நம் வளமையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல்… (ஒரு பணிமனை)
November 6, 2013
எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் திரு ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் பணிமனை – பேண்தகுநிலை மிகுந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல் – அதாவது ‘Exploring a sustainable future’ டிஸெம்பர் எட்டாம் தேதியில் இருந்து பதினான்காம் தேதி (இந்த 2013 வருடம்தான்) வரை நடைபெறுகிறது.
ராஜகோபாலன் அவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் (IIT-சென்னை, IIT-கான்பூர்) பணி புரிந்தவர். சுற்றுப் புறச் சூழலியலில், ஆழிகள் மேன்மைப் படுத்தப்படல், சமூகவியல், காந்திய சிந்தனை, வாழ்வியல், ஹோமியோபதி போன்ற பல தளங்களில் பணியாற்றியவர், பணி ஆற்றுபவரும் கூட. (இவர் போன்றவர்கள் – நல்லோர், கடற்கோள் இந்தியாவைத் தாக்கியபோது செய்த பணிகள், பின்னர் ஊக்கமூட்டிய புனருத்தாரண, சீரமைப்புப் பணிகள் – பொதுவாக வெளியே தெரிய வருவதே இல்லை)
ஐஏஎஸ் அதிகாரிகளிலிருந்து, கிராமப் பணிகள் செய்பவர்கள் வரை, சகல படிகளிலும் ஆழமான பணிமனைகள் பலவற்றைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவர்.
இவர் ஒரு தேர்ந்த, விசாலமான பார்வைகளையுடைய தமிழ் வாசகரும் கூட. தற்காலத் தமிழ் இலக்கியத்துடனும் தொடர்பில் இருப்பவர். (ஜெயமோகனின் விஷ்ணுபுரம், சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், புதுமைப் பித்தனின் காஞ்சனையென்று எதைப் பற்றி வேண்டுமானாலும் இவருடன் பேசலாம். ஆனால், எவ்வளவு பேர் எஸ் ராமகிருஷ்ணன் பற்றி இவரிடம் பேசியிருப்பதை, அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார், எவ்வளவு பேர், இவர் எஸ் ராமகிருஷ்ணன் பற்றிப் பேசுவதை நெடுங்குருதி பொங்கக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என என் கீபோர்ட் தவமாகத் தவமிருந்து யோசித்துக் கொண்டிருக்கும் என, என்னுடைய எலிக்குட்டி காலவெளியில் வாலை ஆட்டிக்கொண்டு யோசித்துக் கொண்டிருப்பதை, நான் அவதானிக்கும் போது… மன்னிக்கவும், மன்னிக்கவும்!)
ஆர்ஆர் (இப்படித்தான் இவரைக் கூப்பிடுவோம்) எழுதிய கணிதம், கணினியியல், சுற்றுப்புறச் சூழலியல் பற்றிய புத்தகங்கள், பல இந்தியக் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்களில் பாடப்புத்தகங்களாக வைக்கப் பட்டுள்ளன. சிறார்களுக்கு எழுதிய வரலாறு பற்றிய புத்தகங்கள் NBT, CBT போன்ற பதிப்பாளர்களால் வெளிக் கொணரப் பட்டுள்ளன.
ஆனால், இந்த மரியாதைக்குரிய ஆர்ஆர் பெரியவர் — அணு உலை எதிர்ப்பு, ‘மதவாத’ எதிர்ப்பு, உலகத்துக்கே எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராக, உலகமயமாக்கலுக்கு எதிராக, உயர் தொழில் நுட்பத்துக்கு எதிராக – என்று நிறைய விஷயங்களுக்கு எதிர்எதிராக, மேலும் எ திராக — எனக்கு ஒரே மாளாப் புதிராகவெல்லாம் கூட வெகு விசித்திரமாக இயங்குபவர் – இதனால் இவருடன் சதா ஒரே கசமுசா, தொடரும் பிணக்குகள். ஆக, தொடர்ந்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால் கொஞ்சம் லொக், லொக்கென்று இருமல் வந்துவிடும் (அதாவது, எனக்கு!) பல மாதங்கள் இவர் என்னதான் தொடர்பு கொள்ள முயன்றாலும், இவர் கிட்டவே போகமாட்டேன். பின்பு ஒரு வழியாக ராசியாகி விடும். இப்படிப் பல நிகழ்வுச்சுழற்சிகள்…
ஹ்ம்ம்… ஆகவே, கொஞ்சம் தலையில் அடித்துக் கொண்டுதான் இவருடன், இன்னமும் நண்பராக இருக்கிறேன். (அடுத்த முறை பிணக்கு ஏற்பட்டால், அவ்வளவுதான், தொடர்பை அறுத்து விடப் போகிறேன்; நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்.)

கொஞ்சம் மிரண்டது போலத் தெரிகிறதா? (இந்தப் புகைப்படத்தை எடுத்தது நானல்ல, சத்தியமாக!) (நன்றி: http://www.in.iofc.org/sites/all/files/images/5.RR_.preview.jpg)
ஆனால் – என்னருமை ஆர்ஆர் அவர்கள் மெத்தப் படித்தவர். பண்பாளர். நல்ல நகைச்சுவை (அக்காலக் கடிகள் முதல் இக்கால மொக்கைகள் ஈறாக) உணர்ச்சி கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். விஷயம் பல தெரிந்தவர். ஆழம் மிகுந்தவர். ஆரவாரமில்லாமல் பணி புரிபவர். பலவித நோக்குகளை ஒருங்கிணைத்துச் சிக்கலான விஷயங்களை புரிய வைக்கக் கூடியவர். பொறுமைசாலி. (என்னுடன் இன்னமும் நண்பராக இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!)
இவர் நடத்திய முந்தைய பணிமனைகளில் பங்கு பெற்ற பலரை, அவர்களின் விகசிப்புகளை, துளிர்த்தல்களை – நான் நேரடியாக அறிவேன். நம்முடைய, பெரும்பாலும் சராசரித்தனம் மிகுந்த சூழலில், ஆர்ஆர் போன்ற பெரியவர்கள் இன்னமும் நம்முடன் இருக்கிறார்கள் என்பதும், இவர்களுடன் அளவளாவ, அனுபவங்கள் பெற திறப்புகள் / வாய்ப்புகள் இருப்பதும் – நல்ல விஷயங்கள்.
ஆகவே, இவரையும், இவர் பணிமனையையும் வெகுவாகப் பரிந்துரைக்கிறேன்.
பணிமனை நடக்குமிடம்: ஆரோவில் (புதுச்சேரி அருகில்)
நடக்கும் நாட்கள்: டிஸெம்பர் 8 முதல் 14 வரை (2013)
கட்டணம்: ரூபாய் பனிரெண்டாயிரத்து ஐநூறு (உணவு, தங்குமிடம், சுற்றுவட்டாரப் பயணங்கள் உட்பட)
மேலும் விவரங்களுக்கு, Announcement+Schedule; இந்த ஆவணத்தில் மேலும் விவரங்களும், பங்கேற்பாளர் படிவங்களும் உள்ளன.
நண்பர்களே, நிறைய கதவுகள் திறக்கப் படக் காத்திருக்கின்றன…
முடிந்தால் பங்கு பெறவும். உங்கள் நண்பர்களுக்கும் அறிவிக்கவும் / தெரிவிக்கவும் (மறுபடியும், முடிந்தால்…).
நன்றி .
November 6, 2013 at 13:41
எண்பதுகளில் கல்லூரி முடித்து உத்தர பாரதம் போய்ச்சேர்ந்த எனக்குப் பல புதிய தமிழ்ச்சொற்களில் பழக்கம் இல்லை. பணிமனை என்பது புதிராகவே இருந்தது. கடேசியில் workshop என்று பார்த்ததும் ட்யூப்லைட் எரிந்து விட்டது.
Work = பணி
Shop = மனை (என்பது மட்டிலும் தான் சரியா?) – கடை என்பது இந்த context ல் ஒத்து வராது. புரிகிறது.
வெவகாரமாக மண்டையைக் குடைய வைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.
வொர்க் ஷாப் என்று தமிழில் எழுதுவதை விட பணிமனை அழகாக இருக்கிறது.
November 6, 2013 at 14:05
:-)
எனக்கும் ஏகத்துக்குத் தமிழ்ப் ‘படுத்துதல்’ விஷயத்தில். சில ஒவ்வாமைகள் உண்டு. ஆனால், தற்போதைக்குப் பரவலாக தமிழ்வார்த்தைகள் வழியாக அறியப் படும் விஷ்யங்களை, அப்படியே உபயோகப் படுத்துவ்தாக முடிவு செய்திருக்கிறேன். ஆக பஸ்-களுக்குப் பதிலாகப் பேருந்துகள். ஆனால் ’தொகையீட்டு நுண்கணிதம்’ என்றெல்லாம் எழுவதற்குப் பதிலாக, கால்குலஸ் என்று தான் எழுதப் போகிறேன்.
பணிமனை என்கிற வார்த்தை பல பத்தாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அது சம்மட்டி ரீதி வர்க்ஷாப் வகையறாக்களுக்கு மட்டுமே உபயோகப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இக்காலங்களில் இந்தமாதிரி பெஞ்ச் தேய்க்கும் (மன்னிக்கவும்) வர்க்ஷாப்களுக்கும் இதே பெயரை உபயோகிக்கிறார்கள். முதலில் என்னவோ போலிருந்தது – இப்போது பழகிவிட்டது.
பழையன கழிதலும், புதியன கழிதலும்…
November 7, 2013 at 04:04
வொர்க்சாப் என்பதற்கு பட்டறை என்ற சொல்லை நான் பயன்படுத்துகிறேன். கருத்துப்பட்டறை என்பது நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன். இருப்பினும் பணிமனை சரியான சொல்லே. நான் தமிழாசிரியனும் அல்ல தமிழை நன்றாகப் பிழையின்றி எழுதத் தெரிந்தவனு மல்ல.ஆனால் இந்த இடுகை அப்படி ஒரு தோற்றத்தைத் தருகிறது அதற்காக மன்னிக்கவும்
November 7, 2013 at 06:06
என்ன அய்யா, மன்னிப்பு கின்னிப்பு என்றெல்லாம் கேட்டுக் கொண்டு…
நீங்கள் சொல்வது சரிதான். பட்டறை என்பதுதான் சரியாகவரும் என நினைக்கிறேன்.
ஆனால் இந்த ஆர்ஆர் விஷயம் ஒரு கருத்து + கரப் பட்டறையாக இருக்கும்.
இனிமேல் திருத்திக் கொள்கிறேன். அல்லது கொல்கிறேன்.