதலின் படி, நினைவில் கொண்டது படி, அவர் சொல்லக் கேட்டு இன்னொருவர் தம் நடையில் எழுதியது தான். இறைவன் கொடுத்தது கோதுமை மாவு தான்; அதை ரொட்டியாகச் சுட்டது மனிதன் கை வண்ணம் என்னுமாப்போலே. அதாவது இறைவனின் கருத்துக்களைப் பார்; மனிதனின் வார்த்தைகளை மறுபார்வை செய்வது தேவை என்று சொல்வது தவறல்லதானே.

இவ்வாறு பார்ப்பது ஏன் அவசியம் ஆகிறது?  ‘இறைவன் கருத்துக்கள்’ என்ற சிறு வட்டத்திலிருந்து நாம் வெளியே வந்தால் சரியான வார்த்தைகளும் தவறான வார்த்தைகளும் (இறை வசனம் என்று) ஒன்று  போல் பார்க்கப் பட மாட்டா… பொது அறிவுடன் நோக்குபவருக்கு, தவறாகப் படும் வாசகங்களை உதறிவிடுதல் சாத்தியம்.

இதற்கு இப்படிப் பொருள் சொல்லாலாமோ என்று சுற்றி வளைத்து, பகுத்தறிவுக்கு ஒத்து வராத கருத்துக்களை தூக்கிச் சுமக்கும் வேலை, நமக்கு அவசியமேயில்லை.

இறைவனின் கருத்துக்கள், மனிதன் வார்த்தைகளில் — என்று வேறு படுத்திப் பார்க்கும் வரை, அடிப்படைவாதிகளை எதிர்கொள்ள சரியான ஆயுதமான பகுத்தறிவு என்பதை நம்மால் கையில் எடுக்க இயலாது. குரானிலும் சுன்னாவிலும் பிழைகள் இருக்கலாம் என்பதே இஸ்லாமை, இந்த அடிப்படைவாதப் பிழைகளின் சிறையிலிருந்து மீட்க உதவும்.

இஸ்லாம் என்பது ஒரு ஆழி; அது குரானிலும் சுன்னாவிலும் மட்டுமே அடங்காது. அவற்றையும் மீறி பொருள் கொள்ள வேண்டிய மதம், அது; உலகத்தின் பெரு மதங்களில் ஒன்று. அதிலும் இஸ்லாமியர்களின் பல நூற்றாண்டுகளின் பட்டறிவும், புரிதலும், நம்பிக்கைகளும் தோய்ந்து உள்ளன.

மதம் என்பது மனிதன் தம்மை மீறிய அரிய பெரிய அறியாத தம் கண்ணுக்கு அப்பாற்பட்ட இறையைத் தேடுவதாகும். மனிதன் இந்த கொடிய உலகத்தில் தனித்திருப்பதாக அச்சம் வரும் போது ஒரு அன்பை,  ஆதங்கத்தை, வலியைக் குறைக்கும் ஆறுதலை, கவலையைப் போக்கும் மருந்தை தேடுவதே இறைதேடுதல் அல்லது மதம் ஆகும்.

அது, காரண-காரிய விளக்கங்களை – பகுத்தறிவை, புறம் தள்ளுவது அல்ல: மாறாக அது, நம்மை பகுத்தறிவுடன் இயைந்து பணியாற்ற வைப்பது.

ஒரு சாதாரண மனிதனைப் பாருங்கள்: இஸ்லாம் என்றல்ல, எந்த மதத்தை சார்ந்தவனாக இருப்பினும் அவன் தம் மத நூல்களைக் கற்றானில்லை. மதத்தில் புதைந்துள்ள ஆழ்ந்த கருத்துக்களைப் புரிந்து கொண்டவனல்லன் அவன்; அவனுக்கு இஸ்லாம் என்பது அவன் பெற்றோர் சொன்னது தான்: அன்பு, ஈகை, இரக்கம், பிறருக்கு உதவுதல்; கொடை; பிறருடன் சேர்ந்து வாழ்தல்; நமாஸ் மூலம் அமைதி காணல்; ஈத் கொண்டாட்டங்கள்; அவனைப் பொறுத்தவரை இஸ்லாம் அவ்வளவே.

இன்றைய அடிப்படை வாதிகள் இந்த இனிய இஸ்லாமை, ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளி அன்றைய சொற்களின் கட்டுக்குள் தள்ளப் பார்க்கிறார்கள்; அதன் பின் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியை, அறிவியல் முன்னேற்றங்களை, மனித நேயத்தை புறம் தள்ளப் பார்க்கிறார்கள்.

மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் வழி காட்டுவதான தனிச் சிறப்பை, இஸ்லாமில் இல்லாமல் ஆக்கி சிதைக்கப் பார்க்கிறார்கள். நாளோட்டத்தில் உலக மாற்றங்களை எதிர் கொண்டு சிறு சிறு மாற்றங்களை உள்வாங்கி முன்னேறும் தன்மை இல்லாமல் செய்கிறார்கள்.  இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப நோக்காமல் – அக்விதா  வகை அடிப்படைவாதக் கட்டளைகள், ஹுதூத்  வகை தண்டனைகள் மட்டுமே இஸ்லாம் என்று எண்ணச் செய்கிறார்கள்.

இஸ்லாமோ அல்ல்து எந்த ஒரு மதமோ செய்வது அல்லது செய்யவேண்டியது நல்ல மனிதனை உருவாக்குவது தான். பிறரிடம் அன்பு, பரிவு, இரக்கம் காட்டுதல்; ஈகை, கொடை; தொழுகையில் அமைதி நாடுவது, சமுதாயத்தில் சேர்ந்து வாழ்தல்; இறைவனைத் தேடுதல், இறைவனிடம் இறைஞ்சுதல், வாழ்வின் ஓட்டத்தில் துணை நாடல்.  உண்மையில் இஸ்லாம் இது தான். சாமானியனுக்கு என்றல்ல, அனைவருக்கும் இஸ்லாம் இதுதான்; அதை அடிப்படை வாதிகள் அழிக்க  விடாமல் தடுக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன்:

குரானும் திருத்தப்படலாம்; தவறில்லை. ஆனால் இஸ்லாம் காக்கப்பட வேண்டும்…

இதனால் அடங்குவது, ஒடுங்குவது, அழிவது இந்தத் தீவிரவாதிகளேயன்றி இஸ்லாம் அல்ல. நமக்கும்,  தேவையேயற்ற ஒரு சுமை குறையும்; இந்த கால கட்டத்தில் பகுத்தறிவுக்கு ஏற்ப மனிதனுக்கு வழி காட்டுவதும் உதவி செய்வதும் ஆன கருத்துக்களை காத்துக்கொள்ள, பின்பற்ற இயலும்; அவ்வாறு காரணகாரிய ஆய்வுக்கு அப்பாற்பட்ட ஒவ்வாத கருத்துக்களை விட்டு விட முடியும்.

ஒன்று சொல்கிறேன்:

தாம் மனிதனுக்குக் கொடுத்த மூளையைக் கடாசி விட்டு குரானிலும், சுன்னாவிலும் சொன்னதாகச் சொல்வதை ஏனென்று கேட்காமல் பின்பற்று – என இறைவன் சொல்லவில்லை. இறைவன், தாம் மனிதனுக்கு கொடையாக வழங்கிய மனதைப் பயன் படுத்தாமல், ரொபாட் எந்திரம் போல் இயங்கச் சொல்லவில்லை.

இஸ்லாம் சொல்வது என்றும் மாறாத நிலைத்திருக்கும் உண்மை; அதை மாற்றக் கூடாது என்று கோஷம் போடுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான்: இஸ்லாம் தாங்கி நிற்பது என்பது நிலைத்திருக்கும் உண்மையையே; ஆனால், அது நம் முழுப் புரிதலுக்கு அப்பாற்பட்டது; அதை நாம் நமக்கு இயன்ற வரையில் தான் புரிந்து கொள்ள முடியும். இப்போது நான் சொல்வதும் அதுவே.

ஆதலால்தான் மதம் நாளோட்டதில் மாற்றங்களை தாங்கிக்கொள்ளவேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறன்றி,  அது மாறாதவொன்று என்று சொல்வது அறியாமையேயன்றி வேறல்ல.

நாம்,  மனிதர்களின் பகுத்தறியும், மனிதநேய மனப்பான்மைக்கு நம் வாசலைத் திறந்து வைப்போமாக!

-0-0-0-மொழிமாற்றம் முடிந்தது-0-0-0-
பிற, தொடர்புள்ள பதிவுகள்:

3 Responses to “[ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்!”

  1. பொன்.முத்துக்குமார் Says:

    // குரான் – இறைவன் தம் வாயால் சொல்லக் கேட்டு எழுதியது அல்ல; வஹியாக வந்த கருத்துக்களை நபி தம் புரிதலின் படி, நினைவில் கொண்டது படி, அவர் சொல்லக் கேட்டு இன்னொருவர் தம் நடையில் எழுதியது தான். இறைவன் கொடுத்தது கோதுமை மாவு தான்; அதை ரொட்டியாகச் சுட்டது மனிதன் கை வண்ணம் என்னுமாப்போலே. அதாவது இறைவனின் கருத்துக்களைப் பார்; மனிதனின் வார்த்தைகளை மறுபார்வை செய்வது தேவை என்று சொல்வது தவறல்லதானே. //

    // குரானும் திருத்தப்படலாம்; தவறில்லை. ஆனால் இஸ்லாம் காக்கப்பட வேண்டும்…//

    இப்படியெல்லாம் சொல்வதிலிருந்தே தெரியவில்லையா இவன் போலி இஸ்லாமியன் என்று ? இஸ்லாமிய வேடந்தாங்கிய யூதனோ, அமெரிக்கனோ, ஆர்.எஸ்.எஸ்-காரனோ பார்ப்பனனோ-தான் இவன்.

    • vignaani Says:

      வார்த்தைகள் எவருடையது என்பதை விட — யூதனோ, RSS காரனோ, பார்ப்பானோ என்று பார்க்காமல், — என்ன சொல்கிறார் என்று கவனித்து, உள்வாங்கி, ஒப்புக்கொள்ளக் கூடியதா அல்லாததா என்று பார்க்கக் கூடாதா?

      2. குரான் ஏக இறைவன் – அல்லா- சொல்லியதாக ஜிப்ரேல் என்ற ஏஞ்சல் (இந்த ஏஞ்சல் சில முறை மனித உருவில் வந்ததாகவும், பொதுவாக உருவம் இல்லாமல்) வந்து சொல்லிய வசனங்கள் என்று நபி சொல்லியுள்ளார்; அதை ஹடீதுகளும் இஸ்லாமியர்களும் மறுக்கவில்லை. நபி அதிகம் எழுதப் படிக்கத் தெரிந்தவர் இல்லை; எனவே அவர் ஜிப்ரேல் சொன்ன வசனங்களை நினைவில் வைத்துக்கொண்டு கதீஜா அல்லது ஆயிஷா அல்லது வேறு யாரையாவது எழுதச் சொல்வது வழக்கம். இது ஹடீதுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

      Muhammad used many men, functioning as scribes, to write down these assumed revelations. Different scribes wrote down different revelations. `Abdullah Sarh was one of Muhammad’s scribes. (http://www.answering-islam.org/Quran/Sources/sarh.html)

      The first Qur’anic revelation came to Muhammad around the year 610. Muhammad delivered many more verses to his scribes and companions for memorization and recording over the next two decades. These verses were written on stalks of palm leaves, bones of dead animals, flat stones, and other materials. There was no complete manuscript of the Qur’an during this time. (http://www.answeringmuslims.com/p/quran.html)

      குரானின் சரித்திரம் பற்றி பல பதிவுகள் உள்ளன. அவற்றை ஓரளவு படித்தாலே “அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் காக்கப் பட்டு வரும் நூல்” என்பது உண்மை இல்லை என்று விளங்கும். இந்தப் பின்னணியில் தான் ரட்வான் சொல்லியிருப்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

      • பொன்.முத்துக்குமார் Says:

        தெய்வமேஏஏஏஏ என்னை மன்னிச்சிடுங்க :))


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s