அமெரிக்காவில் சகிப்புத்தன்மை அதிகம்தான்: சராசரி தகவல் தொழில்நுட்பதட்டச்சு மோசடி குமாஸ்தாவிய நிரூபணம் (அப்பாடா!)

December 19, 2015

…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)

-0-0-0-0-0-0-0-

(கடந்த பதிவின் தொடர்ச்சி…) சரி, ஐயன்மீர் – ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு தெளிவுபடுத்திவிடவேண்டும்.

இந்த வேலைவெட்டியற்ற வெறும் ராமசாமியாகிய நானும், ஒருகாலத்தில் அந்த அமெரிக்கா கிமெரிக்காவெல்லாம் போய் வேலைகீலை எல்லாம் செய்திருப்பவன் தான் – அந்த எழவெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருவருடம் போலத்தான் என்றாலும்…  இந்தத் தன்னிலை வாக்குமூலத்தை, அந்த ‘பெயரிலி-அனாமதேயக் கோழை‘க்கு ஒரு சிறிய பதிலாகக் கொள்ளவும். (normally, I do not encourage these anonymous cowards, though!)

அதனால்தான் மேற்கண்ட & கீழ்கண்ட விஷயங்களைக் கொடுக்க (கொடுக்கு?) முடிந்திருக்கிறது; அரவிந்தன் கண்ணையன் அவர்கள் போல அமெரிக்க சகிப்புத் தன்மையின் மேன்மைக்கு ஜே போட முடிந்திருக்கிறது. என்ன இருந்தாலும், அவர் என்னுடைய பேராசான் அல்லவா?

-0-0-0-0-0-0-0-

இந்தியாவிலிருந்து அமெரிக்கா போய் ஏகத்துக்கும் ‘ஸெட்டில்’ ஆகியிருக்கும் ஒரு சராசரி தகவல் தொழில் நுட்பக் குளுவான் ஜந்து (இனிமேலிருந்து #சததொநுகுஜ) கொஞ்சம்கூடக் கூச்சமோ நாச்சமோ இல்லாமல், படு அமெரிக்கையாகவும் சகஜமாகவும் செய்யும் மோசடிகள் பலப்பல; அவற்றில் சில கீழே:

மோசடி #1: ஊதிப் பெருக்கவைக்கப்பட்ட அல்லது அடிப்படையிலேயே பொய்யான சுவவிவரணை ஆவணம்

பல பத்தாண்டுகள் இந்த #சததொநுகுஜகள் நடுவே இருந்தவன் என்கிற முறையிலும், இந்த ஐடி அவியல் எழவுக்கு அப்பால், சிலபல துறைகளிலும் பணி(!)யாற்றியிருக்கிறேன் என்கிற முறையிலும் நான் சொல்வேன் – இந்தப் பொய் பொய்யாகப் பலப்பல பக்கங்களுக்கு எழுதித் தள்ளும் அவர்களுடைய பயோ-டேட்டா(!) அல்லது ரெஸ்யூமே(!!) என்பது இந்த ஜந்துக்களால் செய்யப்படும் முதல் மோசடி; இல்லாததையும் பொல்லாததையும் எழுதி, செய்யாதவற்றைச் செய்ததாகச் சொல்லி எழுதுவது என்பது ஒரு கலை – இதில் #சததொநுகுஜக்கள் ஜகஜ்ஜால ஜோதி ஸ்வரூபர்கள்; மேலும் இந்தப் பொய்களையும் கூடச் சுத்தமாகச் சொல்லத் தெரியாது. ஆங்கிலத்தில் வார்த்தைக்கு ஆயிரம் தவறுகள், உளறல்கள். தமிழிலோ, அல்லது பிற தாய்மொழிகளிலோ எழுதுங்களேண்டா முட்டாக்கூவான்களே என்றால், அது அவர்களுடைய ஆங்கிலத்தை விடவும் படுமோசம். (எனக்குத் தெரிந்து #சததொநுகுஜ அல்லாமலிருந்தாலும் படுமோசமான தமிழில் மகாமகோ பிரபலமாக எழுதுபவர் என் ஆருயிர்ப் பேராசான் எஸ்ரா அவர்கள்தாம்! இப்போது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது – எஸ்ரா அவர்களின் சராசரி வாசகனும் ஒரு #சததொநுகுஜ வாகத்தான் இருக்கவேண்டுமென்று!)

…என்னுடைய அனுபவத்தில், குறைந்த பட்சம் 95% #சததொநுகுஜ ரெஸ்யூமேக்கள் சிறிய பொய்களையோ, பெரிய புளுகுகளையோ உள்ளடக்கியுள்ள  அசிங்கமான மோசடிகள்தான். பார்த்த அரை நிமிடத்திலேயே தெரிந்துவிடும், அவைகளின் ஜிகுஜிகா. இளித்துவிடும் அதனை எழுதுபவர்களின் பிரதாபம்.

சரி. சுமார் 35 வருடங்களுக்கு மேல் கண்டமேனிக்கும் கண்டதுறைகளில் கபடி ஆடியிருந்தாலும், என்னுடைய சுவவிவரணை ஆவணம் எப்போதுமே ஏ4 காகித அளவில், 12 பாயின்ட் எழுத்துகளில், இரண்டு பக்கங்களைத் தாண்டியதில்லை; முக்கிமுக்கி எழுத முயன்றாலும்  – என் சுயப் பிரதாபம் அவ்வளவுதான். ஏனெனில், நான் செய்ததைச் சொல்வேன். செய்யாததைச் சொல்லமாட்டேன். எனக்குத் தெரியாத விஷயங்களை தெரியாது என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. எனக்கு ஒரு விஷயத்தில் ஞானம் இல்லையென்றால் உடனடியாக மனம் நொந்து என்னை ஒரு முட்டாள் எனக் கருதிக்கொண்டு, அதனைச் சரி செய்வதற்காக திடீரெக்ஸ் ஞானம் வந்ததுபோல் நிரவிக்கொண்டு மினுக்கிக்கொண்டலைவதில்லை.  இப்படியெல்லாம் ஒரு மனிதன் இருப்பது ஒரு சாதாரணமான, பெரிய விஷயமே இல்லையென்றாலும் இந்த அற்ப விவரணை மோசடியை மனச்சாட்சியேயில்லாமல் எப்படி இந்த #சததொநுகுஜக்கள் செய்கிறார்கள் என்பது எனக்குப் பொறுக்கவே பொறுக்காத விஷயம்.

இது ஒருபுறமிருக்க – இந்த விவரணை எழவானது, வருடாவருடம் அல்லது வேலைக்குவேலை,  #சததொநுகுஜக்களால் ‘மேம்படுத்துப்படுவது’ என்பது தொடரும் சோகம், வேறென்ன சொல்ல!

இப்படி இந்தக் குளுவான்களின் அடிப்படையே அயோக்கிய மோசடியாக இருக்கும்போது, எப்படித்தான் ‘சமூக அவலங்களைச் சாடும்’ ஔட்ரேஜ் அறச்சீற்ற ஆவேஷ எழவுகளை இந்த அற்பதண்டங்கள், இணையத்தில் தொடர்ந்து செய்யமுடிகிறதோ! இது ஒரு பெரிய ஆச்சரியம்தான்!

இந்த முதலாம் மோசடி மூலமாகத்தான் இரண்டாம் மோசடி சாத்தியமாகிறது. ஏனெனில் இந்த மோசடி#1யைச் செய்பவர்களின் பெரும்பாலோர் தான் அமெரிக்க சேவை செய்யச் செல்பவர்கள்.

மோசடி #2: ஹெச்1பி விஸா விண்ணப்பம் (அமெரிக்காவில் குறிப்பிட்ட வருடங்களுக்கு, குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக, தற்காலிகமாக உயர்தரவேலை செய்யக் கிடைக்கும் உரிமம்; அதாவது temporary high-skilled worker என மினுக்கிக்கொண்டு!)
இந்த அமெரிக்க விஸாவுக்காக, இந்த அமெரிக்கக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் குளுவான்கள் அவர்களுடைய சுய விவரணைகள் உட்பட பல ஆவணங்களை –  அவர்கள் வேலை செய்யும் (அல்லது செய்யப்போகும்) நிறுவனம் மூலமாக, அமெரிக்க அரசு அலுவலகம் ஒன்றிற்கு அளிக்கவேண்டும்; பொதுவாக, இதனை இந்த விஷயத்தில் ‘தேர்ந்த’ அமெரிக்க வழக்குரைஞர்கள் செய்வார்கள். இதனை, பெட்டிஷன் என்பார்கள் – அதாவது, வருந்தி வருந்தி -‘இந்தக் குளுவானின் சேவை, நாட்டுக்குத் தேவை!‘ என்கிற ரீதியில், இம்மானுடன் வந்தால்தான் அமெரிக்காவின் குறிப்பிட்ட ‘உயர் தர தொழில் வேலை’ செய்யப்படமுடியும் என்றெல்லாம்… என்ன அசிங்கமான பீலா இது!  அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒரு இந்திய தட்டச்சுக்குளுவானை விட்டால், அவர்களுக்கு வேறு நாதியே இல்லையா! மேலும் அம்மாதிரி அமெரிக்க ‘நாட்டுக்குத் தேவையான’ குறிப்பிட்ட வேலைகள் உண்மையாகவே உயர் தொழில் நுட்பம் சார்ந்தவையா??

இந்த மோசடியை நிறுவனங்கள் செய்கின்றன, குளுவான்கள் மனதாறச் செய்வதில்லை என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லமுடியாது. ஏனெனில், இது தொடர்பான ஆவணங்கள் சிலவற்றில் குளுவானின் கை நாட்டும் வேண்டும் – மேலும் இந்த ஆவணங்கள் அனைத்தும் குளுவான்களின் முதற்பொய்களின் மீதாகவே கட்டமைக்கப் படுகின்றன. ஆகவே இந்த ஜந்துக்களின் முழு ஒப்புதல் இல்லாமல் அவர்கள் சார்பாக மற்றவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள் என்றெல்லாம் மேலதிகமாகப் பொய் சொல்லமுடியாது.
மோசடி #3:  க்ரீன் கார்ட் விண்ணப்பம் (அமெரிக்காவில் வரைமுறையில்லாமல்/நிரந்தரமாகத் தங்கி வேலை செய்யக் கிடைக்கும் உரிமம் – lawful permanent residence (“green card”) through the employment-based preference)

இதற்கும் மேலதிகப் பொய்கள்; இதில் சுவையானது குளுவானிற்கு இந்த க்ரீன்கார்ட் கிடைப்பதற்காக பத்திரிகைகளில் கொடுக்கப் படும் மோசடி விளம்பரங்கள்.

அதாவது – வேலை இன்னதென்று சொல்லி, அதற்கேற்ற தகுதிகள் இன்னவையென்றும் சொல்லி (பொதுவாகவே இவை மிகச் சரியாக, இட்டுக்கட்டப்பட்ட குளுவானிய சரித்திரத்தின் மீது, அதன் தகுதிகளின் மீது மிகச் சாதுரியமாகக் கட்டமைக்கப்பட்டவை) இதற்கு அமெரிக்கக் குடிமக்கள் விண்ணப்பிக்க விளம்பரப் படுத்தப் படுபவை… ஆனால் இம்மாதிரி விளம்பரங்களைப் பார்த்தவுடனே இதற்கு வேறுயாரும் விண்ணப்பிக்க மாட்டார்கள்; அப்படியே விண்ணப்பித்தாலும் அவை ஏதாவது வெட்டிக் காரணம் சொல்லி தட்டிக் கழிக்கப்படும்.

இந்த விளம்பர முறைமையின் அடிப்படை/முக்கிய விசேஷம் என்னவென்றால் – இந்த அதிநவீன வேலையைச் செய்வதற்கு, இந்தக் குளுவானை விட்டால், அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு (ஏன், அமெரிக்காவுக்கே!) வேறு கதி மோட்சமேயில்லை என நிறுவுவதுதான்! (இந்த சமயத்தில் நான் விழுந்துவிழுந்து சிரித்து, என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன்!)

டட்ட டய்ங்க்… க்ரீன்கார்ட் கிடைத்துவிட்டது!

மோசடி #4: ஒரு வழியாக, அமெரிக்கக் குடிமகனாக வழிமுறைகள்

க்ரீன்கார்ட் காரனாகச் சிலகாலம் இருந்துவிட்ட பிறகு, வெகு சாதாரணமாகவே கிடைத்துவிடும், இந்தப் பொய்களின் மீதாகக் கட்டமைக்கப் பட்ட சொர்க்க வழி. இதிலும் சிலபல சிரிப்போதி சிரிப்புகள் இருக்கின்றன. ஆனால் இதனைப் பற்றியும் எழுத எனக்கு அயர்வாக இருக்கிறது. சந்தோஷப் படவும்.

(இந்த மேற்கண்ட வகையறா மோசடிகளெல்லாம் அமெரிக்காவுக்காக மட்டும் அல்ல – பிற நாடுகளின் சரணடைவதற்காகவும் செய்யப் படுகின்றன.

மோசடி புலம் பெயர்தலில், சுளுவான வெளி நாட்டு  வேலைகளுக்காக, சொகுசுகளுக்காகப் பொய் சொல்வதில், அவற்றுக்காக நாய் போல அல்லாடுவதில் – நம்முடைய சராசரித்தர மானுடத் திரள்களுக்கு ஈடுஇணையே இல்லை; மேலும், இவையெல்லாம் இந்தத் தட்டச்சுக் குளுவான்களால் மட்டுமே செய்யப் படுவதில்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: பொய்களைச் சொல்லி அகதிகள் எனக் காண்பித்துக்கொண்டு கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் ‘ஸெட்டில்’ ஆகும் பலப்பல ஸ்ரீலங்கா தமிழ் வம்சாவளியினர். இது ஒரு நகைச்சுவை மிக்க சோகக் கதை.)

-0-0-0-0-0-0-

மேற்கண்ட சுயதிரித்தல்களை, அடிப்படைப் பொய்மைகளை, இட்டுக்கட்டல்களை, கயமைகளை – மிகமிகப் பெரும்பான்மை தட்டச்சுவீர தமிழ் குமாஸ்தாக்கள், வெகு சுலபமாக, ஒருவிதமான மனச்சாட்சிக் குத்தல்களுக்கும் இடமேயில்லாமல், எந்தவிதமான மத, மொழி, ஜாதி வேறுபாடில்லாமல் செய்கிறார்கள். ஏழை பணக்காரன் என்றெல்லாம் இல்லாமல், சோஷலிஸ பூர்வமாகவே செய்கிறார்கள்.

பெரும்பான்மை என்ஆர்ஐக்கள் (=#சததொநுகுஜக்கள்) மனதாறச் செய்திருக்கும் (+ தொடர்ந்து செய்யும்) இந்த அயோக்கியத்தனத்தை நான் மனமாற வெறுக்கிறேன். (அதே சமயம், இம்மாதிரி அற்பத்தனங்களைச் செய்யாதவர்களை, நேர்மையர் மேலவர்களைப் போற்றுகிறேன் – அவர்கள் என்னுடைய செல்ல என்ஆர்ஐகளாக இருந்துவிட்டாலுமே கூட! அரவிந்தன் கண்ணையன் அவர்களும் இந்த மேலோர்களின் ஜாதியைச் சேர்ந்தவர் என நம்புகிறேன்.)

ஆக, குமாஸ்தான் என்பது, அமெரிக்காவின் ஒரு அயோக்கிய உபதேசமாக இருந்தாலும், எவ்வளவு அழகானது, சகிப்புத்தன்மை மிக்கது! குமாஸ்தாக்களின் அனைத்து தகிடுதத்தங்களையும் பொறுத்துக்கொள்கிறது! இந்த எழவைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் விம்மி, எனக்குப் புல்லரிக்கிறது.

மறுபடியும், மறுபடியும் என்ன சொல்லவருகிறேன் என்றால் – இந்த அமெரிக்க  ஹெச்1பி விசாவுக்காக, க்ரீன் கார்ட் எழவுக்காக, அமெரிக்கக் குடிமகனாகி விடத் துடிக்கும் துடிப்புக்காக – தட்டச்சுவீர இந்திய குமாஸ்தாக்கள் புளுகும் அண்டப் புளுகுகள் அலாதியானவை. இதற்கு ஏதாவது விதிவிலக்குகள் என இருந்தால், அவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசை…

-0-0-0-0-0-0-

அதே சமயம், #சததொநுகுஜக்கள் தொடர்பான இந்த அற்பப் புளுகுகளைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை – மிக முக்கியமாக, சர்வ வல்லமை படைத்த அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு, இது எளிதே. ஆனாலும், அவைகள் இதனைச் செய்வதில்லை. இதற்கு ஒருகால், சாக்கடையில் ஏன் கல்லை விட்டெறியவேண்டும் எனும் மனப்பான்மை காரணமாக இருக்கலாம்.

அல்லது, அரவிந்தன் கண்ணையன் என்னை ஒருமுறை தேவையேயற்றுக் கிண்டல் செய்வது போல – ஜேனிட்டர் தொழில் போன்ற, அதிகம் உடலுழைப்பை மட்டும் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு எதிர்காலத்தில் மவுஸு வரும் பட்சத்தில் உபயோகமாக இருக்கும் என  #சததொநுகுஜக்களை அமெரிக்கா சேர்த்துக் கொண்டிருக்கலாம். ஏதோ ஒரு வகையில், இந்தக் குளுவான்கள் உலகத்துக்கு வெறும் பாரமாக இல்லாமல் ஏதோ செய்துகொண்டிருந்தால் சரி!

ஆனால், எனக்கென்னவோ இந்த அமெரிக்காவின் இந்திய குமாஸ்தா குடியேற்றத்தின் பின்னால் ஒரு பெரிய சதி வலை இருக்கும்போலப் படுகிறது. அமெரிக்காவின் அடிப்படைகளை இந்த #சததொநுகுஜக்களை வைத்து மகாமகோ ஆட்டம் காண வைப்பது நம் இந்திய உளவமைப்புகளின் கூட்டு சதியாக/குறிக்கோளாக இருக்கலாம். ரா, மொஸ்ஸாத் கூட்டுச் சதிதான் இது!

இன்னும் கொஞ்சம் யோசித்தால்,  இது ஹிந்துத்துவ சதிதான் எனவும் படுகிறது. பார்ப்பனக் குடுமி கொஞ்சம் இதிலும் நீட்டிக் கொண்டிருக்கிறதோ?  எங்கெங்கு காணினும் ஆரிய ஆர்எஸ்எஸ் பார்ப்பன-பனிய சதியடா!  :-(

எது எப்படியோ. அமெரிக்க ஜனநாயகத்தில், #சததொநுகுஜ சார்ந்த சராசரித்தனமும் அற்பத்தனமும் சகிக்கப்படுவதைப் போல, வேறெங்கும் சகிக்கப் படுவதில்லை – என்பதை, நிபந்தனையோ வெட்கமோ அற்று ஒப்புக்கொள்கிறேன். :-(:-(

QED.

ஆகவே, அரவிந்தன் கண்ணையன் அவர்களின் பதிவை, அவருடைய கொள்கை முடிவை (= இந்தியாவைவிட அமெரிக்காவில் சகிப்புத் தன்மை தாஸ்தீ; ஆகவே இந்தியாவின் சகிப்பின்மையால் வாடும் அனைத்துப் போக்கத்த இந்தியக் கூவான்களும் நிபந்தனையற்று அமெரிக்காவில் சரணடையவேண்டும்… …)  நான் ஒருமனதாக ஆமோதிக்கிறேன்.  என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். என் பேராசானோடு பொருத எனக்கு ஏலாது! :-(((

 

-0-0-0-0-0-0-0-0-

என்னுடைய படிப்பாளிப் பேராசான் மகாமகோ அரவிந்தன் ‘அமெரிக்க தேசபக்தன்’ கண்ணையன் அவர்களின் ஸெயின்ட் கான்ட்ரரியன் ‘எதிர்மறை’ சன்னிதானத்துக்கு, அவருடைய பிரதம  சிஷ்யகேடியான மறைகழன்ற அடியேனின், அன்பும் மரியாதையும் பிரமிப்பும் கலந்த எளிமையான காணிக்கைதான் இப்பதிவு…

ஸெயின்ட் கான்ட்ரரியன், அய்ன் ரேன்டியன், அனாத ரட்சகன், அபத் பாந்தவன், அமெரிக்க நாயகன், என் பேராசான்!

ஸெயின்ட் கான்ட்ரரியன், அய்ன் ரேன்டியன், அனாத ரட்சகன், அபத்பாந்தவன், அமெரிக்க நாயகன், என் பேராசான்!

அய்யா அரவிந்தன் கண்ணையரே, நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்களை வாழ்த்த வயதிருந்தாலும், வணங்கி மகிழ்கிறேன்!

இவண்:

வெ. ராமசாமி

வட்ட(=0) செயலாளர்

திராவிடகுமாஸ்தா முன்னேற்றக்ழகம்

எங்கும் குமாஸ்தா! எதிலும் குமாஸ்தா!! எதற்கும் குமாஸ்தா!!!

திராவிடம் லச்சியம்! குமாஸ்தான் நிச்சியம்!!

அண்ணன் அரவிந்தன்கண்ணையனார் தலைமையில் அணி திரள்வோம்!

குமாஸ்தாவேறுகளே வாரீர்! பொற்குவை தாரீர்!

-0-0-0-0-0-
ஒருமாதிரி தொடர்புள்ள பதிவுகள்:

4 Responses to “அமெரிக்காவில் சகிப்புத்தன்மை அதிகம்தான்: சராசரி தகவல் தொழில்நுட்பதட்டச்சு மோசடி குமாஸ்தாவிய நிரூபணம் (அப்பாடா!)”

  1. Unknown's avatar Anonymous Says:

    :)


Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *