உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (இரண்டாம் நிகழ்வு)
October 27, 2013
முந்தைய பதிவு: உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே) 03/10/2013
நமது திருமணங்களில், சமூக விருந்துகளில், நமது உணவகங்களில் – இவற்றையெல்லாமே விடுங்கள் — நம் வீடுகளிலேயே, நாம் அநியாயத்துக்கு வீணடிக்கும் உணவைப் பற்றி யோசித்தால் மாளா துக்கமும் கோபமும் தான் வரும். இந்த – சோற்றை வேலை மெனக்கெட்டு வீணடித்தல் எனும் பொதுவிதிக்கு எந்த மதமோ, ஜாதியோ, நாடோ – எனக்குத் தெரிந்தவரை எதிலும் ஒரு விதிவிலக்கு கூட இல்லை. ஒரு பக்கம் மாளாப் பஞ்சம், பற்றாக்குறைகள், பானை வயிறுடன் சூம்பிப் போயிருக்கும் குழந்தைகள். இன்னொரு பக்கம் — ஒரு போதும் சிந்தித்துப் பார்க்கப்படாத, வீணடிப்புகளும் கயமையும் + உணவின் மீதான சுரணையற்ற அவமரியாதையும்.
… தவிர்க்கமுடியாத சில சமயங்களில், நான் சென்றிருக்கும் சொற்ப எண்ணிக்கைத் திருமணங்களில் கூட, நம் மக்கள் செய்யும் இந்த அயோக்கிய வீணடித்தல்களால் என்னை அழைத்தவர்களுக்கு, என்னால், தர்மசங்கடமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன – நிலைமை சில சமயம் ரசாபாசமாகி, மிகுந்த தொந்திரவு கொடுத்திருக்கிறேன்.
இதற்குப் பயந்து கொண்டும், திருமணச் செலவினங்களை பெண் மட்டும் அல்லது பெண்வீட்டார் மட்டுமே தரும் அயோக்கிய வழிமுறைகள் எனக்கு ஒப்பில்லாத காரணத்தாலும் – சுமார் 20 வருடங்கள் எந்தத் திருமணத்துக்குமே போகாமல் இருந்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மூன்று நான்கு திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
அப்படி, வேறுவழியே இல்லாமல் செல்லும்போது, உடலின் அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு ஒரு மூலையில் புத்தகங்களுடன் உட்கார்வதையும் பழக்கமாக வைத்திருக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-
என் திருமணத்தை நான் ‘இந்திய விசேஷ மணச் சட்டம் (1954)’ வழியாக நடத்திக் கொண்டேன்(=கொண்டோம்). சுமார் பனிரெண்டு ரூபாய் செலவு செய்தேன் (95 வாக்கில்) என நினைவு. நான் அப்போது தொடர்பிலிருந்த என் உற்ற நண்பர்களான இரா சாய்னாத், ‘முன்றில்’ மகாதேவன், அஷ்ரஃப் அலி, பிறைமுடி, செல்வதுரை, எம்ஜி சுப்ரமணியன், பொன் விஜயன் (இவர் இப்போது உயிருடனில்லை), குப்புசாமி, ரங்கராஜன் கோபாலன் போன்றவர்களைக் கூட இதற்குக் கூப்பிடவில்லை – என் கிறுக்குத்தனங்களை நன்கறிந்தவர்களாகிய அவர்களும் இதற்காகக் கோபப்படவில்லை என நினைவு – இந்த ஜாபிதாவில் ஐவர், தலையில் அடித்துக்கொண்டு கடனெழவே என்று இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள் கூட, பாவம். 8-)
… வீட்டோடு கொடுக்கப்பட்ட ’விருந்து’க்குச் சுமார் 20 பேர் மட்டும் இருந்தனர். இந்த விருந்திற்குச் செலவாக 400-500 ரூபாய் ஆகியிருக்கலாம் (மனைவி கொடுத்தாள்). சாப்பிட்டவர்கள் ஒருவரையும், ஒரு பருக்கையைக் கூட வீணடிக்க விடவில்லை. புத்தாடை என்றெல்லாம் இல்லை. தாலியை என் மனைவியே அவளுடைய பெற்றோர்கள் மனவருத்தப் படக் கூடாது என்று கட்டிக் கொண்டாள். இதனால் ஒரு பெரிய வாக்குவாதம். அன்றே கழற்றி விட்டோம். மணம் முடிந்த பின் சுமார் 200 பேருக்கு ஒரு அஞ்சலட்டை ( ‘ நாங்கள் மணம் புரிந்திருக்கிறோம்; முடியும் போது, எங்கள் வீட்டிற்கு வரவும். சாவகாசமாகச் சந்திக்கலாம்’) அனுப்பினோம். இதற்குச் சுமார் 350 ரூபாய் செலவு (இதை நான் கொடுத்தேன்). மொத்தச் செலவு, என் வண்டிக்கான எரிபொருளையும் சேர்த்து, சுமார் ஆயிரம் ரூபாய் எனவொரு அனுமானம். — அதாவது, வந்திருந்த அந்த 20 பேர்களின் போக்குவரத்துச் செலவுகளைச் சேர்க்காமல்.
எதற்கு இந்த இழவையெல்லாம் சொல்லவருகிறேன் என்றால் – இது ஒரு அற்ப சுயமரியாதைத் திருமணம் என்றெல்லாம் இல்லை; கடவுள் மறுப்பு, ஜாதியொழிப்பு, தாலியறுப்பு, தனித்தமிழ் திருமணம், பலமுண்டங்களினால் கட்டமைப்பப்பட்ட ஃப்லெக்ஸ் விளம்பரத்தட்டி, சீர்திருத்தத் திருமணம் என்றெல்லாமுமில்லை; பிரகடனம் செய்து, மேடை போட்டு பிடிக்காதவர்களைத் திட்டி, எனக்கு நானே மாலை போட்டுக்கொண்டு, நாலு பேரை விட்டுப் பேசவைத்து (=’எவ்வளவு எளிமையானவன் இவன்! அட அட!!’) — அல்லது, ‘இதோ பார், எவ்வளவு எளிமையாகக் கல்யாணம் செய்து கொள்கிறோம் பார்’ என மற்றவர் நேரத்தை வீணடிப்பதற்கெல்லாம் இல்லை.
Hey, world! You full of small, small people! Look at Us, the paragons of all virtue, we, who are standing on a marble pedestal! Rejoice with us and cheer us! We are oh so humble that, oh so bloody full of humility that, we are the humblest persons in the entire universe, ஹஹ்ஹஹ்ஹா என்றெல்லாம் இல்லை.
ஒரு காரணம்: வெறுமனே நேரத்தையும், உணவையும், சக்தியையும், பணத்தையும் வீணடிப்பதைக் குறைந்தபட்சம் எங்கள் அளவிற்காவது குறைப்பதற்காகத்தான்…
இன்னொரு காரணம்: பல விஷயங்களில் நான் ஒரு மகாமகோ சோம்பேறியும் கூட – இதுவும் ஒரு பெரிய காரணம்தான் – எவனுக்குத்தான், இந்தக் கல்யாணவைபவம் கந்தறகோளம் என்றெல்லாம் அலைய, வாயெல்லாம் பல்லாக, அற்பர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டு கோட்டுசூட்டு போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள, கைகுலுக்க பொறுமையும், சகிப்புத்தன்மையும், மனவமைதியும் இருக்கிறது? (யோசித்தால் இந்த இரண்டாவது காரணம்தான் சரியான, உண்மையானதொன்று)
எது எப்படியோ – இந்தத் திருமணத்தில் ஒரு பருக்கைச் சோறும் வீணாகவில்லை என்பதில் எனக்குப் பெருமைதான். :-)
ஆனால், என் இளமைக் கதையைச் சொல்லவரவில்லை இங்கு.
-0-0-0-0-0-
இரண்டாம் நிகழ்வு
அது ஒரு திருமண விருந்து – மதியம்; அச்சமயம் எனக்குச் சுமார் எட்டு வயதிருந்திருக்கலாம். ஒரே கொலைப்பசி.
வருவதையெல்லாம் விடாமல் கரண்டிகள் நிறையப் போட்டுக் கொண்டு – அவற்றை கொஞ்சம் நக்கி – வெறும் சுவை மட்டும் பார்த்துவிட்டு – பின் அதனை வழித்து இலையோரம் ஒதுக்கிவிட்டு – இலையின் ஓரத்தில் வாந்தியெடுத்ததுபோல் அம்பாரமாகக் குவித்து வைத்துவிட்டு – பந்திக்கு பரிமாற புதியது வரும் போது அதனையும் போடு, இன்னொண்ணு போடு என்று அதட்டலாகச் சொல்லி அதனையும் குவித்துக் குப்பையாக்கி… மறுபடியும் மறுபடியும் அப்படியே செய்து கொண்டிருந்த அயோக்கியர்களின் (அவற்றில் பெரும்பாலோர் என் கேடுகெட்ட உறவினர்கள், வெட்கக் கேடு – இது கோவையில் நடந்த ஒரு திருமணம் என மங்கலாக நினைவு) அராஜகத்தைப் பார்த்து கண்ணில் ரத்தம் வந்து விட்டது.
நான் எனக்கு வேண்டியதை மட்டும் போட்டுக் கொண்டு, எனக்குப் பிடித்த தின்பண்டம் பரிமாறலில் வந்தாலும் வயிறு நிரம்பிக் கொண்டிருந்தால் அதனை வேண்டாம் என்று சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
எப்போழுதுமே சாப்பிட்ட பிறகு என் இலை அல்லது தட்டு மிகச் சுத்தமாக இருக்கும். தட்டில் சரியாக என் முகபிம்பம் தெரியவரும் வரையில் நக்கித் தீர்த்துவிடுவேன்… (இப்பொழுதும்தான்) முடிந்தால் பக்கத்தில் சாப்பிடுபவர்களின் இலையில் ஏதாவது மிச்சம் இருந்தால், எனக்குப் பரிமாறிக் கொள்வதின் / பரிமாறலின் அளவைக் குறைத்துக் கொண்டு அதனையும் சாப்பிடுவேன்தான். எனக்கு எச்சில் கிச்சில் என்றெல்லாம் கிடையாது. 8-)
… அந்தப் பக்கம் ‘உபசாரம்’ செய்ய வந்த என் பெரியப்பா இளக்காரமாகச் சொன்னார், டேய் ராமா, பறக்காவெட்டி மாதிரி வழிச்சு வழிச்சுச் சாப்பட்றயே! நாய்க்காவது கொஞ்சம் மிச்சம் வெக்ய மாட்டியா நீ?
… அதற்கு, என் பக்கத்தில் — கந்தறகோளமாக இலைமுழுதும் உழுத சகதி நிலம் போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் மாமா சொன்னார் – அவன் சாப்ட்ற எலையையாவது மிச்சம் வெக்யறானே, அதுவே பெருசு. ஏண்டா வாசல்ல நரிக்கொறவனுக்காவது கொஞ்சம் வய்யி…. காணாததக் கண்ட மாதிரி சாப்ட்றான் பாரு.
பக்கத்தில் இருந்தவர்கள் என்னை இளக்காரமாகவும் நமட்டுச் சிரிப்புடனும் பார்த்தார்கள். எனக்குக் கண்ணில் நீர் முட்டியது.
நான் சொன்னேன் – எங்க வீட்ல சாப்பாடு ஒரு தெய்வம். அன்னலக்ஷ்மி அது. வீணாக்கினால் அது நியாயமே இல்லை. இல்லேன்னா அடுத்த ஜென்மத்துல சாப்பாடே கிடைக்காது. பிடிச்சுதோ பிடிக்கலையோ, எலெல இருக்கிறத வீணாக்காம முடிச்சுடணும். எவ்ளவோ பேர் கஷ்டப்பட்டு உழச்சுதான நமக்கு இந்த சாப்பாடு வர்ரது. அத நாம மதிக்க வேண்டாமா?
அட! நன்னாவே பேசக் கத்துக்குடுத்துருக்காடா என் தங்கை…
அழுது விக்கிக்கொண்டே சொன்னேன் – யாரும் கத்துக் குடுக்கல மாமா, இவ்ளோ குருவிக்காரம்மேல கரிசனப் பட்றேளே, ஏன் அவங்களையும் உள்ள கூப்பிட்டு வாழை எலேல சாப்பாடு போடலாமே! நாம்ப நம்ப எலைல மேலமேல போட்டுண்டு அத சாப்டாம வீணாக்கி, அதை அப்றம் அவங்களுக்குத் தூக்கிக் கொடுத்து – என்னத்துக்கு இது? எச்சல் சோறுதான் நரிக்குறவனுக்குப் போடுவேங்கறது மஹாபாவமில்லையா?
பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
வக்கணையாதான் பேசறடா, அரசியல்வாதியாத்தான் ஆகப்போற… என்று சொல்லிக்கொண்டே அவர்கள் நக்கலாகச் சிரித்துக் கொண்டு நகர்ந்தனர்.
எனக்குக் கோபமாகவும் வெறுப்பாகவும், அசிங்கமாகவும் இருந்தது. என் இலையில் இருந்ததை விக்கி அழுதுக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு, என் அம்மாவிடம் போய் அழுதேன். அரசியல்வாதீன்னா அசிங்கமாம்மா?
இல்லடா செல்லம், நம்ப காமராஜ், காந்தியெல்லாம் அரசியல்வாதிகள் தான, கவலப் படாத. அவங்க ஏதாவது சொல்லிண்டுப் போகட்டம், விடு. மனுஷங்கன்னா நாலு விதமாத்தான் இருப்பாங்க… என்ன சாப்பிட்டே, எலேல இருந்ததையெல்லாம் வீணாக்காம சாப்டியா? எது பிடிச்சுது, சொல்லு!
பின்னர் பாரதி எழுதிய கவிதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார் என நினைவு. கொஞ்சமாகவாவது ஆசுவாசமாக இருந்தது. (எந்த ஒரு சமயத்திற்கும், அதற்கேற்ற ஒரு பாரதி வரியை, வைத்திருக்கிறார் என் அம்மா, இப்போதும்! அல்லது ஒரு கர்னாடக சங்கீதப் பாட்டை வைத்திருப்பார். எனக்கு இதில் மாளா ஆச்சரியம்தான்.)
-=-=-=-=-=-=
சரி, உணவை வீணடித்த, வீணடிப்பதை உயர்த்திப் பிடித்த என் உறவினர்கள் பக்கம் வருவோம்.
… பொய் சொல்லவில்லை. சுமார் 25 வருடங்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினைகள், பரிதாபமான நிகழ்வுகள். பின் என் தாய்மாமன் கடும் நோய்களால் அவதிப்பட்டு, சரியாகச் சாப்பிடவே முடியாமல், உடலில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொன்றாக வரிசையாகப் பணி புரியாமல் நின்று – கடைசி வாரங்களில் ஒன்றுமே சாப்பிட முடியாமல் இறந்தார். என் பெரியப்பாவும் அப்படியே. ஆமென்.
பல வருடங்கள் முன், இவர்கள் இறந்த செய்தி கேட்டதும் எனக்கு உடனே தோன்றியது – ஒழிந்தார்கள், அற்பர்கள்; பூமிக்குப் பாரமாக இருந்தவர்கள்.
இவ்வளவு வருடங்களுக்குப் பின் இந்நிகழ்வுகளை அசைபோடும்போதும், எனக்கு இவர்களைப் பற்றி அதே எண்ணம்தான். எனக்கு மனிதாபிமானமில்லை. நான் கருணை என்கிற ஊரிலேயே பிறக்கவில்லை. உண்மைதான்.
அலிஸ்டெய்ர் மெக்லீன் எழுதிய ‘த டார்க் க்ரூஸேடர்’ நாவலில் என நினைக்கிறேன் — அதில் ஒரு வரி வரும்: Those who deserve to die, die the death they deserve – என்பது போல. முதலில் இவ்வரியைப் படித்தபோது, என்னடா இது வார்த்தை ஜாலம் – நாமெல்லாம் பிறந்தால் எப்படியும் சாகப் போகிறவர்கள்தானே என்று தோன்றியது – இன்னொரு முறை படித்தபோதுதான் சரியாகப் புரிந்தது.
-0-0-0-0-0-0-
… நான் அவளை இக்காலங்களில் நம்பாது இருக்கலாம் – ஆனால், பேயவள் காண் எங்கள் அன்னை, அன்னலக்ஷ்மி, காளியாக நின்று கொல்வாள்.
“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால், போவான் போவான் ஐயோ வென்று போவான்!” ஆம்.
நல்ல காலம் வருகுது?? ஓ, அப்படியா என்ன?
-0-0-0-0-0-
’உணவை வீணடிப்பது’ குறித்த அடுத்த தவணையில் – பெங்களூர் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடந்தவை பற்றி…
முந்தைய பதிவு: உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே) 03/10/2013
October 28, 2013 at 10:45
உங்களை புகழ்ச்சி செய்வதற்காக இதை எழுதவில்லை எட்டு வயசுலேயே என்ன ஒரு விவேக புத்தி சார் உங்களுக்கு.
“விளையும் பெயர் முளையிலேயே தெரியும்”
October 29, 2013 at 11:07
அய்யா சேஷகிரி அவர்களே!
உண்மைதான். எனக்குச் சின்ன வயதில் (அதாவது, பிறந்தவுடன்) வைத்த பெயரைத் தான் இன்றுவரை வைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? :-)
இன்னமும் எனக்கு, அதே முளைக்கும்போது வைத்த பெயர்தான், என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
(மன்னிப்பீர்களா?)
October 30, 2013 at 09:32
‘இயல்பாக’ இருப்பதிலே என்ன புகழ்ச்சி? நான்தான் தவறுதலாக எழுதி விட்டேன்.மன்னிக்கவும்.
November 27, 2020 at 08:36
[…] உணவுவகைகளைப் பற்றிய சில அக்கால நினைவுகள் […]