மறுபடியும் ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத், ஸ்ரீரங்கப்பட்டணத்தின் ஜமா மஸூதி – சில குறிப்புகள், எண்ணங்கள்
August 25, 2015
“ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.
ஆனால் ஒருவன் உண்மையான முஸ்லிமாய் இருந்தால் அவன் பொய் சொல்லமாட்டான்,புறம் பேச மாட்டான்,அநியாயம் செய்யமாட்டான்,பெண்களை மதிப்பான்,ஏழைகளுக்கு உதவுவான்,பிற மதங்களை மதிப்பான்,மொத்தத்தில் அவனால் பிற மனிதர்களுக்கு,பிற உயிர்களுக்கு எந்த தொந்திரவும் இருக்காது என்பதை உறுதியாய் நம்புகிறேன்.ஆனால் நிறைய முஸ்லிம்கள் அப்படி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.நான் அப்படி இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.
உங்களுக்கு எந்த காஃபிர் பஃத்வாவும் நான் கொடுத்து விட வில்லை.நீங்கள் ஒரு மிக சிறந்த முஸ்லிமாக இருக்க தகுதியானவர் என்ற அர்த்தத்தில் தான் சொல்லியிருந்தேன்.தங்களின் மூலம் நான் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள உதவியமைக்கு மீண்டும் நன்றி.“
அன்புள்ள மொஹெம்மத்,
உங்கள் மறு-பின்னூட்டத்துக்கு நன்றி. தாங்கள் சர்வ நிச்சயமாக, ஒரு அரைகுறை அல்லர். உங்களைப் போன்ற ‘திறந்த நிலை’ மனப்பான்மை கொண்டவர்கள், எந்த மதத்திலேயும் கூட அபூர்வம். உங்களைப் போன்றவர்களுடன் (நிறைய இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது) உரையாட வாய்ப்பு கிடைத்தது என் நல்லூழ்தான்.
தங்களைப் புண்படுத்தவேண்டும் என்று நான் எதையும் சொல்லவில்லை. மூளையற்றவர்களுடன், சுயசிந்தனையற்றவர்களுடன் பொருதிப் பொருதி ஏற்பட்ட அயர்வாலும் அலுப்பினாலும், உங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாததினாலும் ஏற்பட்ட தொனி அப்படி இருந்திருக்கலாம். ஆனால் நான் எழுதுவதில் இயல்பாகவே(!) கொஞ்சம் காரத்தன்மை அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்தேயிருக்கிறேன். எனக்கு வயதாகிறதேயொழிய விவேகமேயில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் – இப்போதைக்கு என்னை திருத்திக்கொள்வதாக இல்லை.
-0-0-0-0-0-0-0-
எல்லா மதங்களிலும், மக்கள்திரள்களிலும் இருப்பதுபோலவே – இஸ்லாமிலும் பெரும்பான்மையினர் சடங்குகளைச் செய்யும் சராசரி மக்களே. இவர்கள், தங்களுடைய சாதாரண வாழ்க்கைகளை ஆற்றொழுக்கு போல நடத்திச் செல்பவர்கள். உலகத்தின் மீது, சக மக்களின் மீது – ஏன் தங்கள் மீதேகூட – ஒருவிதமான மிகைஎதிர்பார்ப்பையும் வைக்காத ஜீவன்கள். தன்னளவில் அமைதியானவர்கள்.
ஆனால், இவர்களை வழி நடத்திச் செல்லும் ஸ்திதியில் உள்ள மத்தியதரவர்க்கத்தினரும், படைப்பாளிகளும், சான்றோர்களும், மற்றபடி வாழ்க்கையை வசதியாக நடத்திச்செல்லும் நிலையில் இருப்பவர்களும் – பரந்துபட்ட மக்களை (மேற்கண்ட முதல் பிரிவினர்) அரவணைத்துக்கொண்டு, அவர்களையும் மேன்மைப் படுத்தவேண்டும் என நினைக்கிறேன்.
இந்த வர்க்கத்தினர் – உலக ஞானமும் கருணையும் சார்ந்த தலைமையை அளிக்கவேண்டும் – அவற்றின் மூலமாகப் பொருளாதார வளர்ச்சியையும், கலாபூர்வமான உச்சங்களையும், சுபிட்சத்தையும் அளிக்க விழையவேண்டும் என மனதாற விரும்புகிறேன். (இவற்றை நான் ஒருவிதமான மேட்டிமைத்தனத்துடனும் சொல்லவில்லை; உலகவாழ்க்கை நியதி என்றுதான் இதனை நான் புரிந்துகொண்டிருக்கிறேன்; மேலும் நான் பன்முகத்தின், பல்வேறு வரிசைகளின், பலவிதமான தராதரங்களின், பல்வகைக் காரணிகளின்/தொகுதிகளின் உபாசகன்; அவற்றின் தேவையை உணர்ந்திருப்பவன். வித்தியாசங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை போரடிக்கும் என நினைப்பவன்!)
… ஆக – நானும் நீங்கள் சொன்னதுபோலத்தான், தரமான முஸ்லீம்களின் கல்யாணகுணங்களாக அவை இருக்கவேண்டும் என நினைக்கிறேன்; அதற்கு மேல் வரலாறு, விஞ்ஞானம், கணிதம், வான சாஸ்திரம், தத்துவம், கலைகள் போன்ற சகல துறைகளிலும் ஆழமும் வீச்சும் நிரம்பிய தேர்ச்சி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். தேவையற்ற மதம்முதல்வாதத்தை விட்டொழிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஏனெனில் இஸ்லாமின் அறிவியல் பாரம்பரியம் பெரிது. அதன் கேள்விகேட்கும் முறைமைகள், சட்டகங்கள் அழகானவை. இஸ்லாம் மார்க்கம் சார்ந்துமே கூட எவ்வளவோ மகாமகோ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்; இன்னமும் பலப்பல துறைகளிலும் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பாரம்பரியம் சார்ந்த உள்ளுலக மதம்/இறை சார்ந்த நம்பிக்கைகளையும், வெளியுலகச் செயல்பாடுகளையும் பிரித்துத் தொகுத்து (separation of concerns + integration of various cultural facets into a material worldview) வடிவமைத்துக்கொள்கிறார்கள். (எனக்குத் தெரிந்து) அவர்கள் முரண்பாடுகளால் அவதிப்படவில்லை. இம்மாதிரி விஷயங்கள் எப்போதுமே சாத்தியமாக இருக்கின்றன என்பது ஒரு அழகான விஷயம்.
இன்னொரு விஷயம்: மற்ற எல்லா மதங்களிலும் இம்மாதிரி கல்யாண குணங்களின் கலவை சாத்தியம்தான். நடந்துகொண்டிருக்கும் உலக நியதிதான்.
கொஞ்சம் யோசித்தால் – காலமும் பருப்பொருட்களும் தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்டுக்கொண்டு இருப்பதுதான் ப்ரபஞ்ச நியதி, ப்ர்ஹ்ம்மம், அல்லாவின் கருணை… … எல்லாமல்லவா? எப்படியும் இன்னமும் சில பில்லியன் வருடங்களில் முழுவதுமாகவே சூரியனால் மகோன்னதமான மறுசழற்சி செய்யப்பட இருப்பவைதாமே நமது உலகமும் நம் சந்ததியர்களும்!
…இருந்தாலும் – நம்முடைய உலகம் துள்ளிக் குதித்துக்கொண்டு மகத்தான மேல் நோக்கிய பாய்ச்சல்களில் தத்துவார்த்த உச்சங்களை, ஒருங்கிணைப்புகளை, புரிதல்களை, செறிவுடன் விரித்தெடுத்தல்களை தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியகரமான, தொடரும் அபரிமிதமான அற்புதமிது! அபூர்வமிது!!
-0-0-0-0-0-0-0-
இரண்டு நாட்கள் முன், என் மகனுடன் (அவனுடைய தற்போதைய வெறித்தனமான ஈடுபாடுகள்: திப்பு ஸுல்தான் வரலாறு, பழம் மஸூதிகளை விஜயம் செய்வது, மதறாஸா குழந்தைகளுடன் அளவளாவுவது, மினாரெட்டுகளிலிருந்து மேலெழும்பி ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு மறுபடியும் அமரும் புறாக்கூட்டங்களைப் பார்ப்பது இன்னபிற – கடந்த நான்கு வாரங்களில் மூன்றுமுறை இவற்றைச் செய்துவிட்டோம்!) ஸ்ரீரங்கப்பட்டணம் சென்றிருந்தேன். மைஸூருக்கு வடக்கே 10-15 கிமீ தொலைவில் இருக்கும் பகுதி இது. திப்பு ஸூல்தானின் தலைநகராக இருந்த, அவர் வெள்ளைக்காரர்களுடன் போரிட்டு மாய்ந்த இடம்.
அவரது அரசாங்கத்தால் 1780களில் கட்டப்பட்ட மஸ்ஜிதே-அலா (அல்லது ஜமா மஸ்ஜித்) சென்றிருந்தோம். ஹிந்து-இஸ்லாமிய கட்டிடக் கலைகளின் அழகான, நிரடாத கலவையுடன் இருப்பது இது. இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் கொடையால், பாதுகாப்புடன் பராமரிக்கப்படும் இந்த மஸூதியில் இப்போதும் தொழுகைகள் நடக்கின்றன. ஒரு சிறு மதறாஸாவும் இருக்கிறது.
ஒரு ஹிந்துகோவில் போன்ற பல வடிவமைப்புகள், தாழ்வாரங்கள், மண்டபங்கள். அழகான கலவை. சுத்தமான சூழல். வடகிழக்கு மூலையில் கங்கர்கள் எப்போதோ அமைத்திருந்த ஒரு கல்யாணி (செயற்கைக் குளம்).
மெலிதான, துல்லியமான – நடுங்கும், முனகும், வேண்டுகோள் வைக்கும், சுண்டியிழுக்கும் பிசிரற்ற குரல். பல வருடங்களுக்குப் பின் இம்மாதிரி அழகான குரல்காரரைக் கேட்கிறேன். …haunting, quivering wails – cascading away to glory, truly and verily!
…அவருடைய கூப்பிடல் முடிந்து திரும்பியதும் பின்னால் நின்று கொண்டிருந்த என்னை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தார்; நட்புடன் சிரித்தார். நானும் அவருக்கு வந்தனம் தெரிவித்து கைகளை விரித்துக்கொண்டு அவரருகில் சென்றதும் இருவரும் அரவணைத்துக்கொண்டோம்.
சரி. நான் கைகால் கழுவிக் கொள்ளாமல் அசுத்தமாக இருந்ததால், வேர்வை வழிந்து நாற்றமடித்துக் கொண்டிருந்ததால் உள்ளே செல்லவில்லை. அருகே சென்று, என் மகனுக்கும் மிஹ்ரப்பினைக் காண்பிக்க முடியவில்லை…
முதலில் அரபுமொழியிலும் பின்னர் தக்கணியிலும் மொழியப்பட்ட இமாமத்தினை வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
தொழுகைக்குப் பின் கருகும்மென்று மேகங்கள் திரண்டன. வெய்யில் தணிந்தது. சுமார் அரைமணி நேரம் கழித்து மஸூதி வளாகத்தினை விட்டு வெளியே வரும்போது வானம் பொத்துக்கொண்டு மழை பெய்தது. (மெய்யாலுமே!)
-0-0-0-0-0-0-
திப்பு ஸுல்தான் பற்றி நான் இதுவரை கேள்வியே பட்டிராத மகாமகோ கட்டுக் கதைகளைச் சொன்னார் – 7கிமீ சுரங்கம் இருக்கிறது, உலகத்தில் முதலில் ராக்கெட் விட்டவன் திப்பு, கோலார் தங்கச் சுரங்கம் திப்புவினுடையது, திப்புவின் செல்லப் புலி ஆங்கிலேயர்களை மட்டும் (திப்புவின் நண்பர்களான ஃப்ரெஞ்ச்காரர்களை அல்ல!) கண்டுபிடித்துக் கடித்துக்குதறப் பயிற்சிபெற்றது என்றெல்லாம். நான் பதில் பேசாமல, மூச்சுமுட்ட கேட்டுக்கொண்டிருந்தேன். சிலமாதங்கள் முன் ஒரு அப்பாவி அஇஅதிமுக பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது – எம்ஜிஆரின் கை ஜிப்பாமேல் ‘ப்ரேன்ட்’ போலக் கட்டப்பட்டிருந்த ரோலக்ஸ் கடிகாரம் இன்னமும் சமாதி நிலையில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அதன் டிக்டிக் சப்தம் இன்னமும் நடுராத்திரியில் வெளியே கூடக் கேட்பதாகவும் சொன்னது நினைவுக்கு வந்தது…
கதைகளும் கதையாடல்களும் வதந்திகளும் இல்லையென்றால், வாழ்க்கையில் ஒருசுக்கு சுவாரசியமுமேயிருக்காதோ! :-)
-0-0-0-0-0-0-0-
‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் அவர்களே! தாங்கள் தொடர்ந்து வளர என் வாழ்த்துகள்.
இன்றுகாலை வந்த உங்களுடைய மின்னஞ்சல் பதிலையும் படித்தேன். எல்லையற்ற ப்ரபஞ்ச சக்தியின் சாந்தியும் சமாதானமும் தங்களின் மீதும் உண்டாகட்டுமாக..
பொலிக, பொலிக… வேறென்ன சொல்ல?
நன்றி.
2. திப்பு ஸுல்தானின் ஜமா மஸூதி குறித்த மேலதிக விஷயங்கள்: http://www.mysore.org.uk/excursions/srirangapatna/masjid-e-ala.html
August 25, 2015 at 12:57
இஸ்லாம் பற்றிய தங்களது வ்யாசத்தொடர்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஜெனாப் முஹம்மத் அவர்களுடனான தங்கள் உரையாடல்களையும். மிக நிதர்சனமான கருத்துப் பரிமாறல்கள். அன்பர் அவர்களுக்கும் உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
தலை நரைத்துப் போனபின் உருப்படியாக எனக்குப் புரிந்த விஷயமாக நான் கற்றுக்கொண்டது பன்மைத்துவத்தின் உண்மை. உலகில் கோடானுகோடி மக்கள் இருக்கும் வரை நிலையாக இருக்கப்போகும் ஒரே விஷயம் பன்மைத்துவம்.
ஓரிறை மதங்கள் எல்லாம் ஓரிறை என்பதிலும் இருந்து இன்னமும் குவிந்து ஒருமை மதமாக விழையும் அவலம் நிச்சயமாக உலக அமைதிக்கு நல்லதல்ல. இஸ்லாத்திலேயும் க்றைஸ்தவத்திலேயும் கூட எத்தனை எத்தனை வித வித விதமான வழிபாட்டு முறைகள். அவை எவ்வளவு அழகானவையும் கூட.
வஹாபி / ஸலாஃபி பொறுக்கி கும்பல்களின் இலக்கே இந்த பன்மைத்துவத்தை சுவடில்லாமல் அழித்து ஒழிக்க முனைதல். ஷியா மற்றும் அஹ்மதியாக்களை இந்தப் பிசாசுகள் அழித்தொழிக்க முனைவது ஒருபுறம் இருக்கட்டும். ஸுன்னி முஸல்மான் களிலேயே கூட இந்த பொறுக்கிகளின் முதல் அழித்தொழிப்புத் தாக்குதல் பரேல்வி ஸுன்னி முஸல்மான் களும் அவர்களது தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாட்டு முறைகளும். மிக அதிகமான ஒற்றுமை இருந்தாலும் கூட தேவ்பந்தி ஸுன்னி முஸல்மான் களும் கூட வஹாபியர்களிடம் கருணையையோ இரக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது. எல்லைக்கோட்டுக்கு அப்பால் இருக்கும் நா பாகிஸ்தானில் ஒவ்வொரு வருஷமும் பைகம்பர் முஹம்மது அவர்களின் பிறந்தநாள் விழாக்கொண்டாட்டங்களை பரேல்வி ஸுன்னி முஸல்மாணியர் கொண்டாடுகையில் தேவ்பந்தி முஸல்மாணியரும் வஹாபியர்களும் அந்தக் கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பது குண்டுபோடுவது………. இத்யாதி இத்யாதி குரூரங்கள்.
ஹிந்துஸ்தானத்தின் அனைத்து ப்ராந்தியங்களிலும் அந்தந்த ப்ராந்திய பாஷைகளில் இசை, கலை, இலக்கியம், சித்திரம், கட்டுமானக்கலை என அனைத்திலும் முஸ்லீம் சஹோதரர்களுடைய பங்களிப்பு யாருக்கும் சளைக்காதது. இவை அனைத்துமே ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானத்தின் பொக்கிஷம் என்றாலும் மிகையாகாது. இவை எல்லாவற்றையும் சுவடில்லாமல் அழித்தொழிப்பதில் வஹாபிய அரைகுறைகள் முனைப்பாக இருக்கிறார்கள். இவையெல்லாம் குரான்-ஏ-கரீமுக்கு விரோதமாம்.
பிஸ்மில்லாஹ் அர்ரஹ்மான் அர்ரஹீம் என்றால் கருணையும் இரக்கமும் உள்ள அல்லாவின் பெயரால் என்று பொருள் எனக் கேட்டிருக்கிறேன். ஆனால் வஹாபியர்கள் உலகத்தில் நடத்தும் வெறியாட்டங்களுக்கும் *ரெஹ்ம்* என்பதற்கும் லவலேசமாவது சம்பந்தம் இருக்கிறதா தெரியவில்லை.
யா அல்லா. என்ன சொல்வது?
தெஹ்ஸீப் குன்றாமல் கருத்துப்பரிமாற்றம் செய்த ஜெனாப் முஹம்மது அவர்களுக்கும்………. கொஞ்சம் சறுக்கியது போலத் தெரிந்தாலும்……….. சுதாரித்துக் கொண்டு கருத்துப்பகிர்ந்த (ம்….. இதற்குப் பரிசு சுவையான ஒரு மதுரா கீ பேடா) உங்களுக்கும் மிக்க நன்றிகள்.
பி.கு :- *கு* த்ரய ரஹித வ்யாசத்துக்கு மேலதிகமாக ஆக்ரா கீ அங்கூரீ பேடா கொசுறாக பரிசு.
August 25, 2015 at 13:18
இந்த கட்டுரையையும்,இது போன்ற இந்த விசயத்திற்கு சம்பந்தமான பல கட்டுரைகளை,நீங்கள் எழுதிய போதும், வரும் சில பின்னூட்டங்களை படிக்கும் போதும் வரும் எண்ணம்,இதெல்லாம் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் “விழலுக்கு இறைத்த நீர்” என்று.ஆனால் ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற அன்பர்கள் இருப்பதை அறிந்த பிறகு உண்மையில் பாலை வனத்தில் “பசும்சோலையை” கண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது!!
August 25, 2015 at 22:09
நிறுத்தி, நீட்டி ஒலிக்கும் மசூதியின் இறைவணக்க அழைப்பு ராகம் அழகானது, அமைதி தருவது. இதே போன்று நிதானமாக ஓதப்படும் சாமவேதம் கூட அழகானது. நாலாயிரமும், தேவாரமும் வேறு விதமானவை. அவற்றின் ராகங்கள் என்னை அதிகம் ஈர்த்ததில்லை. ஆனால், அவற்றின் சந்தத் தமிழ் ஈர்க்கிறது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.
August 28, 2015 at 06:28
உண்மை