சாளரம் #1: மரக்காணம் நிகழ்வுகள், ஜாதிக் கட்சிகள், தமிழ் எழுத்துரு /வரிவடிவப் பொங்கல்கள்…

November 16, 2013

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (4/n)

(அல்லது) சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)

முந்தைய பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)

… நாம் இந்தச் சாளரத்துக்கான மேலதிகமான எடுத்துக் காட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வெகு அண்மையில் நடந்த விஷயம்: சித்திரைப் பௌர்ணமி – பாமக மாமல்லபுரம் விழா – பாமக_வன்னியர்களுக்கும், விசிகே_தலித்களுக்கும் இடையே மரக்காணம் சுற்றுப்புறத்தில் வன்முறை  உரையாடல்கள் – பொதுச் சொத்து நாசம் – பொய் / ஜாதிவெறி அறிக்கைகள்.

குறுகிய காலத் தாக்கத்து – இவை மட்டும் பெரிதாகப் பேசப்படும்: டாக்டர் ராமதாஸ் பொய் சொல்கிறார், பொதுச்சொத்து நாசத்தை பாமக இழப்பீடு செய்யவேண்டும், பாமகவின் ஜாதிவெறிப் பேச்சுக்கள், வன்முறைகளைத் தடுக்கவேண்டும். உடனடி தண்டனை கொடுக்கப்படவேண்டும், இன்னபிற இன்னபிற.

இவை சரிதான். ஆனால் பாமக செய்த ஒவ்வொரு சட்ட அவமதிப்பையும், பொதுச்சொத்து நாசத்தையும், சமரச உடைப்பினையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் செய்திருக்கிறது. பாமக அளவுக்குச் செய்யாவிட்டாலும், பாமக இந்தச் சச்சரவினைப் படுகேவலமாக வளர்த்து வந்தாலும், அதன் முன்னணித் தலைவர்கள் கீழ்த்தரமாகப் பேசி உசுப்பேற்றினாலும் — விசிகேவும் தன் பங்குக்கு, தன் சிறுபான்மை அளவுக்குத் தன் எதிர்மறைப் பிரதிநிதித்துவத்தை அளித்திருக்கிறது, ஆனால்  நம்முடைய ஒரே வில்லன் ராமதாஸ் அவர்கள்தான்.

வட மாவட்டங்களில் தலித்களுக்கு எதிராகப் பல கொடுமைகள் நடைபெறுகின்றன. அதில் பாமக-வன்னியர்களின் பங்கு அதிகம்தான்.

ஆனாலும் தலித்களில் சிலர் ஆதரிக்கும் கட்சியான விசிகே, அனைத்து தலித்களையும் ஒருங்கிணைக்கும் ஓர் இயக்கமல்ல – அது ஓர் அரசியல் கட்சிதான், அரசியல் முனைப்புகளுக்குரிய, அவற்றுக்கே உரித்தான நிர்ப்பந்தங்கள், நிர்வாகப் பணத்தேவைகள், நிதி சார்ந்த சரிக்கட்டல்கள், ஊழல்கள் உடைய கட்சிதான். ஆக, அதிகாரப் பகிர்வில் அதற்கு விரும்பத்தக்க அளவு பங்கீடு கிடைக்காதவகையில், இதுவும் வன்முறையைத் தன்னளவில் வளர்க்கும் கட்சிதான். இதில் பாமகவினருக்கு எதிராக முடிந்தபோது, விசிகே செய்யும் வன்முறையும் அடங்கும்தான். மரக்காணம் நிகழ்வுகளில் விசிகேவுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஆனால் நமக்கு இதெல்லாம் முக்கியமில்லை.

இந்த மரக்காண பாமக – விசிகே தகராறுகள் போது, வழி நெடுக (விழுப்புரம் – காஞ்சிபுரம் மாவட்ட அளவில்)  – குடிகார பாமக_வன்னியர்களால் சாதாரண_வன்னியர்களுடைய நெடுஞ்சாலைக் கடைகள்தாம் பெரும்பாலான அளவில் தாக்கப் பட்டன.  எனக்கு நன்றாக அறிமுகமிருக்கும் ஒரு பிள்ளைச்சாவடி கடைக்காரர் பாவம், ஒரு சாதாரண  வன்னியர். அச்சமயம், இவருடைய கடையை சூறையாடியது வெளியிலிருந்து வந்த ஒரு பாமக_வன்னிய குடிகார கும்பல். ஆனால் ஒரு புதுச்சேரி நிருபப் பெருந்தகை – இவரை ஒரு பாவப்பட்ட தலித் என்பது போல் சித்திரித்துப் பின்னர் பொதுமைப் படுத்தி ஒரு அசிங்கப் பத்தியை எழுதுகிறார். எனக்கு முன்னறிகமாயுள்ள ஒரு ஃப்ரெஞ்ச் பத்திரிக்கையாளர் இதனைப் படித்து  – உண்மை நிலவரத்தைப் பற்றி ஒரு பரிசோதனை / ஆய்வு செய்யலாம் என்று சொன்னார். செய்தோம். என்னமாதிரிப் பொய்யர்கள்  இந்த தினசரி வதந்திக் காரர்கள்!

பின்னர் சில வன்னிய, தலித் இளைஞர்களுடன் பேசலாம் என்றார். ஆஹா, எவ்வளவு அற்புதமான இளைஞர்கள் வேண்டும் என்று சொல்லுங்கள், நான் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றேன். ஒரு பானைச் சோற்றுக்கு பல சோறுகள் பதம் பார்க்க வேண்டுமா என்றேன்.

ஆக, இச்சமூகங்களைச் சார்ந்த இரண்டிரண்டு மணிகளுடன் (=ஒரே சமயத்தில் உரையாடல்; நால்வருக்கும் ஜாதிக்கட்சி சார்பில்லை) பேசினோம். ஏன் இப்படி, இவர்களைப் போய் வன்முறையாளர்கள் என்கிறார்களே – ஜாதிச் சண்டைகள் போடுகிறார்கள் என்கிறார்களே என்றார், அந்தப் பறங்கியர்.

தழல் வீரத்தில், அதன் நேர்மையில் — தலித்தென்றும் வன்னியரென்றும், ஏன், வேறேதோ ஜாதியென்றும் பாகுபாடு இருக்கிறதா என்ன?

ஆனால் நம் ஊடகங்களுக்கு, வன்னியர்கள் பெரும்பாலான அளவில் தலித்களுடன் சண்டை போட்டனர் என்று ஒரு சித்திரம் விரிப்பது ஸெக்ஸியாக இருந்திருக்கிறது. அல்லது தலித்கள் திருப்பி அடிக்கிறார்கள் என்ற செய்தி இன்னமும் வெல்லமாக இருக்கிறது. ஊதிவிட்டுக்கொண்டே இருப்பார்கள், அற்பப்   பதர்கள்.

இந்தப் பப்பரப்பா ஊடக அற்பத்தனங்களால், அரைகுறை அறிவுஜீவிகளின் ஆகாத்தியத்தால் - பொது மக்களுக்கும் சமன நிலையென்பதே இல்லாமல் போய்விடுகிறது. (இந்தப் படம் - http://www.brainbasedbusiness.com/2006/11/paying_your_bills_during_unexp.html தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது)

இந்தப் பப்பரப்பா ஊடக அற்பத்தனங்களால், அரைகுறை அறிவுஜீவிகளின் ஆகாத்தியத்தால் – பொது மக்களுக்கும் சமன நிலையென்பதே இல்லாமல் போய்விடுகிறது. (இந்தப் படம் – http://www.brainbasedbusiness.com/2006/11/paying_your_bills_during_unexp.html தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது)

இந்த ஊடக அயோக்கிய மரமண்டைகளுக்கு, நம் (+அவர்களுடைய) சமூகத்தில் சிறுபான்மையினரான பாமக_வன்னியர்களால், பெரும்பாலான சாதாரண_வன்னியர்கள் துன்பப் படுவது, அசிங்கப் படுவது தெரியாது.

அதேபோல், நம் (+அவர்களுடைய) சமூகத்தில் சிறுபான்மையினரான விசிகே_தலித்களால், பெரும்பாலான சாதாரண_தலித்கள் அமோகமாக அல்லலுறுவதும் தெரியாது.

ஓரு இழவையும் நேரடியாகப் பார்த்தோ, ஆய்ந்தோ புரிந்து கொள்ளாமல் – சும்மனாச்சிக்கும் ஜாதிஎதிர்ப்பு கோஷ்டம் போடுவது இந்த ஊடகப் பதர்களுக்கு ஒரு சாதாரண விஷயம்தான்.

கொல்கொத்தா ஏஷியாடிக் ஸொஸைட்டியின் அதிமூர்க்கன் வில்லியம் ஜோன்ஸ் மூலமாக, மனுஸ்ம்ரிதி ஒன்றே  அது ஒன்று மட்டுமே  இந்திய சமூகத்தைச் சரியாக விவரிக்கிறது எனப் பரப்பப்பட்ட பொய்மையை, இன்றுவரை பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் நமக்கு — பாமக_வன்னியர்கள் மட்டுமே விசிகே_தலித்களை ஒடுக்குகின்றனர், அதுவும் விசிகே_தலித்கள் ஒன்றுமே செய்யாமல் இருக்கும்போதுகூட — என்கிற பிம்பம் மிகவும் ஸெக்ஸியாகவும், எளிமைப்படுத்தப்பட்ட மனிதவுரிமைத்தனமாகவும் இருப்பது ஆச்சரியம் தருவதல்ல. நாம் சம நிலையிலிருந்து பிரச்னைகளை அணுகுவதில்லை. ஆக, ராமதாஸ்கள் மட்டும்தான் வில்லன்கள். (விசிகே-யினர் தேவையற்ற முறையில், சாதாரண மக்கள் பிரச்னைகளுக்கு, எளிதில் தீர்க்கப்பட்டிருக்கும் ஜாதிமூலமில்லா பிணக்குகளுக்கு தலித்-வன்னியர் நிறம் கொடுத்து, ஊதிப் பெரிதாக்கி, அதற்குப் பின்னர் பாமக ஆட்களும் அவர்கள் பங்குக்கு குழப்பியடித்து நிலைமையைக் கந்தறகோளமாக்கி, இரு தரப்பு வட்டாரக் கட்சித் தலைவர்களும் பிரச்னையைத் தீர்க்கப் பணம் வேறு வாங்கிக்கொண்டு – தீர்க்க முடியாத அளவுக்குச் சென்றிருக்கும் – இரு எங்கள் வட்டார பிரச்னைகளை நான் நேரடியாக அறிவேன்.)

… பின்புலங்களை அறியமுனையாத நம்மால், நெடுங்காலத் தாக்கத்துகள் யோசிக்கப்படக்கூட மாட்டா. அவை பெரும்பாலும் இப்படியாக இருக்கலாம்:

பாமக தலைமை பொறுப்புணர்வுடன் ஒருகாலத்தில் செயல்பட்டு நிழல் பட்ஜெட் முதல் அதன் எம்எல்ஏக்களுக்கு பயிற்சி முகாம் வரை நடத்தியதெல்லாம் மறக்கப்பட்டு, பாமக அன்னியப் படுத்தப்படல் – ஆக, அதன் ஒரு பிரிவினரின் அதிக வன்முறை, ஜாதிவெறி நோக்கிய பயணம்; சமூக அமைதி, சமரசத்தன்மை குலைப்பு. வன்னியர்-தலித் பிரச்னைகள் இருக்கும் பகுதிகளில் மேன்மேலும் ‘கிராமம் Vs காலனி’’ எனும் பிரிவினை நோக்கு சார்ந்த தேவையற்ற  இடைவெளிகள்.

விசிகே-யினர் தலைகளைச் சுற்றி அவர்களே  உருவாக்கிக்கொண்ட ஒளிவட்டம். அவர்களது வன்முறைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாது விட்டமையால், அவர்களுக்கு மேலும் தினவு எடுக்கப்படக்கூடிய காட்சிகள்.

இதற்கெதிராக, பாமக_வன்னியர்களும், மற்ற ஜாதிக் கட்சிகளும் திரளல்.

ஆக, அவ்வப்போது மக்களிடையே ஏற்படக்கூடிய சாதாரண பிணக்குகளும் கருத்து வேறுபாடுகளும் உருமாறி ஜாதிப் பிரச்னையாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள்.

… ஆனால், இந்த விசிகே, பாமக போன்றவை, பரந்துபட்ட கட்சிகளாக இல்லாமையால்  —  இந்தச் சாத்தியக்கூறுகள் அனைத்தையும், சிறிதாவது சிந்தித்துச் செயலாற்றும் அரசு, சுலபமாக மேலாண்மை செய்ய முடியும்.

இச்சமயம் நாம் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்: ஓர் அரசியல் கட்சி, கட்டுக்கோப்பில்லாத / கொள்கைச் சார்பில்லாத மக்களை/அனுதாபிகளைத் திரட்டி நிர்வகித்து, கட்சியின் கட்டுமானங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்றால், அதற்கு ஊழல் / அடாவடிப் பணமூலம் இல்லாவிட்டால் முடியவே முடியாது. ஒரு கட்சியை நடத்தும் செலவு சாமானியமானதல்ல.

இந்த நிதர்சன உண்மை,  தமிழகத்தில் (பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நீங்கலாக) அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைத்துக்  கட்சிகளுக்கும் பொருந்தும். விசிகே, பாமக போன்றவையும் இந்தப் பொது ஜோதியில் கலந்தவைதான், அவையும் குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்.

இன்னொரு விஷயம்: விசிகே, பாமக போன்ற அரசியல் கட்சிகள், சக்தியும் புத்திக்கூர்மையும் உள்ள இரண்டாம் அடுக்குத் தலைவர்களை வளர்த்தெடுப்பதற்கு முயல்வதே இல்லை – அது ஒத்துவராது அவற்றுக்கு; மாறாக, அவை வசீகர (அல்லது அடாவடி) முதலடுக்குத் தலைவர் அல்லது சில தலைவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும்,  நீண்டகாலப் பார்வையில்லாத உள்ளீடற்ற அமைப்புகள்தாம்.

ஆனால் அதிமுக / திமுக கட்சிகள் அப்படியல்ல. இவை மிகப்பெரும் அளவில் உற்சாகமான இரண்டாம் அடுக்குத் தலைவர்களைப் பெற்றுள்ளன. இவர்கள் நிச்சயம் முதலடுக்குத் தலைவர்களாக ஆகவே முடியாது என்பது இவர்களுக்கும் தெரியும், அந்த முதலடுக்காளர்களுக்கும் தெரியும். ஆகையால் இந்தக் கட்சிகளுக்கு இந்தக் ‘கட்டுக்கோப்பு’’ எனப்படும் கோட்பாடு இருக்கிறது: அதாவது, மேலடுக்குகளில் ஜனநாயகம் துளிக்கூட அற்ற ஏதேச்சாதிகாரம், இதைத் தவிர மற்ற அடுக்குகளில் பெயரளவில் ஜனநாயகம். இந்தக் கட்டுக்கோப்பு’ இரண்டு கட்சிகளிலும் இருக்கிறது. வெளிப்படையாக இருக்கிறது. இது ‘ஒருவரை ஒருவர் உண்ணும்’ (symbiotic relationship) அதிகாரங்களை, அதனால் ஏற்படும் ஆதாயங்களைப் பகிர்ந்து உண்ணும் உறவு. இந்தப் பகிர்வில் மேல்தட்டுத் தலைவர்கள் அளவுக்கு அதிகமாக ‘பங்கு’ பெற்றாலும், நடைமுறைக் ‘கட்டுக்கோப்பு’ கோட்பாடானது, கீழ்த்தட்டாளர்களை, புறங்கையை நக்குபவர்களை, ஒரு குறைந்த அளவு சந்தோஷத்திலாவது வைத்திருக்கிறது.

-0-0-0-0-0-0-0-0-0-

மேலும் இந்த பாமக/விசிகே போன்ற கட்சிகள் — தாங்கள் ஆதரவு பெரும் சமூகத் திரள்களிலிருந்து, அவர்கள் மேன்மைக்கு, இளைஞர்களை செழுமைக்கேற்ற பாதையில் செலுத்துவது, ஜனநாயக ரீதியாக ஆதரவை வென்றெடுப்பது, முன்னேற்றத்தைக் கையில் எடுப்பது போன்றவைக்கெல்லாம் பணி செய்யாமல் – கவைக்குதவாத டெஸோபுஸோ, பிரபாகர சஹஸ்ரநாம சங்கீர்த்தனம், பெரியார் வழிபாடு,  சேதுசமுத்திரக் கடலில் கரைக்கும் திட்டப் பெருங்காயம் போன்ற நகைச்சுவைகளில் பங்கு பெருகிறார்கள்.

ஆக, இவர்கள் திரட்டிய மக்கள் திரளை, இளைஞர்களை – எந்தவகையிலும்  பிரயோஜனம் இல்லாத – அதாவது, இத்திரள்களுக்கோ, மற்றைய சமூகத்தினருக்கோ, சூழலுக்கோ  — ஒரு உபயோகமும் இல்லாத வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். எல்லாம் பொழுதுபோக்குதானே!

இன்னொரு பக்கம், பகிர்ந்து ‘உண்ணுவதும்’ இல்லை. ஒருவிதமான நீண்டகால கட்சித்திட்டமும் இல்லை.

ஆக, இக்கட்சிகளின் நீண்டகால அளவிலான விதி: உப்புச்சப்பற்ற, வளர்ச்சியற்ற தன்மை, பின்னர் தொய்வு – ஆக, இருக்கும் சில தொண்டர்களுக்கு அலுப்பு. பின் இவை மெள்ளமாகப் படுத்து, வடக்கிருந்து நைந்துபோகும். அவ்வளவுதான்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இப்படியே நிலைமை தொடர்ந்தால், அடுத்த 10-15 ஆண்டுகளில் விசிகே, பாமக போன்ற கட்சிகள் மிகவும் க்ஷீணித்துப்போய், அவற்றின் தொண்டர்கள், ‘கட்டுக்கோப்புக்’ கட்சிகளிடம் சரணடைந்துவிடுவர். சுபம்.

எது எப்படியோ, தமிழகத்தின் தொடர்ந்த (சமகால, நீண்டகால) நலனை நாம் விரும்புவோமானால், குடிமையுணர்ச்சி பெரும்பாலும் இல்லாத நம் சூழலில் – நாம் / நமது அரசு கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.

அரசு / பொதுச் சொத்து ஒரு கும்பலினால் நாசம் செய்யப்பட்டால், அது எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சி உதிரிகளாக இருந்தாலும் சரி – அரசானது, காவல்துறை மூலம் உடனடி நடவடிக்கைகள் (zero tolerance measures) எடுக்கவேண்டும்; செய்யப்பட்ட குற்றத்தின் தன்மை, சூழல் போன்ற காரணிகளைப் பொறுத்து, முற்பகல் நாசவேலை செய்த கீழ்மட்ட உதிரிகளை, அதாவது ‘செயல் வீரர்களை’ அவர்கள் வாழ்நாளில் (அல்லது அவர்களின் அசாதாரண இறப்புக்குப்பின், அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்நாளில்) மறக்க முடியாத அளவு ‘பிற்பகல்’ விளைவிக்கவேண்டும். அதே சமயத்தில் மேல்மட்ட உசுப்பாள அரைகுறைத் தலைவர்களையும் சட்டத்தின் மாட்சிமையைப் பயன்படுத்தி, தயவுதாட்சண்யம் இன்றி உள்ளே தள்ளவேண்டும் – குறுகிய காலத்தில் இதற்கு எதிர்ப்பு, பப்பரப்பா ஊடக உசுப்பல்கள், எதிர்க்கட்சிகளின் திடீர்ப் பரிவுகள் எல்லாம் இருக்கும்; ஆனால், அரசு கொஞ்சகாலம் பொறுத்திருந்தால் போதுமானது, எல்லாம் அடங்கிவிடும்.

இந்த இருமுனை ‘முளையிலேயே கிள்ளி எறிதல்கள்’ மூலமாக, நீண்டகால நன்மைகள் சமூகத்துக்கு ஏற்படும். எதிர்கால ‘செயல் வீரர்கள்’ நாசவேலை செய்வதற்கு அஞ்சுவார்கள். தலைவர்களையும் உள்ளேயே சில வருடம்போல வைத்திருந்தால் (வைகோ அவர்களைச் சிறையில் வைத்ததுபோல) மக்களும், அவர்கள் கட்சித் தொண்டர்களும் இந்த விஷயத்தையே மறந்துவிடுவார்கள் – ஏனெனில், அச்சமயம் ஏதாவது புதிய ரஜினி அல்லது கமல் அல்லது யாராவது மீசைமுளைக்காத கொத்தவரங்காய் இளைஞனின் (+ ஊக்க போனஸ்: தமிழ் தெரியாத, வெள்ளை நிறம் படைத்த வடக்கத்தி இளம்பெண்ணின்) புதுப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நாமெல்லாம் நம் போராட்டங்களை மறந்து தியேட்டர்களில் சரணடைந்து விடுவோம்.

சுடச்சுடச்  சினிமா விமர்சனம்வேறு எழுதவேண்டுமல்லவா? :-)

… வெளியில், நெடு நாட்களுக்குப்பின் வரும் ‘சிறை கண்ட’ சிங்க நிகர்த் தானைத் தலைவர்களும் பின்னர் வேறு வழியில்லாமல் ‘அறவழிப்’ போராட்டங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். சுபம்.

நமக்குத் தேவை – ஒரு சுக்கு தயவுதாட்சணியம் கூடப் பார்க்காமல் ராஜதர்மத்தை நிலைநாட்ட முற்பட்டு, குட்டைக்குழப்பி அரசியல்வாதிகளை / உதிரிகளை மனோதத்துவரீதியிலும் எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்கும் ஓர் அரசு. அவ்வளவுதான்.

செய்வோமா?

-0-0-0-0-0-0-0-

இப்போது மிக  அண்மையில் நடந்த ( நாமெல்லாம் அதற்குள்ளேயே  மறந்து விட்ட) ஒரு விஷயத்தைப் பார்க்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுகிறார்: அதாவது, தமிழை எழுதுவதற்கு ஏன் ஆங்கில வரிவடிவங்களை, எழுத்துருக்களை உபயோகிக்கக் கூடாது என்று. ஒரு உரக்கச் சிந்தித்த யோசனை இது – சொந்த அனுபவங்களை, படிப்பறிவை, எண்ணங்களை வைத்து —  தமிழின் மேன்மைக்கான, வளர்ச்சிக்கான  இது ஒரு வழியாக இருக்கலாம் என்று, கொஞ்சம் வேகத்துடன்  சில கருத்துகளை முன் வைக்கிறார்.

நமக்கு இத்துடன் ஒப்புமை இல்லாவிட்டால், தெளிவாக இதனைக் குறிப்பிட்டு, நம் வாதங்களை அடுக்கி – ஒரு விவாதத்தை, ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தியிருக்கலாம். தமிழின் எதிர்காலம், அதனை எப்படி அடுத்த படிகளுக்கு இட்டுச் செல்வது என்றெல்லாம் விரித்திருக்கலாம்.

ஆனால், நாம் தமிழர்கள்  என்கிற அசர வைக்கும் (=அயர்வளிக்கும்) உண்மையை நீங்கள் உணரவேண்டும். அதுவும் புல்லரிப்புமுதல்வாதிகளான தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்கிற நடைமுறை உண்மையை.

அவ்வளவுதான்.  கிளம்பிவிட்டார்கள் – கிளம்பிற்று காண் தமிழ்அசிங்கக் கூட்டம் – ஒன்றுமே புரிந்து கொள்ளாத முட்டியடி எதிர்வினைகளுடன். கோஷ்டம். பத்திரிக்கை அலுவலகத்தில் பஜனை. நுரை தள்ளல்கள். மலையாளி என்று வசைபாடி – அந்தக் காலத்தில் கருணாநிதி அவர்கள் ஆசிர்வதித்து, மலையாளிகளுக்கெதிராகவென்று (= எம்ஜிஆருக்கெதிராக) ஆரம்பித்த ‘தமிழர் படை’ சொறி சிரங்கு என்கிறமாதிரி போக்குகள். ஜெயமோகன் சொல்லி ஏதோ தமிழே அழிந்து விட்டது போல பிலாக்கணங்கள்.

ஆனால், புள்ளி மூக்குக்கை பகுதியில் தமிழ் வரிவடிவங்களோடு நிராயுதபாணிகளாக நின்றிருந்த தமிழ்நாட்டுத் தமிழர்களை,  வட்டெழுத்து சுட்டெழுத்து என்று டப் டுப்பென்று ஜெயமோகன் அழித்தொழிக்கவில்லை. ஆகவே நல்லவேளை, ஐநா சபையில் ஜெயமோகனை ஒரு தமிழ்வரிவடிவப்போர்க் குற்றவாளி என்று அறிவிக்க நாம் ஒடிப்போய் ஒரு மனு கொடுக்கவில்லை. (அதாவது, இதுவரை!)

… ஆக, ஏகத்துக்கும் அதி வியர்த்தமான, உச்சஸ்தாயிக் கதறல்கள். தேவையா? தமிழை அவ்வளவு லேசாக ஒழித்துவிடமுடியுமா?

திரா விடக் கட்சிகள், கடந்த ஐம்பது-அறுபது வருடங்களாக உழையோஉழையென்று படு முனைப்பாக  உழைத்தும் லேசில் அழிக்கமுடியாத தமிழை –  ஒரு எழுத்தாளர், அதுவும் ஒரு இலக்கியவாதி, சில தர்க்கரீதியான யோசனைகள் மட்டுமே கூறி ஒழித்து விட முடியுமா என்ன?

ஹ்ம்ம் – பொதுவாகச் சமன நிலையில் (ரொபாடிக்ஸ் சார்ந்த சில கட்டுரைகள் போன்றவற்றைத் தவிர்த்து)  எழுதும் நிசப்தம் பதிவுக்காரரைக் கூடப் பாவம்,  அதி உணர்ச்சி வசப்பட்டு எழுத வைத்துவிட்டார்கள்.

ஆனால்… நல்லவேளை, சாருநிவேதிதா அவர்களும், என்னை ஏமாற்றாமல்,  ஜெயமோகன் அவர்களின் கருத்துகளைத் திட்டி (என நினைக்கிறேன்) ஒரு பதிவை வெளியிட்டார். இல்லாவிட்டால்,  எனக்கு சிரிக்கவே முடிந்திருக்காது.

நமக்குச் சமன நிலையே இல்லை. முட்டியடிச் சித்தர்கள் தாம் நாம்.

இதன் – இந்தக் கூறுகெட்ட கோமாளித்தனத்தின், எதிர்கால – நீண்டகாலத் தாக்கத்து என்பது என்னவாக இருக்கலாம் என்று நாம் யோசிப்போமா? (மாட்டவே மாட்டோம்!)

ஏனெனில் … … அய்யய்யோ! அடுத்த பப்பரப்பா வந்து விட்டதே! அட இயற்கையே!!

-0-0-0-0-0-0-0-0-

நாம், மாற்றங்களினால் / நிகழ்வுகளினால் - நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். நன்றாக யோசித்தபின் அவற்றை, அவற்றின் தாக்கத்தை - மிகமிக அதிகமாகவே மதிப்பிடவேண்டும். செய்வோமா? இல்லையென்றால், நாம், நம்முடைய முட்டியடி எதிர்வினைகளுக்குக் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும். (இந்தப் படத்தை எந்த புத்தகத்திலிருந்து / தளத்திலிருந்து எடுத்தேன் என்று குறித்துக் கொள்ளவில்லை :-( )

நாம், மாற்றங்களினால் / நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். நன்றாக யோசித்தபின் அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிக அதிகமாகவே மதிப்பிடவேண்டும். செய்வோமா? இல்லையென்றால், நாம், நம்முடைய முட்டியடி எதிர்வினைகளுக்குக் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும். (இந்தப் படத்தை எந்த புத்தகத்திலிருந்து / தளத்திலிருந்து எடுத்தேன் என்று குறித்துக் கொள்ளவில்லை :-( )

… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நாம் அந்தப் பக்கமும் போகவேண்டாம், இந்தப் பக்கமும் சாயவேண்டாம். ஆய்ந்து அறிந்து பின்னர் நம் நடவடிக்கைகளைச் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டாமா?

ஒரு பத்து நிகழ்வுகளுக்கு ஒரு முறையாவது இப்படிச் செய்ய வேண்டாமா?

-0-0-0-0-0-0-

அடுத்தது: தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n) அல்லது சாளரம் #2…

தொடர்புள்ள பதிவுகள்:

23 Responses to “சாளரம் #1: மரக்காணம் நிகழ்வுகள், ஜாதிக் கட்சிகள், தமிழ் எழுத்துரு /வரிவடிவப் பொங்கல்கள்…”

  1. surya Says:

    100% agree…for jeyamohan’s writing, i too expected a proper reply from any of the known writers or bloggers such as nisaptham/charu,etc… but i couldn’t find any.

  2. Ananymous Says:

    Whether one likes Ramadoss or not, no other Caste Party leader could do what Ramadoss has done. He has consolidated one caste and gained some power out of the same. For many other caste politicians and main stream-politicians, this is not acceptable, because, they have to falsely claim (or act) that they are not biased towards any caste, but still at times align with PMK to gain vote. Projecting such incidents give lots of mileage. Many misguided youths of both these poor castes, still are engaging in power conflict, mostly intigated by their leaders, with the support of politicians and officials from their respective parties. But for press, when such incidents happen, sensationalization is more important than finding facts objectively, until the next news of similar nature appears. If having party on caste lines by PMK is wrong, then VCK and many other such parties are no different. How many parties have to guts to field and honest and deserving / competent candidates in any constituency where a specific caste is dominant? In TN, no body speaks about caste openly, but everyone follows it subtly. That is nothing wrong. But they all should have the honesty like Ramadoss, who is openly admitting his alignment and still does many good things. Because, Ramadoss is powerful in some way and because, he does not belong to their caste, all the good things that PMK does also is considered useless. You have pointed out this correctly. PMK may have done many things wrongly. But others like VCK are no less. And perhaps many main stream Castes who wield power in politics, since Justice Party period, are no less corrupt and dishonest. In a way, the cause for such alignment is because for a long time, many castes have been dominating the others, this is million times more than what might have been caused in past by Brahmins. But still all these people continue to blame Brahmins and do worse then what happened in the past. These politicians used all these caste members only for pasting posters and act like thugs for settling their scores and gain power like mafias. As you rightly pointed out, Tamils are known for their bias and they would never be balanced.

    • nparamasivam1951 Says:

      Anbumani Ramadoss may be a good person and may take PMK to some rightful direction, if he takes the mantle. Additionally he should shed leaders like Guru etc and then only he can shine.

  3. Yayathi Says:

    1.In spite of all the rhetoric by the Dravida ideologists, Caste has always played a part in TN politics – in the past, and in the present.The two dominant Kshatriya groups in TN, the Vanniyars in the north and the Mukkulathors in the south were a separate vote block right since the 50’s. The Toilers party of Vanniars (Manickavelu Naicker, Ramasamy Padaiachi) was the fore-runner of the PMK and the Mukkualthors were behind the Forward Block. The Toilers Party merged with Congress and when Dr Ramadoss came along, the Vanniars became a separate block again. The Congress played the caste politics against Forward Block (read about the Mudukulathur riots) and the Mukkkulathors after the death of Muthuramainga Thevar moved towards DMK, mainly because of MGR, who happened to be Malayali Kshatriya, Nair. When MGR came out and started ADMK, the Mukkulathors formed a solid vote bank for him,right since the Dindigul Bye Election candidature of Maya Thevar and after MGR’s death, supported Jaya, a Brahmin. The Dalits were traditional supporters of Congress but with the loss of their hold in the state, they have split – Thiruma in the north, and Dr. Krishnaswamy in the south (apart from Seeman, John Pandian, Sivakami, Armstrong etc). These four vote blocks represent about 40% of the population. Other than that, the religious minorities are about 12% of the population who hold control over few select constituencies. And then we have the other vote blocks like the Kongu Vellalar and Nadar. In one of Nanjil Nadan’s short stories, there would be a line “In Nagercoil, even Mahatma Gandhi cannot win against a Nadar candidate”.
    But having said all this, I would not call Ramadoss as honest – he quoted Periyar all the time and even today, PMK does not allow Brahmins to become members of the party ( not that people are waiting in line to join either :-)
    2. On Jeyamohan (is he the RJ Balaji of Tamil writing :-)), there has been an on-going tiff between him and Kanimozhi – so it is not surprising to see Suba.Vee and others jumping to attack him (Jeya mohan’s article on Kanimozhi as Poet (or not) and Kanimozhi’s speech calling him mentally disturbed are available on-line), which also explains why others are staying away :-)

    ——>>> Who is this ‘RJ Balaji of…’?? Some inside joke on Tamil lit politics or what? I haven’t heard of this guy in the Tamil lit circles, not that I know much anyway! (__r)

    • Yayathi Says:

      RJ Balaji is Radio Jockey Balaji – he is known for his non-stop talk and his movie reviews. He also got into a controversy few days ago over his reviews (he has had another one too in the past). Jeyamohan also writes a lot – when people get engaged so much in one activity, at times intuition and intellect may overlap – probably JeyMO got fascinated by the novelty of the idea and decided to go without doing due diligence and research.

  4. poovannan Says:

    திரு பத்ரி அவர்களின் பதிவில் சாதி அரசியல் பற்றிய எதிர்வினைகளை கொஞ்சம் படியுங்கள்.
    இந்த சாதி இந்த கட்சியின் பின்னால்,இந்த சாதி அந்த கட்சியின் பின்னால் என்று ஆதாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக அடித்து விடுவது ஞாயமா எனபது விளங்கும்

    nallaatchi nadathuvathaaga http://www.badriseshadri.in/2013/04/blog-post_26.html#comment-form

    நல்லாட்சி நடப்பதாக தம்பட்டம் அடிக்கப்படும் மாநிலங்களில்,தொடர்ந்து ஒரே கட்சி வெற்றி பெற்று வரும் மாநிலங்களில் கூட வெற்றி பெரும் கட்சிகள்/கூட்டணிகள் மூன்றில் இரு பங்கு இடங்கள் தாண்டுவதே கடினம்.
    பல தேர்தல்களாக விழுந்தால் ஒரே பக்கமாக விழும் தமிழ்நாட்டில் சாதியை பார்த்து தான் பெரும்பான்மை வோட்டு என்று கூறுவது ஞாயமா

  5. poovannan Says:

    எடியுரப்பா,கிருஷ்ணா முதல்வர்களாக இருந்தாலும் அவர்களும் அவர்கள் வாரிசுகளும் லிங்காயத் அதிகம் இருக்கும் தொகுதிகளில் தான் நிற்பார்கள்.பிரதமராக இருந்தாலும் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தொகுதியில் தான் தேவ கெளடாவும் வாரிசுகளும் எல்லா தேர்தலிலும் நிற்கிறார்கள்.

    கம்முநிச்டாக இருந்தாலும் அச்சுதானந்தன் நிற்பது ஈழவர்கள் அதிகம் இருக்கும் தொகுதி தான்.ஆந்திரம்,உதர்ப்ரதேசம் ,உத்தர்க்ஹாந்த்(முதல்வராக இருந்தாலும் ராஜபுத்திர உட்கட்சி ஆட்களே தங்கள் கட்சியின் க்ஹண்டூரியை தோற்கடித்தார்கள்)எல்லாவற்றிலும் இதே கதை தான்.வங்காளத்தில் மாத்திரம் ஒதுக்கீட்டு தொகுதிகள் மீதியில் முக்கால்வாசி பிராமணர்கள்.மக்கள் தொகையில் பத்து சதவீதத்திற்கு கீழ் இருந்தாலும் 35 சதவீத இடங்கள் அவர்களுக்கு.இதை விரும்புகிறவர்கள் தான் சாதி பார்த்து ஒட்டு போடுகிறார்கள் என்ற போலியான குற்றசாட்டை வீசுபவர்கள்
    தமிழகத்தின் நிலையை பார்ப்போமா .இங்கு கட்சியை இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர் ஒருவரின் சாதியும் எந்த தொகுதியிலும் அதிக எண்ணிக்கையில் இல்லாத சாதி தான்
    கருணாநிதி,ஸ்டாலின்,மாறன்,எம் ஜி ஆர்,ஜெயா நின்ற தொகுதிகளின் பட்டியலை பார்த்தால் என் கூற்றின் உண்மை விளங்கும்

  6. poovannan Says:

    அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் பரவலான முன்னேற்றம் திராவிட இயக்கத்தின் ஆட்சியில் தான்.இங்கு தான் இரு கட்சிகளிலும் பிற்பட்ட வகுப்பு மக்கள் அதிக அளவு இடங்களை பெறுகிறார்கள் கவுன்ட்டர் பாலன்சிங் ஆக.

    கேரளாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியில் மூன்று ஈழவ எம் எல் ஏ க்கள்.கம்யூனிஸ்ட் கட்சியில் 20திர்க்கும் மேல் ஈழவ எம் எல் ஏ க்கள்.காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற நாயர்கள் 17.கம்யூனிஸ்ட் கட்சியில் ஆறோஏழோ.
    தேவ கெளட கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தௌகுதிகளில் போட்டி.வோக்கலிகா ஒருவரை முதல்வர் ஆக்கினாலும் அவர்கள் கௌடா பின்னால் வலுவாக இருக்கிறார்கள் என்பதால் தான் பா ஜ க அவரை தூக்கி விட்டு லின்காயத்தை ஆக்கியது.இது தான் சாதி அரசியல்

    வைச்யரான ரோசையாவால் ரெட்டி வோட்டுக்கள் ஜகன் பின் செல்வதை தடுக்க முடியாது.(அங்கு ரெட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற பிற்பட்ட,தாழ்த்தப்பட்ட சாதி வோட்டுக்களும் அதிகம்.)என்பதால் கிரண் குமார் ரெட்டி முதல்வர் ஆக்கபட்டார். இது தான் சாதிஅரசியல்.
    இங்கு ஆறு மாதம் முதல்வராக இருந்த முக்குலத்தோர் சாதியை சார்ந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு மறுபடியும் ஜெயா முதல்வர் ஆன போது ஒரு சிறு சலசலப்பு கூட கிடையாது.இதுவா சாதி அரசியல்
    காமராஜ் அவர்களின் காலத்தில் கூட வன்னியர் பகுதிகளில் அவர் கட்சி ஜெயிக்கவில்லை.சாதி கட்சிகள் தான் ஜெய்த்தன.கொங்கு வெள்ளாளரும் தங்கள் சாதியை சார்ந்த சி சுப்ரமணியம் முதல்வர் ஆவதை தடுத்தவர் என்று அவருக்கு எதிர் அணி தான்.காமராஜரும் தன சாதி மக்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் தான் நின்றார்.

    எம் ஜி ஆர் கருணா ஜெயா எல்லாம் அப்படியா. விஜயகாந்த் கூட வன்னியர் அதிக எண்ணிக்கையில் இருக்கும் விருத்தாசலம் ரிஷிவந்தியத்தில் ஜெய்கிறார்
    இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அதிக வோக்கலிக எம் எல் ஏக்கள் கௌடா கட்சியில் தான் இருப்பார்கள்.பா ஜ காவில் லிங்காயத் எம் எல் ஏக்கள் தான் இப்போதைய சட்டசபையிலும் மிக அதிகம்.
    கேரளாவின் கதையை மேலே பார்த்தோம்.இங்கு அப்படியா.அதிமுக வெற்றி பெறும்போது அதில் அனைத்து சாதி மக்களும் குறிபிடத்தக்க அளவில் வெற்றி பெறுகிறார்கள்.தி மு க வெற்றி பெற்றாலும் அதே நிலை தான்.தலைமை மிக சிறுபான்மை சாதிகள்.

    • Yayathi Says:

      Sir, 1.To do a proper analysis, we need to look at the caste of the candidates fielded and the caste wise population and not just on the winning candidates. But if were to go with the data you have given, the statistical argument in WB and Kerala would be that the caste of the winning candidate has a low correlation with the caste of the voters – which means caste did not matter; in case of TN, it would be that there is a good (relatively speaking higher) correlation between the caste of the winning candidates and caste of the voters – meaning caste has influence. If were to go with your dominant caste argument, the CM of TN (since Indepedence) during DMK regime always have come from Vellalar caste only (CNA, MK, VRN), while ADMK had Kshatriya ,Brahmin, Vellalar (MGR, OPS, JJ, VNJ, VRN) and Congress had it better with Kshatriya, Brahmin, Nadar and Vellalar (PSK,CR, KK, MB). Over 17 year period, Congress had more variability (4) compared to the Dravidian parties which had 3 castes over a period of 46 years. For all we know, a Dalit (Kakkan) might have become the CM if TN had continued with Congress (speculation but not improbable).
      2. Periyar objecting to participating in elections because he did not want to compromise for electoral gains – he was right; Though I am not against reservation but the politics surrounding it and the power of granting/including communities staying with the politicians is the primary reason why the caste based associations have become stronger. I fully support affirmative action for the marginal sections and historically disadvantaged communities but we could have handled through an independent body and not through this electoral process.
      Regards!

      • Yayathi Says:

        Sorry, noticed an error in the sentence ..
        If were to go with your dominant caste argument, the CM of TN (since Indepedence)… It should have been ….(since Republic)….If we were to start from Independence, we would have to add O.P. Ramaswamy Reddiar, which also adds to my argument that Congress had more caste variability with the CM Position.

      • poovannan Says:

        The ruling coalitions in kerala have parties for specific castes n religions and religious subdivisions.UDF gives a sizeable chunk of the ezhava seats to former communist leader and ezhava gowriammal party,muslim dominated constituencies to IUML,specific denomination of christian dominated seats to kerala congress M or J etc.

        The westbengal model is exploitation of the highest order.which is better.A assembly consisting of MLAs and cabinet represented by communities closer to their share or dominated by single castes who account for 5% of the population but 35 % of posts.Andhra too is similar where reddies have a share of more than 1/3rd cabinet and kammas doing the same in TDP.

        Cong being a better party in representation has little merit as the CMs are just pawns who can be shifted at the whims and fancies of the high command.Will you start praising ADMK if jaya after 2014 goes to delhi as PM or deputy PM and makes a nadar,palli,pallar,parayar,kallar chiefminister every 6 months as she does with her ministry.

        No proof can be better than Anna or karunanidhi or MGR or jaya being CMs for 45 years without belonging to any numerically powerful caste on how dravidian parties have been able to make several castes unite under a person not based on his caste

  7. poovannan73 Says:

    எம் ஜி ஆர் யார் என்று பார்ப்போமா

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்

    அதனால் எம் ஜி ஆரின் தந்தை சண்டாளர் எனும் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் வரும் சாதி ஆகிறார்
    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்

    கணவனை இழந்த சத்தியபாமா அவர்களால் வளர்க்கப்பட்டதால் அவர் ஈழவ சமுதாய community certificate வாங்கி கொள்ளவும் எல்லா உரிமையும் உண்டு

    கடந்த வருடம் உச்ச நீதிமன்றமும் தாயின் சாதிய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டால் தாயின் சாதியை ஏற்று கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது
    தந்தை வழியில் சண்டாளர் என்பதால் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் உரியவராகிறார் .தாய் வழியில் அன்றைய தீண்டத்தகாத சாதியையும் இன்று பிறபடுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் ஈழவ சமுதாயத்தை சார்ந்தவராக இருக்கும் உரிமையும் எம் ஜி ஆர் அவர்களுக்கு உண்டு

    Melakkath Gopala Menon had been excommunicated from Keralite society ( bhrasht ) during a Smarthavicharam in 1903, regarding an illicit relationship with a widowed Brahmin woman; and hence he left his family, and married Maruthur Satybhama who was from a Ezhava caste, and migrated to Ceylon.

    பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை,குடும்பத்தை சார்ந்தவர்கள் அண்ணாதுரையும்,கருணாநிதியும்.
    அண்ணா பெரிய மேளம்
    கருணாநிதி சின்ன மேளம்
    அவர்களின் குடும்பத்து பெண்களை பல தலைமுறைகளாக உரிமை கொண்டாடி,பயன்படுத்தியவர்கள் என்ன சாதி என்று கொஞ்சம் வரலாற்றின் புததகங்களை புரட்டி படியுங்களேன்

    கண்களை மூடி கொண்டு உண்மைக்கு புறம்பாக இவர்கள் தான் சாதி அடிப்படையில் முதல்வர் ஆனார்கள் என்று கதை கட்ட முடிகிறது

  8. பொன்.முத்துக்குமார் Says:

    அன்புள்ள ராம்,

    சிறப்பான பகுப்பாய்வுக்கட்டுரை, வழக்கம்போலவே.

    ஆனால் மரக்காணம் நிகழ்வுகள் தொடர்பாக (மட்டும்) உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போக இயலவில்லை.

    உண்மைதான், வன்முறையை யார் கையாண்டாலும் பாதிக்கப்படுவதென்னவோ சபிக்கப்பட்ட சாதாரணர்கள்தான். ஆனால், இங்கே ஒடுக்குபவனுடைய வன்முறையோடு ஒடுக்கப்பட்டவனின் வன்முறையை ஒப்பீடு செய்வது பொருந்தாது என்று நினைக்கிறேன்.

    ‘வெட்டுவேன், குத்துவேன், கொல்லுவேன்’ என்று வெளிப்படையாகவே மேடை போட்டு மிரட்டும் கும்பலை இனி என்னாளும் அப்படி மிரட்டும் எண்ணம் கனவிலும் வராத அளவிற்கு ஆளும் வர்க்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விரும்பத்தகாத வன்முறையே மரக்காணத்தில் நிகழ்ந்திருக்காது என்பதே எனது புரிதல். (இவ்விஷயத்தில் “இரும்பு” பெண்மணியின் தைரியமெல்லாம் வெறும் செலெக்டிவ்-தான் போல)

    வெறி கொண்டு தாக்குபவனின் வன்முறை பிரயோகத்தில் இருந்து தப்பிக்க / உயிர் பிழைக்க போராடும்போது தாக்கப்படுபவனும் வன்முறையையே பிரயோகிக்க நேரிடுவது இயல்பே.

    அப்படி இருக்கும்போது வி.சி-யினரது வன்முறையை பா.ம.க-வினரது வன்முறை செயல்பாட்டோடு எப்படி இணை வைக்கிறீர்கள் ?

    பி.கு : நான் அவர்களது (எவர்களதும்) வன்முறையை ஆதரிக்கவில்லை. இருவரது வன்முறை நோக்கமும் வேறு (என்பதால் இரண்டும் ஒன்றல்ல) என்ற எனது எண்ணத்தை முன்வைக்கிறேன், அவ்வளவே.

    • ramasami Says:

      அன்புள்ள முத்துக்குமார்:

      உங்கள் ஆதங்கமும், பூவண்ணன் அவர்களின் ஆதங்கமும் புரிகிறது.

      ஆனால் – ஒடுக்குபவன், ஒடுக்கப்படுபவன் என்பதெல்லாம் – என்னைப் பொறுத்தவரை, பொதுமைப்படுத்தப் பட்ட ஐடியல் வகையறாக்கள். இடத்துக்கு இடம் அவை சிறிதளவாகவோ, அதற்கு மேலாகவோ மாறுபடும்.

      நான் சொல்ல வந்த விஷயங்கள் யாவையென்றால்:

      1. வன்முறையை எடுத்து மட்டுமே கட்சி வளர்க்க முடியாதென்பது.
      2. ஒடுக்கப் பட்டவர்கள் தங்களை மீட்டெடுத்துக்கொள்வதற்கான ஆயத்தங்கள் செய்யாமல் – ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, கோயில் அர்ச்சகராகவெல்லாம் போராடுவதன் போதாமையும் அபத்தமும்.
      3. அடிமட்டத்தில் – ‘ஊர்’ ‘காலனி’ பகுப்புகளில் – பலவிதமான சில்லறைப் பிரச்சினைகள் – இவை வெகு சுலபமாகத் தீர்க்கப் படாமல், தேவையற்ற இடியாப்பச் சிடுக்கல்களில் – இக்கட்சிகளினால் மாட்டிக் கொள்ளும் தன்மை.
      4. குடிகார பாமகவினர் மட்டுமல்லாமல், குடிகார விசிகேயினர் செய்யும் பிரச்சினைகளையும் நாம் பார்க்கவேண்டியதன் அவசியம். (ஆனால் ஊடகங்கள் இவற்றைப் பார்க்கவே மாட்டார்கள்)
      5. ‘திரும்ப அடி, உதை’ போன்ற வன்முறை உரையாடல்களினால் – சம்பந்தப் பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தான் லாபமே தவிர, அச்சமூக மக்களுக்கு எள்ளளவும், ஒரு சுக்குக்கும் உபயோகமில்லை. வெறிகொண்டு தன்சமூக மக்களையே தாக்கும் (நேரடியாகவோ, மற்றபடியோ) ஆட்கள் மிகுந்த அளவில் கொண்டவைதான் இக்கட்சிகள்.
      6. நான் விசிகே, பாமக போன்ற கட்சிகளை – தம் மக்களின் சுய சார்புக்காக ஒரு சிறிய விஷயமும் செய்யாமல், திரண்ட ஆதரவாளர்களை சமூக மேன்மைக்காக (அவர்களுடைய சமூகத்துக்காகக் கூட) உற்சாகச்செயல்களில் ஈடுபடுத்தாமல் , ஒரு குழந்தையின் அல்லது இளைஞனின் வளமையான எதிர்காலத்தைக் கூட முன்னெடுக்காமல் – தம் கட்சிகளுக்கே உரித்தான மகாமகோ ‘பணப்’ பிரச்சினைகளை, அதிகாரப் பங்கிடலை, தங்களுடைய உயர்மட்டக் குறுங்குழுக்களுக்கு மட்டும் சாதகமான செயல்பாடுகளை – மட்டுமே முன்னெடுக்கும் அமைப்புகளாகப் பார்க்கிறேன். உண்மையில் — தொடர்ந்து வீணடிக்கப்படும் சந்தர்ப்பங்களைப் பார்த்தால் எனக்கு வயிறெரிகிறது.

      ஆனால் – இவற்றையெல்லாம் மீறி – எனக்கு, நேரடியாக தலித் ஆண்/பெண் வன்னிய பெண்/ஆண் மணங்கள்/கலப்புகள் பல, பல நடந்து வருவதை – மிக மிக சந்தோஷத்துடன் – அறிவேன்.

      நான் ஜெயலலிதா அவர்களின் ‘அவர் என்ன செய்தாலும் ஆதரிப்பேன்’ வகையறா ஆதரவாளன் கிடையாது. ஏன், யாருக்குமே அப்படிக் கிடையாது.

      ஆனால் – நான் வாழும் பகுதியிலிருந்து 15 கிமீ தூரத்திலேயே இருக்கும் மரக்காணம் கலவரப் பகுதியை, அதன் சமூகப் பகுப்புகளை, பிரச்சினைகளின் முகாந்திரங்களை ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் – நான் நிச்சயமாகச் சொல்வேன்: இந்த அரசு கையைப் பிசைந்துகொண்டிராமல், கறாராகப் பணிசெய்ததினால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது. இல்லாவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாயிருக்கும் – பாமக கும்பல்கள் திரும்பி வரும்போது ஒரு சுக்கு கலவரம் கூட மரக்காணம் வட்டாரத்தில் நடக்கவில்லை என்பதை கவனிக்கவும்.

      நான் நிச்சயம் ‘அறிவியல் பூர்வமாக களையெடுத்தல்களை’ (=’என்கௌன்டர்கள்’) ஆதரிப்பவன். ஆனால், இது நடக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். எனக்கு எப்போதுமே — நம் சமூகம், தறுதலைகளைக் களையெடுத்தாலும், சாதாரணர்களை முன்னெடுத்தாலும் – மிகவும் சந்தோஷம்தான்.

      நிற்க – இந்த சாளரம் #1ன் மையக்கருத்து என்பது, பொதுவாக நம் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் முட்டியடி எதிர்கொள்ளல்களை, நீண்டகால விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமையைப் பற்றியது. இதற்காகத் தான் சில எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தேன்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நேரம் கிடைத்தால் விவாதத்தைத் தொடர்வோம். :-)

      • பொன்.முத்துக்குமார் Says:

        அன்புள்ள ராமசாமி சார்,

        மரக்காணத்தில் வி.சி கட்சியினர் வன்முறையோடு எதிர்வினை ஆற்றியதற்கும், தற்காப்பிற்காக ஒடுக்கப்பட்ட இனம் வன்முறையை பிரயோகிப்பது தொடர்பாகவுமே என்னுடைய முந்தைய பின்னூட்டம். மற்றபடி உங்களது கருத்துக்கள் பெரும்பான்மையோடு ஒத்துப்போகிறேன்.

        // நான் நிச்சயம் ‘அறிவியல் பூர்வமாக களையெடுத்தல்களை’ (=’என்கௌன்டர்கள்’) ஆதரிப்பவன். ஆனால், இது நடக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.//

        ஓரளவுக்கு நானும் இதை ஆதரிக்கிறேன். நமக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் வலிமையோ மதிப்போ தெரியவேயில்லை என்பதால் செட்டிநாட்டுக்கவிஞன் சொன்னதுபோல ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி சவுக்கெடுத்தால்தான் சரிபடும் போல.

      • poovannan73 Says:

        போலி என்சௌண்டேர் கொலைகள் வன்புணர்வை போன்றவை.மிகவும் அறுவெருக்கத்தக்கவை.

        இதை செய்பவர் வெகு சிலர் தான். அதனால் தான் எந்த மாநிலமாக இருந்தாலும் வேட்டை நாய்கள் போல இதற்காக வளர்க்கப்பட்ட/ஊக்குவிக்கப்பட்ட குறிப்பிட்ட சில பெயர்கள் தான் வரும்.இவர் நூறு என்சௌண்டேர் நடத்தியவர்,அவர் 150 என்று.கொல்பவருக்கும் கொல்லபடுபவர்க்கும் இடையே மதம்,சாதி போன்றவற்றால் இருக்கும் வன்மமும் இருக்கும்

      • ramasami Says:

        இல்லை, அன்பின் பூவண்ணன்.

        இதைச் செய்பவர் வெகு சிலரில்லை.

        பல பெயர்கள் இருக்கின்றன. இவர்களின் சிலர் ஊக்குவிக்கப் பட்டிருக்கின்றனர். அவ்வளவுதான்.

        உலகெங்கிலும் இம்மாதிரி ரோனின்கள், அனாமதேயங்களாக இருக்கின்றனர், ஆனால் அரசமைப்பைச் சார்ந்தவர்களாக இயங்குகின்றனர் – இவர்கள் vigilanteகள் என்ற பாகுபாட்டில் வரமாட்டார்கள். உங்களுடைய ராணுவ அமைப்புகளிலேயே இப்படிச் சில அணிகள் இருக்கின்றன. ராஜ தர்மம், பொது மக்களின் நல்வாழ்வு, பரந்துபட்ட மக்களின் வளர்ச்சி, பொறுக்கமுடியாத கிருமிகளை அகற்றுவது போன்றவைகளையெல்லாம் — உட்கார்ந்த இடத்தில் இருந்து உபதேசம் செய்து கொண்டு மனிதவுரிமைத்தனம் (humanrightism or humanleftism) பற்றிப் பேசுவதில் ஈடுபாடுள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்களும் சமூகத்திற்கு ஓரளவு முக்கியமானவர்களே. சமுதாய முரணியக்கங்களுக்கு இவர்களுடைய போராட்டத்தனங்களும் அவசியம்..

        ஆனால், முன்னவர்களின் பங்கும் மகத்தானது – இவர்களை எல்லோரும் சமயம் கிடைத்தால் கரித்துக் கொட்டுவார்கள் என்றாலும்.

        எனக்கு — பல, மிகப் பல எடுத்துகாட்டுகள் தெரியும்: களையெடுப்பவருக்கும், களைகளுக்கும் இடையே மதம் ஜாதி போன்ற வன்மங்கள் இல்லாமல் இருப்பவைகள் சார்ந்தவைகளைச் சொல்கிறேன். ஒரு சிறிய எடுத்துக்காட்டு: பஞ்சாபில் பல்லாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகள்.

      • nparamasivam1951 Says:

        மேலே குறிப்பிட்ட 6 காரண/கருத்துகள் எல்லோரும் (நான் உட்பட) கொண்டிருக்கும் கருத்துகள். உங்கள் துணிவுக்கு ஒரு சல்யூட். இதே காரணத்தால் தான் இக்கட்சிகள் 2014 தேர்தலில் ஓரம் கட்டப் பட்டன.

  9. poovannan Says:

    சரியான எதிர்வினை முத்துகுமார் சார்

    எந்த பதவியில் இருந்தாலும்,எவ்வளவு சம்பாதித்தாலும் ஊருக்குள் இடம்,வீடு வாங்க முடியாது,வாடகைக்கு கூட வர இயலாத நிலையில் உள்ள சாதியையும் ,எண்ணிக்கையில் ,அரசியல்,பொருளாதார பலத்தில் இவர்களை விட பலமான வன்னியரையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது அநியாயம்

    தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்களை திருமணம் செய்யும் வன்னியர்கள்,முதலியார்,கோனார்,உடையார்,பிராமணர் ,நாய்டு,வெள்ளாள கௌண்டர் சாதிகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வன்னியர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் செய்யும் திருமணங்களை விட அதிகம் தான். இங்கு எங்கும் கலவரம் கிடையாது.முதலியார் சாதி ஆண் வன்னியர் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அது அதிகபட்சம் இரு குடும்ப பிரச்சினை தான்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கிராமத்தில் வசிக்கும் (விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பான்மையான) இதர சாதி மக்களின் வன்மம்,அவர்களின் வாழ்க்கையில் வரும் பொருளாதார மாறுதல்களை கண்டு வரும் வெறுப்பு நிதர்சன உண்மை.
    பெண்களில் சிலர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை துன்புறுத்தும் சில நிகழ்வுகளை பிடித்து கொண்டு ,ஆண் பெண் இருவர் மேலும் தவறுகள் உள்ளது என்று வாதிடுவது போல தான் இந்த வாதமும்
    பெண்களும் ஆண்களுக்கு சமமாக அரசியல்,வேலைவாய்ப்பு,கல்வி,அவர்கள் பேரில் சொத்து வைத்திருக்கும் போது இருவரையும் சமமாக பார்த்தால் சரி.அதே தான் இங்கும்.

  10. ramasami Says:

    அன்புள்ள பூவண்ணன்:

    உங்களுடைய பின்னூட்டப் பேராற்றில் நீங்கள் சுட்டிக்காட்டுவது:

    “இந்த சாதி இந்த கட்சியின் பின்னால்,இந்த சாதி அந்த கட்சியின் பின்னால் என்று ஆதாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக அடித்து விடுவது ஞாயமா எனபது விளங்கும்

    “ஒரே பக்கமாக விழும் தமிழ்நாட்டில் சாதியை பார்த்து தான் பெரும்பான்மை வோட்டு என்று கூறுவது ஞாயமா

    “கண்களை மூடி கொண்டு உண்மைக்கு புறம்பாக இவர்கள் தான் சாதி அடிப்படையில் முதல்வர் ஆனார்கள் என்று கதை கட்ட முடிகிறது

    “No proof can be better than Anna or karunanidhi or MGR or jaya being CMs for 45 years without belonging to any numerically powerful caste on how dravidian parties have been able to make several castes unite under a person not based on his caste

    டட்டடா டட்டடா டட்டடா…

    நான் என்ன சொல்லி அல்லது எழுதி – நீங்கள் அதற்கு இப்படி எதிர்வினைகளை அளிக்கிறீர்கள் என எனக்குப் புரியவேயில்லை. உங்கள் கருத்துகளின் சாராம்சத்தோடு நான் ஒத்துதான் போகிறேன்.

    மிகப் பெரும்பாலான வடமாவட்ட தலித்கள் விசிகே பின்னால் இல்லை; அதேபோல பெரும்பாலான வடமாவட்ட வன்னியர்கள் பாமக பின்னால் இல்லையென்றுதான் எழுதியிருக்கிறேன்.

    ஆனால் உங்கள் கருத்துகள் சுவாரசியமாக இருக்கின்றன. எனக்கும் ஆலிவ் எண்ணெயை வீணாக்குவது பிடிக்காதுதான். :-)

    ஆனால் சேக்ரெட் vs ப்ரொஃபேன் என்று ஒரு பகுப்பு சமூகமானுடவியல் ரீதியில் இருக்கிறது அல்லவா. ஒருவேளை அதன்மூலம் இந்த விளக்கீடு விழாவைப் புரிந்து கொள்ள முடியுமோ? உணவை — தேவை மெனக்கெட்டு வீணடித்தலுக்கும், ஒரு அர்ப்பணிப்பு உணர்ச்சியில் அல்லது அழகுணர்ச்சி சார்ந்து ‘நமக்கு அப்பாற்பட்ட சக்தி’யை அவதானிப்பதற்கும் (அதுவும் கற்பிதம்தான்) வித்தியாசங்கள் இருக்கின்றனதானே?

    நன்றி. :-)

  11. poovannan73 Says:

    சார் இவை திரு யயாதி அவர்கள் இவர் மலையாள க்ஷத்ரியர்,இவர் மன்னார்குடி க்ஷத்ரியர்,விருமாண்டி வேளாளர் என்பதனால் அவர் பின்னால் சாதி பார்த்து மக்கள் அணி திரண்டார்கள் என்பதற்கான பதில்கள்

    கடவுளின் பெயரால் நடக்கும் வீணாக்குதல்களை புரிந்து கொள்வது போல மன உளைச்சலால் (obsessive ஷாப்பிங்) தேவையில்லாத பொருட்களை வாங்கும் /தேவைக்கு அதிகமாக உணவை எடுத்து வந்து வீணாக்குவதையும் புரிந்து கொண்டு அனுதாபப்படலாமே

  12. Yayathi Says:

    1. Thanks to Mr.Ramasamy for entertaining this lengthy discussion and letting me encroach into his blog real estate :-)
    2. My reading of this blog and other responses and my comments towards that were from the points of view: a) Caste has percolated into TN politics now more so than any other time and the culprit is PMK b) An argument that it is not just PMK but also VCK, specifically with respect to Marakkanam c) The genesis of such flare up comes from the role caste has played a part in TN politics in the recent history (60 years) and counter points of view that a) TN has better caste representation due to the Dravidian parties b) VCK’s actions are justfiable
    3. Regarding Mr.Poovannan’s comments, caste politics does not mean only identifying with the caste of the candidate – caste appeasement policies as means to get votes is also caste politics. The reference I made to statistics based argument and dominant caste theory in your comments was only to highlight the inconsistency in how you apply when it comes to TN Vs Other states. I do not endorse any party or do I oppose the necessity for reservation. On your comment about Annadurai, be belonged to Sengunthar caste, which was identified as one of the BC castes that had a disproportionately higher representation in jobs and education, as per the Sattanathan commission appointed by DMK in 1969, which means they were given opportunities in the pre-DMK period itself.

    Regards!

    —->>>> Thanks ‘yayathi’ – in fact, I like your erudition. And, I like the weighted and balanced viewpoints too. Are you the original yayathi or that of Khandekar?
    (of course, now, I know two folks to bequeath this blog to, should the need arise.) :-)

  13. poovannan73 Says:

    சார்

    வெளியில் இருந்து கேள்விப்படும் போது சினிமா போல விறுவிறுப்பாக இருக்கும்.
    நிராயுதபாணியை எதிர்க்க வலுவில்லாமல் இருப்பவனை கொல்வது வீரனுக்கு இழுக்கு எனபது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.அதனால் தான் சட்டப்படி தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளியை தூக்கில் போடும் போது கூட முகம் மூடப்படும். தூக்கில் போட தனி ஆளை தேடி பிடித்து அழைத்து கொண்டு வருவார்கள்.அவர் தான் இழுக்கும் கயிற்றால் இறக்க போகிறவரின் முகத்தை கூட பார்க்க மாட்டார்.

    கொடிய குற்றவாளிகளை நாடு கடத்தும்,கண்காணாத இடங்களில் சென்று விட்டு விடும் வழக்கமும் இருந்தது.அவர்களுக்குள் சண்டை இட்டு வெற்றி பெறுபவர்கள் ,தப்பிக்க முடிந்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்ற வழக்கமும் இருந்தது.

    கொல்வது அவ்வளவு எளிது கிடையாது சார்.ஒரு நல்லவனால் கண்டிப்பாக அதை செய்ய முடியாது(பிடிபட்ட பிறகு கொல்லபடுவதை ,போலி என்குண்டேர்களை பற்றி கூறுகிறேன்,உண்மையான என்குண்டேர்களை பற்றி அல்ல)சராசரி மனிதனாலும் முடியாது.மிகுந்த வன்மம்,வெறுப்பு,ஆத்திரம் கொண்ட வெகு சிலர் தான் அந்த செயலை செய்ய முடியும்.கொல்ல முடியாது என்று மறுத்து குற்றவாளிகளை சட்டத்தின் கீழ் ஒப்படைத்த பலர் தான் அதிகம்

    பஞ்சாபோ,வட கிழக்கோ ,பிடிபட்டவனை கொல்லும் செயலை செய்தவர்கள் நூற்றில் ஒரு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள்.ஒவ்வொரு உண்மையான குற்றவாளியின் கொலைக்கு ஈடாக 20 நிரபராதிகள் பலியாவதை விட வேதனை கிடையாது.வெகு எளிதாக ஒரு நாடு வாழ ஒரு ஊரை பலி கொடுக்கலாம் என்று அதை நாகரீக சமூகத்தில் எளிதில் கடந்து செல்ல முடியாது .காவல்துறை,ராணுவம் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் படிததவர்கள் மத்தியில் இருப்பது வருந்த வேண்டிய ஒன்று.
    தமிழ்நாடோ ,குஜராதோ முதலவர் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யும் கூட்டம் ,அவர்களின் அடியாட்கள் போல பணியாற்றுபவர்கள் மிக குறைந்த சதவீதம் தான்.அடுத்தவனுக்காக ஒரு குற்றம் /சட்டத்திற்கு புறம்பான செயல் செய்யும் போது தனக்காக பல செய்யும் உரிமை சேர்ந்தே வந்து விடும்.சட்டத்திற்கு புறம்பான கொலைகளை,அதில் எவ்வளவு ஞாயம் இருந்தாலும் செய்தவனால் நிம்மதியான வாழக்கையை வாழவே முடியாது.செய்யாவிட்டாலும் அதை தடுக்க இயலாதவர்களின் வாழ்க்கையே துயரம் தான்.

    எதற்கும் துணிந்த குற்றவாளிகள் தான் இந்த காரியத்தில் ஈடுபட முடியும் என்பதை ஆணித்தரமாக என்னால் கூற முடியும்.

    —–>>>> சரி. உங்கள் ஆதங்கம் புரிகிறது. உலகளாவிய, ‘மானுட’ விழுமியங்கள் சார்ந்த மேல்மட்டப் பார்வைகளுக்கு நிச்சயம் இடம் உண்டுதான். ஆனால், நான் இப்பார்வைகளுக்கும் மண்புழுவின் பார்வைக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருப்பவன்.

    மேலும், என்னைப் பொறுத்தவரை, மனிதனும் ஒரு ஜந்துவே. எந்தவொரு ஜந்துவைப் போலவும் அடிப்படை-இயற்கை விழைவுகள் உள்ளவனே. எந்தவொரு ஜந்து சமூகத்திலும் வெகு சாதாரணமாக நடக்கும் விஷயங்களும் (நாம் அவற்றை ‘வன்முறை’ எனக் கருதலாம்) நம்மிடமும் நடக்கின்றன.

    ஆனால் நாகரீகம் என்கிற போர்வையில் சில அநாகரீகங்களும் நடக்கின்றன. இந்த அநாகரீகங்-களை, அதாவது களை எடுப்பது பற்றி மட்டுமே பேசுகிறேன். எப்போது அநாகரீக வேலையை ஒருவன் வேலைமெனக்கெட்டுச் செய்கிறானோ, அப்போதும் கூட அவன் ’தன்னால் பாதிக்கப்பட்ட’ மற்றவர்கள் தன்னைப் பொறுப்பாக ‘நாகரீகம் கருதி’ நடத்தவேண்டும் என்பதும் அறிவுஜீவிகள் இது பற்றிப் பேசுவதும் – உங்கள் பார்வையில் ‘ஞாயமா?’ (உண்மையில் ஒரு தோட்டவேலைக்காரனாகிய நான் களைகளைப் பலவிதங்களில் விரும்புவன்தான்; தேவை மெனக்கெட்டு வளர்ப்பவனும் கூட.)

    நீங்கள் முதலில், நம்முடைய என்கௌன்டர் / போராட்டம் பற்றிய கேள்விகளுக்கு / உரையாடல்களுக்கு உங்கள் கருத்தை அளியுங்கள். நினைவிருக்கிறதா – https://othisaivu.wordpress.com/2013/03/29/post-186/ – ஆறு மாதங்களாகிவிட்டன!

    __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: