அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்
March 16, 2014
நண்பர் ஒருவர் (=ஆங்கிலோதமிழர் – இவர், தமிழ்வழிக்கல்வி படித்து ஒருகாலத்தில் தமிழனாக இருந்தாலும், எனக்கு ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதுவார்; இப்போதெல்லாம், தமிழில் படிக்க மட்டும்தான் முடியும் இவருக்கு – சுட்டுப்போட்டாலும், திட்டினாலும் தமிழில் ஒரு வரிகூட கோர்வையாக எழுதமுடியாத பரிதாப நிலையிலிருப்பவர்; பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல், அந்த அமெரிக்காவில் (= ‘ஸ்டேட்ஸ்!’) வேறு வசித்துக்கொண்டிருக்கும் கையறு நிலையில் இருப்பவர்; கடந்த சுமார் 25 வருடங்களாக, கொஞ்சம்கூடச் சளைக்கவே சளைக்காமல் ‘கண்டிப்பாக அடுத்த வருடம் இந்தியா திரும்பி வந்து காவிரிக்கரையோரம் வயல்வெளிக்கு நடுவே ஒரு அழகான குடிசையில்’ ஸெட்டில் ஆகிக் கொண்டிருப்பவர்; பாவம்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பலவிதமான தீராப் பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள், ஹ்ம்ம்ம்…) அழகான இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் (என் பதிவைப் படித்துவிட்டு), எழுதியிருக்கிறார்:
“பரீக்ஷா ஞாநி காமாலைக் கண்ணர் அல்லர். அவர் நேர்மையைச் சந்தேகித்தால் காமாலையில்தான் போவாய்! அவர் எழுத்தில் என்ன அப்படித் தவற்றைக் கண்டாய்?
… பொஜக-வில் (AAP – பொது ஜனக் கட்சி) சேர்ந்துள்ள அவர் போன்ற அறிவுஜீவிக் களப் பணியாளர்களை ஏன் ஏளனம் செய்கிறாய்?”
… இதுவரை நான் நினைத்தேன் – நான் ஒருகாலத்தில் மிகவும் மதித்த (ஏன், இப்போது கூட சிலசமயம் மதிக்கும்) ‘ஞாநி’ சங்கரன் அவர்களைப் பற்றி எதிர்மறையாக எழுதவே கூடாது – அப்படியே எழுதவேண்டி வந்தாலும், அதிகபட்சம், தனிப்பட்ட கடித உரையாடல்களில் மட்டுமே எழுதவேண்டும் என்றெல்லாம்; ஆனால், அவர் சில விஷயங்களில், தொடர்ந்து கண்டமேனிக்கும் எழுதுவது, தரவுகளேயில்லாமல் கருத்துதிர்ப்பது என்பது இக்காலங்களில் – பொதுவாகவே, பல விஷயங்களிலும் எருமைத் தோலனாகிய என்னையே – மிகவும் சங்கடப் படுத்துகிறது.
இப்படியே இன்னும் சிலகாத தூரம் போனால் எஸ்ராமகிருஷ்ணன் போலாகிவிடுவாரே என்று நினைத்தால் பயமாக இருக்கிறது – ஆனால் — அவருக்குப் பல ஒளிவருடங்கள் தாண்டவேண்டும், யுவகிருஷ்ணா அவர்கள் நிரந்தரமாக இருக்குமிடம் செல்வதற்கு என்பது மட்டும்தான் இப்போதைக்கு எனக்கு ஆசுவாசம் அளிக்கும் விஷயம்…
ஆக இவருக்கும் (எனக்கும்) என் பதில்: ஞாநி அவர்களைப் புகழ்ச்சியாகத்தான் காமாலைக் கண்ணர் என்று சொல்கிறேன். அவர் பல விஷயங்களில் நேர்மையானவராகத்தான் இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இது என்னுடைய தொடரும் பிரமையாகவும் கூட இருக்கலாம். மேலும், அவர் இப்போது ‘பரீக்ஷா’ ஞாநி அல்லர். ஏனெனில் அவர் இக்காலங்களில், எதையும் பரீட்சித்துப் பார்க்காமல் பரீட்சிக்காத மகாராஜாவாக, மஹாபொய்ரதங்களில் ஆரோகணிக்கிறார் – கண்டமேனிக்கும் கருத்துப் பட்டங்களை ‘டீல்’ விட்டுக் கொண்டிருக்கிறார்; முக்கியமாக, அவருக்கு ஒன்றுமே புரியாத விஷயங்களான — தொழில்நுட்பங்கள், மதச்சார்பின்மை, மோதி பற்றி – அவருக்கு ஒரே மஞ்சள்காமாலைப் பார்வை, அவ்வளவுதான். இந்த மூன்று விஷயங்களில் கள்ளத்தனையது கருத்து நீட்டம், வேறென்ன சொல்ல?
ஆக – அடிப்படையில் மனிதநேயமும் புத்திசாலித்தனமும் மிக்க இவர், மற்ற போராளிக் குளுவான்கள் போலவே, ப்ரொடெஸ்ட்வாலாக்கள் போலவே – சில விஷயங்களை மிகவும் மேம்போக்காக, மனிதவுரிமைத்தனமாகப் படித்தேன் எனப் பேர் பண்ணிவிட்டு, அதன் பின் ஒரு மகாமகோ பிரமையில் அதனைப்பற்றி அனைத்துக் கோணங்களிலும் யோசித்து, அறியவேண்டிய அனைத்தையும் அறிஅறியென்று அறிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். பொதுவாகப் பஜனை செய்கிறார். இதுதான், என் கருத்தில் – அவருடைய வீழ்ச்சி. அவரைப் போல, எல்லாவற்றிலும் சதியைப் பார்ப்பது என ஆரம்பித்தால், துப்பறியும் பின்நவீனத்துவ நவீனங்களைத்தான் எழுத முடியும் – ஆனால் அவர் ‘உண்மை விளம்பும்’ கட்டுரைகளையல்லவோ எழுதுகிறார்?
Everyone rises to the level of his incompetence என ஒரு வசனம் (= பீட்டர் கோட்பாடு), மேலாண்மை வட்டாரங்களில் உண்டு. பொதுவாக, நம் தமிழ்ச்சூழலில், நிறைய எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த நிதர்சன வசனம் பொருந்திக் கொண்டே வருகிறது. விதம்விதமாக எழுதவேண்டி வருவதால், சரக்கு தீரும் அபாயம் இருந்தாலும், அடாவடியாக எழுதி அதனைச் சமன் செய்து விடலாம், பள்ளங்களை நிரப்பி விடலாம் என்ற போக்கு இருக்கிறது, நம் அருமைத் தமிழில்! ஆம், நானும் இதற்கு விதிவிலக்கல்லதான்.
எது எப்படியோ — ஞாநி அவர்களுடைய ஒரு தவறான கருத்தினை யாராவது சுட்டிக் காட்டினால், அதனைத் திருத்திக் கொள்கிறாரா என்பதும் எனக்குச் சந்தேகமே. நான், மிக நீளமாக ஒரு ஞாநி-எதிர்க் கட்டுரை எழுதலாமா என நினைத்தேன். ஆனால்…
உதாரணத்துக்கு – சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதியுள்ள இந்த நீளக் கட்டுரையைப் பொறுமையாகப் படியுங்கள்: அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
ஜெயபாரதன் அவர்கள் – பொறுமையாக, அழகாக வாதங்களைக் கோர்த்து ஞா நி அவர்களின் வாதங்களை, வாதமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். May Jeyabharathan’s tribe increase!
-0-0-0-0-0-
நான், பொதுவாக தினச்செய்திகளைப் படிப்பவனே அல்ல – தினசரிப் பப்பரப்பாக்களில் ஆழ்வதற்கு எனக்கு நேரமோ முனைப்போ இல்லை. ஆக, ஞாநி அவர்கள் பொஜக-வில் சேர்ந்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. அப்படி அவர் சேர்ந்திருந்தால், அவருக்கு என் வாழ்த்துகள். சேராமலிருந்தால் அதிகப்படியாக வாழ்த்துகள். எப்படியும் – நானும் களஅரசியலில் ஈடுபடுவதை அத்தியாவசியமாகவும் பெருமையாகவும், மிக முக்கியமாக – கடமையாகவும் நினைப்பவன் என்கிற முறையில் – அரசியலில் படிப்பாளிகள்-சிந்தனையாளர்களும் ஈடுபடவேண்டியது மிக அவசியம்தான் என்பதை உணர்கிறேன்.
ஆனால், கடந்த இருபது ஆண்டுகள் போல, அர்விந்த் கெஜ்ரீவால் அவர்களின் செயல்பாடுகளை (படித்த கல்லூரி சார்ந்த சில பொதுவான அறிமுகங்கள் மூலமாக, நேரடியாக அல்ல) ஓரளவுக்கு அறிந்திருக்கும் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நீர் தன் மட்டத்தை அடையும். (ஆனால் இந்திய அரசியலின் முரணியக்கங்களை நெடுங்கால அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கு, மறைமுகமாக இந்த பொஜக நிச்சயம் உதவிசெய்யும் என்பதை உணர்கிறேன், அவ்வளவுதான்)
பின்குறிப்பு1: இந்த பொஜக விஷயத்தில், நாம் சாளரம்#1 பிழையைச்செய்கிறோம் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
பின்குறிப்பு2: நானும் ஒருகாலத்தில் மிகமுனைப்போடு ஸிவில் ஸர்வீஸஸ் (= ’ஐஏஎஸ்’) பரீட்சை எழுதியவன். ஆனால், அர்விந்த் கெஜ்ரீவால் அவர்கள், இதில் தேர்ச்சியுற்றார். நான் படுமோசமாகத் தோற்றேன். ஆக, இது சம்பந்தமாக, எனக்கு இவரிடம் பொறாமையாகக் கூட இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
March 17, 2014 at 07:04
கேஜ்ரிவால் வாரணாசியில் மோதியை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர் போட்டியிட்டாஈல் காங்கிரஸும், எஸ்.பி., பி.எஸ்.பி.யும் போட்டியிடாமல் ஏ.ஏ.பி.க்கு ஆதரவு தர வேண்டும். கேஜ்ரிவால் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, குறைந்தபட்சம் இந்தப் பெரிய போட்டி காரணமாக மோதி தன் சொந்தத் தொகுதியிலேயே அதிக கவனம் செலுத்தும்படி ஆகிப்போகும்; அதுவே நல்ல விஷயம்தான். மோதி ஒருவேளை சொந்தத் தொகுதியில் தோற்றால் அதைவிட நல்ல செய்தி இருக்க முடியாது. அவர் கட்சிக்குள்ளேயே கட்கரி. ஜேட்லி, சுஷ்மா என எல்லோரும் சேர்ந்து இதுதான் சாக்கு என்று அவருக்கு தர்ம அடி கொடுத்து ஓரம்கட்டி விடுவார்கள்!
எனக்கென்னவோ முன்பு திடீரென்று ஆரம்பித்து, இன்டர்நெட்டில் மட்டுமே செயல்பட்டு, ஒரே தேர்தலோடு காணாமல் போன லோக் பரித்ரன் கட்சி உங்களுக்கு ஏற்புடையதாக, விருப்பத்திற்குரியதாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது! சரியா?!
March 18, 2014 at 08:35
சரவணனின் பகல் கனவு பலிக்கப்போவதில்லை .அவருக்கு ஏன் மோதி மீது இந்த கொலை வெறி?
March 18, 2014 at 10:57
மோடிக்கு மக்கள் ஆதரவு என்று ஏதுமில்லை. அவரை மீடியாக்கள் தான் உயர்த்தி பிடிக்கின்றன. மோடி அலை என்று ஏதுமில்லை.
இதுதான் உண்மை என்றால் எதற்கு மோடியை எதிர்த்து அனைவரும் வாலை ஆதரிக்க வேண்டும்? தானாக தோற்க போகும் மோடிக்கு எதிராக இத்தனை பேரா? ஏனோ அபிமன்யு நினைவு வருகின்றது.