மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
November 7, 2013
கிட்டத்தட்ட ஒரு வருடம்போல, இந்த மங்கள்யான் சாகசத்தின் பயணத்தைக் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரே சந்தோஷம்தான். நமது சூழலில் — தடைக்கற்களை மீறிய மாபெரும் தாண்டல்கள், அதியுயரக் குதிப்புகள் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில் வாழ முடிவதற்கு, ஆச்சரியங்கள் நடக்க நடக்க நாம் தெரிந்துகொள்ள முடிவதற்கெல்லாம், நாம் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்தான்!
நேற்று காலை, வழக்கம்போல ஒரு பதினைந்து நிமிட உரையாடற்பேச்சில், என் குழந்தைகளுக்கு மங்கள்யான் பற்றிக் கொஞ்சம் சொன்னேன். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்குப் பதிலாக, கொஞ்சம் என் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டேன்.
அவர்களில் சிலருக்கு – மங்கள்யான் என்றால், ஏதோ இந்தியா ஒரு ராக்கெட் விட்டு ‘மங்களமாக’ நடக்கப்போவதால் அப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என எண்ணம். ஒரு பத்தாம் வகுப்புப் பையனுக்கு மங்கள் பாண்டே என்று ஒரு ‘தேசபக்திப் படம்’ வந்திருக்கிறது பற்றித் தெரிந்திருந்ததால் – அதன் தொடர்பாக இருக்கும் என்றான். எனக்கு இப்படி ஒரு திரைப்பட இழவு வந்ததே தெரியாது – யாருங்கடா ஹீரோ இதுல, அந்த விஜய்குஜய்யா (‘இல்ல ராம், அது வேறமொழிப்படம்’) என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே ஆரம்பித்தோம். ஒரு நேபாலி பையன் சரியாகச் சொன்னான் – அவனுக்கு மங்கள்வார் என்றால் செவ்வாய்க் கிழமையென்று தெரிந்திருந்தது.
9-10 வகுப்பினருக்கு புத்தமதப் பிரிவுகளான ஹீனயானம், மஹாயானம் பற்றிக் கொஞ்சம் முன்னமே, இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருந்த காரணத்தால் – யான் என்று பேசியிருக்கிறோமே, பசங்களா, கொஞ்சம் யோசியுங்கள் என்று ஒரு வழியமைத்ததில் – கோடிட்டுக்காட்டியதில், குழந்தைகள் பலர் வெஹிகிள் என்று கத்தினார்கள். சரி, அந்த யான் என்பது யானம் போல ஒரே வேர்ச்சொல்மூலம்தான் என்றவுடன், மங்கள்யான் என்றால் செவ்வாய் வண்டி என்று மிகச் சரியாகச் சொன்னார்கள். பின்புலங்களை நன்றாக அறிந்த குழந்தைகளுக்கு, இப்படிப்பட்ட பாய்ச்சல்கள் வெகு லேசு. :-)
நிலா, செவ்வாய் – இவற்றுக்கும் நமக்கும் இடையேயுள்ள தூரம், விசும்புப் பயணங்களில் உள்ள மகாமகோ பிரச்சினைகள், ஹோமன் மாற்றல்கள், டெலிமெட்ரி பிரச்சினைகள், மங்கள்யான் என்ன செய்யப்போகிறது என்றெல்லாம் கொஞ்சம் பேசப்பட்டு, எப்படி ஒரு அசர வைக்கும் சாதனை (தொழில் நுட்பம் என்கிற வகையில் மட்டுமில்லாமல், அரசு + இஸ்ரோ + அரசுஆராய்ச்சி நிறுவனங்கள் + அதிதொழில்நுட்பத் தொழில்முனைவோர் + உயர்கல்விநிலையங்களின் ஆராய்ச்சிகள் — எனப் பல அடுக்குகளில் வளர்த்தெடுக்கப்பட்ட கூட்டுறவும், அவற்றின் பிசிரற்ற, தரம்வாய்ந்த ஒருங்கிணைப்பும் கூடத்தான்!) – இந்த மங்கள்யான் என்று விரிந்தது அப்பேச்சு.
என்னுடைய நண்பன் ஒருவனின் பங்கும் இதில் இருக்கிறது என்று கொஞ்சம் பெருமையாகச் சொல்லிக் கொண்டேன். உங்களில் ஒவ்வொருவரும் ஒரு அற்புதமான விஞ்ஞானியாக உருவாக, புலம்பெயரவேண்டிய அவசியமில்லாமலேயே – மகத்தான வாய்ப்புகளிருக்கின்றன என்றேன்.
ஒருவழியாகப் பேச்சு முடிந்தவுடன் — குழந்தைகள் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார்கள் – எல்லாவற்றுக்கும் அவர்களுக்கு ஓரளவு திருப்தியாக பதில் சொல்வதற்குள் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களாகிவிட்டன (பொதுவாக இந்தக் காலை உரையாடல்களுக்கு சுமார் 20-22 நிமிடங்கள் தான் ஒதுக்குவோம்). ஒன்றிரண்டு கேள்விகளுக்கு, குழந்தைகளுக்குப் புரியும்படிக்குச் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு. பின்னர் சொல்கிறேன் என்றேன்.
பின்னர் அவர்களை 2 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு – விசும்பில், காலவெளியில் தன்னந்தனியே தன் இலக்கை நோக்கி பலமாதங்கள் யோகநிஷ்டையில் பறக்கப்போகும் அந்த செவ்வாய்வண்டியை உருவகம் செய்து கொண்டு, நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, பிரார்த்தனை செய்யுமாறு யோசிக்குமாறு சொன்னேன். (அனைத்தும் ஆங்கிலத்தில்தான்)
மங்கள்யான். விசும்பின் மகாமகோ ஆழமான கருமை. அமைதிப் பெருங்கடல். சதா பெய்து கொண்டேயிருக்கும் காஸ்மிக் கதிர்கள். பின்புல மைக்ரொவேவ் கதிரியியக்கம். வீசியடிக்கப்படும் சூரியப் பிழம்புகள், விண்கற்கள். மின்னாத நட்சத்திரங்கள். மின்னாத கிரகங்கள். வெள்ளைவெளேரெனப் பளிச்சிட்டுக் கண்ணைக் கூசவைக்கும் சூரிய நட்சத்திரம், தூரத்தில் இரும்புத்தாதுவினால் ஆரஞ்சுப்பழுப்பு நிறமுடைய செவ்வாய் கிரகம். கூட ஓடி வர முயலும் வெள்ளைச் சந்திரன். பின்னால் நீல நிற பூமி. அதில் நாம்.
உலகின் மீதமர்ந்து மணிக்கு 1600 கிமீ வேகத்தில் நம் பூமியுடன் தனக்குத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறோம். அதனுடன், சூரியனைச் சுற்றி மணிக்கு 10500 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். இவற்றுடன், நமது சூரிய மண்டலம் வீகா நட்சத்திரத்தை நோக்கி வினாடிக்கு 20 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இவற்றுடன் நமது கேலக்ஸியான ஆகாசகங்கையின், பால்வீதியின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 240 கிமீ வேகத்தில் போய்க் கொண்டேயிருக்கிறோம். இவற்றுடன், நம் ஆகாசகங்கையும் சுற்றிக் கொண்டே தன்னுடைய லோகல் குழுவுடன் சென்று கொண்டிருக்கிறது.
காலப்பெருவெளியில் அனைத்தும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. விசும்பு விரிவடைந்தவண்ணமிருக்கிறது. காலமும் கழிந்துகொண்டிருக்கிறது.
ஓவ்வொரு நாளும், நாம் ஒவ்வொருவரும், நம்மையே அறியாமல் இந்தப் பூவுலகைச் சுற்றி ஒரு மகாமகோ குட்டிக்கரணம் – ஸொமர்ஸால்ட் – போடுகிறோம்.
எவ்ளோ பெரிய குட்டிக்கரணம் ராம்? ஹ்ம்ம், குட்டிப் பெண்ணே, அது சுமார் 40,000 கிமீ நீளமானது அது! ஆனா உயரம்னா, உன் உயரம்தான்…
-0-0-0-0-0-0-0-
இன்றும், மங்கள்யான், நமது விஞ்ஞானிகள், என ஆரம்பித்து, கொஞ்சம் விசை-எதிர்விசை, ஏரிபொருள் மேலாண்மை, உள்ளேயிருக்கும் கணினிகள், என (கொஞ்சம் மேம்போக்காகவே :-( ) தெரியவேண்டிய விஷயங்களைச் சொன்னேன்.

ஹோமன் மாற்றல் பாதை… ( நன்றி: http://www.isro.org/mars/images/trajectory-design1.jpg)
ஹோமன் மாற்றல் பாதையைப் பற்றிமட்டும் கொஞ்சம் விரிவாகப் பேசினேன்.
இது செவ்வாய் கிரகத்தைச் சுற்ற முடியாவிட்டாலும் கூட, நடுவில் பிரச்சினைகள் எழும்பினால் கூட – இந்த மங்கள்யான் ஒரு நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதம் என்றேன்.
நம்பவே முடியாத அளவுக்கு, குழந்தைகளுக்கு ஒரே ஆவல்.
பின்னர், இந்த மங்கள்யான் பயணத்துக்காக ஆகக் கூடிய மொத்தச் செலவு (அதாவது, அடுத்த 1 வருட செலவினங்களையும் சேர்த்தி) என்பது 500 கோடி ரூபாயைக் கூடத் தாண்டவாய்ப்பேயில்லை என்றேன். ஆனாலும், இவ்வளவு செலவாகும் இந்தப் பணத்தை வேறெங்காவது உபயோகப் படுத்தியிருக்கலாமோ என்றேன். எவ்வளவோ பேர் கஷ்டப் படுகிறார்களே இந்த நாட்டில். இது வேஸ்டோ?
ஆனால், சமயம் கிடைத்தபோதெல்லாம் குடிகாரத்தனத்தைப் பற்றிச் சலிக்காமல் பேசும் என்னால், அவர்களுக்குச் சமீபத்தில் தெரிய வந்த விஷயம் – கடந்த தீபாவளியன்று, டாஸ்மாக் மூலமாக மட்டுமே சுமார் 150 கோடி ரூபாய்க்கு தமிழகம் குடித்திருக்கிறது என்பது. மேலும் தினசரி, சராசரியாக 45 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறோம் என்பதும். (எங்கள் பள்ளியிருக்கும் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 98% குடி-அரசர்கள்; தினமும் குடிக்கிறார்கள்)
குழந்தைகள் சொன்னார்கள் –
… இந்த ஆராய்ச்சி எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. எவ்வளவு புது விஷயங்கள் தெரிந்துகொள்கிறோம்! நிச்சயம் இதெல்லாம் செய்தே தீரவேண்டும்.
… நாம் மூன்று தீபாவளிகளில் குடித்துக் கூத்தடித்தே இதற்குமேல் செலவு செய்வோம். ஆனால் எவ்வளவு தீமை இதனால். அதேசமயம் இந்த ஆராய்ச்சிகளினால், நிறைய பயன்கள் தான் கிடைக்கும் இல்லையா?
… இன்னொண்ணு நீங்கதானே சொன்னீங்க – கருணாநிதி கொடுத்த ஓசி தொலைக்காட்சிப் பெட்டிகளால் அரசுக்கு, நம் வரிப்பணத்துக்கு ஆன நஷ்டம் 3500 கோடி ரூபாய்க்கும் மேல் என்று. இதனால் எங்களுக்கு தொந்திரவுதானே? வீட்டில் படிக்கவே முடியவில்லை. இதைத் தவிர ஸன் டீவி காரங்களுக்கு கேபிள் கட்டணம் என்று வருடாவருடம் 4000 கோடி ரூபாய் நம்ப பணம்தானே போகிறது? இதுதான் வேஸ்ட்.
(இவர்கள், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்தான்; கொஞ்சம் மூளைச் சலவையும் செய்யப்படுகிறது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். ஆனால் நானும் பலவழிகளில் முட்டிமோதிப் பார்த்துவிட்டேன். எனக்கு வேறு வழியில்லை. இருந்தாலும், என் குழந்தைகளை நினைத்தால் எனக்குக் கர்வமாகவே இருக்கிறது.)
கூடங்குளம் அணுக்கருவுலை க்ரிடிகல் (கடந்த ஜூலை மாதம் என நினைவு) ஆகப் பணிசெய்ய ஆரம்பித்தபோது, குழந்தைகளுக்கு — அதைக் கொண்டாட ஆளுக்கு ஒரு மஃப்ஃபின் வாங்கிக் கொடுத்தேன். இந்த மங்கள்யானுக்கும் இதைச் செய்யலாமா என யோசித்து, இப்படி இலவச ஜங்க் தின்பண்டம் கொடுத்து, இதற்காக அவர்கள் மங்கள்யானைக் கொண்டாட வைக்கவேண்டுமா, இது லஞ்சமோ என்று எனக்கு நிரடியதால், அதைச் செய்யவில்லை.
ஆனால், ஒரு குழந்தைகூட, அப்போது கொடுத்தாயே, மங்கள்யானுக்கு என்ன ஒன்றும் கொடுக்கவில்லையே எனக் கேட்கவேயில்லை. பேச்சு முடிந்ததும் அமைதியாக எழுந்து போய்விட்டார்கள். மணிகள். வேறென்ன சொல்ல.
-0-0-0-0-0-0-0-0-
நேற்று காலை, பொழுதுவிடிந்ததும் ஒரு தேவையற்ற (ஆங்கில) வாக்குவாதம்; பெங்காலி பாபு ராஸ்கல் பேசினான் – வாழ்த்துகள். உங்க அரசுக்கு, பசிப்பிணியைப் போக்குவதை விட தீபாவளி ராக்கெட் விடுவதுதான் முக்கியம். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, தோழா! அமெரிக்காகிட்ட டெக்னாலஜி கடன்வாங்கி புஸ்வாணம் விட்றீங்க. தேவையா இது?
என் பதில்: அற்பனே, மிலிடரி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் எல்லாவற்றையும் கண்டமேனிக்கும் உபயோகித்துக் கொண்டு இப்படி நாக்கூசாமல் உளறுகிறாயே, உருப்படுவியா?
*&^%
ஏண்டா, அமெரிக்க மிலிடரி போட்ட பிச்சையான இன்டெர்நெட்டை உபயோகித்துக் கொண்டே இப்படி இரட்டைவேடம் போடுகிறாயே!
%$#!@*
டேய், நீ உபயோகித்துக் கொண்டிருக்கும் செல்ஃபோன் எல்லாம் எப்டீடா வந்துது? இதனால பொதுமக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லைன்றியா?
%$#!@*
என்ன, எங்கெங்க கடன் வாங்கியிருக்கோம்னு கொஞ்சமானும் சொல்லமுடியுமா, அற்பனே?
!!!!
:-(
8-{
இந்த பெங்காலி பாபுவின் சங்காத்தமே இனி கூடாது. அயோக்கிய அறிவுஜீவிப் பதர். நேற்று காலையில் எனக்கு வெறுத்தே விட்டது.
இந்த வேஷதாரி அரைகுறை அவநம்பிக்கைவாதிகளை ஒழிக்கவேண்டும். ஆமென்.
-0-0-0-0-0-0-0-0-
பத்ரியின் மங்கள்யான் பதிவு ஒன்றில், நான் இட்டிருந்த பின்னூட்டம் கீழே:
மங்கள்யானின் கருவிகளில் சிலவற்றை முழுவதுமாக இந்தியாவிலேயே வடித்தெடுத்த முனைவுகளில், ஈடுபட்ட ஒரு பெங்களூர் அதிதொழில்நுட்ப முனைவோன் என் நண்பன்.
இவன் சொல்வது:
1. இஸ்ரோ விஞ்ஞானிகள் (+அதன் தொழில்நுட்ப வெளிக் கூட்டாளிகள்) ஏறக்குறைய முழுக்கமுழுக்க இதன் தொழில் நுட்பச் சாதனைகளை சாதித்திருக்கிறார்கள்.
2. வெளி நாடுகளிலிருந்து (ரஷ்ய ஆர்எஃப்எஸ்ஏ உட்பட) நமக்கு கிடைத்த உதவி சொற்பம் என்பது கூட அதிகம். நிறைய முட்டுக்கட்டைகள்தாம் போட்டிருக்கிறார்கள்.
3. டெலிமெட்ரி தொடர்புக்கு, கொஞ்சம் அமெரிக்கா உதவியிருக்கிறது. (இது ராக்கெட் மேலெழுப்பப்பட்டபின் செய்யப்பட்ட உதவி – பணம் வாங்கிக் கொண்டுதான்); இந்த உதவியில்லாவிட்டாலும் இஸ்ரோ தொலைதூர இயக்க மேலாண்மையை சரியாகவே செய்திருக்கும். அரசியல் + தொழில் நுட்பக் கூட்டுறவுக்காக இதனையும் செய்திருக்கிறோம்.
4. முட்டுக்கட்டையிடப்பட்ட, அதி ரகசியமான தொழில் நுட்பங்களுக்கு, அதி தீவிரமாக ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தும் சாதித்திருக்கிறார்கள்.
5. பலமுறை, பலமுனைகளிலிருந்து சீன / சில முனைகளிலிருந்து பாகிஸ்தானிய/அமெரிக்க தொந்திரவுகளையும், ஊடுருவல்களையும் சமாளித்திருக்கிறார்கள்.
6, அரசின் பல அமைச்சகங்களிலிருந்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளையும், அயோக்கிய அறிவுஜீவிகளின் பொய்ச் செய்திப் பரப்பல்களையும் அற்பத்தனத்தையும் மீறி, இதனைச் செய்திருக்கிறார்கள்.
7. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள். (நாமெல்லாம் அப்போது, ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் புளகாங்கிதங்களில் ஈடுபட்டு, தமிழீழத்தை வென்று ஸ்ரீலங்கா தமிழர்களுக்குக் கொடுப்பதில் படு பிஸியாகவே இருந்தோம்!)
இவர்கள் சாதித்திருக்கிறார்கள். மெய்யாலுமே! இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
இதனைப் பற்றி, எனக்கு உண்மையிலேயே மகாமகோ பெருமைதான். :-)
தொடர்புள்ள பதிவுகள்:
பத்ரி பதிவுகள்:
ஜெயமோகன் பதிவு:
குடிகாரத் தமிழகம் பற்றிய பதிவு:
-
தமிழகக் குடி மஹாத்மியம் (20/09/2012)
November 7, 2013 at 21:49
Envy your children; you are privileged, they are lucky. What else can I say?
November 8, 2013 at 05:40
இவர்கள் சாதித்திருக்கிறார்க
சொடுக்கினால் இணைப்பு வேலை செய்யவில்லை. பார்க்கவும்.
November 8, 2013 at 05:50
அன்புள்ள ‘ஜோதிஜி’
சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன். நம் மங்கள்யான் பற்றிய இஸ்ரோ தளம்தான் இது.
November 8, 2013 at 09:13
ஐயா(உங்கள எப்படி கூப்பிடுவது என தெரியவில்லை),
இன்னும் கட்டுரையை படிச்சு முடிக்கல, ஆனா கீழே உள்ள வரிகளை படிக்கும்போது கவிதையாக தோன்றியது. எனக்கு கவிதை இலக்கணமெல்லாம் தெரியாது.
“மங்கள்யான். விசும்பின் மகாமகோ ஆழமான கருமை. அமைதிப் பெருங்கடல். சதா பெய்து கொண்டேயிருக்கும் காஸ்மிக் கதிர்கள். பின்புல மைக்ரொவேவ் கதிரியியக்கம். வீசியடிக்கப்படும் சூரியப் பிழம்புகள், விண்கற்கள். மின்னாத நட்சத்திரங்கள். மின்னாத கிரகங்கள். வெள்ளைவெளேரெனப் பளிச்சிட்டுக் கண்ணைக் கூசவைக்கும் சூரிய நட்சத்திரம், தூரத்தில் இரும்புத்தாதுவினால் ஆரஞ்சுப்பழுப்பு நிறமுடைய செவ்வாய் கிரகம். கூட ஓடி வர முயலும் வெள்ளைச் சந்திரன். பின்னால் நீல நிற பூமி. அதில் நாம்.”
இந்த வரிகள் contactனு ஓர் ஆங்கில சினிமா நியாபகபடுத்தியது. நீங்க சினிமா பாக்கமாட்டீங்கனு தெரியும்.
இந்த படத்தோட அறிமுக காட்சியில், பிரபஞ்சம் எப்படி இருக்குனு சொல்லியிருப்பார்கள்.
http://www.imdb.com/title/tt0118884/?ref_=nv_sr_2
கோகுல்
November 8, 2013 at 09:16
இந்த வரிகளை இணைக்க மறந்துவிட்டேன்
“உலகின் மீதமர்ந்து மணிக்கு 1600 கிமீ வேகத்தில் நம் பூமியுடன் தனக்குத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறோம். அதனுடன், சூரியனைச் சுற்றி மணிக்கு 10500 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். இவற்றுடன், நமது சூரிய மண்டலம் வீகா நட்சத்திரத்தை நோக்கி வினாடிக்கு 20 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இவற்றுடன் நமது கேலக்ஸியான ஆகாசகங்கையின், பால்வீதியின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 240 கிமீ வேகத்தில் போய்க் கொண்டேயிருக்கிறோம். இவற்றுடன், நம் ஆகாசகங்கையும் சுற்றிக் கொண்டே தன்னுடைய லோகல் குழுவுடன் சென்று கொண்டிருக்கிறது.”
November 8, 2013 at 10:10
அன்புள்ள கோகுல்ராஜ், படமெல்லாம் பார்க்கமாட்டேன் என்று யார் சொன்னது? விதம்விதமாக, பல அற்புதப் படங்கள் பார்த்திருக்கிறேன். இப்போதும் சில சமயம் பார்க்கிறேன்.
அம்மணி ஜோடி ஃபோஸ்டரையும் எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் குறைவாக கார்ல் ஸேகனையும்.
நீங்கள் ஸ்டெனிஸ்லாவ் லெம் அவர்களின் புத்தகங்களை (இது வரையில் படிக்கவில்லையானால்) அவசியம் படிக்கவும்.
சுட்டிகளுக்கு நன்றி. இந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு விஷயம்: உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அதாவது, என்னைக் கவிஞர் என்றழைக்காமல் இருந்ததற்கு. ஏற்கனவே பலர் ‘கவிதை’ எழுதிக் கொண்டிருப்பதையே என்னால் தாங்க முடியவில்லை. நானும் எழுத ஆரம்பித்தால்? :-)
November 8, 2013 at 10:06
India | Mars | UK Aid | World Envy | India should worry about where is the next meal coming from, not venture into Space!
Caught this sentiment on BBC (World Have Your Say) @11am-12pm today 11/5/2013
Listen to this podcast at 37min onwards…
[audio src="http://downloads.bbc.co.uk/.../whys/whys_20131105-1910a.mp3" /]
Outright exhibition of envy pours on India, like in 3 Idiots movie,
“when your friend flunks, you feel bad, when he tops, you feel worse”
**They hint about UK’s ongoing aid, but phasing out in 2015 (3)
**They hint about India’s Poverty.
+They idea about India admitted by two Indians on record BBC (World Have Your Say) @11am-12pm today 11/5/2013;
+They don’t have a future for their children.
+They don’t have a roof over their head.
+They don’t have enough food.
+For them its all about “where is the next meal come from…”
** India rich enough to give $10 billion to IMF’s Eurozone Bailout Fund(4), but poverty-stricken to venture into Space.
**It is okay to spend $344 million on Commonwealth Games(2), but it is freaking not okay to spend $75 million on Science, Space and Technology.
People who appear on PR/Media as a representative of India does not have a clue to safely, diplomatically argue and justify about its ambitions and actions in relation to other similar places it has spent similar amount of money. It is true, but sad state, and we should be ashamed, and at the same time take this as a learning opportunity presented to us to handle situations like this.
1. The Indian government has raised the budget of the 2010 New Delhi Commonwealth Games from Rs. 767 crore ($163 million) to Rs. 1,620 crore ($344 million).
http://en.wikinews.org/wiki/India_doubles_Commonwealth_Games_budget
2. The Rs. 450 crore (~$75 million) Mars Orbiter Mission was successfully launched from Dr. Satish Dhawan Space Centre (SDSC) in Sriharikota, a small village in Andra Pradesh on Tuesday at 2:38 pm.
http://ibnlive.in.com/videos/432447/mission-to-mars-pslv-puts-mangalyaan-into-an-elliptical-orbit.html
3. Support worth about £200m ($319m) will be phased out between now and 2015 and the UK’s focus will then shift to offering technical assistance.
http://www.bbc.co.uk/news/uk-politics-20265583
4. India Gives $10 Billion to IMF’s Eurozone Bailout Fund
http://www.indiawest.com/news/5075-india-gives-10-billion-to-imf-s-eurozone-bailout-fund.html
November 8, 2013 at 14:40
Reblogged this on கடைசி பெஞ்ச் and commented:
மங்கள்யான் பற்றிய இன்னுமொரு பதிவு
November 8, 2013 at 15:15
நானும் 38 வருடம் ஆசிரியனாகக் குப்பை கொட்டியிருக்கிறேன். ஆனால் இதுபோன்ற அனுபவம் ஏதுமில்லை எனக்கு. உளவியலில் எவ்வளவு செய்திருக்கலாம். எல்லாவற்றையும் தொலைத்தாயிற்று. உங்களைப்பார்த்தால் பொறாமையாக உள்ளது ராமசாமி.
March 29, 2019 at 09:39
[…] மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்! 07/11/2013 […]