கருணாநிதி: “ஏன், நான் இந்தியப்பிரதமர் ஆகிடக் கூடாதா?”
March 19, 2014
இக்காலங்களில், எனக்கு மிக மிக வருத்தம் தரும் விஷயம் என்பது இதுதான்: யாருமே, கருணாநிதி அவர்களின் மகன் இசுடாலிர் (பயப்படாதீர்கள், இது ஸ்டாலின் அவர்கள் தான்; அவர் பெயரை, திராவிடத் தமிழ்ப்படுத்தி, மரியாதையாக ர் சேர்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!) உட்பட, கருணாநிதி அவர்களைப் பிரதமராக்குவோம் எனக் கேவலம், சூளுரைக்கக் கூட மாட்டேன் என்கிறார்கள்.
அடலேறேன ஆர்பரித்து காலயந்திரத்தில் சவாரி செய்து, இறந்தகாலங்களுக்கே ஓடிச்சென்று பெரியார் அவர்களையே திருச்சியில் பிறக்கவைத்த, கொஞ்சு தமிழ் பேசும் கோதையான ஆனானப்பட்ட மேதகு குஷ்பூ அவர்களே கூட இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேனென்கிறார்.
கவிதைகள் பல எழுதி தமிழ்த்தாயைத் தற்கொலை செய்துகொள்ள ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் கவிஞர் கனிமொழி அவர்களும் கூட, இது பற்றி மேதகு ஜாஃபர் ஸேட் அவர்களிடம் “[பிற்பகல் 12:04:04] இந்த மனிதரின், ம்ம், ஆசைக்கும் [இரைச்சல்: சரியாகக் கேட்கவில்லை] அளவேயில்லையா?” என ஏசியதாகத் தெரியவில்லை, குறைந்தபட்சம் இதற்கான ஒலிப்பதிவானதாவது இதுவரை கிட்டவில்லை – ஒருவேளை ‘சவுக்கு’ தன் பணியை ஓய்வொழிவில்லாமல் செய்வதை விட்டுவிட்டு தினமும் ஒரு மணிநேரம் போலத் தூங்க ஆரம்பித்துவிட்டாரோ?
“தலைவர் உயிருடன் இருக்கும் வரை, அவர்தான் இந்தியாவின் நிரந்தர எதிர்காலப் பிரதமர் [=ஆக ஸ்டாலின் நிரந்தர திமுக இளைஞரணித் தலைவர் மட்டுமே!]” என அழகிரியும் ஒரு சூடான நேர்கோணல் கொடுக்கவில்லை. இந்தக் கடைக் குடும்பத்தின் ஏவல் ஏற்று, பேய் ஓட்டும் காரியங்களைச் செய்துவரும், ஜெயலலிதா மீது சாத்தான்களை ஏவிவிடும் ஏற்றமிகு எடுபிடியான விடுதலை ‘மானமிகு’ வீரமணி அவர்கள் கூட ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறார் – அவர் கையில்தானே ஜால்ரா இருக்கிறது? வாயில் உள்ள கொழுக்கட்டையைத் துப்பிவிட்டாவது ஏதாவது சொல்லலாமல்லவா?
… ஆக, இது ஒரு திட்டமிட்ட திராவிடக் குடும்பச் சதியோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது.
மேலதிகமாக, எனக்குப் பயமாகவும் இருக்கிறது, நிலைமை இப்படியே போனால்; ‘நான் சூத்திரன் என்பதால்தானே … …’ என்று எம் தமிழர் தலைவர் நீட்டி முழக்கி, வழக்கம்போல ஒரு பிலாக்கண ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவாரோ எனப் படுபீதியில் உள்ளேன்.
இல்லாவிட்டால், அண்ணா சமாதி முன் திடுதிப்பென்று சாமியானா அமைத்துச் சாமியாடி, சாகும்வரை (=அதாவது, பிரதமர் ஆகும் வரை) உண்ணும்விரதம் என திடுக்கிடும் தொடர் ஒன்றை இவர், தம்பத்தினிகள் சமேதராக ஆரம்பித்தால், நாம் தாங்குவோமா? எனக்குப் பதைபதைப்பாகவே இருக்கிறது. இரவெல்லாம் தூக்கமே வரமாட்டேனென்கிறது. சனியன், என்ன கொசுக்கடித்தொல்லை இது…
எது எப்படியோ, வேறு வழியில்லை எனக்கு – ஆக, என் வழக்கம் போல, ஏதோ என்னாலானதை அவசரம் அவசரமாகச் செய்யலாம் என முனைகிறேன். என்னை மன்னிக்கவும். என்னால் கருணா நிதி அவர்களின் கையறு நிலையைத் தாங்க முடியவில்லை, என்னதான் செய்வது சொல்லுங்கள்…
-0-0-0-0-0-0-0-
… சரி, பாருங்கள் — என் தானைத்தலைவர், கீழ்கண்டவாறு தன் பக்க நியாயங்களை, மறுதலிக்கமுடியாத வாதங்களை, எதிர் விவாதங்களை அவிழ்த்து விட்டால் – நம் தகத்தகாய இந்தியாவை அதன் வளர்ச்சியை நோக்கிய பாதையில் அவர்மட்டும்தான் இட்டுச் செல்லமுடியும் – நிச்சயம் அவர்தான் அடுத்த பிரதமர் என்பதில் ஐயமேயில்லைதானே?
-0-0-0-0-0-0-0-
- எனக்கு 75 வருட அனுபவம் இருக்கிறது அரசியலிலும் சீரான நிர்வாகத்திலும்! காந்தி நேரு அண்ணா பெரியார் குஷ்பு போன்ற தலைவர்களுடன் பணியாற்றிடும் பேறு பெற்றவன். என்னைவிட வயதானவன், பலவருடங்கள் ஆட்சி செய்திட்டவன், மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவன் – இந்த இந்தியத் துணைகண்டத்தில் வேறு யாராவதும் உண்டோ?

நான் மிகத் திறம்படச் செய்த என்னுடைய சீரிய பணிகளில் ஒன்றின் புகைப்படத்தினை இங்கு அளித்திடுவதில் உள்ளபடியே பெருமையடைபவனே நான்தான்!
- நானே காந்திதான்! தேசபக்திப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்திட்டவன் தான்! நான் மட்டும் கருணாநிதியாக ஆகாமலிருந்தால், இருபதாம் நூற்றாண்டில் பிறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் நானும் ஒரு காந்தியாகத் தான் இருந்திருப்பேன்.
- நானே காமராஜ் தான்! அன்பு மிகுதியால், மரியாதை நிமித்தமாக, பெருந்தலைவரைப் பலவாறு பலவருடங்களாகத் தொடர்ந்து பண்புடன் புகழ்ந்து பேசினவனே நான் தான்! எடுத்துக் காட்டாக — அண்டங்காக்கா, எருமைத் தோலன், ரஷ்யாவுக்குப் போன எருமை, தீவட்டிக் கொள்ளைக்காரன், கோமாளிக் கோமகன், ‘கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் காமராஜன்,’ கட்டைபீடிக்கார காமராஜன், கரிக்கட்டை, முதுகுத் தோலை உரித்தால் டமாரம் செய்யலாம், அறிவிலி, படிக்காத பன்னாடை, நனச்ச பனை, எரிஞ்ச பனை, மொட்டைப் பனை, மரமேறி சாணான், கிராமத்து நாட்டான், பனையேறி, காண்டாமிருகம், ஆண்மையற்றவன், ஒம்போது, அலி, பல கோடிரூபா ஸ்விஸ் பேங்குல, ஹைதராபாத்தில மாளிகை … … என்றெல்லாம், ஒருமுறையல்ல, பலமுறை சொல்லி அர்ச்சனை செய்திட்டிருக்கிறேன் என்பதை மிகுந்த பணிவடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
- அன்னை இந்திரா காந்தியை வளர்த்தவனே, அவருடைய அரசியல் ஆசானே நான் தான்! அவரை ‘இந்திராவே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று சொன்ன அதே வேளையில், எம் மதுரைத் திராவிடச் செயல்வீரர்கள் அவர் மீது கற்களை வீசி சாத்வீகமாக விமர்சித்திட்டபோது, அவருக்கு அடிபட்டு ரத்தம் பெருகி அவர் புடவையில் ரத்தக் கறையானபோது, அதனை, அவருடைய மாதவிடாய் ரத்தம்தான் என, திராவிடப் பண்புடன் விளக்கம் அளித்திட்டவனே நான் தான்! இந்திரா அம்மையாருக்கு விதவைகளுக்கான உதவிப் பணம் கொடுப்பதாகச் சொன்னவனே கருணை மிக்க என் தனையன் இசுடாலிர் தான்!
- நான் முன்னமே பலதடவை கூறியுள்ளது போல, நானே கம்யூனிஸ்ட்தான்! நான் கருணாநிதியாகாவிட்டால் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் ஆகத்தான் இருந்திட்டிருப்பேன். நான் பொதுவுடமைக்கும் என்னுடமைக்கும் ஒரு வித்தியாசமும் பார்ப்பவனில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?
- நான் கருணாநிதியாகாவிட்டால் பெரியவர், நல்லவர் வாஜ்பேயி ஆகத்தான் இருந்திட்டிருப்பேன்; அதனால்தான் அவர் தலைமைதாங்கிய பாஜகவுடன் கூட்டு சேர்ந்தேன், திராவிட இயக்க இளவல்களை நல்லவர் தலைமையில் நாட்டுக்கு அரும்பணி ஆற்றவைத்தேன்.
- நானே இந்துதான்! ‘இந்து என்றாலே திருடன் என நல்லவர் கருதுவதாக’ நான் பேசியிருக்கிறேன் என்பதை நினைவில் நிறுத்திட்டால், நல்லவராகிய நீங்கள் என்னைப் பற்றி ஒரு நல்ல முடிவுக்கு வந்திடலாம்.
- இராமகதையின் இராமனும் சூரிய வம்சமென்றால், எங்களுடைய இயக்கமும் உதயசூரியவம்சம் தானே! இராமன் வனவாசம் சென்றான். நாங்களும் தமிழக மக்களால், சோற்றால் அடித்த பிண்டங்களால், வாழை மட்டைகளால் அவ்வப்போது தோற்கடிக்கப் பட்டு வனவாசம் செல்கிறோம். இராமன் குரங்குகளின் துணைகொண்டு இலங்கையின் அக்கால இராவணனை வதைத்தான். நாங்கள் இலங்கையில் இக்கால ராவணனை வதைக்க, திராவிடக் குரங்குகளை உபயோகிக்கிறோம்! ஆக, இந்தியப் பாரம்பரியத்தில், அதன் வரலாறை மறுபதிப்பு செய்பவனே, நான்தான்! இன்னொன்று சொல்ல மறந்திட்டேனே – இராமன் என்றால் குடிகாரன் என்று ஒருகாலத்தில் சொன்னேன் அல்லவா, ஆக நாங்கள் எல்லோரும் குடிமக்கள், இந்தியப்பாட்டியின், தமிழ்த்தாயின் குடிமக்கள் தாம்!
- நானே முஸ்லீம் தான்! நான் சூத்திரனாக ஆகாவிட்டால், ஆகாகான் ஆகத்தான் ஆகியிருப்பேன்! முஸ்லீம்களுக்கு இட, வல ஒதுக்கீடுகள் மட்டுமல்லாமல் மேலதிகமாக மேலுலக ஒதுக்கீடும் செய்து (நினைவிருக்கிறதா, தகத்தகாயத் தலைவன் ஆ இராசாவின் நண்பன் சாதிக் பாட்சாவுக்கு என்ன ஆயிற்று என்று?) கொடுப்பவர்களே நாங்கள் தான். கடந்த எழுபது வருடங்களாக சக முஸ்லீம்களுடன் வருடத்திற்கொருமுறை கஞ்சி குடித்துக் கொண்டு, எம் கட்சியில் உள்ள முஸ்லீம்களை கஞ்சிக் கலயத்திற்கு ஏங்குகிறவர்களாகவே உருமாற்றியிருப்பதில் எம் பங்கு அதிகம்!
- நானே கிருத்தவன் தான்! நான் சூத்திரனாக ஆகா விட்டால் போப்பாண்டவராகத்தான் ஆகியிருப்பேன்! இல்லாவிட்டால் போச்சோழர் அதுவும் இல்லயேல், போய்ச்சேரர்!! பரங்கிமலையை உருவாக்கி அதன் உச்சியில் சர்ச்சைக்குரிய செயின்ட் தாமஸ் சர்ச்சையும், தீரன் சின்னமலையை வைத்து சின்னமலை மாதாகோவிலையும் கட்டிக் கொடுத்திட்டவனே நான் தான்!
- நானே பழங்குடி மலைவாழ் மனிதன்தான்! நான் கலைஞனாக ஆகாவிட்டால் – தேன் சேகரித்து, கிழங்குகளைப் புசித்து, கனிவகைகளைக் கடித்து உண்டிட்டிடும் காட்டில் வசிக்கும் ஆதிவாசியாகத்தான் ஆகியிருப்பேன். என் சொந்த அனுபவத்திலிருந்தல்லவா ‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமலிருப்பானா?’ என என் மீது வந்த ஊழல் புகார்களுக்கு பதில் சொல்லிட்டிருந்தேன்?
- நானே சங்கராச்சாரியார்கள் போன்றவன்தான்! திராவிட இயக்கத்தில் ஆழாவிட்டால் நானும் சங்கராச்சாரியாகத்தான் ஆகியிருப்பேன்… அவர்களும் மடங்களை நடத்திடுகிறார்கள். நானும் மடங்களுக்காக, மடமண்டையர்களுக்காக, சோற்றால் அடித்த பிண்டங்களுக்காக வாழைமட்டைகளுக்காக – எனது இயக்கத்தை நடத்திடுகிறேன்!
- நானே சாமானியன் தான்! வடவர்களின் கட்சியான ஆம் ஆத்மி கட்சி – அதாவது சாமானியர்களின் கட்சி என்பதே, எம் குறிக்கோட்களை அடியொற்றி நடைபெறுவதுதான்! ஏழைஎளியோர்களின் பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, சாமானியனின் சிக்கல்களும் நடைமுறைப் பிரச்சினைகளும், வாழ்வாதரங்கள் பற்றிய கவலை குறித்தும் நன்றாகவே தெரியும்.
- நானே தகத்தகாய தலித் தான்! நாம் மட்டும் கருணாநிதியாகாவிட்டால், நிச்சயம் அம்பேட்கராகத் தான் ஆகிவிட்டிருப்பேன்! பாருங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட மக்கள்சபைத் தொகுதிகளில் முதலில் 20% மட்டும் ஒதுக்கி, பின் 40%க்கு அதிகப்படுத்தி – அவர்களை, அவர்களே அறியாமல் தங்களுடைய முதல்கோரிக்கையை மறக்கவைத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்த தலித் சாணக்கியனே நான் தான்!
- நான் மட்டும் ஆணாகப் பிறக்காதிருந்தால், ஒரு பெண்ணாகத்தான் பிறந்திருப்பேன்! நம் நாட்டில் பெண்களின் பிரச்சினைகளை மிகச் சரியாக அறிந்தவனே நான் தான்! அதனால்தான், என் குடும்பப் பெண்களுக்கு மிக மரியாதையுடன் பல பதவிகளையும் சலுகைகளையும் கொடுத்திருக்கிறேன் என நீங்கள் அறிவீர்கள். அதே சமயம், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ என்ற கோட்பாட்டின் படி மற்ற பெண்டிரையும் மரியாக நடத்தத் தெரிந்தவனே நான்தான்! அம்மையாரை நான் — வசந்தசேனை, குறுமதியாள், நாட்டியக்காரி, நட்ட நடு ராத்திரி… பொட்டுக் கண்ணன்… மாடிவீடு, அல்லிராணி, பலியெடுக்கும் பத்திரகாளி, காதறுந்த காளி, மூக்கறுந்த மூளி, உல்லாசபுரி ராணி, நடிகை, சதிராடுபவர் என்றெல்லாம் மரியாதையுடன் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா என்ன?
- நான் மட்டும் வளர்ந்திருக்காவிட்டால், இப்போதும் ஒரு குழந்தையாகத் தான் இருந்திருப்பேன்! பண்டிதர் ‘சாச்சா நேரு’வைப் போல குழந்தைகளை நேசிப்பவனே நான்தான்; அதுவும் அக்குழந்தைகள் என்னுடையவையாகவே இருந்துவிட்டால் நான் அடையும் இறும்பூதை, அப்பப்பா, சொல்லி மாளாது என்பதை – நீங்களெல்லாம் அறிவீர்களல்லவா?
- பாரதப் பாரம்பரியத்திலும் சரி, என்னுடைய திராவிடக் கட்சிப் பாரம்பரியத்திலும் சரி – குடும்பம் என்ற சமூக அமைப்பைச் சுற்றிச்சுற்றியேதான் சகல கட்டுமானங்களும் எழுப்பப் பட்டுள்ளன என்பதை அறிந்தவனே நான் தான்! குடும்பம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டிடும் சாமானியனே நான் தான்!
- ஆட்சியிலும் ஆஸ்தியிலும் பங்கு கேட்பதற்காக, பரந்த மனப்பான்மையுடன் கட்சிகளை மாற்றி மாற்றி அரவணைத்துச் சென்றிருக்கும் என்னுடைய அவாவினால் – அனுபவங்களினால், நான் ‘கூடா நட்புக்காகவும்’ மேலும் என் கண்மணி கனிமொழியின் ராஜ்யசபா நாற்காலிக்காகவும் காங்கிரசைக் கூவிக்கூவி அழைத்திருக்கிறேன், அழுது புரண்டிருக்கிறேன். பாஜக பண்டாரப் பரதேசிகளுடன் பரத நாட்டியம் ஆடியிருக்கிறேன். இனிமேலும் இன்முகத்துடன், நாட்டின் நன்மைக்காகத் தேவையென்றால், இவையெல்லாவற்றையும் மறுபடியும் செய்யக் கூடியவனே நான் தான்!
- அதிகாரப் பங்கீடு என்பதற்கே இலக்கணமாகத் திகழ்ந்தவனே நான் தான்! எம் கட்சியில், எம் ஆட்சியில், எம் குடும்பத்தில் – எல்லாருக்கும் ஏற்றம் கிடைக்கும் வண்ணமாக ஏற்றமிகு வாழ்வு கிடைக்கும் முகமாக செயல்பாடுகளைக் கட்டமைத்தவனே நான்தான்!
- நாட்டின் வளர்ச்சிக்குத் திரைப்பட வசனம் எழுதிட என்னை விடச் சிறந்தவர்கள் இந்த நானிலத்திலும் உண்டா? வேறெந்த பிரதமர் போட்டியாளருக்கும் இந்தத் தகுதி உண்டா? அகில உலகத்தில் கூட, வேறு யாருக்காவது உயர் ஆட்சிப்பணியில் இருந்துகொண்டே, முழுநேரப் பணியாக, பலப்பல திரைப்படங்களுக்குக் கதை-வசனம் எழுதிய அனுபவம் உண்டா?
- என்னைத் திரையுலகம் பாராட்டுவது போல வேறெந்த முதுபெரும்தலைவரையாவது, இந்த அகிலவுலகத்தில் வேறேந்த நாட்டிலாவது பாராட்டுவதுண்டா? திரையுலகத்தின் ஏகோபித்த ஆதரவு பெற்ற என்னால் மட்டுமே, திரையுலகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் என் குடும்பத்தினரால் மட்டுமே இந்நாட்டு வளர்ச்சி வகுத்தெடுக்கப் படமுடியுமல்லவா?
-0-0-0-0-0-0-0-
இவை மட்டுமல்ல…
- எல்லோரும் நதிகளை இணைக்க மட்டும் முயற்சி எடுப்பதாகக் கூறுகிறார்கள்; ஆனால் நான், மலைகளை இணைக்கவும், கடல்களைப் பிரிக்கவும் பாடுபடுவேன்.
- திராவிடத் தமிழம்தான் உலகப் பண்பாடுகளின் ஊற்றுக்கண் – தமிழகத்துக் குமரிக்கண்ட லெமூரியாவில் தோன்றிதான் மனிதன் பிற பகுதிகளுக்குப் பரவினான் (Dravidian Invasion Theory of the World) எனும் வரலாற்றுத் தரவுகளின் படியான கோட்பாட்டை, இந்தியப் பாடத்திட்டங்களில் முதன்மையானதாகக் கட்டமைப்பேன். இது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பேன்.
- பாராளுமன்ற வளாகத்தில் வாரவொருமுறை ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியை நடத்தி அதனை நாடெங்கும் நேரடி ஒளிபரப்ப ஆவன செய்திடுவேன்.
- ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்’ நான், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் — கடவுள் சிலைகளுக்கு, சிலுவைகளுக்கு, கிழக்கு நோக்கிய வெள்ளைச் சுவர்களுக்குப் பதிலாக, ‘சிரிக்கும் ஏழை’ படங்களை மாட்ட ஆணையிடுவேன்.
- கிபி கிமு என வருடங்களின் ஓட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, சமூக நீதி காக்க, இனமானத்தை உணர்த்த – தந்தை பெரியார் நினைவாக, அவற்றை பெமு பெபி எனக் குறிப்பிட ஆணையிடுவேன்!
- அடுக்குமொழிக்கும், மெட்றாஸ் பாஷைக்கும், சன்/கலைஞர் தொளைக்காட்சிட் டமிளுக்கும் செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுப்பேன்.
- வீராணக் குழாய்கள் மூலம் வீட்டுவசதி அளித்திட்ட நான், அடுத்த ஒரே வருடத்தில் கங்கை-காவிரி இணைப்புத் திட்டக் குழாய்களை வைத்து இந்தியாவில் வீடற்ற அனைவருக்கும் வீட்டு வசதி செய்து தருவேன்!
- மேதகு நீதியரசர் சர்க்காரியா அவர்களால், அறிவியல் பூர்வமாகத் திறம்பட, என் மக்களுக்கு உழைத்தவன் என வாழ்த்துப் பெற்ற என்னால்தான் – இந்தியாவை ஒரு தொழில் நுட்ப வல்லரசாக்கமுடியும் – அதனை நிச்சயம் செய்திட்டிடுவேன்!
- குசராத்தின் சோமநாதபுரத்தில் கஜினி மொகம்மதுவுக்கும், உத்தரப் பிரதேச அயோத்தியில் பாபருக்கும், தா. கிருஷ்ணனுக்கு துவாரகையிலும், ராஜீவ் காந்திக்கு ஈழத்திலும், காஷ்மீரத்தில் சாமானியன் கருணாநிதிக்கும் சிலைவைக்க மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆவன செய்வேன்!
- எந்த மொழித் தலைப்பில் எந்தத் திரைப்படம் வந்தாலும், அதற்கு வரிச்சலுகை அளிப்பேன்!
- இளங்கலைப் பட்டப் படிப்பில் சேர விருப்பப் படும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இளங்கலைமாமணி பட்டம் கொடுப்பேன்.
- நிலுவையில் இருக்கும் அனைத்து மரணதண்டனைகளையும் ரத்து செய்து, அதற்குப் பதிலாக, அனைத்து மரணதண்டனைக் கைதிகளையும் அவரவர் தாங்குதிறனுக்கேற்ப என்னுடைய ‘நெஞ்சுக்கு நீதி,’ ‘குறளோவியம்’ படிக்கச் சொல்லி, பின்னர் அவர்கள் கையில் ஜால்ராக்களைக் கொடுத்து, விடுதலை வீரமணி செய்வேன்.
- ஈழத்தை நோக்கி – தொடர்ந்து காகிதக் கத்திக் கப்பல் விடும் சாத்வீக அறப் போராட்டத்தை நடத்திக் காட்டிடுவேன்.
- பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ், சீனா, நேபால், பூடான் நாடுகளுடனான நம் எல்லையில் கை கோர்த்துக் கொண்டிருக்கும், ஒரு விரலைக் காட்டி மிரட்டும் அண்ணா, பெரியார் சிலை வரிசைகளை நிர்மாணித்திட்டு, மாற்றார்களுக்கு திகில் வரவழைத்து எல்லையோரத் தகராறுகளை அறவே நிறுத்திடுவேன்!
- பாகிஸ்தானை வென்று பர்வேஸ் முஷாரஃப் தலையில் சிந்துசமவெளிச் செங்கலைச் சுமக்க வைத்துக் கொணர்ந்து நன்னீர் பாயும் கூவத்தின் குறுக்கே அணை கட்டுவேன்.
- சென்னை மாநகரத்தின் நீர் வாழ்வாதரமான கூவம் ஆற்றையே, அதுவும் சற்றொப்ப நாற்பது ஆண்டுகளுக்கு முன்னமேயே மணக்கச் செய்த எனக்கு, இந்த கங்கை எம்மாத்திரம். நான் பிரதமரானவுடன் முதலில் கையெழுத்திட்டிடும் கோப்பானது – ஒரே வாரத்தில் புனிதநதியாம் கங்கையைச் சுத்திகரித்து விட்டிடும்.
- பாராளுமன்றத்தில் என்பாணியில் – அவரவர்கள் தங்களுக்கு ஏற்றது போல் தங்களைக் கேள்வி கேட்டுக்கொண்டு அவற்றுக்கு மட்டும் பதிலிருக்கும் முறையைக் கொண்டு வருவேன். இந்த நூதன முறையால் — தாறுமாறாகக் கேள்விகளும் பதில்களும் – செருப்புகளோடும் மிளகாய்ப் பொடித் துகள்களுடனும் – அங்குமிங்கும் பறப்பதைத் தடை செய்வேன்.
- பாராளுமன்றப் பெண் உறுப்பினர்களின் துகிலுரிப்புக்கெனவென்றே பிரத்தியேகமாக ஒரு கமிட்டியை அமைத்து அதற்கு இளவல் துரைமுருகனைத் தலைவராக்குவேன். சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியோர்களைத் தண்டிப்பதற்கான சட்டதிட்டங்களை உருவாக்குவதற்கு என் அருமை நண்பர், நிரந்தர இரண்டாம்படித் தலைவர் அன்பழகன் தலைமையில் இன்னொரு கமிட்டியை அமைத்திடுவேன்!
- திட்டக் கமிஷனை, ஒருவரையும் திட்டாக் கமிஷனாகவும் கமிஷன் கிடைக்கும் திட்டங்களுக்கான பிரத்தியேகக் கமிஷனாகவும் மாற்றியமைத்திடுவேன்.
- ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் தம்பி தோட்டா தரணியின் மேற்பார்வையில் பாராளுமன்றம், செங்கோட்டை போன்றவற்றின் செட்டுகளை அமைத்து, சாமானியர்களும் அவற்றைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்வேன்.
- தன்மானத் தனித்தமிழ இளவல் வீரமணியின் பரிந்துரைப் படி – முதலில் அனைத்து இந்து கோயில்களில் மிகப்பிற்படுத்தப்பட்டவர்களை அர்ச்சகராக்கிய பின்னர் — அனைத்து சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் – மிகமிகப் பிற்படுத்தப் பட்டவர்களை பாதிரியார்களாகவும் உலீமாக்களாகவும் ம்யுஸ்ஸென்களாகவும் ஆக்குவேன்.
- குப்பனுக்கும் சுப்பனுக்கும்கூட, தொலைதொடர்புக்கான தனி அலைக்கற்றை ஒதுக்குவேன். அது மட்டுமல்ல, இந்தியப் பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலிருந்து அடலேறுகளெனப் பொங்கி எழும் பொறியாளர்களை வைத்துக் கொண்டு 100G யிலிருந்து ஆரம்பித்து 12100, 00, 000G வரை – ஒவ்வொரு சாமானியனுக்கும் தனித்தனித் தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்களை உருவாக்க, தம்பி இளவல் தயாநிதியுடன் சேர்ந்து பாடுபடுவேன்!
-0-0-0-0-0-0-0-
மேற்கண்ட தகத்தகாய காரணங்களே போதும் – நான் இந்தியாவின் நிரந்தரப் பிரதமர் ஆவதற்கு… ஆனால், ஆனால்…
கடைசியாக, வெட்கத்தை விட்டுக் கேட்டிடுகிறேன்; அரசியல் அரிச்சுவடியறியாத அம்மையாரே பிரதமராக, கொம்புத்தேனுக்கு ஆசைப் பட்டிடலாம், அவாள் இல்லாத சாமானியனான நான் ஆசைப் பட்டிடக்கூடாதா? கனவு காணக் கூடாதா? அல்லது, என் ஜாதகமே சரியில்லையா? :-(
March 19, 2014 at 21:51
நான் கருணாநிதியாக பிறந்திருக்காவிட்டால் ராமசாமியாக பிறந்து கருணாநிதியை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன்.
ஆனா, நான் ராமசாமியா பொறந்துட்டா, கருணாநிதி இருக்க மாட்டாரே, அப்போ யாரைத் திட்டறது. ரொம்ப கொழம்புதே :-)
March 19, 2014 at 22:29
bore..
March 20, 2014 at 10:19
ஆமாம்.உண்மையில் கருணாநிதியைப் பற்றி
”போர் முரசுதான்” கொட்டியிருக்கிறார்
March 21, 2014 at 17:23
ப்ளஸில் இடுகிறேன், நன்றி.
March 21, 2014 at 17:25
“கருணாநிதி: “ஏன், நான் இந்தியப்பிரதமர் ஆகிடக் கூடாதா?””
March 21, 2014 at 22:55
u r kalainar hatter. stop haet campain
March 26, 2014 at 20:25
ஒன்றை விட்டு விட்டீர்கள்! இந்திய முழுவதற்கும் இலவச டிவி கொடுத்து, சன் நிறுவனத்திற்கு மாதா மாதம் லட்சம் கோடிகள் வருமானம் வர வழி செய்து நூறு தலைமுறைகளுக்கு குடும்ப வருமானத்தை பெருக்குவேன்!!
September 18, 2017 at 13:22
[…] என்றெல்லாம், ஒருமுறையல்ல, பலமுறை சொல்லி அர்ச்சனை செய்திட்டிருக்கிறார் இந்தப் பெருமகனார்! மேலும். […]