போங்கடா, நீங்களும் ஒங்களோட அணுசக்தி எதிர்ப்புக் கும்மியும்…

March 14, 2014

(அல்லது) அய்யய்யோ அணுசக்தி! நெஞ்சு பொறுக்குதில்லையே…

நான் மரபுசாரா, மறுசுழற்சி செய்யக்கூடிய எரிபொருள்களினுடைய, தொழில் நுட்பங்களுடைய மகாமகோவிசிறிதான். பல பத்தாண்டுகளுக்கு முன்னால் வீட்டிலேயே தாமிரத் தகடுகளை வைத்து, மெலிதாக ஆக்ஸிடேஷன் செய்து அவற்றை உபயோகப் படுத்தி சூரியசக்தியை மின்சாரமாக (இது, ஏறக்குறைய – பிவி – ஃபோட்டோவால்டாய்க் தொழில்நுட்ப வழிமுறை போலவேதான் – ஆனால் ஸிலிகனை உபயோகிக்கவில்லை) மாற்றி உபயோகித்திருப்பவன். என்னுடைய ஜீப்பினை டீஸலுக்குப் பதிலாக புங்கமரக்கொட்டை எண்ணையை உபயோகித்து வேதியியல் மாற்றம் செய்து  (அதற்காக எஞ்சினை மாற்றியமைத்து) கொஞ்ச நாள் ஓட்டி, பல படிப்பினைகள் (=பல குளறுபடிகள், எஞ்சின் கெட்டுப்போதல்கள் + சில ‘வெற்றிகள்’) பெற்றவன். காற்றாடி டர்பைன்களுடன் பரிச்சயம் உள்ளவன். சாணஎரிவாயு தயாரிப்பு செய்து அதில் மோட்டார் வண்டியை ஓட்ட முயன்று மகத்தான தோல்வி கண்டவன்; மனித மலத்தை (=என் மலம்) கம்போஸ்ட் செய்து மட்கவைத்து அதனையும் உபயோகித்து மேல்மாடியில் காய்கறித் தோட்டம் போடுதல், ருடால்ஃப் ஷ்டெய்னர் இலக்கண வழி வேளாண்மை  போன்றவைகளை ஓரளவு நன்றாகவே, சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை செய்திருப்பவன். என்னளவில், முடிந்த நேரத்தில், கொஞ்சம் சக்திக்கலன்கள் தொடர்பாக சிறு ஆராய்ச்சிகள்(!) செய்து கொண்டும் வருபவன்; தாறுமாறான எரிபொருள் உபயோகத்தைப் பற்றியும், மின்சாரத்தின் எதிர்காலத்தைப் பற்றியும்  ஓரளவுக்குப் பீதி அடைந்திருப்பவன்.

மரபுசார் / மரபுசாரா / மறுசுழற்சி செய்யப்படக்கூடிய / முடியாத மின்சார உற்பத்தியில் முனைப்பும் பயிற்சியும், ஆர்வமும் உள்ள பலரை அறிந்தவன்.  மேலும், அணுக்கருவுலைகளில் பணிசெய்யும் சில மகத்தான மனிதர்களை நான் நேரிடையாக அறிவேன். ஆனால்  நான், இந்தத் துறைகளில் ஓரளவுக்கு படிப்பும், அனுபவமும்  உள்ளவன் மட்டுமே – ஆனால் சுயபயிற்சிதான், இவற்றுக்காக முறையாகக் கல்லூரி சென்று மேற்படிப்புப் பயின்றவன் அல்லன்.

எதற்கு மேற்கண்டவற்றை கோடிட்டுக் காட்டி சுயதம்பட்டத்தனத்துடன் (=வழக்கம்போல)  எழுதுகிறேன் என்றால்…

… இருந்தாலும், அதே சமயத்தில் நான் அணுசக்தியின் – மிகச் சரியாகச் சொல்லவேண்டுமானால்,  அணுக்கரு சக்தியின் மீதும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பவன். அதன் தேவையையும் அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மகத்தான ஆராய்ச்சிகளையும்,அந்த ஆராய்ச்சிகளினால் மானுடத்துக்குக் கிடைத்திருக்கும் மகத்தான, அருமையான பயன்களையும்  (+பயங்களையும்தான்!) உணர்ந்தவன்.

அதன் சாதகபாதகங்களை அறிந்தவன்; ஆனால், அதன் மேல் அனாவசியமான பயமோ, அறியாமையின் பாற்பட்ட வெறுப்போ  இல்லாதவன். மேலும், அடிப்படைகளிலிருந்து ஆரம்பித்து ஒரு கெய்கர் ம்யூல்லர் எண்ணுவானைக் கட்டமைத்து, பலவிதமான கதிரியக்கங்களை அளந்திருப்பவன் – இம்முயற்சியின் காரணமாக,  கதிரியக்கம் என்பதும் நம் பிரபஞ்சத்தில் பிரம்மம் என்பதை உணர்ந்தவன்.

மிக முக்கியமாக  — கதிரியக்க அபாயம்(!) என்பது அனல்மின் நிலையங்களில் தான் (ஆம், அனல்மின் நிலையங்கள்தான்!)  மிக அதிகம் (அணுக்கரு மின்நிலையங்களிலிருந்து அல்ல!!) என்பதையும் அறிந்தவன். (இதனைப் பற்றிய என்னுடைய ஆங்கில மூலப்பதிவு இங்கே – Uranium Paranoiaum)

-0-0-0-0-0-0-0-

இப்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு இந்தப் பதிவைத் தலையில் அடித்துக்கொண்டு படித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இப்போதுகூட உங்களைச் சுற்றியுள்ள பொருட்களில் 90 சதவிகிதம் மனிதனால் தயாரிக்கப் பட்ட பொருட்கள்தாம். வெளியில் மரங்களைப் பார்க்க முடிந்தாலும், அந்த மரங்களும், மனிதர்களால் அங்கு வைக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். (Manufactured landscapes and Manufactured environments)

என்னுடையது இயற்கை X செயற்கை எனும் மலட்டு விவாதம் அல்ல – இயற்கையும் அழகு, செயற்கையும் அழகுதான்.

என்ன சொல்லவருகிறேன் என்றால் – விஷயம் என்னவென்றால் — தயாரிக்கப்பட்ட சூழல்களில் சொகுசாக வசித்துக் கொண்டு, அதிநவீன தொழில் நுட்பங்களின் சகல பயன்களையும் உபயோகித்துக் கொண்டு, கண்டமேனிக்கும் மின்சாரத்தை நுகர்ந்துகொண்டு –  சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து  – தொழில் நுட்பங்களைக் கரித்துக் கொட்டும் கேவலமான இரட்டை வேடம் எனக்கு மிக மிக  எரிச்சலைக் கொடுக்கக் கூடியதொன்று.

இந்த அலுப்பான போக்கு – இது பரவலாக்கப் பட்டது என்பது —  தற்காலங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை  ஞாநி அவர்களிடமிருந்து ஆரம்பித்தது என்பது என் எண்ணம் – இவர்தாம்  தன்னுடைய தீம்தரிகிட (RIP)  எனும் இதழில் விலாவாரியாக, கல்பாக்கம் அணுக்கருவுலை பற்றி, அற்ப வதந்திகளை, கருத்தாக்கங்களை — தம் கவலைப் பெருமூச்சுகளாக  அறிவுஜீவிய வட்டாரங்களில் உலாவரவிட்டவர். (இது சுமார் 20 வருடமுன்னர் நடந்த கதை என நினைக்கிறேன்; இவர் அடிப்படையில் இனிமையானவர், நேர்மையானவர்தான் – ஆனால் மகாமகோ காமாலைக்கண்ணர்).

… இப்போது நம் அறிவுஜீவிகளையெல்லாம் தொத்திக் கொண்டு விட்டது இந்த பயபீதி. எல்லாரும் சும்மனாச்சிக்கும் கோஷ்டம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் பாதிப் பேருக்கு பயம் – எப்படியாவது ஏதாவது அணுக்கருசக்திக்கெதிராக தம் போராளித்தனத்தை மிக உரக்கக் காண்பிக்காவிட்டால், யாராவது பிற்போக்கு முத்திரை குத்தி விடுவார்களோவென்று…மனித நேயமே தமக்கு இல்லை என்று கருதிவிடுவார்களோ என்று…

ஆனால், சிலருக்கு நிஜமாகவே நல்லெண்ணம்தான் – ஆனால் இவர்களுக்கு, அணுக்கருசக்தி பற்றி நன்றாக அறிந்து கொள்ள முனைப்பும் இல்லை, வாய்ப்பும்  இல்லையோ என்ன எழவோ! அதனால் ஊரோடு சேர்ந்து ஒத்து வாழ்ந்து, குதித்துக் குதித்துக் கும்மியடிக்கிறார்கள்.

எது எப்படியோ, அவரவர்களின் அதிகச் சாப்பாட்டு மகாமகோ தொப்பைகளும் ஊளைச் சதைகளும் இப்படியாகவாவது கரைந்து நல்ல ஆரோக்கியமாக அவர்கள் மாறினால் / இருந்தால் சரி.

-0-0-0-0-0-0-0-

இப்போது என் செல்ல தத்துப்பித்துப்பிள்ளையான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடம் வருகிறேன்… (ஐயகோ! அவரிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றாலும், என்னிடமிருந்து அவரைப் பிரிக்கமுடியவில்லையே! என் செய்வது! என் கையறு நிலையைப் பாரீர்!!!)

இது எஸ்ராமகிஷ்ட பேருரையல்ல – உரைதான். சும்மா,  தெகிர்யமா படிக்கலாம். சிரிக்காமல் இருப்பேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தால், கீழே படிக்கலாம்:

அணு-சக்தி வரலாற்றிலிருந்து பாடம் கற்போம்!

மனித நன்மைக்காக கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் அணு ஆற்றல் ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மின் தேவைகளுக்கு அணுஆற்றல் மட்டுமே ஒரே தீர்வு என்று கூறும் மத்திய அரசு அதிவேகமாக திட்டங்களை செயல்படுத்தி [அய்யய்யோ! அப்படியா என்ன? எஸ்ரா காங்கிரஸ் சப்போர்ட்டரா??]  வரும் நிலையில், அணு ஆற்றலின் மற்றொரு முகத்தையும் நினைவு கூற வேண்டியது நமது கடமை.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணுசக்தியால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும்…

புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அப்பகுதியில் அண்மையில் பயணம் மேற்கொண்ட பொறியாளர் கோ. சுந்தர்ராஜன் அவர்களும் தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்…

அனைவரும் வருக!

(இந்தச் சுட்டிக்குச் சென்று) இந்த எஸ்ராமகிருஷ்ண அறிவிப்புப்படத்தின் மேல்  எலியை நகர்த்தினால் வரும் செய்தி (‘மௌஸ்ஓவர் டெக்ஸ்ட்’) என்பது  fuku. இதனைக் கொஞ்சம்போலப் பதம் பிரித்து ஆங்கிலத்தில் படித்தால் சிரிப்புத்தான் வரும். இதையேதான் நானும் இந்தப் பெருந்தகைகளிடம் சொல்லவேண்டுமென்பது என் அவா. (கொஞ்சம் அதிகமாகவே ரசக் குறைவுதான், மன்னிக்கவும்!)

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் நிச்சயம் எழுத்தாளர்தான், அவர் பெரும்பாலும் தமிழுக்கு அருகில் உள்ள ஒரு மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றுதான் வதந்தி. ஆனால், அவர் ஒரு ‘வரலாற்று ஆய்வாளர்’  என்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. சாண்டில்யன் கல்கி படித்தால் வரலாற்று ஞானம் வந்துவிடுமா? அப்படியே வேறெந்த எழவுகளைப் படித்தாலும் கூட, ஒரு ஆய்வாளனாகி விடுவது அவ்வளவு சல்லீசான விஷயமா? இவர் — உலக பிலிம், ஜென் டர் புர்ரென்று எழுதுவதைப் போன்ற வீக்கீபீடித்த பாண்டித்தியம் மட்டுமே, வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி மனப்பான்மையைக் கொடுத்துவிடுமா என்ன? வரலாற்றையே விடுங்கள், ஜென் டர்புர்ரையே விட்டுத்தொலையுங்கள்  – தொழில்நுட்பம்? சமன நிலையில் விஷயங்களை அணுகும் தன்மை?? அரைகுறை முன்முடிவுகளால் அலைக்கழிக்கப் படாமை???

ஏன் இவர்களெல்லாம் தினவெடுத்துக்கொண்டு  – தங்கள் அறியாமையை இவ்வளவு பகிரங்கமாகப் பரப்புகிறார்கள்? எனக்குப் புரியவேயில்லை! சுற்றுலா சென்று — ஹிரோஷிமாவில் குண்டு, குடமுருட்டியில் மண்டு எனப் பாடப்புத்தகத்தனமான சரியான பின்புலமற்ற வரலாற்றைப் பற்றி எவ்வளவு நாட்கள் பேசப் போகிறார்கள்? என்ன குறிக்கோள்?

இன்னொருவர் பொரியாளர், ஃபுகுஷிமா பகுதியில் சுற்றுலா சென்று பொரிகடலை சாப்பிட்டுவிட்டு அணுசக்தியின் தீமைகளை, மக்கள் பாதிப்புகளைப் பற்றிப் பொரிந்து பேசப் போகிறாராம்.

ஹ்ம்ம்… இந்தியாவில் அடிப்படைப் பிரச்சினையே, சாராயவுறைகளுக்கு வரி போடப்படும் அதே சமயத்தில் — பேருரைகளுக்கும், நடுவுரைகளுக்கும், சிற்றுரைகளுக்கும் ஒரு சுக்கு  வரியும் கிடையாது. ஆக கண்டமேனிக்கும் யார் வேண்டுமானாலும் எதனைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கலாம்! எழுதிக்கொண்டேயிருக்கலாம் (என்னைப் போலவும்தான்!)

கொஞ்சமாவது அடிப்படை நேர்மையிருந்தால் – இவர்கள், இம்மாதிரியான கூறுகெட்ட அறிவுஜீவிகள் – குறைந்த பட்சம் கீழ்கண்டவற்றை ஒரு வருடத்துக்காவது செய்து, அதன் பின் அணுசக்திக்கு எதிராக கும்மியடிக்கலாம்.

  1. பின்வருவனவற்றைப் பற்றி, குறிப்பு எழுதிக் கொண்டு ஒரு வருடம் போல ஆழமாகப் படிக்கவேண்டும்:  கதிரியக்கம் என்றால் என்ன, அணுக்கரு மின் நிலையங்கள், அனல்/ நீர்மின் நிலையங்கள் எப்படிப் பணி செய்கின்றன – அவற்றின் சாதகபாதகங்கள் யாவை; மறுசுழற்சி செய்யக்கூடிய எரிபொருள்களை உபயோகிப்பதில், உருவாக்குவதில் உள்ள பிரச்சினைகள், வாய்ப்புகள்; ஒரு தொழில் நுட்பத்தின் ஆயுட்காலச் செலவினத்தை கணக்கிடும் முறை – இதனை வைத்து தொழில் நுட்பங்களைப் புரிந்து கொள்வது… இன்னபிற.
  2. வீட்டில், வெளியேயிருந்து உள்ளேவரும் மின்சாரமேயில்லாமல் வாழ முயற்சிப்பது;  வீட்டு மாடியில் ஃபோட்டோவோல்டாய்க் சட்டங்கள் இருந்தாலும், மின்கலன்களை உபயோகிக்காமல் – நேரடி நேர்மின்சாரமாக உபயோகிப்பது. ஏனெனில் – நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் மின்சக்தி தயாரிப்பு முறைகளில்  துணை தயாரிப்பாக (பை-ப்ராடக்ட்) கதிரியக்கம் இருக்கிறது – நீர்/காற்று/அலை மூலத் தயாரிப்புகள் தவிர. பின்னவற்றின் ஆயுட்காலச் செலவினம் / பக்கவிளைவுகள் / இவைகளின் சக்தித் தயாரிப்பு விழுக்காடு போன்றவைகளைக் கருத்தில் கொண்டால் அது இன்னமும் சுவாரசியமாகவே இருக்கும்.
  3. அறிவியலாளர்களால், அமெரிக்க ராணுவ ஆராய்ச்சியகங்களால், பெருமுதலாளிய மூலதனங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தொழில் நுட்பங்களை – முக்கியமாக அணுக்கருசக்தி தொடர்பான – இதனால் உந்தப்பட்ட, ஊக்குவிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை உபயோகிக்காமலிருத்தல் – பகிஷ்கரித்தல். அதாவது இன்டெர்நெட், அலைபேசிகள், (மடி/மடிக்காத) கணினிகள்,  செயற்கைக் கோள்கள், பலவிதமான ப்லாஸ்டிக் சாதனங்கள்,  பலவிதமான மருத்துவ வசதிகள், ஆகாய விமானங்கள், பலவிதமான நவீன அல்லாய்கள்  இன்னபிறவற்றை உபயோகிக்காமல் இருத்தல்.
  4. தம் அளவில், தம் குடும்ப அளவில் சக்திப் பிரச்சினைகளின் சிடுக்குகளை அவிழ்த்தல்.
  5. இவர்கள் எழுதும் கந்தறகோளங்களைப் படிக்கும், பேசும் பேருரைகளைக் கேட்கும் வாசகர்களை பெரியமனது பண்ணி மன்னித்து – தினமும் 8 மணி நேரம் ஒன்றையும் எழுதாமல் –  கடும் உடலுழைப்பு செய்தல், அதாவது ஒரு தொழில் நுட்பத்தையும் உபயோகிக்காமல்!

இதெல்லாம் (குறைந்தபட்சம், இவற்றில் ஒன்றையாவது) ஒரு தலைமுடிக்கும் செய்யாமல், அதிகபட்சம் அரைகுறைப் புரிதல்களுடன் மேதாவித்தனமாக உளறிக் கொட்டுவதை அவர்களின் தார்மீகக் கடமையும் உரிமையும்   என நினைத்துக் கொள்வது – அவர்களின் அறிவுஜீவியக் கயமையைத்தான்  (intellectual dishonesty) – அதை மட்டுமேதான் சுட்டுகிறது!

ஆமென்.

பின்குறிப்பு1: இந்தப் பதிவை பல்லைக் கடித்துக்கொண்டு எழுதிக் கொண்டிருக்கும்போது, கொஞ்ச நேரம் போல –  நாளை (சனிக்கிழமை, 15/03/2014) லொங்குலொங்கென்று மூன்று மணிநேர பஸ் பயணம் செய்து,  இந்தக் கூட்டத்திற்குச் செல்லலாமா என நினைத்துக் கொண்டிருந்தேன் – இது தர்மசங்கடமான கேள்விகளை உரக்கக் கேட்பதற்காக அல்ல, உரையாளர்களை அவர்களுடைய களத்திற்கே சென்று சிறுபிள்ளைத்தனமாக அவமதிப்பதற்காக அல்ல —  ஆனால், அமைதியாக உட்கார்ந்து அவர்களுடைய பொங்கும் நகைச்சுவையைக் கேட்டு ரசிப்பதற்காக மட்டுமே! ஆனால் – மறுபடியும் தீர்க்கமாக யோசித்ததில், இதற்குப் பதிலாக டேவ் பேர்ரி எழுத்து/புத்தகம் எதனையாவது படித்து இறும்பூதடையலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

பின்குறிப்பு2: நான் பூவுலகின் நண்பன்தான்! ;-)

9 Responses to “போங்கடா, நீங்களும் ஒங்களோட அணுசக்தி எதிர்ப்புக் கும்மியும்…”

  1. சரவணன் Says:

    அணுசக்தி பயன்படுத்தப்படும் மற்ற நாடுகளில் ரெகுலேட்டரி அதாரிடி சுயேட்சையான அமைப்பாக இருக்கிறது. இங்குதான் அந்த அமைப்பு அணுவுலைகளை நடத்தும்அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இந்தக் கந்தறகோளத்தை எதிர்ப்பதற்காகவாவது ஞாநிக்கும் சுந்தர்ராஜனுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

    இன்னொன்று, ஜப்பானில் ஃபுக்குஷிமா விபத்தைச் சரிசெய்ய அரசு 5 இலட்சம் கோடி செலவிட்டிருக்கிறது. கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ அம்மாதிரி விபத்து ஏற்பட்டு நாமும் அதற்கு 5 இலட்சம் கோடி செலவழிக்க வேண்டுமா? ஃபுக்குஷிமாவிலும் அந்த உலை மிகப் பாதுகாப்பானது, செர்னோபில் போன்ற விபத்து இங்கு ஏற்படாது என்றுதான் முதல்நாள் வரை சொல்லிக்கொண்டு, நம்பிக்கொண்டு இருந்தார்கள்.

    கூடங்குளம் நவீனமான தொழில்நுட்பம் என்றால், கல்பாக்கம் உள்ளிட்ட அணு உலைகள் 25 ஆண்டுக்கு மேல் பழைய தொழில்நுட்பத்தால் ஆனவை. இதனாலேயே பாதுகாப்பு குறைவு என்று சொல்ல முடியுமே.


  2. அய்யா சரவணன், ஃபுகுஷிமாவில் நடந்த நிகழ்ச்சி அணுக்கருவுலை விபத்தே அல்ல. அது ஸுனாமி காரணமாக நடந்த ஒன்றுதான். இதனைப் பற்றி, பொதுவாகவே புத்திசாலித்தனத்துடன் யோசிக்கும் நீங்கள் ( நான் உங்கள் கருத்துகளை ஒப்புக்கொள்கிறேனா என்பது வேறு விஷயம்), அவசியம் அலசிப் படிக்கவேண்டும் என்பது என் முதல் கோரிக்கை. வதந்திகளை நம்பவேண்டாம், அரைகுறைகளை ஊக்குவிக்கவேண்டாம் என்பது உப கோரிக்கை.

    நான், இந்தியாவில், ரெகுலேட்டரி அமைப்புகள் சரியாகப் பணிசெய்து 100% அழகாக முனைப்புடன் வேலை செய்வதாகச் சொல்லவில்லை. மேலை நாடுகள் எப்படி சொன்னாலும் அப்படியே நாம் ஒழுகவேண்டுமென்பதன் அவசியத்தை நான் மறுதலிக்கிறேன்.

    ஞாநி போன்றவர்களைப் பலவிஷயங்களுக்காக மெச்ச வேண்டும்தான் – ஆனால், அவருடைய அணுக்கருசக்தி பற்றிய கருத்துகள் – அவர் இந்தவிஷயத்தில் ஞானி அல்ல என்பதைத் தெளிவாக்குகின்றன என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

    பழமை என்பதாலேயே ஒரு விஷயம் மோசமானதோ அல்லது நல்லதோ என்று பொத்தாம் பொதுவாகக் கருதிவிடமுடியாதென்பது என் திடமான எண்ணம்.

    __ரா.

    • சரவணன் Says:

      நான் சொல்ல வருவது, அணுவுலை விவாதம் என்பது அதன் தொழில்நுட்பம் பற்றியது மட்டுமே அல்ல என்பதே. அணுசக்தித் துறை நடத்தப்படும் விதம், வெளிப்படைத் தன்மை உள்ளதா (உதாரணமாக கூடங்குளத்தில் உலை நடைமுறைக்கு மாறாக வெல்டு வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா என்பதுபோல), விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு யார் தருவார்கள், எவ்வளவு தருவார்கள், சட்டப்படி தர வேண்டிய பேரிடர் மேலான்மைப் பயிற்சி அருகிலிருக்கும் கிராம மக்களுக்கு ஏன் தரப்படவில்லை, நம் வரிப்பணம் அணுவுலைக்கு செலவிடப்பட வேண்டுமா என்ற கேள்வி, ஓரிடத்தில் அணுவுலை (ஏன், எந்தத் தொழிற்சாலையுமே) கட்டப்படலாமா கூடாதா என்று முடிவெடுக்க (அதனால் நேரடி பாதிப்படையப் போகும்) உள்ளூர் மக்களுக்கு இருக்கும் உரிமை என அறிவியல் தொடர்பற்ற, அரசியலும் ஜனநாயகமும் சம்பந்தப்பட்ட பல கேள்விகளை உள்ளடக்கியதே அணுவுலை விவாதம். வெறுமனே அறிவியல் அடிப்படையில் உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்வது பதிலே அல்ல.

      சுந்தர்ராஜனைப் பொருத்தவரை அவர் நீதிமன்றம் சென்றது உலை கூடாது என்று கேட்க அல்ல; இந்திய அரசு தானே இயற்றியிருக்கும சட்டங்களை மதிக்க வேண்டும் என்று கேட்பதற்கே! அரசைத் தனது சொந்த சட்டங்களைச் செயல்படுத்த வைக்கவே நாம் நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது.

      சுந்தர்ராஜனைக் கேலி செய்யும் முன் நீங்கள் ஒருமுறை ஃபுக்குஷிமா சென்று, அங்கு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு அரசு கொடுத்திருக்கும் வீடுகளில் தஞ்சமடைந்து நாட்களை ஓட்டிவரும் மக்களை நேரடியாக (இட்டாலிக்ஸ், அண்டர்லைன்) சந்தித்துப் பேசிவிட்டு, அதன் பிறகு உங்கள் கருத்துகளை முன்வைத்தால் நலமாக இருக்கும். நீங்கள் ஃபுக்குஷிமா செல்லவில்லை; அவர் சென்று வந்திருக்கிறார். ஆக அவர் சொல்வதே அதிக நம்பகத்தன்மை உள்ளது.

      —->>>> நன்றி. நான் ஃபுகுஷிமா செல்வதாக இல்லை. நான் சொல்லவருவது இதுதான். ஃபுகுஷிமாவில் – ஸுனாமியால் அணுவுலை சேதம் அடைந்தது. பல பிற சொத்துகளும் சேதம் அடைந்தன. மனிதர்கள் இறந்தனர். ஆனால் பின்னவைகளில் ஒன்று கூட, (இட்டாலிக்ஸ், அண்டர்லைன்) ஒன்று கூட அணுவுலையினால் ஏற்படவில்லை.

      சுந்தர்ராஜன் என்ன சொன்னார் / பேசினார் என்பது தெரியாது.ஆனால் அவர்களுடைய அறிவிப்பில் – “புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அப்பகுதியில் அண்மையில் பயணம் மேற்கொண்ட பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்” என்பது குறித்துதான் எனக்குப் பிரச்சினையே! இம்மாதிரி ஆட்கள் கிளப்பிவிடும் வதந்திகளையும், அடிப்படைகளற்ற பயங்களையும் தான் நான் வெறுக்கிறேன்.

      சரவணன், தயவுசெய்து நீங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும். எப்படியும் இந்த ஃபுகுஷிமா பற்றிய வடிகட்டிய பொய்களைப் பற்றி நான் எழுதுவதாகத்தான் இருக்கிறேன். பார்க்கலாம். என்னுடைய நம்பகத்தன்மை பற்றியெல்லாம் நாம் கவலைப் படுவதில்லை. நான் எழுதும் விவரங்களை எவரும் சரிபார்க்க முடியும். அவ்வளவுதான்.

      __ரா.

      • சரவணன் Says:

        ****** சுந்தர்ராஜன் என்ன சொன்னார் / பேசினார் என்பது தெரியாது.*****

        ஆனாலும்,

        **** இம்மாதிரி ஆட்கள் கிளப்பிவிடும் வதந்திகளையும், அடிப்படைகளற்ற பயங்களையும் தான் நான் வெறுக்கிறேன். ****

        என்கிறீர்கள்!!! இதற்கு ஒரு பெயர் இருக்கிறது– முன்முடிவு!


      • அய்யா சரவணன், முதலில் அவருடைய தலைப்பைப் படிக்கவும் – என்ன எழுதியிருக்கிறது – அது பொய். ஆகவே, நீங்கள் உங்கள் படிப்பை முடித்தபின் சாவகாசமாகப் போராடலாம்.

        ஆம் – எனக்கு சில முன்முடிவுகள் இருக்கின்றன. அவற்றின் படி நான் சிந்திப்பதில் தவறுகள் இருந்தால், தாராளமாக என்னைத் திருத்திக் கொள்கிறேன், சரியா?

        என்னைப் பற்றிய ஒரு முன்முடிவு உங்களிடம் இருப்பதுபோலவே, உங்களைப் பற்றியும் அப்படிப்பட்ட ஒன்றை வைத்துக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

        உங்கள் புத்திசாலித்தனத்துக்காகவும், வாதங்களைப் பொறுக்கியெடுத்து பின்புலங்களை ஒதுக்கும் திறமையையும் மெச்சுகிறேன்.

  3. அனானி Says:

    ராம்,

    ஞாநி போன்றவர்களின் அஞ்ஞானம் புரிந்து கொள்ளக் கூடியதே. 50 பேருக்கு மேல் வேலை செய்யும் ஒரு நிறுவனம், சில வருடங்கள் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால், அதற்குத் தேவையான நடைமுறைகளை வகுத்திருக்கும். அவற்றை செயல்படுத்த சரியான பணியாளர்களை நியமித்திருக்கும். ஞாநி போன்றவர்கள், மேலோட்டமாக அதை படித்து அறிந்திருப்பார்கள். ஆனால் நேரடியாக அனுபவித்திருக்க மாட்டார்கள். எதையும் சந்தேகத்துடன் பார்க்கும் மன நிலை வேறு. இவற்றோடு இவர்களை வழி நடத்த ஒரு வீணாய்ப்போன சித்தாந்தம் வேறு.

    f (Ignorance, Paranoia, Ideology) = Conspiracy Theory.

  4. poovannan73 Says:

    http://science.howstuffworks.com/nuclear-waste-disposal.htm

    As of this writing, there are more than 29,000 tons of spent fuel rods worldwide. In the United States, many of those rods still sit idle near power plants, because there are few permanent disposal sites.

    In 2002, U.S. President George W. Bush approved development of the facility, but since then, the project has been challenged by many groups. In 2010, President Obama indicated he would try to put a stop to the project, citing concerns with the long-term stability of the site. Opponents say earthquakes and groundwater flow could penetrate the vault and let radioactive waste escape.

    Thus, the United States continues to struggle with nuclear waste disposal. Experts say that permanent disposal locations must be created soon, though, or we risk being overburdened with radioactive waste that no one wants.

    விபத்துக்களை விட்டு விடுவோம்.அணு கழிவுகளை என்ன செய்வது என்று இன்னும் முன்னேறிய நாடுகளே முழித்து கொண்டு தான் இருக்கின்றன.சில ஆயிரம் ஆண்டுகள் பாதுகாக்கபட வேண்டிய அணு கழிவுகளை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல.
    இதற்காகவே வருங்காலத்தில் யுத்தங்கள் வந்து சில நாடுகளில் மொத்த கழிவுகளும் கொட்டபடலாம்.
    அணு கழிவுகள் வைப்பதை எதிர்த்து போராட்டங்கள் உலகம் முழுவதும் வெடித்து கொண்டு தான் இருக்கின்றன.


    • அய்யா பூவண்ணன் – இந்த howstuffworks போன்ற குழந்தைத்தனமான தளங்கள் பக்கம் செல்லவே வேண்டாம். பொதுவாக, இந்த இணையத்தையும், ’கூக்ல் தேடி’யையும் வைத்துக் கொண்டு திடீரெக்ஸ் நிபுணராகும் முனைப்பை தயவுசெய்து விட்டுவிடவும். உங்களுக்கு அடிப்படையிலேயே நன்றாகவே தான் இருக்கிறது, சிந்திக்கும் திறமையும் அனுபவங்களும் – பின் ஏன் இந்த சுட்டிகள், அவற்றின் குட்டிகள் என்றெல்லாம்??

      நீங்களே ஒரு மருத்துவர் அல்லவா – ஆக, கதிரியக்கத்தின் அடிப்படைகளை நீங்கள் தெரிந்துகொண்டுதானே இருப்பீர்கள்?

      அணுக்கழிவுகள் பற்றிப் பேசுவதற்கு முன்னால் – அனல்மின் நிலையக் கழிவுகளைப் பற்றி யோசியுங்கள். ஏன், நம் சொந்தக் கழிவுகளில் உள்ள கதிரியக்கத்தையும் கூடச் சிந்திக்கலாமே! தயவுசெய்து விரிவாகப் படியுங்கள். உண்மையான நிபுணர்களிடம் பேசுங்கள். இணையம் பக்கம் – இந்த அக்கப்போர் இணையத்தளம் உட்பட, ஒருமாதம் போல் போகாமலிருங்கள்.

      பின்னர், நீங்களும் சரவணன் அவர்களும் சேர்ந்து கொண்டு ஒரு scholarly கட்டுரையை எழுதலாமே?

      உங்களைப் போல வாதங்களை அடுக்குபவர்கள் அவசியம் விரிவாகவும் செறிவாகவும் எழுதவேண்டும்தான். என்ன சொல்கிறீர்கள்??

      • சரவணன் Says:

        அணுசக்தி பற்றி நீங்கள் எழுதவிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள. கூட்ங்குளத்தில் உருவாகும் கழிவை எங்கு சேமிப்பார்கள் (மும்பை?) அங்கு எப்படி எடுத்துச் செல்வார்கள், வழியில் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு அபாயம் ஏற்படாமல் தடுக்க என்ன பாதுகாப்பு ஏற்பாடு உள்ளது என்று எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கில் அணுசக்தித்துறை, நீதிமன்றத்தில் கழிவுகளை கோலார் சுரங்கங்களில் கொட்டுவோம் என்று சொல்லி, மறுநாளே கர்நாடகாவில் தொடங்கிய போராட்டத்தைப் பார்த்துப் பயந்து பின்வாங்கி, மறுப்பு வெளியிட்டது. மாற்று இடம் எது என்று இன்றுவரை சொல்லவில்லை.

        ஜெயபாரதன், உலகத்தில் எந்த நாடும் அணுவுலையை மூடிவிடவில்லை என்று 2002ல் எழுதியிருக்கிறார். அது அன்றைய நிலை. இன்று எனக்குத் தெரிந்து ஜப்பான் உட்பட மூன்று நாடுகள் உலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிட முடிவெடுத்துவிட்டன. இந்தப் பட்டியல் அதிகரித்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளே இப்படி இருக்கையில் நாம் இன்னும் புதிதாக அணுவுலைகளை அமைப்பது அறிவுபூர்வமான செயலாகத் தோன்றவில்லை.

        மேலும் அவரே, கல்பாக்கத்திலிருந்து கதிர்வீச்சு ஏற்பட்டால் கட்ட்டங்களைப் பாதிக்காது, உயிரினங்களைத்தான் பாதிக்கும் என்று ஆறுதல்பட்டுக் கொள்கிறார்! கட்ட டங்களைப் பாதிக்கும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை என்பது இருக்க, மனிதர்கள் செத்துப்போய், வெறும் கட்ட்டங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: