பெரியார்பிறந்தமண்ணின் வினோத மண்ணாங்கட்டிகள் – தொடரும் உரையாடல்

March 20, 2015

‘பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்’ எனும் வேலைவெட்டியற்ற உரையாடல் எழவின் சாராம்சம், சோகக்கதை தொடர்கிறது. இதன் முதல் பகுதி இங்கே – பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்; இதைப் படித்தால் – கீழேகாண்பது கொஞ்சம் புரியலாம். ஆகவே.

(திராவிடஇயக்க மேதகு நாயுடுகாரு நண்பர் அவர்கள் – நான் படிக்காவிட்டால் பரவாயில்லை, சரியாகத்தான் வரும், போட்டுக்கொள், எக்கேடோ கெட்டுப்போ, ஆளைவிடு – என்று கோபமாகச் சொன்னதால், இந்த இரண்டாம் பகுதியையும் பிரசுரிக்கிறேன்; இந்தப் பதிவில் – நண்பர் சொன்னதில் இரண்டு ‘திராவிடப் பொய்மை’ விஷயங்களை மட்டும் கையாண்டிருக்கிறேன்)

-0-0-0-0-0-0-

“முதலாவது – கணேஷ்ஸ்ரீ பராட்டா உங்களுக்குப் பிடிக்குமா?”

“என்ன ஸார் இப்படி கேக்கறீங்க? ரொம்ப பிடிக்கும். இத்தனை சல்லீசா எவன் ஸார் கோபி பராட்டா பன்னீர் பராட்டான்னிட்டு சுவையா பண்ணி கொடுப்பான், சொல்லுங்கள்?”

“இது, உங்கள் பார்வையில், ஆரிய வந்தேறிகள் கடை. ஓடிஷாவிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்துசேர்ந்த பிராம்மணர்களின் கடை. அவர்கள் கொழுத்த மாதிரி தெரியவில்லை. அநியாயமாக லாபம் அடிப்பதாகவோ அல்லது தரக்குறைவான வஸ்துக்களை விற்பதாகவோ தெரியவில்லை. கடை என்னவோ ஒரு சிறிய பொந்துபோலத்தான் இருக்கிறது. கொஞ்சம் அழகுணர்ச்சியோடு எளிமையான அலங்கரிப்புகள் இருந்திருக்கலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”

“நான் இவர்களைப் பற்றிச் சொல்லவில்லை. இந்த எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு பொதுமைப் படுத்த முடியாது; பண்பாட்டு, அரசியல், சமூக தளங்களில் பார்ப்பன ஆதிக்கம் என்பது இருக்கிறதா இல்லையா? எடுத்துக்காட்டாக – சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளில் பெரும்பாலோர் பார்ப்பனர்கள்! தமிழ் ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனரிடம்தான்!! டிவிஎஸ் நிறுவனம், ஹிந்து நிறுவனம் பார்ப்பனர்களிடம்தான்!” (அட்ச்சு வுட்டாரே பார்க்கலாம்!)

நான் சொன்னேன் – “அய்யா – நான் சொல்லவந்தது, உங்கள் பொதுமைப் படுத்தலுக்கான  – நீங்கள் புரிந்துகொள்ளும் படியான ஒரு அண்டைய விதிவிலக்கு பற்றித்தான்! நீதிமன்றம், ஊடகங்கள் குறித்த உங்கள் கற்பனாவாத புல்லரிப்புப் புள்ளிவிவரங்களைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம் – அதுவும் ஆதாரத்தோடு. சரி,  ஹிந்து பத்திரிகை அய்யங்கார்களிடம் தான் இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனங்களும் அப்படியேதான். ஆனால் அங்கு ஒரு பார்ப்பனரல்லாதார் கூட வேலை செய்யவில்லையா? அவர்கள் தம் விற்பனைப் பொருட்களை மற்றவர்களுக்கு விற்கவேமாட்டேனென்கிறார்களா? அல்லது, தமிழக மக்களெல்லோரும் அவற்றைத் தங்களிடமிருந்து மட்டுமேதான் வாங்கவேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்கிறார்களா? மற்ற தொழில்முனைவோர்களை, போட்டியாளர்களை வரவிடாமல் தடுக்கிறார்களா? இடுபொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு மற்ற சமூகத்தினரை அணுகவே மாட்டேனென்கிறார்களா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? மற்ற ஜாதியினர் எவரும் பத்திரிகையோ தொழிற்சாலையோ நடத்த முடியாத நிலை – தமிழகத்தில் நீங்கள் சொல்லும் பார்ப்பனீயத்தால் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா? தினகரன், முரசொலி, தினத்தந்தி போன்றவையெல்லாம் பார்ப்பன ஆதிக்கத்தால் துவண்டுவிட்டனவா?”

அவர் – “பார்ப்பன ஹிந்து பத்திரிகைக்கு திராவிட இயக்கம் என்றாலே காழ்ப்பு. அதைப் படிக்கும் நீங்கள் இப்படித்தான் விதண்டாவாதம் செய்வீர்கள்!”

நான் – “அய்யா – இதுவும் நாயுடுவியம்தான். சரி. ஆனால் நான் ஹிந்து பத்திரிகையை பொதுவாகப் படிப்பதில்லை. இருந்தாலும் ஒன்று – உங்கள் தகத்தகாய தமிழர் தலைவரின் அருமந்த மகள் கனிமொழி அவர்கள், ஒரு வெறும் துணை ஆசிரியராக (ஸப்-எடிட்டர்) சிலவருடம் இந்தப் பத்திரிகையில் பணி புரிந்து கொண்டிருந்தார்; எனக்குத் தெரிந்து இவர் செய்த  ‘சம்பளத்துக்கான’  ஒரே வேலை இதுதான். பின்னர், தன் தகப்பனாரிடமிருந்து சிலபல கோடிகளை தானமாகப் பெற்றார் அதனை உடனே கலைஞர் டீவியில் முதலீடு செய்தார் – இதனை ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், இம்மாதிரிப் பணம் புரள்வதற்கு அப்பாற்பட்டு,  என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை திடுதிப்பென்று பலகோடிகளுக்கு, பெரும்பணத்தொழில்களுக்கு அதிபதியாகி விட்டார்! என்னைப் பொறுத்தவரை நான் நம்புகிறேன் – இத்தனை கோடிகளையும், அந்தக் கேடுகெட்ட ஹிந்து பத்திரிகைதான் அவருக்குச் சம்பளமாகக் கொடுத்திருக்கவேண்டும். ஆக, ஒரு கழகக் கண்மணிக்கு, அதுவும் திராவிடராஜாராணி பரம்பரைக்கு, அளப்பரிய  உதவி செய்திருக்கும் ஹிந்துவை, எப்படி நீங்கள் பார்ப்பனீயப் பத்திரிகை எனச் சொல்லலாம்?”

(குறிப்பு: அவருக்கு இந்த கனிமொழி-ஹிந்து தொடர்பு தெரிந்திருக்கவில்லை, பாவம். ஏதோ கவிதை பல எழுதியே, மதறாஸ்மங்கமம் நடத்தியே – கனிமொழி அவர்கள் பலகோடீஸ்வரி ஆகிவிட்டார் என நினைத்திருப்பார் என்பது என் அனுமானம்! எது எப்படியோ, நம் கனிமொழி அவர்களின், அவருடைய வெளியேதெரிய வரும் சொத்துகள் மட்டும் பற்றிய பகிரங்க – ராஜ்யசபாவுக்கான 16 ஜூன் 2013 தேதியிட்ட வாக்குமூலம் இங்கே – இது ஒரு 22 பக்க ஆவணம்; தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது. வாழ்க, அவரை வாழவைத்த ‘த ஹிந்து’ பத்திரிகை!)

அவர் சுதாரித்துக்கொண்டு சொன்னார் – “நையாண்டி இருக்கட்டும். அப்போ உங்கள் பார்ப்பனர்கள் அனைவருமே யோக்கியர்கள் என்கிறீர்களா?”

அலுப்புடன் நான் சொன்னேன் – “பதிலுக்கு நான் உங்களை, நாயுடுக்கள் எல்லாருமே ரொம்ப யோக்கியமா என்று போராளித்தனமாகக் கேட்கமாட்டேன். அது அற்பத்தனம். ஐந்து நிமிடம் முன்னால் உங்களைக் கிண்டல் செய்வதற்காக, நாயுடுவியம் என்றெல்லாம் நக்கலாகப் பேசியதற்கு மன்னிக்கவும்.

சரி. நீங்கள் என்னை மறுபடியும்மறுபடியும் பார்ப்பனர் என்று குறிப்பிட்டு, எனக்கு இல்லாத குற்றவுணர்ச்சி வரும்படிக்குப் பிரயத்தனப் படுவதால் சொல்கிறேன்.

நீங்கள் கேட்பதற்குக் குறிப்பாகப் பதில் சொல்லவேண்டுமானால் – ஆம், பார்ப்பனர்களிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள், என் சொந்தக்காரர்களிலேயே சிலரை நான் என் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது – அவர்கள் படிப்பறிவற்ற குடிகாரக் கூவான்கள்வேறு – போதாக்குறைக்கு, இதில் ஒருவர் மாஜிதிமுக உதிரி. ஆனால் இந்த அயோக்கிய விகிதம், மற்றெந்த மானுடத் திரள்/குழுவையும் விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்காது என்பது என் கருத்து.

ஏனெனில் எல்லா ஜாதிகளிலும், மதச் சார்புகளிலும், இன்னபிறமக்கள் திரள்களிலும் – பொதுவாகவே அடிப்படை அயோக்கியர்களின் விகிதம் என்பது ஒரு ஒதுக்கத்தக்க, சிறு எண்ணிக்கை, சிறுபான்மை மட்டுமே! பெரும்பாலான திரள்களில், மக்கள் சாதாரணமாக, மற்றவர் உரிமைகளுக்கும், தம் கடமைகளுக்கும் முடிந்தவரை இடஒதுக்கீடுசெய்து, பெரும்பாலும் சமனநிலையுடன் வாழ்க்கையைக் கண்ணியமாக நடத்திக் கொண்டு செல்வதுதான் நடக்கிறது.

ஆனால், திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை – தமிழகத்தின் பலஜாதிகளிலுமுள்ள, பலமதங்களிலுமுள்ள சிறுபான்மை அயோக்கியப் பதர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொண்டு அடிக்கும் பண/கலாச்சாரக் கொள்ளைதான் தொடர்ந்து நடக்கிறது. இந்தப் பதர்கள், தொடர்ந்து தாங்கள் கெட்டொழிந்தது போல பாவப்பட்ட மற்றசாதாரணர்களையும் கெட்டொழிக்க முயல்கிறார்கள் – இழிவாகச் சம்பாதித்த பணத்தையும் குடியையும் நடுத்தெருவிலும் வீடுகளிலும் கொட்டிவீசி மக்களை மாக்களாக்குகிறார்கள். இதுதான் தமிழகத்தின் தலைவிதி.

 

…நாள்முழுவதும் குழந்தைகளோடு அல்லாடி பள்ளிச் சூழலில் ஏதாவது முன்னேற்றம் கண்டால், இரவில் ஐந்தே நிமிடத்தில் குடிகார திராவிட அப்பன் (மன்னிக்கவும் – ‘மானமிகு இயக்கச் செயல்வீரன்!’) அடித்துதைத்து அமர்க்களம் செய்து வாந்தி எடுத்து – குழந்தைகளின் வாழ்க்கையில் பல நாள் பின்னேற்றம் அடைய வைத்து விடுகிறான். இதைக் கண்டால்தான் எனக்கு வெறுப்பு தலைக்கேறுகிறது.”அவர் கேட்டார் –  “அப்போ, திராவிட இயக்கத்தினாலே தமிழகத்துக்கு ஒரு உதவியும் இல்லைங்கறீங்களா? அவர்களை வெறும் பொறுக்கிகள் என்றமாதிரி தொனியில் பேசுகிறீர்களே! இது சரியா?”

நான் சொன்னேன் – “சரிதான்!”

குறிப்பு: எனக்கு இரண்டாம் விஷயத்திற்குப் போகவேண்டியிருந்ததால் அவரிடம், அவருடைய மற்றைய கற்பனாவாதத் துகள்கள் பற்றிப் பேசவில்லை. ஆகவே…

-0-0-0-0-0-0-0-

“சரி. எனது இரண்டாம் விஷயத்திற்கு வருவோம்.  அதாவது, இது நீங்கள் பெருமிதத்துடன் சொன்ன – ‘பெரியார் அவதரித்த மண்‘ அல்லது ‘பெரியார் பிறந்த மண்‘ பற்றியது.

“நீங்கள் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, ஜாதிமத மறுப்பு என்றெல்லாம் கபடி ஆடுகிறீர்கள். சரி. அதே சமயம் அவதரிப்பு, பிறந்தமண் என்றெல்லாம் மூடத்தனமாகப் பேசுகிறீர்கள். எனக்கு இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, ஈவெரா அவர்கள் புனிதமே உருவானவர், ஈரோட்டு மண்ணில் பிறந்தார் (இதை என்னால் பகுத்தறிவுடன் புரிந்துகொள்ளவே முடியவில்லை – அவர் பாலூட்டிகளின் ஒரு வகையினர் தானே? அவரைப் பெற்றெடுத்தது அவர் தாயாகத்தானே இருக்கவேண்டும்? இதில் மண்ணும் மண்ணாங்கட்டியும் எங்கே வந்தன??)  என வைத்துக்கொள்வோம். அதனால் அந்த மண் புனிதமடைந்து விடுமா? அப்படியென்றால் ஈரோடு இருக்கும் தமிழகமே பெருமிதமாகத் தன்னைக் கருதிக் கொள்ளவேண்டுமா? ஆகவே இந்தியாவும்? ஆகவெஆகவே நம் ஆழிசூழ்வுலகமும் – அதுவும் இது பெரியார் பிறந்த மண் என்று?? ஆக புனிதம், இறைவழிபாட்டிடம், புராணத்தலங்கள் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறுபேச்சின்றி ஒப்புக்கொள்கிறீர்களா? எப்படிச் சுளுவாக இரட்டைவேடம் போடுகிறீர்கள்?

அவர் அவதரித்த உலகில் எல்லோரும் ஜாதி எதிர்ப்பாளர்களா? அப்படிப்பட்ட பகுத்தறிவுப் பராக்கிரமம் பெற்றதா இந்த மண்? இந்த மண்ணில் தொழில்முறை திராவிட இயக்கம் நடத்துபவர்கள் எல்லோரும் ஜாதிமதசடங்கு எதிர்ப்பாளர்களா? திராவிட இயக்கத்திலுள்ள நீங்கள், உங்கள் மனைவியின் தாலியை இழுத்து அறுக்கவேண்டியதுதானே? ஊக்கபோனஸாக, உங்கள் ஒரேமகளின் தாலியையும் அப்படியே செய்யலாமே?  உங்களுடைய கருணாநிதி கட்சியில் எந்தக் காலத்திலாவது கருணாநிதி ஜாதியில் இல்லாதவர்கள் பெரும்பதவிக்கு வரமுடியுமா? அது இசுடாலினார், அழகிரியார், கனிமொழியார் வகையறா – அவர்தம் பிள்ளைகள் வகையறா என்றுதானே செல்லும்?

உங்கள் தலைவர்களின் பல மனைவிகளின் தாலிகளை அறுத்துவிட்டு, பின்னர் அவர்கள் பகுத்தறிவு திராவிடம் மறுப்பு வெறுப்பு என்றெல்லாம் பேசினால் – கொஞ்சமாவது நாணயம் இருக்கும்.  தன் மனைவிகள் + மகள் +  மருமக்களின் நெற்றிக் குங்குமங்களை அழித்துவிட்டு, தாலிகளை அறுத்துவிட்டு பிறத்தியார்களின் குங்குமத்தை விமர்சித்தால் அது நேர்மை! ஆனால், திராவிடவுலகில் நேர்மை – கிலோ எவ்வளவு விலைதான்! அதிலும்  ‘டிஸ்கவுன்ட், எதாச்சும் ஆஃபர் இருக்கா’ என்பது ஒரு கேட்கப் படவேண்டிய கேள்வி!

இப்படி புனிதம், அவதாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டு, கமுக்கமாக மூட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு எப்படி, அதே சமயம்,  ‘பகுத்தறிவு’ என்றெல்லாம் பேசுகிறீர்கள்? பறவைகளால் எச்சமிடப்படும் அர்த்தமற்ற வெறும் கற்சிலைகளுக்கு ஏன் பெருமையுடன் மாலை அணிவிக்கிறீர்கள்? அதன்முன் புளகாங்கிதத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறீர்கள்? பொய்மைச் சாக்கடையில் புரள்வதற்குக் கேவலமாகவே இல்லையா? அதே சமயம் திராவிடலைகளுக்கு, பொதுமக்களின் நம்பிக்கைகளைப் பற்றி கிண்டல்கள் வேறு! அதுவும் மற்ற மதங்களைப் பார்க்கவே பார்க்காத, அயோக்கியக் கோணல் பார்வைவேறு! என்ன எழவு சுயமரியாதையோ, பகுத்தறிவுக் குப்பையோ! அதெல்லாம் எல்லாம் வல்ல உங்கள் அவதார புருஷருக்குத்தான் வெளிச்சம்!

இப்படி அவதாரம் பிறந்தமண் என்றெல்லாம் உளறிக் கொட்டினால் – உங்கள் பெரியாரே கடுங்கோபத்துடன் மறுபடியும்  ‘அவதாரம்’ எடுத்து அவருடைய குண்டாந்தடியால் பொளேரென்று உங்கள் மண்டையில் ஓங்கி அடிக்கமாட்டாரா?

ஏனய்யா இப்படி, பெரியார் பெரியார் என்று ஒரு பக்கம் பெருமையுடன் பேசிக்கொண்டு இன்னொருபக்கம் எருமைகள் போல அற்பச் சடங்குகளில் மூழ்கியிருக்கிறீர்கள்? படு கேவலமாக இருக்கிறது, உங்கள் பல வேடங்களின் அழகு!”

-0-0-0-0-0-

… …அவரும் சூடாகக் கேட்டார் – “இப்படிப் பேசும் நீங்கள், உங்கள் மனைவியின் தாலியை அறுக்கவேண்டியதுதானே?”

நான் சொன்னேன் – “அய்யா, நான் உங்கள் கருத்தில் கூட, ஒரு கருமாந்திரத் திராவிடன் அல்லன் என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஆக, உங்களுடைய திராவிட முட்டாள் அளவுகோல்களால் என்னையோ என்னுடையதையோ அளக்கமுடியாது. என் கீர்த்தி பெரிது. இன்னொன்று – என் திருமணம் ஒரு வெறும் பதிவுத் திருமணம், அவ்வளவுதான். நான் தாலிகட்டித் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் வீட்டுப் பெரியவர்கள் மனம் அளவுக்கதிகமாகக் கோணக்கூடாதே என்று என் மனைவி தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்டு பதினைந்து நிமிடங்களில் அதை அவிழ்த்தும் வைத்து விட்டார். கடந்த 20 வருடங்களாக எங்கள் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் பகுத்தறிவு செறிந்த அறிவுரைக்கு நன்றி. ஆகவே, என் மனைவியின் ‘நான் கட்டிய தாலி’யை அறுப்பதற்கு எனக்கு இந்த ஜென்மத்தில் கொடுப்பினை இல்லை. மன்னிக்கவும். ஆனால் – நீங்கள் உங்கள் மனைவியின் தாலியை அறுத்தால், பதிலுக்கு நானும் என் மனைவிக்குத் தாலி ஒன்றைக் கட்டி அதனை அறுக்கத் தயார்!”

அவர் பதிலுக்குப் பாவம் என்னென்னமோ சொன்னார் – கோச்சுக்காதீங்க, உணர்ச்சிவசப் படாதீங்க, வீட்டில் பெரியவங்க வருத்தப் படுவாங்க, அமங்கலமாகப் பேசாதீங்க – என்கிற ரீதியில்.  பகுத்தறிவு? மூட நம்பிக்கை? ங்கொம்மாள… போங்கடா! எங்களுக்கெல்லாம் சுயமரியாதையோட ஊருக்கு உபதேசம் பண்ணதாண்டா தெரியும்!  நாங்கோ திராவிடனுங்கோடா!!

…நானும் மறுபேச்சுப் பேசாமல் – அவரிடம் விடைபெற்றுக்கொண்டுக் கிளம்பினேன். இதனைப் பற்றி எழுதப் போகிறேன் என்றும் சொன்னேன்.

“மறுபடியும் எப்போ பார்க்கலாம்?” என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு நேரமாகிக்கொண்டிருந்தது.

நடிப்புத் திராவிடர்கள். தொழில்முறை அயோக்கியர்கள். ஊருக்கு உபதேசம், வீட்டில் கந்தறகோளம். கோபம்கோபமாக வருகிறது.  திராவிடலைகளிடமிருந்து, அவர்களின் அடிப்படை அயோக்கியத்தனங்களிலிருந்து –  நம் தமிழகம் மீளுமா?

-0-0-0-0-0-0-
நேற்றைய பதிவுக்கு – இரண்டு போராளிகளின் (அல்லது ஒரே திராவிட இனமானக் காவலரின்) மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. வழக்கமான வசைதான். சுவாரசியமாகத்தான் இருந்தது. வேறொன்றும் சொல்லும்படியாக இல்லை.

நகரங்களில் உட்கார்ந்து கொண்டிருந்தால், பெரும்பாலும் அனாமதேய வழிப்போக்கு உறவுகளின், உரையாடல்களின் ஊடாக மட்டும் சமூகத்தை, மிக மேலோட்டமாக அவதானித்தால், தமிழகத்தில் அனைத்து ஜாதிகளும் ஒருங்கிணைந்து செயல் படுவது போல, சுத்த சன்மார்க்க சத்தியசீலர்களாக விளங்குவது போலத் தோற்றம் ஏற்படும்.

ஆக, வெகு சுளுவாக இந்த எழவெடுத்த இணையத்தில், வெகு போராளித்தனமாக, சுயமரியாதை வெறியுடன்  – தமிழகத்தின் மேன்மையைப் பற்றி, சமதர்மப் பூங்கா பற்றி, சமத்துவபுரம் அசட்டுவஅகம் என்றெல்லாம் தொழில்முறை திராவிடத்தன பாவலா காண்பிக்கலாம், உளறிக் கொட்டலாம். சுட்டிகளாக, புள்ளியியல் விவரங்களாக அள்ளிக் கொட்டலாம். பெருமை பாடலாம். ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் – ஹிந்துத்துவா பொந்துத்துவா சங்கபரிவாரம் எனப் பொய்மை பூச்சாண்டி காண்பித்து சாமியாடலாம்.

ஆனால், நகரங்களை விட்டு, கொஞ்சம் வெளியே வந்து தமிழகத்தின் ஒரு கிராமப்புற மூலையில் – முழுவதுமாக ஓரிரு வருடங்கள் செலவுசெய்தால், கொஞ்சமாவது ஆழ்ந்து கவனிக்கும் திராணியிருந்தால் – இந்த திராவிடப் பொய்மைகள், சமதர்மப் பூங்காக்கள் எல்லாம் அம்பலமாகி விடும். அதுவும்  – கொஞ்சம் ஆராய்ச்சி மனப்பான்மை இருந்தால், கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் சமூகச் சரிவும் தெளிவுபடும்.

ஹ்ம்ம்ம்… எது எப்படியோ – குறைந்த பட்சம் கடந்த சுமார் ஐந்து வருடங்களாகவாவது நேரடியாகவே,  நம் செல்ல சமதர்மப் பூங்காவை ஆச்சரியத்துடன், பகுத்தறிவுடன் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு – இந்த திராவிடப் பிரச்சாரகர்கள், அவர்களுடைய அடிவருடிகள் சொல்வதெல்லாம் மகாமகோ நகைச்சுவையாகவே இருக்கிறது.

ஆக, முதலுக்கே மோசமில்லைதான்.  சிரிப்பாகச் சிரித்துக்கொண்டே வாழ்க்கையைத் தள்ளிவிடலாமென்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையைத் தொடர்கிறேன்… :-)

நன்றி.

9 Responses to “பெரியார்பிறந்தமண்ணின் வினோத மண்ணாங்கட்டிகள் – தொடரும் உரையாடல்”

  1. க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

    ம்ஹூம்………….. உங்க க்ரஹசாரம் சரியில்லையோ என்று தோணுகிறது. இன்னிக்கு சந்த்ராஷ்டமமோ?

    பூவண்ணன் சாரை வேறு ஸ்மரித்திருக்கிறீர்கள்.

    \\ இப்படி அவதாரம் பிறந்தமண் என்றெல்லாம் உளறிக் கொட்டினால் – உங்கள் பெரியாரே கடுங்கோபத்துடன் மறுபடியும் ‘அவதாரம்’ எடுத்து அவருடைய குண்டாந்தடியால் பொளேரென்று உங்கள் மண்டையில் ஓங்கி அடிக்கமாட்டாரா? \\

    ராமசாமி நாயக்கர் அவருடைய குண்டாந்தடியால் பொளேரென்று யாருடைய மண்டையிலாவது அடிக்கப்போகிறாரோ இல்லையோ……….. இப்படி நீங்கள் பெரியாரையும்………….. அவர் அவதரித்த மண்ணையும் ………………. லாக் ஸ்டாக் பேரல்……………. ஒட்டு மொத்த தீராவிட இயக்கத்தையும் தாளிச்சுத் தள்ளியிருப்பதற்கு…………….உரலாயுத சஹிதம் பூவண்ணன் சார் ஆஜராகவே போகிறார். உரலாயுதத்தால் இடிபடக் கடவது என்று தீராவிடத்தின் பெயரால் சாபமிடப்படுகிறது.

    பூவண்ணன் சார்,

    எப்போதெல்லாம் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வுமோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் …………… அப்படின்னு சொன்ன கண்ணனிடம் மட்டிலுமா சக்ராயுதம் உண்டு…………..

    உங்களிடமும் பார்ப்பன ஆரிய ஹிந்துத்வ சதியை சிதைத்து தூள் தூளாக்க உள்ளதே உரலாயுதம். இங்கே ஆரியச் சதியாகப்பட்டது ………………. ஆறாது தீராவிடத்தினை கவ்வியுள்ளது………….எடுங்கள் உங்கள் உரலாயுதத்தை சார்………… மிடில……….இந்த க்ரஹணத்தை தாங்கள் உரலாயுத சஹிதம் வந்து ……………. உரலாயுதத்தை வீசி தமிழகத்தைக் காத்து ரக்ஷிப்பீர்களாக.

    அண்ணா நாமத்தையும் கலிஞ்சர் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் போட்ட நாமத்தையும் அறிந்தவர்களுக்கு……………. நல்லாவே தெரியும் ராம்சாமி நாய்க்கர் அவ்தார் செய்த மண்ணில் ஜாதி என்பது சுவடு கூட இல்லாமல் காணாமல் போய்விட்டது என்று. இந்த இளவரசன் கொலை இத்யாதி இத்யாதியெல்லாம் தமிழகத்தில் நடக்கவில்லை………….. அதெல்லாம் அன்னிய நாட்டில் நடந்தது என்று நீங்கள் புல்லிவிவரத்துடன் ராமுக்கு வெவரமா புரிய வையுங்க சார். கூடவே எலவச இணைப்பா மோதி குஜராத்தில் எப்படி ஜாதிக்கொடுமை அப்படீன்னும் ரெண்டு மூணாவது புல்லி விவரமும் போட்டுத் தாளிச்சுக் கொட்டுங்க.

    பூவண்ணன்சார், மோதியினுடைய பத்து லக்ஷ ரூபா சூட் பற்றிய் உங்கள் வ்யாசத்தை வாசித்து புளகாங்கிதமடைதேன். சார், முடிஞ்சாக்க, இந்த சூட்டு பத்து லக்ஷம் என்று ராம்சாமி நாயக்கர் கெனால சொன்னாரான்னும் சொல்லிடுங்க சார். இப்படி சஸ்பென்ஸால்லாம் இத வுடக்கூடாது.

    தீராவிட விடலைகள் பொதுக்கூட்டங்களில் இறைவணக்கமாகப் பாடப்படும் பாடல் இசைக்கப்படுகிறது.

    ஓடி வருகிறான் உதய சூரியன்…………………….

    டட்ட டட்ட டட்ட டட்ட ஓடி வருகிறான்…………. உதய சூரியன்……….

    மேலே நடப்பது ராமன் செயல். ஆரிய ராமனாக இருந்தாலும் சரி த்ராவிட ராம்சாமி நாய்க்கராக இருந்தாலும் சரி.

  2. Saravanan's avatar Saravanan Says:

    /// அவரைப் பெற்றெடுத்தது அவர் தாயாகத்தானே இருக்கவேண்டும்? இதில் மண்ணும் மண்ணாங்கட்டியும் எங்கே வந்தன??) என வைத்துக்கொள்வோம். அதனால் அந்த மண் புனிதமடைந்து விடுமா? ///

    இப்படி அபத்தமாக எழுதுவது உங்கள் வழக்கமே இல்லையே! ஏன் இப்படி?!

    மண் என்பது ஆகு பெயர்; அணியலங்காரம். உண்மையில் மாநிலத்தைக் குறிக்கிறது. ஆக பெரியார் பிறந்த மாநிலம், சரியாகச் சொல்லப்போனால் அவர் இயக்கம் நடத்திய, பிரச்சாரம் செய்த, கருத்துகளைப் பரப்பி செயல்பட்ட மாநிலம் என்பதே அர்த்தம். இதெல்லாம் ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியுமே?

    பெரியாரையும் அம்பேத்காரையும் ஒப்பிடுவது பயனற்ற, தேவையற்ற விஷயம். காந்தி, பெரியார், அம்பேத்கார் ஆகிய மூவரிடமிருந்தும் (இன்னும் பலரிடமிருந்தும்கூட) தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  3. poovannan73's avatar poovannan73 Says:

    ஏனெனில் எல்லா ஜாதிகளிலும், மதச் சார்புகளிலும், இன்னபிறமக்கள் திரள்களிலும் – பொதுவாகவே அடிப்படை அயோக்கியர்களின் விகிதம் என்பது ஒரு ஒதுக்கத்தக்க, சிறு எண்ணிக்கை, சிறுபான்மை மட்டுமே!

    othisaivu

    இது பிரிட்டானியர் .பாகிஸ்தானியர் ,இஸ்ரேலி,பாலேச்தீனியர் அனைவருக்கும் பொருந்துமே.
    வெள்ளையன் மட்டும் சுரண்டல்காரனாக.கொடுங்கோலனாக அதிக எண்ணிக்கையில் இருப்பான்.இங்கு இருப்பவர் யாரும் அப்படி இருக்க மாட்டார்கள் என்று எந்த அடிப்படையில் வாதிடுகிறீர்கள்.

    கிருஷ்ணகுமார் சாருக்காக சில உரல்கள்

    http://www.dnaindia.com/money/report-tamil-nadu-number-one-state-on-development-parametersassocham-2068959

    Tamil Nadu has been ranked as the best performing state on eight out of nine development parameters like economy, power, roads and health while Kerala secured the second slot, according to an Assocham study.

    முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் நீதிபதிகளின் சாதிவாரியான பட்டியல் வந்ததால் சந்தடி சாக்கில் ஒத்திசைவு அவர்களின் திராவிட முட்டாளுடனான வாதத்தில்/கட்டுரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நுழைந்து விட்டனர்

    கட்டுரை வந்தவுடன் துள்ளி குதித்த திராவிட எதிர்ப்பாளர்கள் அனைவரும் சத்தமில்லாமல் அடங்கி விட்டனர். மொத்தமாக உள்ள 780 க்கு அதிகமான உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பட்டியல் இனத்தின் கீழ் வரும் சாதிகளில் இருந்து உயர்நீதி மன்ற நீதிபதிகளாக இருப்பவர்கள் 24 பேர்.பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து நீதிபதிகளாக இருப்பவர்கள் 100க்கும் குறைவு.

    ஆனால் இந்தியாவிலேயே மோசமான தமிழ்நாட்டில் 44இல் 9 பேர் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள்.29 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்.50 ஆண்டுகள் முன்பு 90 சதவீதத்திற்கும் அதிகமான நீதிபதிகள் உயர்சாதியை சார்ந்தவர்கள் (குறிப்பாக பிராமணர்கள் தான் இருந்தார்கள்).இந்த மாற்றத்தை பார்த்த பிறகு கோவம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.அது எப்படி தமிழ்நாட்டில் மட்டும் ஐம்பது ஆண்டுகளில் அனைத்து சாதி பிரிவுகளிலும் பரவலான முன்னேற்றம் ஏற்பட்டது.


    • அய்யன்மீர்!

      முன்னேற்றங்கள், திராவிட இயக்கங்களால் ஏற்படவில்லை. மாறாக, அவை – அவற்றை மீறி ஏற்பட்டவை – திராவிட முட்டுக்கட்டைகளை, முட்டுச் சந்துகளை மீறி மேலெழும்பியவை.

      நன்றி.

    • க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

      பூவண்ணன் சார் அப்பப்ப இங்க வந்து இப்படி பகுத்தறிவு ஒளிவிளக்கு காண்பிப்பதற்கு நன்றிகள்.

      மோதியுடைய சூட்டு 10 லக்ஷம் என்பதை எப்புடி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லவே இல்லையே ஸ்வாமின்.

      ராம்சாமி நாய்க்கர் கெனால சொன்னாரா அல்லது தாங்கள் வழக்கம் போல் சுட்டிகளிலிருந்து சுட்ட பழமா அல்லது விதிவிலக்காக சுடாத பழமா………… இப்படி வாரது வந்த மாமணியாகிய தாங்கள்……… இது பற்றியும் த்ராவிட பகுத்தறிவைப் பகிர்ந்து கொள்ளலாமே

    • Saravanan's avatar Saravanan Says:

      Yes! #அங்கநிக்கிறார்பெரியார்


      • இப்படி எல்லா இடத்திலும் நிற்கவைத்தால், அவரும் என்னதான் செய்வார் சொல்லுங்கள்?

        மேலும் என் பிரச்சினை பெரியாருடன் அல்ல; பெரியாரியத்தோடுதான்! ;-)

        அன்புடன்,

        சிறியான்

  4. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    \\ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”//
    அதுக்காகத்தானே பார்ப்பன ஈயம்னு ஒண்ணு கண்டுபிடிச்சு வெச்சுக்கிறாங்க? பெரியார் பார்ப்பனரை எதிர்க்கவே இல்லை. பார்ப்பன ஈயத்தைத்தான் எதிர்த்தார்.
    பன்னீர் பராட்டா வேண்டும். ஆனால் பன்னீர் பராட்டா ஈயம் வேண்டாம். பூண்டு வாழ்க. ஆனால் பூண்டுஈயம் ஒழிக. பார்ப்பன பனியா வடவ வந்தேறிகளை மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாக எண்ணி அரவணைப்போம். பார்ப்பனஈயம், பனியாஈயம், வடவஈயம், வந்தேறி ஈயத்தை எதிர்த்திடுவோம். இதுதானே ஐயா திராவிட ஈயத்தின் அரிச்சுவடி?
    ஈயம் குறித்த உங்கள் அடிப்படை அறிவின் போதாமையை எண்ணிப் பரிதாபப்படுகிறேன்.

  5. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    \\ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”//
    அதுக்காகத்தானே பார்ப்பன ஈயம்னு ஒண்ணு கண்டுபிடிச்சு வெச்சுக்கிறாங்க? பெரியார் பார்ப்பனரை எதிர்க்கவே இல்லை. பார்ப்பன ஈயத்தைத்தான் எதிர்த்தார்.
    பன்னீர் பராட்டா வேண்டும். ஆனால் பன்னீர் பராட்டா ஈயம் வேண்டாம். பூண்டு வாழ்க. ஆனால் பூண்டுஈயம் ஒழிக. பார்ப்பன பனியா வடவ வந்தேறிகளை மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாக எண்ணி அரவணைப்போம். பார்ப்பனஈயம், பனியாஈயம், வடவஈயம், வந்தேறி ஈயத்தை எதிர்த்திடுவோம். இதுதானே ஐயா திராவிட ஈயத்தின் அரிச்சுவடி?
    ஈயம் குறித்த உங்கள் அடிப்படை அறிவின் போதாமையை எண்ணிப் பரிதாபப்படுகிறேன்.
    #இங்க நிக்கறார் ஒத்திசைவார்;)


Leave a Reply to ஆனந்தம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *