தமிழ இயல்பு: ஸ்னெல் ஒளித்தடம் + ஸிப்ஃப் மானுட இயல்புக் கோட்பாடுகள்

December 20, 2013

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)

சாளரம் #8: ஸ்னெல் ஒளித் தடக் கோட்பாடு: ஓளியானது, எதிர்ப்பு குறைவாகவுள்ள பாதையில், ஆக அது வேகமாக செல்லக்கூடிய, நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடிய  பாதையில் மட்டுமே  செல்லும்.

உப ஸிப்ஃப் கோட்பாடு: மனிதனின் தாங்குசக்தியும் மனவலிமையும் பொதுவாக மிகக் குறைவு – அப்படியே அவை இயங்கினாலும் அவை, எதிர்ப்பு குறைவாகவுள்ள, சுளுவான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடுபவை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், பல துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸ்ப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், மொழியியல் உட்படப் பல  துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸிப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை. (என்னிடம் இருப்பது, இந்தப் பழைய பதிப்பு தான்)

இதன் புதுக் கருக்குக் குலையாத ஒரு அச்சுஅசலான  ஃபேக்ஸிமிலி பதிப்பு 2012ல் வந்திருக்கிறது. அதன் அட்டைப் படம் (அமேஸானிலிருந்து), கீழே:

zipf-human-behaviour-cover-image-off-amazon-newedition

தமிழ் ஸிப்ஃப் கோட்பாடு: நாம் எதிர் கொள்ளும் பிரச்சினை எப்படிப் பட்டதாக இருந்தாலும் சரி. அவற்றை நாம் நேரடியாக, சிந்தனாபூர்வமாக, படைப்புத் திறனுடன், அறிந்து கொள்ளும் மனப் பாங்குடன் அணுகும் பாரம்பரியமே இல்லை; குறுக்கு வழிகளில், அரைகுறை மனப்பான்மையுடன் எதையும் அணுகுவதே நம் வழக்கமென்று ஆகிவிட்டிருக்கிறது – கடந்த 80 ஆண்டுகளாக, இதனை நாம் ஒரு கலையாகவே வளர்த்தெடுத்து வருகிறோம். கடந்த பல பத்தாண்டுகளாக,  நம்முடைய செல்ல திராவிடப் பாரம்பரியத்தில்(!) இதற்காகக் கலைமாமணி விருதெல்லாம் கொடுத்து வருகிறோம் கூட!

ஆக, வெகு சுளுவாக எந்த விஷயத்திலும் திருப்தி அடைந்து விடுகிறோம். நம்மைப் பற்றிய பெருமைகளை,  உயர்வான எண்ணங்களை, அட்டைக் கத்திப் பெருமிதங்களை —  அற்ப  விஷயங்களுக்காகவெல்லாம் அடைந்து, நெஞ்சம் விம்மிப் புடைக்க உலா வருகிறோம்.

வேலையே செய்யாமல் பலன் மட்டும்  பெறும் வகைமுறைகளுக்காக, நாயாக அலைபவர்கள் நாம்.

-0-0-0-0-0-0-0-0-0-

சில உதாரணங்களினூடே இந்தச் சாளரத்திற்குள் பார்த்தால் கொஞ்சம் தெளிவு (எனக்குப்) பிறக்கலாம்…

தோட்டக் கலை நிபுணத்துவம் என்பது பல பத்தாண்டுகள் போல கடினமாக உழைப்பதனாலும், மாற்றங்களை அவதானிப்பதாலும், தொடர்ந்த முனைதல்களினாலும், அறிதல்களினாலும் நிகழும் ஒன்று. ஆனால், தோட்டக்கலை பற்றி அதிகபட்சம் ஒரு புத்தகம் படித்துவிட்டு, ஒரு கன சென்டிமீட்டர் குழி கூட வெட்டியிருக்காமல், இணையத்தில் தோட்டக்கலை குறிப்புக்கள் கொடுப்பது சுலபம்.  ஏனெனில், இம்மாதிரி திடீரெக்ஸ் நிபுணர்களுக்கு ஒரு புத்தகத்தை அரைகுறையாக வாசித்ததினாலேயே (இது பெரும்பாலும், மஸானபு  ஃப்யுகொகா அவர்கள் எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ யாகத்தான் இருக்கும்!) பயிர்கள், வேளாண்மை பற்றி சகல வித்தைகளையும் அறிந்தவர்களாகிவிட்ட பெருமிதம். ஆனால் இந்தக் கேனத்தனத்தை ஸிப்ஃப் அவர்களின் புத்தகத்தை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது.

… உதாரணமாக, சிலவருடம் முன்புவரை என்னுடைய வீட்டுக் காய்கறித் தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு என் வீட்டுக்கு வரும் செடிகொடிமரம் என்றால் ஒரு இழவும்  தெரியாத பலர், எனக்குத் தோட்டக்கலை பற்றிய உரத்த அறிவுரைகள் பல தந்திருக்கிறார்கள். ஆர்கனிக் வேளாண்மை, கம்போஸ்ட், மண்புழு என்று மானாவாரியாக ஜல்லியடித்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் நகைச்சுவைக்குக் குறைவே இருந்ததில்லை. (ஆனால், நகைச்சுவை மிகவும் அதிகமாகிவிட்டபடியால், இந்த ஸிப்ஃப் கோட்பாட்டுக் கழுதைக் கூட்டங்களை, ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன், ஸ்ஸ்ஸ் அப்பாடா!)

ஒரு வேலையைத் துப்புரவாகச் செய்வதைவிட, அடுத்தவர் வேலையில் குற்றம் காண்பது சுலபம் (ஹா, எனக்கு இது கைவந்த கலை!) – அதே சமயம் அடுத்தவர் வேலையைப் பற்றி ஒரு சுக்கும் தெரியவேண்டிய அவசியமே இல்லை. தாங்கொண்ணா பொறுப்பற்ற தன்மையை, சராசரித்தனத்தை — மதிக்கத்தக்க ஒரு நுண்கலையாக மாற்றும் ரசவாதம் இது.

  • “அமெரிக்கா இஸ்ரேலை அரவணைக்கக் கூடாது”
  • “எல்லாஞ்செரி… ஆனால், நரேந்திர மோதி அதைச்  செய்யவில்லையே!”
  • “ரோட்ல குப்பையா? அதை நகராட்சிதான் பாத்துக்கணும்”
  • “ஸ்ரீலங்காவை ஐநா சபை நோண்டவேண்டும்”
  • “கலைஞருக்கு கொடுக்காத பாரதரத்னா விருதை ஏன் டென்டுல்கருக்குக் கொடுக்கவேண்டும்?”

… போன்றவை இந்த ரகம்.

இலக்கியம் படைப்பது ஒரு யோகம், சாதனை. இதற்கெல்லாம் குவிந்த முனைப்பும், ஆழ்ந்த சிந்தனையும், வார்த்தைகளால் அழகுணர்ச்சி மிகுந்த சிற்பங்களை வடித்தெடுக்கக்கூடிய திறனும் மிக மிக முக்கியம் – இம்முனைவுகள் — வாழ்க்கையில் சக்தியையும், நேரத்தையும் உறிஞ்சக் கூடியவை.

ஆனால் கண்டமேனிக்கு இலக்கியங்கள் பற்றி உளறிக்கொட்டுவது, பொச்சரிப்புடன் அலைவது, அபாண்டங்களால், தொடர்ந்த ஏளன இகழ்ச்சிகளால் – நம்மிடம் இருக்கும் சொற்ப இலக்கியவாதிகளைச் சோர்வடையச் செய்து அவர்களையும் ‘நம்ப ரேஞ்சுக்கு’ இழுத்துக் கீழே தள்ளிவிடுவது என்பது மிகவும் சுளுவானது.

எண்ணங்களைக் கோர்வையாக இணைத்து, படிக்கிறவர்களின் தரத்தின்மீது நம்பிக்கை வைத்து இணையத்திலும் மற்றபடியும் எழுதுவது கொஞ்சமாவது சிரத்தையுடன் செய்யவேண்டிய விஷயம்.

ஆனால் விட்டேற்றியாகக் ‘காப்பி’ அடிப்பதும், கந்தறகோள சினிமா விமர்சனங்கள் எழுதுவதும் மிகச் சுலபம். (வேண்டுமளவு தமிழ்ப் படங்கள் விமர்சனம் செய்யக் கிடைக்கவில்லை என்றால், மற்ற மொழிப் படங்கள் பற்றியும் எழுதமுடியும் விசாலமான  மனப்பான்மையும் இருக்கிறதல்லவா நமக்கு?)

-0-0-0-0-0-0-0-0-0-0-

தப்பித் தவறி நாம் ஏதாவது செய்ய ஆரம்பித்து (’திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’) அதற்குக் கொஞ்சம் எதிர்ப்பு ஏற்பட்டால், அவ்வளவுதான் – நாம் பின்னங்கால் பிடறியில் பட, முன்னங்கால் முகரையில் பட – வெகுவேகமாகப் பின் வாங்கி, புறமுதுகிட்டோடிப் பிலாக்கணம் வைத்து லாவணி பாட (’ நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’) ஆரம்பித்து விடுவோம்.

வீராவேசமாக அல்லது வீராவேஷமாக ‘இந்திய அரசியல் சட்டத்தை எரிப்போம்’ என ஆரம்பித்து,  ‘அய்யய்யோ இந்திய அரசியல் சட்டம் என்று எழுதிய காகிதத்தைத் தான் எரித்தோம்’ என எதிர்ப்புக் குறைந்த வழியில் சென்று விடுவோம்.

நாம் ஒளியை விடவும்  மகாமகோன்னதம் படைத்தவர்கள். ஒளியை விடவும் சுளுவாக, மனோவேகத்தில் சஞ்சரித்து – எதிர்ப்பு என்று வந்தால் உடனே ஓடி ஒளிந்து, எதிர்ப்பேயில்லாத சராசரித்தனத்தில் நம் வாழ்க்கையை ஒப்பேற்றுபவர்கள்.

நம்முடைய செயல்பாடுகளை யாராவது விமர்சித்துவிட்டால், நம்மால் அதனைத் தாங்கவே முடியாது. அந்த விமர்சனம் சரியா, நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ள அந்த விமர்சனம் எப்படியாவது உபயோகமாக இருக்குமா என்றெல்லாம் சிந்திக்கவோ செயல்படவோ மாட்டோம் – அதற்கெல்லாம் நாம் உழைக்க வேண்டுமல்லவா?

அதனால், இவற்றை எதிர்கொள்ள(!)  நாம் இரண்டு மிகச் சுருக்கமான  வழிகளைக் கையாள்வோம்.

1. ஓன்றுமே செய்யாமல் ’சும்மா இருப்பதே சுகம்’ எனும் சராசரிச் சாக்கடையில் அமிழ்ந்து கிடப்பது.

எல்பெர்ட் ஹப்பர்ட் / 1856 - 1915 / அமெரிக்க எழுத்தாளர் (http://actlearnlead.files.wordpress.com/2013/09/ljv1-16234234.jpg?w=490&h=456 சுட்டியிலிருந்து)

எல்பெர்ட் ஹப்பர்ட் / 1856 – 1915 / அமெரிக்க எழுத்தாளர் (http://actlearnlead.files.wordpress.com/2013/09/ljv1-16234234.jpg?w=490&h=456 சுட்டியிலிருந்து)

2. விமர்சனம் வைப்பவர்களின் மீதான  பதில் விமர்சனம் என்கிற பெயரில் – நீ ரொம்ப ஒழுங்கா, உன் ஜாதி அப்படி, உன் மதம் அப்படி என்கிற ரீதியில் அற்பத்தனமாக வைவது.  நம் தமிழர்களைப் போல,  ஒப்பாரிமுதல்வாத ஜாம்பவான்கள் – உலகத்தில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்!

அதே சமயம் இந்த இரண்டாம் முறையில், நம் கந்தறகோள நடவடிக்கைகளை — ஊக்கமுற, எளிமையான எதிர்ப்பில்லாத ஆனால் கவைக்குதவாத வழிமுறைகளில் செயல் படுத்திக் கொண்டேயிருப்பதும் – அதாவது ஒப்பேற்றிக்  கொண்டிருப்பதும், நம்மால் வெகு சுளுவாக முடியும் ..

-0-0-0-0-0-0-0-0-0-

ஒரு சுக்கு வேலையும் செய்யாமல், அலுங்காமல் நலுங்காமல் உடலை அலட்டிக் கொள்ளாமல், பணம் மட்டும் நிறைய சம்பாதிப்பது எப்படி என்ற வகையில் – எந்த விதமான சிந்தனையும் யோசிக்கும் அறிவும் இல்லாமல் இருந்தாலும், எதனைக் குறித்தும் ஒரு திட்டவட்டமான கருத்தும் அது குறித்த புல்லரிப்பும் இருக்கும் வகையில், நாம் தமிழர்கள் – பேராசிரியர் ஸிப்ஃப் போன்றவர்களுக்கே ஹல்வா கொடுக்கக் கூடியவர்கள்தாம்!

-0-0-0-0-0-0-0-0-0-

இப்போது நம்முடைய செல்லமான ஸ்ரீலங்கா பிரச்னையைத் தீர்க்க — திடமான திண்மையான முயற்சிகள் செய்வதைவிட, ஆவேசப் பின்னூட்டங்கள், பதிவுகள், போர் ஆட்டங்கள் மூலம் இன்பம் காண்பது சுளுவானது என்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால், நம்முடைய இந்த நாடகத்தனங்களில், ஏதோ சாதித்துவிட்ட திருப்தியையும் பெற்றுக் கொள்கிறோம்.

அதே சமயம் — நம்முடைய கவைக்குதவாத டெஸோக்களை, வெட்டி ஆவேசங்களை, நம்முடைய மேலான ஆலோசனைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால், அய்யோ இந்த இழி நிலையப் பாரீர் எனப் பிலாக்கணம் வைக்கவும், இம்மாதிரிச் செயல்பாடுகள் உதவுகின்றன.

தமிழர்களாகிய நாம், நம்மை அறிவதற்கு ஸிப்ஃப் அவர்கள் அளித்துள்ள கோட்பாட்டுக்காக, அவருக்கு நாம் மிகவும்  நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

-0-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்ம்… என்ன??  அவர்  தாம் நமக்கு  நன்றி தெரிவிக்கவேண்டுமா? ஏனெனில் நாம் தானே அவர் கோட்பாட்டின் நடமாடும் சமகால உதாரணங்களாக இருக்கிறோம் என்கிறீர்களா??

வாயை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதி என்னவென்று, திராவிடப் பாரம்பரியத்தில் ஊறிய எனக்கு நன்றாகவே தெரியும்.

-0-0-0-0-0-0-

இந்தப் பதிவு: தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)

மேலும், அடுத்தது…  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (17/n)

தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s