பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…
April 2, 2014
(அல்லது) சர்வ நிச்சயமாக, நாய் விற்ற காசு குரைக்கும். ஆமென்.
(அல்லது) தீஸ்தா வகையறா மஹாத்மியம்!
எனக்கு, பிச்சை போடுவது பிடிக்காது. ஆனாலும், பொதுவாக, பிச்சைபோடுபவர்களின் ‘பள்ளம் ரொம்ப’[1] மேலும் அவர்களின் தேவையற்ற குற்றமனப்பான்மையைத் துடைத்தெறிய, இந்தப் பண விட்டெறியல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். இதற்கு ஆயிரம் ‘தலையில் அடித்துக்கொண்டு’ ஒப்புக் கொள்ளக் கூடிய வியாக்கியானங்கள் இருக்கலாம். (இதனைப் பற்றி, வெகு விஸ்தாரமாக சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையை, இந்தத் தளத்தில் மறுபிரசூரம் செய்திருக்கிறேன்: ‘தொழில்முறை’ தன்னார்வ நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணம் (19/12/2012))
ஆனால், இந்த குற்றமனப்பான்மையை மூலதனமாக வைத்துக் கொண்டு பிச்சைக்காரர்கள், மிகக் குறிப்பாக, நடிப்புச் சுதேசிகள் — அதாவது, அற்ப என்ஜிஓ-காரர்கள் – பிச்சைபோடும் தனவான்களின் முன் நாட்டியமாடி, ‘எப்படியாவது என்மூலம் என் மக்களுக்கு உதவக்கூடாதா’ – ‘என் என்ஜிஓ-க்கு உதவுவதன் மூலம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர்களாக’ – ‘எப்படியாவது நீங்கள் உதவினால் எங்களுடைய கலாச்சாரக் கருவூலங்களைக் காப்பாற்றலாம்’ எனப் பரிதாபமாக யாசிப்பதை வெறுக்கிறேன். எதற்கெல்லாம் பிச்சை கிடைக்கும் என அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல பிச்சையை ‘மாற்றி யோசித்துக்’ கேட்பதை அருவருக்கிறேன்.
இதற்கு மேல் மோசமான விஷயம், படுகோரமாக பரிணாம வளர்ச்சியடைந்த பல என்ஜிஓ-க்கள் – தனவான்களின் அடிப்பொடிகளாக, கைத்தடிகளாக உருமாறி – முன்னவர்களின் ஆக்ஞைகளை ஏற்று அவற்றினை நிறைவேற்ற அற்பமாகப் பணம் வாங்கிக் கொள்வது என்பது அயோக்கியத்தனமான ஒன்று. அதாவது, அந்த என்ஜிஓ-க்கள், அவைகள் உழைப்பதாகச் சொல்லப்படும் மக்களுக்கு, சமூகத்துக்கு எதிராகவே பணிபுரிந்து – ஆனால் அவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி மாய்மாலம் செய்வதுதான்.
இதைவிட அயோக்கியத்தனமான விஷயம் – இப்படி துரோக வேலைகளுக்குக் கிடைக்கும் பணத்தையும் கையாடல் செய்வதுதான். பொதுவுடமையைத் தன்னுடமையாக்கிக் கொள்வதுதான்; மேலதிகமாக, ஆவணங்களை ஜோடிப்பதுதான். மனதாரப் பொய் சொல்வதுதான்.

கப்பரைமுதல்வாதமும், ஊழலும்.. (இந்தப் படம் http://venitism.blogspot.in/2013/07/davy-crockett-its-not-yours-to-give.html – பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப் பட்டது)
இவையெல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய விஷயம் – மேற்கண்டபடியெல்லாம் உழை உழையென்று, ‘சமூகத்தின் மேன்மைக்காக’ உழைத்துவருவதாகச் சொல்லிக் கொண்டு, மினுக்கிக் கொண்டு — வெகு தைரியமாக, பெருமையுடன், மேட்டிமைத்தனத்துடன், நேர்மைத் திலகங்களாக தங்களை வரித்துக்கொண்டு, படித்த முட்டாட்கள்முன் பவனி வருவதுதான். ‘ஜான்ஸி ராணி’யாக அறியப் படுவதுதான்.
மேற்கண்ட அனைத்துக் கல்யாணகுணங்களையும் ஒருங்கே உடைய பெருந்தகைகளில் ஒருவர்தான் இந்த ‘தீஸ்தா ஸெதல்வாத்’ எனப் பரவலாக அறியப்படும், மாதர்குல மாமணியான தீஸ்தா சீதளவாத அம்மையார். இந்த அம்மையாரின் நடவடிக்கைகளை, சுமார் 15 வருடங்களாக அறிவேன் என்கிற முறையில் என் மேலான கருத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்… (ஆனால், நீங்கள் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டேதீரவேண்டும் என்கிற அவசியமேயில்லை; இணையம் ஒரு இருவழிச் சாலைதான்!)
ஆனால், ஒரு விஷயம்: இந்தக் கந்தறகோளங்களையெல்லாம் மீறி, வெளிநாட்டுக் கனவான்களால் இந்தியக் கப்பரைகளில் சில்லரை விட்டெறியப்பட்டு, சில சமயங்களில் ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்பதுபோலச் சில நல்ல விஷயங்கள் நடந்து விடுகின்றன என்பதுதான் – என்னால் இன்னமும் நம்பவேமுடியாத விஷயம். (உதாரணங்கள்: க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ரோஜா முத்தையா நூலகத்தின் பராமரிப்பு போன்றவை)
-0-0-0-0-0-0-0-0-
எனக்கு, வெளி நாட்டுக் கனவான்கள் இப்படிப் பிச்சை போடுவது என்பது பிரச்சினையில்லை. பிச்சை போடுபவர்களுக்கு ஆயிரம் காரணங்கள்.
… … மேலும், நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன்: அமெரிக்காவின் பிச்சையும் உதவியுமில்லாவிட்டால், ஜப்பானும் ஜெர்மனியும் வளர்ந்தேயிருக்க முடியாது. அமெரிக்காவின் பிச்சையில்லாவிட்டால், இணையம் சுணையம் மனிதவுரிமை என்றெல்லாம் ஒன்றுமே இருந்திருக்காது. ஆம், இவற்றை நான் நேரிடையாக அறிந்திருக்கிறேன்.
மேலும், ராஜரீகமாகப் பார்த்தால், எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளில் உள்ள நிலைமைகள், தங்களுக்கு உதவிகரமாக இருக்க, அப்படிப்பட்ட நிலைமைகளை வளர்த்தெடுக்க முயற்சி செய்வது என்பது – அவர்களளவில் சரியானதொன்றே. எனக்கு ‘ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து’ உவப்பாக இருந்தாலும், நடைமுறைகள், ராஜதர்மங்கள் என வரும்போது – விஷயங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
இந்த விஷயங்களில் – அன்னிய நாடுகளுக்கு பிரச்சினைகள் உண்டுபண்ணுவதும், அவற்றின் தொழில் நுட்ப, ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டை போடுவதும், சிறிய பெரிய உபத்திரவங்கள் கொடுப்பதும், அந்தந்த நாட்டு அரைகுறைப் போராளிகளை ‘உபயோகித்து,’ மேலும் ஊக்குவித்து (= $$$ அல்லது சப்பிய எலும்புத் துண்டு) போராட்டங்களையும் பிரச்சினைகளையும் ஊக்குவிப்பதும், ஊதி ஊதிப் பெரிதாக்குவதும் – பொம்மலாட்டக் காட்சிகளை அரங்கேற்றுவதும் – சகஜமான முறைகள்தான். அன்னிய நாட்டார்களுக்கு வயிறு எரிந்தாலும், அயோக்கியத் தனமாக இருந்தாலும் – இது ஒரு நடைமுறை உண்மைதான்.
ஆனால் – என்னுடைய பிரச்சினையெல்லாம், பிச்சை எடுப்பவர்களைப் பற்றித்தான்; அற்பக் கயமையுடன் தேசத்துக்குத் துரோகம் செய்துகொண்டு இலவசங்களுக்காக நாய்போல அலைபவர்களைப் பற்றித்தான்; ஆகவே, தேனுக்கு அலையாய் அலைந்து, நாலாறுமாதமாய்க் கனவானை வேண்டி, கொண்டு வந்த தோண்டிக் கப்பரையில் தேனைப் பிடித்துக்கொண்டு அல்லாடிக் கூத்தாடி, அது மானாவாரியாகச் சிந்தி, கப்பரையைப் போட்டுடைத்து வேறு வழியே இல்லாமல் புறங்கையை நக்குபவர்கள், கீழே ஒடுவதை மற்றவர்கள் நக்க உதவுபவர்கள் பற்றித்தான்… அதாவது, சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த கப்பரைமுதல்வாத என்ஜிஓ-க்கள் பற்றித்தான். (ஆ! கப்பரை உடைந்து விட்டதா? கப்பரை இல்லாவிட்டால் எப்படித்தான் பிச்சையெடுப்பது?? ஆக, உடனடியாக, உடைந்த கப்பரைக்குப் பதிலாக ஒரு புதிய கப்பரை வாங்கவேண்டும் வேறு! நாளைக்கே இதற்கு ஒரு ப்ரொபோஸல் போட்டுவிடலாம்; கனவான்கள் கப்பரை வாங்குவதற்கும் இனாம் கொடுப்பார்களல்லவா?)
… கப்பரைவாத தீஸ்தாக்களுக்கு தொடர்ந்து ‘உதவி’ வரவேண்டுமென்றால் – பிரச்சினைகள் தொடர்வதாகக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும்தானே? இதில் இவர்கள் மன்னர்கள் – எந்த கனவானுக்கு எந்த களப்பலி கொடுத்தால், எப்படி பைசா வசூல் செய்யமுடியும் என்பதை ஐயம்திரிபற அறிந்தவர்கள். அதனால் களப்பலிகளைக் க்றீச்சிட்டுக் கொண்டு, ஊடகங்கள் சகிதம் கொடுப்பவர்கள்.
நான், காந்தியின் ராமராஜ்யத்தை விழையும் அதே சமயத்தில், மனிதனின் பரிணாம வளர்ச்சியும், மனித குணாதிசியங்களும் எப்படிப் பட்டவை என்பதையும் உணர்ந்ததனால் எனக்குப் பிரச்சினைதான், என்ன செய்வது? சமுதாயத்தின் பற்பல முரணியக்கங்களிற்கும் முண்டங்களியக்கத்திற்கும் நடுவில் மிரண்ட இயக்கமாக உள்ளே மாட்டிக் கொண்டு முழிப்பதுதான் தமிழச்சராசரியான என்னுடைய நிலைமை என்பதுதான் உண்மை.
-0-0-0-0-0-0-
விகிலீக்ஸ் என சிலகாலம் முன்பு வரை அல்லோலகல்லோலப் பட்ட – அமெரிக்க அரசின் பல நெளியவைக்கும் உள்விவகாரத் தந்திகள்/செய்திப் பரிமாற்றங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டமை – பற்றியெல்லாம் நமக்கெல்லாம் கொஞ்சம் மங்கலாக நினைவிருக்கலாம்.
இந்தப் பரிமாற்றங்களில் ஒன்றின் சில பகுதிகளை மட்டும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன் – இதில் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கேற்ப ஒழுகி, அதற்காக மாமூல் பெற்றுக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் பல விதமான தீஸ்தாக்கள் பற்றிய தகவல்களும், பல மனிதவுரிமைக்காரர்களின் பவிஷுகளும் இருக்கின்றன. ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் – ஆஹா, அமெரிக்கக் குறிக்கோள்கள் நன்றாகவேதானே இருக்கின்றன என்றுதான் தோன்றும். அப்படி உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு மேலதிகமாக அனுபவம் தேவை என்பது நிச்சயம்!

இந்தப் பகுதி, அமெரிக்காவின் ‘அதிகார பூர்வமான’ வெளிப்படையாகத் தெரிவிக்கும் காரணங்களைத் தெளிவு செய்கிறது…..

சுழித்துக் காட்டப் பட்டுள்ள ஸிஜேபி, தீஸ்தா அம்மையாருடையது; ஸப்ரங், அவர் கணவருடையது; பண/பிணக் கொழிப்புக்குக் கேட்பானேன்!
மேற்கண்டவை இடம் பெற்றிருக்கும் ஆவணமான – 2005 அக்டோபர் 5, 05:52 (புதன்கிழமை அன்று) அமெரிக்காவின் டெல்லி தூதரகத்திலிருந்து அவர்களுடைய மேலதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டஅனுப்பப் பட்ட ரகசியச் செய்தியைப் படித்து இன்புறவும்
இச்சமயம், ஒரு மிக முக்கியமான விஷயம்: நான் தொழில்முறை அமெரிக்க வெறுப்பாளனோ அல்லது மகாமகோ பீதியளிக்கும் உலகளாவிய சதித்திட்ட வலையென வதந்திகளைக் கிளப்புபவனோ, பன்னாட்டு நிறுவனங்களைக் காரணமேயில்லாமல் கரித்துக் கொட்டுபவனோ, உலகமயமாக்கம் ஆஊ என்று உளறுமயமாக்கம் செய்பவனோ அல்லன் – என்பதையும் நீங்கள் இப்போது புரிந்து கொள்ளவேண்டும்.
அமெரிக்காவில் வாழும் சராசரித் தமிழர்களை நான் மதிப்பதில்லை என்பது உண்மை – இருந்தாலும், நான், பல பிற விஷயங்களுக்காக அமெரிக்காவை, அமெரிக்கர்களை மிகவும் மதிப்பவன்தான்.
-0-0-0-0-0-0-0-
சரி. இந்த போங்காட்டம் ஆடும் தீஸ்தா பெண்மணி தான் நரேந்த்ரமோதி-க்கு எதிராக பொய்ச் சாட்சியங்களையும் உருவாக்கி, 2002 குஜராத் கலவரங்களைப் பற்றிய அநியாய எதிர்மறைச் செய்திகளை, வதந்திகளைத் தொடர்ந்து உலவ விட்டவர். தீஸ்தா போன்றவர்கள் ஊதிஊதிப் பெரிதாக்கிய வெறுப்பலையைப் பின்பற்றித்தான், பல எழுத்தாள/ஊடகக் கொழுந்துகள் மேலும் மசாலா சேர்த்து எழுதினர். இந்தக் கொழுந்துகளில் மார்த்தா நுஸ்பாம் போன்றவர்களும் அடக்கம்.
ஊடகங்களில் கும்மியடிப்பவர்கள், இந்தச் ‘செய்திகளின்’ அடிப்படையில், மறுபடியும் மறுபடியும் பொய்களைப் பரப்பிக் கொண்டேயிருக்கின்றனர். நம்முடைய விசிலடிச்சான் குஞ்சப்ப அறிவுஜீவிகளும், தொழில்முறை மனிதவுரிமைக்காரர்களும் இதனை அப்படியே காப்பியடித்து 2002 கோத்ரா என ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு, அனுபவிப்பதற்கு எனக்கு ஒரே கிளுகிளுப்பாகவே இருக்கிறது. :-)
… மோதி-யை வெறுப்பது, குஜராத்தைக் கரித்துக் கொட்டுவது என்பது – ஒரு தற்கால மோஸ்தர் ஃபேஷன் மட்டுமல்ல – அது சிலருக்கு, சுளுவாகப் பணம் கொழிக்கும் தொழிலும்தான்!
-0-0-0-0-0-0-0-
தீஸ்தா அம்மணி அவர்களின் லீலைகள் என்பவை – காங்க்ரெஸுடன் கொள்கைக் கூட்டணி, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, பணம் கையாடல், நேரடிப் பொய்கள், சாட்சி ஜோடிப்புகள், மனித உரிமை அலம்பல்கள், வெறுப்புமிழல்கள் எனத் தொடர்ந்து விரிந்து கொண்டிருக்கின்றன.
அவருக்குத் தொடர்ந்து அமெரிக்க உதவியும் கிடைக்கிறது. அமெரிக்க கடைத்தேங்காயை எடுத்து ஸெக்யூலரிஸப் பிள்ளையாருக்கு அவரும் தொடர்ந்து உடைத்துக் கொண்டேதான் இருக்கிறார். மதவாதம், மோதி எதிர்ப்பு என்றெல்லாம் வெட்கமேயில்லாமல் ‘பணி’ புரிந்து கொண்டிருக்கிறார்.
விவஸ்தை கெட்ட படித்த முட்டாள்கள், அவருடைய பெயரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாழ்க, தீஸ்தா அம்மையார் நாமம்!
வளர்க, அவர் உண்மைக்குத் தொடர்ந்து போடும் நாமம்!!
இதுதாண்டா தீஸ்தா ஸெதல்வாத்!!!
ஆமென்.
-0-0-0-0-0-0-
[1] சுந்தர ராமசாமி அவர்களின் பள்ளம் சிறுகதை
தொடர்புடைய பதிவுகள்:
April 2, 2014 at 21:10
இந்த அம்மணி சரியான சமயத்தில் காராக்ருஹத்துக் கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
எப்பேற்ப்பட்ட சமயமிது. அர்ணாப், ராஜ்மோஹன், பர்க்காதத், கரண்தாப்பர் இத்யாதிகளுடன் ஆட்டமாக ஆடி கும்மியடித்து மோடிக்காழ்ப்புப் புராணத்தை உச்சஸ்தாயியில் 24 X 7 அலறித்தள்ளும் வாய்ப்பு பறிபோய் விட்டது.
அப்பாவி முஸல்மான் களுக்காக வாங்கிய பரங்கிப்பணத்தில் குடித்துக் கும்மாளமிட்டு நகை நட்டு வாங்கி ஏமாற்றிய பாவம் சும்மாவா போகும்.
April 2, 2014 at 21:12
ஆனால் என்ன இந்த நாரீ மணி எடுத்த வாந்திகளைக் குடித்து தளம் தளமாக செறிக்காது சலிக்காது உரலாயுத copy paste வாந்திகள் தொடரத்தானே செய்கின்றன
April 3, 2014 at 17:30
மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, மதங்களிடையே நல்லிணக்கத்துக்கு உழைப்பது என்பவை மிகவும் போற்றுதலுக்கு உரியவை.
இதற்காகப் பெறப்படும் நிதியுதவி வெளிநாட்டிலிருந்து வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டுமே. நிதியுதவி பெறுவது என்று வந்துவிட்ட பிறகு உள்நாட்டு உதவி சரி, வெளிநாட்டு உதவி கேவலம் என்பது ஒருவித மனத்தடை சார்ந்த விஷயம் மட்டுமே. எல்லோருக்கும் இதே மனத்தடை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
தீஸ்தா கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்குகளை நடத்துகிறார். மோடி அல்லது அரசு தரப்பில் தரப்படும் ஆதாரங்கள் உண்மையானவை, தீஸ்தா தரும் ஆதாரங்கள் போலியானவை என்று சொல்ல வேண்டியவை நீதிமன்றங்களே. எத்தனை வழக்குகளில் இப்படிச் சொல்லியிருக்கின்றன? அவையும் மேல் முறையீட்டுக்கு உட்பட்டவை.
மோடி அரசில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானிக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என்று மோடி அரசுத்தரப்பே கோரியது. ஏகப்பட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தீஸ்தா, ஆஷிஸ் கேத்தன், மல்லிகா சாராபாய் போன்றவர்களின் பணிகள் உறுதுணையாக இருந்திருக்கின்றன.
மற்றபடி தீஸ்தா நிதிப்பணத்தில் ஊழல் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும் தீஸ்தா மிக மிக அபாயத்துக்குட்பட்டு, ரிஸ்க் எடுத்து செயல்பட்டு வருகிறார். பணம் சம்பாதிப்பதுதான் (புகழ் என்றாலும்கூட) நோக்கம் என்றால் அதற்கு ஆபத்தில்லாத பல எளிய வழிகள் இருக்கின்றன. அதற்காக ஒருவர் இவ்வளவு சிரமப்படுவார் என்பது நம்புவதற்குக் கடினமே.
April 18, 2014 at 15:30
தனக்காக வாதாட திரு.சரவணன் போன்றோர் இருப்பார்கள் என திருமதி.தீஸ்தா கூட நினைத்து இருக்க மாட்டார். பொய்யான வாக்குமூலம் ஒன்று கொடுக்கவே நாம் பயப்படுவோம். ஆனால் இப் பெண்மணி, பொய்யான வாக்குமூலத்திற்கே ஒரு அலுவலகம் அமைத்து, இரண்டு பணிஆட்களை அமர்த்தி, ஏழை மக்களையும் தனது பணி ஆட்களையும் கூட ஏமாற்றி ……….இவ்வளவும் செய்து, பின் தொலை காட்சியில் வீராவேசமாக கத்துவது என்பது …..உண்மையில் வீரப் பெண்மணி தான். என்ன ஒன்று, இந்த வீரத்தை ஆக்கபூர்வமான விதத்தில் உபயோகபடுத்தி இருக்கலாம். பணத்தை வாங்கிக் கொண்டு, கொலை செய்யும் “அடியாள்” போல தான் இதுவும்.
April 4, 2014 at 20:52
ஸ்ரீமான் சரவணன்,
முதலில் தப்பு செய்பவன் தண்டனை பெறுவான் உப்பு தின்பவன் தண்ணி குடிப்பான் என்பது இயற்கை நியதி. தீஸ்தா அம்மணி கலஹத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய சஹோதரர்களுக்காக வாதாட பரங்கியரிடம் இருந்து பெற்ற பிச்சைப் பணத்தில் குடித்து கும்மாளமிட்டு இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
தாங்கள் அருமையாக ஒரு வசனம் எழுதியுள்ளீர்கள் :-
\\ எத்தனை வழக்குகளில் இப்படிச் சொல்லியிருக்கின்றன? அவையும் மேல் முறையீட்டுக்கு உட்பட்டவை.\\
இதே கதை வசனத்தை நீங்கள் எழுதியுள்ள பின்னால் உள்ள வாசகத்துடன் இணைத்தால் சரிவருமா பாருங்கள் ?
\\ மோடி அரசில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானிக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என்று மோடி அரசுத்தரப்பே கோரியது. \\
மேல் முறையீடு என்பது தீஸ்தா அம்மணிக்கு மட்டிலும் சொந்தமா என்ன? கோட்னானி அம்மணி கூட மேல் முறையீடுக்குச் செல்லலாமே