ஸலீல் சௌத்ரி: ஜாகோ மோஹன் ப்யாரே + இலவச இணைப்பு: சில அறிவுரைகள்
November 6, 2014
சமர்ப்பணம்: இந்தியாவின் ஒருபகுதியான தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பேறு பெற்றதால் – நம்முடைய மொழிகளில் ஒன்றான ஹிந்தி மொழியை மிகச் சுளுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்றாலும், அந்த மொழியிலும் மகத்தான பொக்கிஷங்கள் எழுதப் பட்டுள்ளன என்றாலும், அம்மொழியைத் தெரிந்து கொண்டால் தொடர்புகள்-வாய்ப்புகள் பெருகும் சாத்தியக்கூறுகள் உண்டென்றாலும், அம்மொழி அறிவினால், இசையினால், அவற்றைச் சார்ந்த பிற பண்பாட்டுக் கூறுகளினால் நாம் செறிவுபடுவோம் என்றாலும்…
… வரட்டுவாதக் கயமை அரசியல் பிரச்சாரங்களுக்கு முட்டாள்தனமாக மயங்கி, எதிர்மறை பரப்புரைகளால் ஆட்கொள்ளப்பட்டு ஹிந்தி மொழியை இனம் புரியாமல் வெறுத்து, நம் சொந்தத் தமிழிலும் சொதப்பும், அதிலும் ஒரு சுக்கு எழவையும் சரியாகவே கற்றுக் கொள்ளாத – சுட்டுப்போட்டால்கூட ஒரு வாக்கியத்தைக் கூடக் கோர்வையாக எழுதவராத பாவப்பட்ட ஜீவன்களாக இருந்தாலும், அப்படியே ஒருவேளை எழுத முடிந்தாலும் – காப்பியடித்தும், உளறிக்கொட்டியும் கண்டமேனிக்கும் கபடி விளையாடி – இலவச இணைப்பாக அந்தப் பரிதாபத்துக்குரிய ஆங்கிலத்தையும் போட்டுக் கொல்லும் திராவிடப்பக்கவாதக் குளுவான்களுக்கும், தனித்தமிழ்வாத விசிலடிச்சான் குஞ்சப்பர்களுக்கும், தமிழ்த்தேசிய மொத்த (சில்லறை விற்பனையல்ல, துட்டு வாங்குவது உண்டு) வியாபாரிகளுக்கும், வாயோர நுரைதள்ளும் ‘அன்னிய’ கலாச்சார எதிர்ப்பாள அற்பர்களுக்கும் – பொதுவாக அனாதைமுதல்வாதப் போராளிக் கோமான்களுக்கும்…
-0-00-000-0000-000-00-0-
… இப்பாட்டினை பலவருடங்களாக வானொலியில் கேட்டிருக்கிறேன் என்றாலும், சொக்கிப் போயிருக்கிறேன் என்றாலும் – முதலில் ஆற அமர உட்கார்ந்து திருப்பித் திருப்பித் திருப்பிக் கேட்டது என்பது, சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, என் கல்லூரியின் தப்தி விடுதியின் பொது அறையிலிருந்த லாங்ப்லே ரெகார்ட் ப்லேயர் + காஸ்மிக் ஸ்டீரியோ ஸிஸ்டெம் மூலமாகத்தான்! மகாமகோ அனலாக் தொழில் நுட்பம் நீடூழி, வாழ்வாங்கு வாழ்க!!
… கடந்த சில தினங்களாக, இம்மாதிரி ‘அக்கால’ அற்புதங்களைத் தேடிப்பிடித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் (காப்புரிமை நாசமாப் போக!); ஒரு வழியாக எனக்கு இணைய இணைப்பும் அதனை உபயோகிக்க நேரமும் சரியாக அமைந்தது (உங்களுக்கு) ஒரு பிரச்சினைதான்.
1956ல் வெளிவந்த ஜாக்தே ரஹோ ( ~~ ‘விழித்திரு!’) எனும் பழைய ஹிந்தி படம் (நடிப்பு: ராஜ் கபூர் + நர்கீஸ், கடைசியில் + குட்டிப்பெண் டெய்ஸி இரானி (தமிழில் ‘டெய்ஸி ராணி’) + இப்திகர் அஹெம்மத் (இவர் நல்ல நடிகர், ஆனால் நடித்தவைகளில் லொக் லொக்கென்று இருமிச் செத்த படங்களும், பொலீஸ் இன்ஸ்பெக்டராக படங்களின் முடிவில் வந்து, ஜீப்பிலிருந்து இறங்கி ‘சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் மிஸ்டர் எக்ஸ், இக்குற்றவாளிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்‘ வகையறாக்கள் தான் அதிகம்!) ++) ஒரு இதமான, எளிமையானதொன்று.
இப்படத்தின் நீளம் நறுக்கப்பட்ட ஒரு வடிவத்துக்கு, 1957 கார்லவி வேரி திரைப்பட விழாவில் (Karlovy Vary IFF) பரிசாக க்ரேன்ட் ப்ரி – ஸ்படிகக்கோளம் (GrandPrix – CrystalGlobe) கிடைத்தது.
இத்தனைக்கும், இதன் திரைக்கதை, வசனம், இசை எல்லாம் மிக நன்றாக இருந்தாலும், அவருடைய வழக்கம்போல மேதகு ராஜ்கபூர் அவர்கள் (நம்மூர் எம்ஜிஆர் அவர்கள் போலவே) நடிப்பு எனும் ஊரிலேயே பிறக்கவில்லை! ஏதோ மூக்குப்பொடி போட்டுக்கொண்டு ஒரு மகாமகோ தும்மல் எக்கணமும் வரத் தயாராக இருப்பவர் போலவே அப்படி ஒரு பிரமிக்கத்தக்க நடிப்பு(!). என்ன எழவோ!
ஆனால் அப்படத்தின் பாடல்கள்! ஆஹா தான்!
ஒரு எடுத்துக் காட்டாக, அப்படத்திலுள்ள ‘ஜாகோ மோஹன் ப்யாரே’ பாட்டினை, ஸலீல்தா அவர்களின் அழகான இசையில் கேட்டு உருகுங்கள் — ஸலீல் சௌத்ரி: ஜாகோ மோஹன் ப்யாரே!
-0-00-000-0000-000-00-0-
இந்த ஸலீல் சௌத்ரி, தமிழிலும் சில திரைப்படங்களுக்கு இசை அமைத்திருப்பது பலருக்குத் தெரிந்திருக்கும் – அப்படங்களின் ஜாபிதா இங்கே இருக்கிறது.
நான் கேட்டுள்ளவரை, அவர் இசையமைத்த தமிழ்ப்பாடல்களில் எனக்குப் பிடித்தமானவை:
- தூரத்து இடிமுழக்கம்(1980) – உள்ளமெல்லாம் தள்ளாடுதே , there is a rainbow in the distant sky
- அழியாத கோலங்கள் (1979) – பூவண்ணம், கெடச்சா உனக்கு
நேரமிருந்தால் கேட்டு ரசிக்கவும்.
-0-00-000-0000-000-00-0-
ஆனால், அனாவசியமான அக்கப்போர்களில் ஈடுபடவேண்டாம். நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என இருக்கவும். இணையத்தில் பிணையக் கைதிகளாகச் செலவு செய்யும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
போளிகளைக் கண்டு ஏமாறாதீர். அவை காண்பதற்காக அல்ல, உண்பதற்காக. ஹார்ன் வோக்கே ப்ளீஸ்! மழை நீரைச் சேமியுங்கள். இன்று முதல் நாளை கடனெழவு. தங்கள் பித்தம் என் பாக்கியம் ராமசாமி.
… உங்கள் வழக்கம்போலவே, இன்றும் அலுவலக நேரத்தில் வேலைசெய்யாமல் கண்டமேனிக்கும் இணையத்தில் மேய்ந்து, பின் தளர்ந்துபோய்த் தூங்கிவழிந்து அதில் படுகோரக் கெட்ட கனவுகள் (= இரவுக் குதிரைகள்) வந்தால், அதற்கு, நீங்கள் இன்றும் விடாமல் படித்த இளைஞக்கறுப்பனார், நகைக்கழுத்தனார், ஆம். நல்லக்கறுப்பனார் தளப் பதிவுகள் போன்றவை காரணமே தவிர, யாமில்லை. ஏனெனில் அது ஒரு கிழங்கு.
மேலும், நாளெல்லாம் இப்படி அதிஅற்புதமாக உழையோஉழை என உழைத்து, மாதச் சம்பளத்தைத் தவறாமல் வாங்கிக்கொண்டு – தகவல்(!)தொழில்நுட்ப(!!) வேலையில் வேலை ஸ்திரம் இல்லை, என்று வேண்டுமானாலும் காரணமே சொல்லாமல் துரத்தி விடுவார்கள் என்று முனகிக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதற்கு உங்களுக்கு உடல்வலு, வாய்வலு, தட்டச்சு செய்ய விரல்வலு எல்லாம் வேண்டாமா?
ஆகவே மேலதிகமாக, உங்கள் கம்பெனி செலவில் கண்டமேனிக்கும் உண்டு – பற்றாக்குறைக்கு அலுவலக நேரத்தில் வெளி உணவகங்களுக்குச் சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு, திரும்பி வந்து ஃபேஸ்புக்கில் ஆக்கபூர்வமாகப் பணி செய்ய ஆரம்பியுங்கள். ஜமாயுங்கள்! அப்போதுதானே இரவில் நெடு நேரம் விழித்துக்கொண்டு ‘பிழியப்பட்டு’ வேலை செய்ய முடியும்? முதலாளிகளை, கார்ப்பரேட்டுகளைப் பழிக்க முடியும்? ஆகவே உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியம். சொல்லித் தெளிவதில்லை முனகும் கலை.
அதேசமயம், வருந்தத்தக்க வகையில், அளவுக்கு மீறிய சாப்பாட்டினால், உங்கள் தொப்பைகள் மிகவும் ஆரோக்கியப் பட்டு, கீபோர்டை இடித்துக் கொண்டு உங்களை நொடிக்குநொடி ‘ஸ்டேட்டஸ் அப்டேட்’ செய்யவிடாமல், சமூகப் பணிசெய்வதைத் தடுத்துவிடும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. மேலும் உள்ளாடைகள் XXL அளவுக்கு மேலே கிடைப்பது மிகவும் கஷ்டம். இதற்கும் மேலாக, நீங்கள் ஒன்றுக்குக் போகவேண்டிவரும்போது பாவப்பட்ட உடற்கூறு எங்கு பொதிந்திருக்கிறது என்பதை அறிவதும், உங்கள் கைகள் அதனை எட்டுவதும் கொஞ்சம் கஷ்டம். ஆகவே.
பெருந்தீனிமுதல்வாதத்தால் ஏற்பட்ட வாயுத் தொல்லை நீங்க, நீங்கள் வாயுபுத்திரனான நங்கநல்லூர் அனுமார் கோவிலில் ஒரு மண்டலம் பிரார்த்தனை செய்தால் எல்லாம் சரியாகி விடும். ஆனால் என்ன, இந்த ஒரு மண்டலம் (=45 நாட்கள்) முழுவதும் துளசிநீரைத் தவிர எதையும் அருந்தவோ சாப்பிடவோ கூடாது, அவ்வளவுதான்.
இருதய நோய்கள் அண்டாமல் இருக்க, கண்டிப்பாக, இரவில் படுப்பதற்கு முன் பல் தேய்த்துக் கொள்ளவும். வாழும்வரை உங்கள் பல்ஸ் சரியாக இருக்கவேண்டுமல்லவா?
மேலும், பற்கள் மின்ன நான் பரிந்துரைப்பது மலேஷியா மலேசுன்னி சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்ற கோபால் பல்பொடிதான்.
மன்னிக்கவும். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல கோபால் பல்பொடி, கோபாலின் பற்களைப் பொடி செய்து தயாரிக்கப் பட்டதல்ல. அவருடைய வீரப்ப மீசையைப் பார்த்தாலேயே எவருக்குமே பயம்வரும்தானே? ஆகவே தருமிக்குக் கட்டுப்பட்டு, வாயை மூடிக் கொள்ளுங்கள்.
குறிப்பு: கோபால் பல்பொடி = ரோஸ் செங்கற்கள் + சர்க்கரை + சாம்பல்.
நன்றி.
தொடர்புள்ள பதிவுகள்:
November 6, 2014 at 08:02
யப்பா! எப்டிபா இப்டி எளுதற?!?!?!
November 6, 2014 at 12:42
யப்பா கண்ணா! ஸும்மா கையாலதாம்பா எள்தறேன்! இம்மாத்ரி பதிவுக்கெல்லாம் மூள கீளல்லாம் யூஸ் பண்ணவேண்டீதில்ல பாரு – வெரலுக்குத் தோண்றத அதுவே தட்டச்சு அட்ச்சுக்கும்.
எம்மா நம்பரு வெரலுங்க இப்டீ லோல்பட்டுக்கினு பொட்டி தட்ரத இந்த கீபோர்ட் பாத்துருக்கும்? இன்னாண்ற நான் சொல்றது?
அர்த்த யாமத்துல அர்த்தமில்லாம மர்யாத நிமிட்டம் நிமிட்டுக்கு நிமிட் இப்டீ அட்ச்சிக்கினே போலாமா?
ஒண்டிக்குஒண்டி வர்ரியா?
November 6, 2014 at 08:35
ஹ்ம்…ஸலீல் சவுத்ரியின் செம்மீன் பாடல்களைக் குறிப்பிடாத ஒரு பட்டியல்! இதோ, கேட்டு மகிழுங்கள். https://www.youtube.com/watch?v=Qv5p8OwwbYE