உணவை வீணடிப்பது (தகவல் தொழில்நுட்ப ஸ்டைல்)…

October 28, 2013

-0-0-0-0-0-

இந்தப் பதிவு – இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளின்…

… தொடர்ச்சி – மூன்றாம் நிகழ்வு:

மற்ற இரண்டு நிகழ்வுகள் பெங்களூரில் நடந்தன.  இது அவற்றில் ஒன்று,

1996 என நினைவு – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு நிறுவனம் – சிறிய, ஆனால் அதி தொழில்நுட்ப முனைவு.

மூன்றாவது மாடியில் அனைவருக்கும், ஒவ்வொரு நாளும் தரமான மதிய உணவு. கைக்குத்தலரிசிச் சோறு. தமிழ் நாட்டுச் சாம்பார் – போன்றவைகளுடன் கூடிய சத்தான உணவு. அற்ப மசாலாக்களும், பூரிக்களும், எண்ணெய் மிதக்கும் பிலாவ் சோறும் கிடையவே கிடையாது. சுமார் 30 பேர்கள் மட்டுமே இருந்ததால் அதுவும் அது ஒரு ஒரு மென்பொருள் வஸ்து (software products) தயாரிக்கும் நிறுவனமாக இருந்ததால், மேலதிகமாக எங்கள் வஸ்துவை, அதன் கருத்துப்பொருளை / கட்டமைப்பு சார்ந்து மட்டுமே நாங்கள் ஏற்கெனவே விற்றுவிட்டிருந்ததால் – எங்களால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செவ்வனேசெய்ய முடிந்தது – மதிய உணவு, அலுவலக உள் அலங்கரிப்பு உட்பட. எங்கள் தொடங்கிகள்-குழுவில் இருந்த அனைவரும், மிகுந்த முனைப்புடன் இருந்தோம்… எவ்வளவோ கனவுகள். பல நிறைவேறினவும் கூட.

ஒரு தமிழ் இளைஞன் (ஆர்இஸி பையன்; தூத்துக்குடிக்காரன்) என் குழுவில் இருந்தான். பொதுவாக ஓரளவுக்காவது முன் அனுபவம் இல்லாதவர்களை நான் சேர்த்திக் கொள்ள மாட்டேன். ஆனால், இவனை நண்பர் ஒருவர் பரிந்துரைத்திருந்தார் – ஆக, கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என நான் அவனைச் சேர்த்திக் கொண்டேன்; குழுவில் என்னையும் சேர்த்து ஆறு பேர் மட்டுமே, அவன், ஒரு கற்றுக்குட்டியாக. ஆனால் ஒரளவு சூட்டிகையான பையனாகத்தான் தோன்றினான். கொஞ்சம் அளவுக்கு மேலதிகமான தன்னம்பிக்கை இருந்தது, செய்ய எத்தனிப்பதற்கும் செய்கைக்கும் நடுவில் கொஞ்சம் இடைவெளி அதிகம். அதனால் என்ன, அவனுக்கு அது முதல் வேலை, அனுபவங்களைச் சார்ந்து அவன் கற்றுக் கொள்வான் என விட்டு விட்டேன்.

பொதுவாக, கல்லூரிகளிலிருந்து வெளியே வருபவர்களில் பலருக்கு இந்தப் பிரச்சினைதான். ஆனால் வெகுசிலர் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டுவிடுவார்கள். மிகப் பலர் அயர்ச்சியளிக்கும் சராசரியினர் – அப்படியிருக்க மாட்டார்கள் – எதற்கெடுத்தாலும் வெகு நேரம் எடுத்துக் கொள்வார்கள், சிரத்தையும் இருக்காது. இன்னமும் கொஞ்ச வெகுசிலரிடத்தில் வியக்கவைக்கும் மொண்ணைத்தனமிருக்கும் – இவர்கள் மனிதர்களா அல்லது செவ்வாய் கிரக கிரகச்சாரங்களா என்று தெரிந்து கொள்வதே பெரிய விஷயம். எனக்குப் பின்னிரண்டு ஜாதிகளை வைத்துக் கொண்டு மாரடிக்க முடியாது – ஆகவே, அந்த முதல் வெகுசிலர்களில் சிலரைப் பிடித்து கபளீகரம் செய்துவிடுவேன்.

சரி, நம் இளைஞனிடம் வருவோம்.  இந்தப் பையனுக்கு, வேலையிலும் அவ்வளவு செய்நேர்த்தியுடன் செய்யும் மனப்பான்மையில்லை – வேலைக்குச் சேர்த்திக் கொண்டவுடன் என்னவோ அவனுக்கு, குழுவில் சேர்வதற்குத் தகுதியிருக்கிறது என்றே நினைத்துவிட்டான் போலும், மூன்று மாதங்களுக்குப் பின்னும், பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தாலும் எதனையும் முழுவதும் கற்றுக் கொள்ளமுடியாதபடிக்கான ஒரு அடிப்படை எதிர்ப்புணர்ச்சி அவனிடம் இருந்தது. அந்த அற்புத நடிகை மனோரமா அவர்கள் உப்புமா செய்ய முயல்வதைப் போல, ஆ தெரியுமே, இப்போதே செய்கிறேன் என்பான்.  ஆனால் அவனால் முடியாது… (இந்த உப்புமா தயாரிக்க, சமையல் செய்யத் தெரியாத, ஆனால் அதைக் காண்பித்துக் கொள்ள விரும்பாத மனோரமா அவர்கள் – எல்லாம் தெரியும், ஆனா இது மட்டும் தான் தெரியாது –  என தனக்குச் சொல்லிக் கொடுக்க முனைபவரிடம் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்; படம் பெயர் நினைவில் இல்லை)    [29 அக்டோபர் குறிப்பு: என்ன அநியாயம், இது மனோரமா இல்லையாம். இரண்டு குயுக்திக்காரர்கள் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்! ஐயகோ! இதைக் கேட்பாரில்லையா!!]

… இருந்தாலும், இப்போது யோசித்தால், முதலுக்கே மோசமில்லை. நிச்சயம் இந்தப் பையன், ஒரு மொண்ணை ஆசாமியில்லை. டன்னிங்-க்ரூகர் விளைவின் ஒரு எடுத்துக்காட்டு – ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் தேறிவிடுவான் என்ற ஒரு நம்பிக்கை கொஞ்சம் இருந்தது; மேலும் அவன் ஒரு தமிழிளைஞன், முதல் வேலை ஆசாமி, சின்னப் பையன் – ஆகவே, இவனை விட்டுக் கொடுக்கக் கூடாதென்று நினைத்தேன். நிறுவனத்தில் இருந்த முப்பத்திச் சொச்சம் பேர்களில் நாங்கள் இருவர் தான் தமிழர்கள்… இவன் ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஆள்வேறு.

-0-0-0-0-0-0-0-

அந்நிறுவனத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரே சமயத்தில் தான் மதிய உணவுக்காகச் செல்வோம். அன்றும் அப்படித்தான்.

அது பஃபே வழி  ‘தன் கையே தனக்குதவி’ சொந்தச் சாப்பாடுப் பரிமாரிக்கொள்ளல் முறைதான்; இந்தப் பையன், வரிசையில் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் – அள்ளி, அள்ளி உணவைப் போட்டுக் கொண்டான். உண்மையில் இவன் எடுத்துக்கொண்ட உணவின் அளவைப் பார்த்து நான் மலைத்தாலும், அவன் கொஞ்சம் வாட்டசாட்டமான இளைஞன்தானே, நல்ல பசியாக இருக்கும் என எனக்குச் சொல்லிக் கொண்டேன். அவன் உட்கார்ந்த மேஜையில் அவனுக்கெதிரே உட்கார்ந்து கொண்டேன்.

எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்ட பின், பாதித் தட்டை முடித்தபின் – பத்து நிமிடத்தில் எழுந்து கொண்டான். நான் அவனைக் கேட்டேன் – ஏதாவது உடம்பு சரியில்லையா? அல்லது உணவு பிடிக்கவில்லையா? என்ன பிரச்சினை? இவ்வளவு சாப்பாடு மிச்சமிருக்கிறதே!

அவன் சொன்னான் – நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான்.

தம்பி – அப்படியென்றால், நீ கொஞ்சம் கொஞ்சம் சுவை பார்த்து விட்டு, தேவையானதைத் திரும்பிப் பரிமாறும்மேஜைக்குப் போய் எடுத்துக் கொள்ளலாமே? ஏன் உணவை வீணாக்கவேண்டும்?

‘…’

அடுத்த நாள்: அதே கதை. நான் முன்னமேயே வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவன் எனக்கு எதிரில் இன்னொரு மேஜையில் நான் உட்கார்ந்த திசைக்கு நேரெதிரே, நான் பார்க்கும்படி உட்கார்ந்து கொண்டு, அள்ளிக் கொண்டுவந்த உணவை வீணடித்தான்.

மதிய உணவுக்குப் பின் அவன் இடம் சென்று, சொன்னேன் – தம்பி, இப்படிச் செய்யாதே. சாப்பாடை தேவைமெனக்கெட்டு வீணடிக்காமல் இருப்பது ஒரு அடிப்படை அறம். இதுவரை செய்தது போகட்டும். இனிமேல் செய்யாதே, சரியா? இப்படி விட்டெறியப் பட்ட உணவை, கேடரர்கள் குப்பையில்தான் போடுவார்கள் – ஆனால், மீதமாகிய உணவு பரிமாறும் பாத்திரத்திலேயே இருந்தால், அவர்கள் அதனை வேறு யாருக்காவது கொடுக்க முடியுமல்லவா? வேறு யாராவது பசியாறுவார்கள் அல்லவா? கொஞ்சம் யோசிக்கலாமே.

‘…’

அடுத்த நாள்: நான் சாப்பிட வருவதைப் பார்த்தவுடன், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தது போல இருந்தவன், சீக்கிரமாக நடந்து வந்து, எனக்கு முன்னால், வரிசையில் நின்று கொண்டான். அன்றும், அள்ளிஅள்ளிப் போட்டுக் கொண்டான். முன்னிரு நாட்களை விட அதிகமாக வேறு. போட்டுக் கொண்ட பின்னர், வெற்றிப் பெருமிதத்துடன் என்னை ஒரு பார்வை வேறு பார்த்தான். = “ஒன்னால முடிஞ்சதப் பண்ணிக்கோ!”

மதிய உணவுக்குப் பின் அந்த உடுப்பிக்கார கேடரருடன் பேசினேன். அவர் கண்ணில் நீர் மல்கச் சொன்னது – தினமும் அந்தப் பையன் அப்படித்தான் செய்கிறான். நாங்கள் வேலைக்காரர்கள். எங்களால் என்ன சொல்ல முடியும். எல்லாம் அன்னபூர்ணேஸ்வரி பார்த்துக் கொள்வாள். …

மதியம் திரும்பி அந்தப் பையனிடம் சென்றேன். ‘ஹாட் மெயில்’ பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் இப்படிச் செய்கிறாய் என்றேன். உனக்கு என்ன கோபம் என்று கேட்டேன். அவன் சொன்னான் – நான் சாப்பிடும் சாப்பாட்டிற்காக, என் சம்பளத்திலிருந்துதானே பணம் எடுத்துக் கொள்கிறீர்கள்? நான் விலை கொடுத்து வாங்கும் சாப்பாட்டை நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன். அதைப் பற்றி யாரும் என்னைக் கேட்க முடியாது.

தம்பி – உன்னிடமிருந்து மதிய உணவிற்காக, நம் நிறுவனம் பெற்றுக் கொள்வது தினம் 15 ரூபாய் மட்டுமே. ஆனால் சாப்பாட்டிற்கு நம் நிறுவனம் கொடுப்பது 40 ரூபாய். எப்படி இருந்தாலும், நீ முழு அடக்கவிலையே கொடுத்தாலும் கூட –  உணவை, அற்ப காரணங்கள் சொல்லி வீணடிப்பது சரியில்லை.

அவன் பதில்: அப்படியென்றால் எனக்கு வேறு வேலை பார்த்துக் கொள்ள நேரிடும்.

நான்: சரி, இளைஞனே.

…என்று சொல்லிவிட்டு, நேராக நிறுவனத்தின் மனிதவளமேம்பாடு (human resources development) பெண்மணியிடம் போய், அந்தப் பையனின் கணக்கை உடனடியாக முடித்து, அவனுக்கு அன்றுவரை கொடுக்கவேண்டிய சம்பளத்திற்கான + முன்னறிவிப்புக்கான இரண்டுமாத சம்பளத்திற்கான காசோலை, சான்றிதழ்கள், வருமானவரி பிடிப்புக்கான சான்றிதழ், ப்ரொவிடென்ட் ஃபன்ட் கடிதம் சகிதம், தயாரித்து வைக்கச் சொன்னேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவை தயாரானதும் அவற்றை ஒரு உறையிலிட்டு, வாசலில் இருந்த காவல்காரரிடம் கொடுத்து, அந்தப் பையன், மாலை வெளியே போகும்போது அவனிடம் அதனைக் கொடுத்து விடச் சொன்னேன்.

-0-0-0-0-0-

அடுத்தநாள்: காலை பத்து மணிக்கு அந்த பையன் வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார்கள் – ”உங்களுடன் தனியாகப் பேசவேண்டும். ஒரு பேச்சுக்குத்தான், வேறு வேலை பார்த்துக் கொள்வதாகச் சொன்னேன், ஏதாவது அவமரியாதையாகப் பேசியிருந்தால் மன்னியுங்கள்.”

”தம்பி – எனக்குப் பிரச்சினை என்னுடன் அவமரியாதையாகப் பேசியது பற்றியல்ல; உணவை அவமரியாதை செய்ததுதான்.”

”ஆஃப்டெரால் உணவை வீசியதற்கா இவ்வளவு பெரிய தண்டனை?”

“தம்பி, இது தண்டனையில்லை. உனக்கு ஒரு படிப்பினை. அவ்வளவுதான். உன் அடுத்தவேலைக்கு என் நல்வாழ்த்துக்கள்.”

“எனக்கு வேலை திரும்பக் கொடுக்க முடியுமா?”

“முடியாது. என் குழுவிற்கு நீ தேவையில்லை.”

-0-0-0-0-0-

அன்றிரவு, அந்தப் பையனை பரிந்துரைத்த நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு; “உன்னைப் போன்ற ஜாதி வெறியனை நான் பார்த்ததே இல்லை. இனிமேல் நீயும் நானும் நண்பர்களே இல்லை.” தொலைபேசியை வைத்துவிட்டார்.

நான் திகைத்துவிட்டேன். கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. திரும்ப அழைத்து ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கலாமா என்று நினைத்தவன், அதைக் கைவிட்டேன்.  பின்னர் இரண்டுமூன்று முறைமின்னஞ்சலில் தொடர்பு கொண்டார் – ஆனால் நான் பதிலனுப்பவில்லை. ஆக, அவரும் நானும் நண்பர்களாக இல்லாமல் ஆகி சுமார் 18 வருடங்களாகின்றன. பாதகமில்லைதான்.

-0-0-0-0-0-0-

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் இரவு 9 மணிக்கு, தூத்துக்குடியிலிருந்து தொலைபேசி. பொதுவாக, நான் இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியை எடுக்கமாட்டேன், யார் கூப்பிட்டாலும் சரி. ஆனால் அன்று ஏதோ படித்துக்கொண்டிருந்த சுவாரசியத்தில் எடுத்துவிட்டேன்.

ஏசியது அந்தப் பையனின் தகப்பனார் – இது எனக்கு உடனே புரியவில்லை என்றாலும்! ஆரம்பிக்கும்போதே ஏகவசனத்தில் பொங்கினார். டேய் என்னடா நெனச்சிட்ருக்க, பெரிய பிடுங்கின்னு நெனப்பா? நீ எம்டனா? — — என மேற்கொண்டு ஜாதி பெயர் சொல்லித் திட்டல்கள், என் தாயைக் குறித்து வசைகள். வார்த்தைகள் குழறிக் கொண்டு, உச்சஸ்தாயியில் வெளிவந்த வண்ணம் இருந்தன. எனக்கு, முதலில் இது யார், எதற்கு என்று ஒன்றும் புரியவில்லை. தொடர்பைத் துண்டித்தேன். மறுபடியும் மறுபடியும் அதே எண்ணிலிருந்து சுமார் 30 முறை முயற்சி செய்தார் அவர். நான் எடுக்கவில்லை.

அடுத்த நாள் – அலுவலகத்தில் எங்கள் தொலைபேசித்தட இணைப்பாளினியை (=டெலிஃபோன் ஆபரேட்டர்) — தூத்துக்குடி எஸ்டிடி எண்ணிலிருந்து எந்தத் தொலைபேசியழைப்பு வந்தாலும் எடுக்காதே எனச்சொல்லிவிட்டேன்.

இரவு, விடவில்லை தூத்துக்குடி. மறுபடியும் பத்துமுறை அவர் முயற்சி செய்தபின் எடுத்தேன்.

இந்த தடவை அவர், அவ்வளவு கத்தவில்லை. தொலைபேசியை நான் எடுத்தற்கே மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கிறேன். கடைசியில், ”தயவுசெய்து உதவி பண்ணுங்க சார். பையனோட முதல்வேலை சார். மனசொடிஞ்சி ஊருக்குத் திரும்பிவந்திருக்கான் சார்,” என்றார். “திரும்பி வேலைக்கு எடுத்துக்கோங்க.”

நான் சொன்னேன் – அய்யா, என்னால் அது முடியாது. உங்கள் மகனைத் திரும்பி எடுத்துக் கொள்ளும் பேச்சே இல்லை. ஆனால் என் நண்பர்களிடம் பரிந்துரைக்கிறேன் – உங்கள் பையன் முட்டாள் இல்லை, வேலை கிடைத்துவிடும். அவன் உங்களிடம் சொன்னானா, ஏன் வேலை போனது என்று?

அவர் கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னார் – நீங்கள் ஒரு ஹிந்து வெறியர், பார்ப்பனரல்லாதவர்களை வெறுப்பவர், உங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்றுதான் சொன்னான்.

பின் ஏன் என்னிடம் திரும்பி வேலை வேண்டும் என்று உங்களை விட்டுக் கேட்கிறான் உங்கள் பையன் – அதுவும் தானே கேட்காமல் உங்களை விட்டுக் கேட்கச் சொல்கிறான்? கொஞ்சம் அவனிடம் ஃபோனைக் கொடுங்கள், நானே பேசுகிறேன்…

அவன், அந்த இந்து நாயோட நான் ஏன் பேசணும் என்று சொல்வதும், அவன் அப்பா டேய் அப்படியெல்லாம் சொல்லாத என்று சொல்வதும் காதில் விழுந்தது.

தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தேன். இந்த ஹெலிகாப்டர் பெற்றோர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் விமோசனமே இல்லயென நினைத்துக் கொண்டேன்.

-0-0-0-0-0-0-0-

பங்கூர் ஃபொண்டேஷன்ஸ் எனும் கட்டுமான நிறுவனம் தன்னுடைய வர்த்தகத்தை விரிவு செய்து ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை சிலகாலம் முன் ஆரம்பித்திருந்தது. விப்ரோ நிறுவனத்தில் இருந்த சிலர் அதற்குப் போய், அந்த நிறுவனத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள் என நினைவு.

அதற்குப் பெயர் பிஎஃப்எல் ஸாஃப்ட்வேர், இதில் அப்போது இருந்த உச்சாணிக்காரர்களில் சிலர் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். (இந்த பிஎஃப்எல் ஸாஃப்ட்வேர் பின்னர், ஜெர்ரி ராவ் தயவில் எம்ஃபஸிஸ் ஆகி, உருமாறி, இப்போது ஹூலெட்-பேக்கர்ட் ஜோதியில் கலந்துவிட்டது என நினைக்கிறேன்).

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் அங்கிருந்த ஒரு நண்பரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு – ஏன் இந்தப் பையனை உன் குழுவை விட்டுத் துரத்தினாய்?

அந்தப் பையன் உன்னிடம் என்ன சொன்னான்.

நீ சரியில்லை என்றான். ஜாதிவெறி பிடித்தவன் என்றான்.

சரி, அவனுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்து விட்டாயா? உனக்கு என்ன வேண்டுமப்பா? என்னால் ரெஃபெரென்ஸ் கடிதாசியெல்லாம் கொடுக்க முடியாது. வேலைக்குச் சேர்த்து, நான்கு மாதங்கள் அவனுக்குப் பயிற்சிதான் அளித்திருக்கிறேன். அவ்வளவுதான். என்னைத் தொந்திரவு செய்யாதே.

இல்லை. இல்லை – ஒரு கடிதமும் வேண்டாம். ஆனால் உன்னிடம் என்ன பிரச்சினை? அதிசயமாக இருக்கிறது – நீ ஏதானும் கோபத்தில் அவனைத் திட்டினாயா என்ன? ஜாதி பேர் சொல்லி?? – ஒங்க ஊர் ஜாதி பாலிடிக்ஸே அலாதிதான…

இல்லையென்றேன். அவன் தெற்கத்திப் பையன், ஜாதி என்னவென்றெல்லாம் தெரியாது, அவசியமுமில்லை என்றேன்.

சரி, அவனை உன்னிடம் பேச அனுப்புகிறேன்; என்ன சொல்கிறான் எனப் பார்ப்போம்.. இந்தப் பையன்களை இப்போதே திருத்தா விட்டால் பின்னர் மிகவும் கஷ்டம், சரிதானே? இல்லையேல், நம் கஸ்டமர்களிடம் போய் பண்பாடில்லாமல் நடந்துகொண்டுவிடுவார்கள். அசிங்கமாகி விடும்.

ஹ்ம்ம் – ஆனால் எனக்கு அவனிடம் சொல்லவேண்டியது எதுவுமில்லை. ஏற்கனவே கஷ்டப் பட்டிருப்பான், புரிந்து கொண்டிருப்பான். வேலையில் சேர்த்திக் கொள்ளேன். பாவம். அவன் என்னைப் பற்றி என்ன சொல்லியிருந்தாலும் பரவாயில்லை – இதென்ன பெரிய விஷயம்.

இல்லையில்லை – இந்தப் பையன்களை இப்போதே சரிசெய்யாவிட்டால், அவர்களுக்கே கூட நல்லதில்லை. உன்னிடம் வந்து பேசச் சொல்கிறேன். அவனுக்கு வேலை நிச்சயம்.

சரி, உன் இஷ்டம் – நான் அவன் முகத்தைப் பார்த்தால் போதும். உடனே திருப்பியனுப்பி விடுகிறேன், சரியா? எங்களுக்கு வேலை கெடுபிடி ஜாஸ்தியாக இருக்கிறது வேறு. எங்கள் ப்ரோடக்டை எம்ஆர் செய்கிறோம், இந்தவாரம். என்னை மிகவும் தொந்திரவு செய்கிறாய்.

-0-0-0-0-0-0-0-

அந்தப் பையன், இரண்டு நாட்களுக்குப் பின் என் அலுவலகத்திற்கு வந்தான். முகமெல்லாம் வீங்கியிருந்தது. அழுதிருப்பான் போல.

கூட இரண்டு பெரியவர்கள் இருந்தார்கள் – நான் வரவேற்பரைக்கு வந்தவுடன் எழுந்து நின்றார்கள். எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அவர்களை ‘தயவு செய்து உட்காரச் சொல்லி’ அந்தப் பையனை உள்ளே அழைத்துச் சென்று, என்னுடைய இடத்தில் உட்காரச் சொல்லிவிட்டுப் பின் மறுபடியும் வரவேற்பறைக்குச் சென்றேன்.

இரண்டு பெரியவர்களும் கதர்ச் சட்டை, கதர் வேட்டி. அதில் ஒருவர் அந்தப் பையனின் அப்பா – பளிச்சென்று முகஜாடை தெரிந்தது.

இன்னொருவர் என்னிடம் பார்ப்பனக் கொச்சையில் பேச ஆரம்பித்தார். இவர்களுடைய தகப்பனார்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். அவர்களும் நண்பர்களாக இருந்தார்களாம். இவருக்கு தூத்துக்குடியில் பிஸினெஸ் – ரொம்ப நேர்மையானவர். நான் ஒரு ரிட்டையர்ட் ஆசிரியன். என் ஃப்ரென்டுக்குப் பிரச்சினை என்று வந்திருக்கிறேன். சார், அந்தப் பையன் தங்கம் – ஏதோ கோபத்தில பேசியிருப்பான்… சாருக்கு எந்த ஊர்?

அய்யா, நீங்கள் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. பையனுக்கு பிஎஃப்எல் நிறுவனத்தில் வேலையுத்தரவு தயாராக இருக்கிறது. உங்களுக்கு கஷ்டம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். இதற்காகவா அவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்? நான் அந்தப் பையனிடம் கொஞ்சம் பேசி அரை மணி நேரத்தில் அனுப்பி விடுகிறேன். நீங்கள் போகலாம். நீங்கள் வந்திருப்பது சரியில்லை. உங்களுக்கும் அலைச்சல். என்னை சார் என்று அழைக்காதீர்கள், பெரியவர்கள் நீங்கள். தயவுசெய்து கிளம்புங்கள்.

சார், பின் ஏன் அந்தக் கம்பெனியில் உங்களை பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்? கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்.

அய்யா – அது ஒரு எளிமையான விஷயம். நீங்கள் கவலைப் படாதீர்கள். உங்கள் பையனுக்கு வேலை அங்கு நிச்சயம். நான் உத்திரவாதம். இப்ப கிளம்புகிறீர்களா? இங்கே பக்கத்தில் ஜோதி நிவாஸ் என்று ஒரு நம்மூர் ஹோட்டல் பெயரில் ஒரு பெண்கள் கல்லூரி இருக்கிறது. அதுக்கு எதிரில் இருக்கிற ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டிருங்கள், நான் அந்தப் பையனை, அடுத்த அரைமணி நேரத்திற்குள் அங்கு வரச் சொல்கிறேன்.

சார், வீட்டில ஒரே பையன் சார் அவன்; செல்லம் ஜாஸ்தி. தவம் கெடந்து பொறந்த பையன் சார். முணுக்குனு கோச்சுப்பான், ஆனா மனசு தங்கம் சார். அந்தப் பையனை மன்னிச்சுருங்க… சொல்லுங்க நாடார்…

சார், என்னென்னவோ டெலிஃபோன்ல தவறாகப் பேசிவிட்டேன். என்னையும் மன்னிச்சுருங்க.

அய்யா, இதெல்லாம் ஒன்றுமில்லை. சார்கீரென்றெல்லாம் சொல்லாதீர்கள்… உங்களுக்குக் கோபம், திட்டினீர்கள். அவ்வளவுதான். எவ்வளவோ பேர் திட்டியிருக்கிறார்கள் இப்படி. எனக்கு உங்களுடன் பிணக்கு ஒன்றுமில்லை. உங்கள் மகன் உணவுக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தது தான் பிரச்சினை.

சார், அவனும் உங்களைக் கண்டபடி பேசிவிட்டான். அவனையும் தயவுசெய்து மன்னிச்சுடுங்க.

அய்யா, மன்னிப்பு கின்னிப்பு எல்லாம் வேண்டாம். எனக்கு இது பெர்ஸெனல் விஷயம் இல்லை. இது பிஸினெஸ்தான். நான் எடுத்த முடிவு, என் குழுவின் கட்டுக் கோப்பிற்காகத்தான். வெறுமனே வேலை வாங்கி சம்பளம் கொடுக்கிறது எனக்கு ஒத்து வராது. என்னுடைய நிறுவனத்தில், என் பார்வையில், தொழில்தர்மம் உள்ள நல்ல பிரஜைகளை, உருவாக்கவேண்டியதுதான் என் பணி. அவன் இப்போது என்னிடம் இல்லை – ஆக, அவனை நான் மன்னிச்சு ஒண்ணும் ஆக வேண்டியதில்லை, ஐயா. அவனும் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள். அவனுக்கு அங்கே பிஎஃப் எல்லில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது. நான் அதற்குக் குறுக்கே நிற்கவில்லை.

சார், நாடார்வாளுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்ததுன்னுதான் என்னை கூட்டிக்கொண்டு வந்தார். கொஞ்சம் உதவி பண்ணுங்க. நாடார் நாணயஸ்தர். பரோபகாரி. பையன் நான் தூக்கி வளர்த்த குழந்தை சார். அழறான் சார், பாவம்…. ஃபோன் போட்டு, என்னை உடனே கிளம்பி வரச் சொன்னான் சார்… இன்னிக்குக் காலம்பறதான் வந்தோம் சார்… பிராமணனுக்கு பிராமணன் உதவி செய்யக் கூடாதா?

ஹ்ம்ம் – நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? எனக்கு இப்படியெல்லாம் யாசிப்பது பிடிக்காது. நீங்கள் இருவரும் போகலாம். எனக்கு வேலை இருக்கிறது.

அவருக்குக் கொஞ்சம் வருத்தமாகி விட்டதுதான். எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, கோபமும் ஜிவ்வென்று ஏறிவிட்டது, என்ன செய்ய.

–0-0-0-0–

… அந்தப் பையனைப் பார்த்தேன். அவன் என் முகத்தையே பார்க்காமல் குனிந்துகொண்டு – நீங்கள் எனக்கு தயவுசெய்து அங்கு வேலை கிடைக்கும்படி உதவுங்கள் என்றான்.

நான் சொன்னேன் – நான் சும்மா உன்னை, உன் முகத்தைப் பார்ப்பதற்குத் தான் வரச் சொன்னேன். உன்னுடைய பணி உத்தரவு அங்கு தயாராக இருக்கிறது. நீ போகலாம்.

அவனால் நம்பமுடியவில்லை என நினைக்கிறேன் – ரொம்ப நன்றி ஆனால் தான் செய்தவை தவறுகள் என்றான். கோபத்தில் பொய் சொல்லியிருக்கக் கூடாதென்றான். தனக்கு நிறைய ‘ப்ராமின்’ நண்பர்கள் உண்டென்றான். தன் சர்ச்சின் பேஸ்டருடைய சகவாசத்தினால் தவறாகப் பேசிவிட்டேன் என்றான். அவர்தான், பிராம்மணர்கள் தங்களுக்கு மட்டும் படிப்பை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குக் கொடுக்காமல் அயோக்கியத்தனம் செய்தார்கள் – பெரியாரைப் படியென்று சொன்னார் என்றான்.

என்ன படித்தாயா என்றேன். படித்தேன், அவர்தான் என் குரு என்றான். அவர் எழுத்தெல்லாம் படித்தாயா? மரணசாஸனம் படித்தாயா? அவரைப் பற்றி என்ன நினைக்கிறாய்.

கொஞ்சம் போல படித்திருக்கிறேன் என்றான். ஆனால், அவர்தான் தமிழின் முழுமுதல் சிந்தனையாளரென்றான்.

என்ன மாயையில் இருக்கிறான் இந்தப் பையன் என நினைத்து மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டு – சரி. காப்பி / டீ ஏதாவது சாப்பிடுகிறாயா?

இல்லை. அந்தக் கேடரர் இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றான்.  வேலை நிச்சயம் கிடைத்துவிடுமல்லவா என்றான்.

ஈவெரா-வின் மரணசாஸனம் பற்றி, அதில் பார்ப்பனர்களைக் கரித்துக் கொட்டியிருப்பது பற்றி, அவனிடம் கேட்டு – ஏன் அவன், அப்படிப்பட்ட ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் —  எனக் கேட்கலாம் என்றெல்லாம் நினைத்தேன். கேட்கவில்லை. எனக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.

மேல்மாடியில் இருந்த உணவறைக்குச் சென்றோம். அவன் அவர் காலில் விழப் போனான். ஆனால் அவனைத் தடுத்து, அந்த உடுப்பிக்காரர் – எங்களுக்குச் சரியாகப் புரியும்படியான டெலெக்ஸ் ரீதி கன்னடத்தில் – ‘ஊட்டா, திண்டி… தேவரு’ என்றார் கண்களை ஒத்திக் கொண்டு. ( = உணவு என்பது தெய்வம்) அவனை அரவணைத்து வாழ்த்துச் சொன்னார்.

இறங்கிப் போய்க்கொண்டிருந்தபோது, மறுபடியும், சார் கொஞ்சம் நீங்கள் எனக்கு தயவுசெய்து அங்கு வேலை கிடைக்கும்படி உதவுங்கள் என்றான். மறுபடியும் மறுபடியும் கேட்டான் – என் மேல கோவமா?

கோபம் இல்லை – வருத்தம்தான். ஏன் இப்படி உன் தகப்பனாரையும் அவர் நண்பரையும் அலைக்கழிக்கிறாய்? பையா, உன் வேலைக்கு உலை வைக்க நான் முயலவில்லை. உன் முகத்தை ஒருமுறை பார்க்கவேண்டும் எனத் தோன்றியது, அவ்வளவுதான். அங்கு உனக்கு பணியுத்தரவு காத்துக் கொண்டிருக்கிறது. நீ போகலாம்.

நிஜமாவா சார்? (இப்படி இவன் கேட்டவுடன், இவனுடைய மன்னிப்புக் கோரல்களின் நேர்மை பற்றி எனக்குச் சந்தேகம் எழுந்தது)

உணர்ச்சி வசப் பட்டு, சார், நீங்க எப்போ ஒரு தனி நிறுவனம் ஆரம்பிச்சாலும், என்னை அதில் முதல் ஆளாக வேலைக்குச் சேர்த்திக் கொள்ளவேண்டும் என்றான். சம்பளமே கொடுக்காட்டாலும் பரவாயில்லை.

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அற்பப் பொய் சொல்லவிருப்பமில்லை. உண்மையைச் சொல்லவும் அவசியமில்லை. சிரித்துக் கொண்டே முதுகில் தட்டிக் கொடுத்து, பைபை சொன்னேன்.

-0-0-0-0-0-0-0-

அந்தப் பையனுக்கு பிஎஃப்எல் வேலை கொடுத்து, பின்னர், அந்த ‘Y2K பிரச்சினையை விட்டோமா பார்’ குப்பைக் குமாஸ்தாப் ப்ரொக்ராமர் அலையில் அமெரிக்கா போனான் என நினைவு.

சில காலம் செப்டெம்பர் 5 வந்தால் ‘ஹேப்பி டீச்சர்ஸ் டே’ வகையறா குப்பை மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் எனக்கு இம்மாதிரி நாட்களை, உள்ளீடற்று வெறுமனே கொண்டாடுவதில், உச்சாடனங்களில், சடங்குகளில் நம்பிக்கையேயில்லாத காரணத்தால், பதில் போடவே மாட்டேன். ஆக, கொஞ்சம் கொஞ்சமாக, தொடர்பு அருகிப் போனது. பாதகமில்லைதான்.

ஆனாலும், அவன்,  உணவை அதற்குரிய மரியாதையுடன் இப்போதும் அணுகிக் கொண்டிருப்பான் என்பது என் நம்பிக்கை.

சுபம்.

மிக முக்கியமான குறிப்பு: நான்காவது நிகழ்ச்சியை எழுதப் போவதில்லை. ஆகவே, நீங்கள் சாதாரணமாக மூச்சு விட ஆரம்பிக்கலாம்.  8-)

தொடர்புள்ள பதிவுகள்:

13 Responses to “உணவை வீணடிப்பது (தகவல் தொழில்நுட்ப ஸ்டைல்)…”


  1. True to the core….

  2. Haris Says:

    really inspiring…thanks a lot

  3. Anonymous Says:

    Antha padam : Arivaali. Nadigai Muthulakshmi. Manorama illai

    • ramasami Says:

      Thanks for the correction.

      I only remember that particular hilarious sequence – and I saw it when I was a little boy – hence the memory lapse, if it is a lapse. But let it continue to be a reference to my dear Manorama in the post. I love her. (whoever comes this far in the post, will know this detail anyway via your correction – and for the rest, it does not matter) 8-)

  4. சான்றோன் Says:

    ஐயா ……ஒரு சிறு திருத்தம்……

    அந்த நடிகை மனோரமா அல்ல…..டி.பி .முத்துலட்சுமி…..படம் : அறிவாளி .உடன் நடித்தவர் கே.[ டனால் ] தங்கவேலு….

    [ தமிழ் கூறும் நல்லுலகுக்கு என்னால் இயன்ற சேவை….முந்தைய மூன்று முதல்வர்களையும் , அடுத்த மூன்று முதல்வர்களையும் சினிமாவிலேயே தேர்வு செய்திருக்கும் , கல்தோன்றி , மண் தோன்றாக்கால‌த்தே முன் தோன்றி மூத்தகுடியில் பிறந்துவிட்டு , அப்பேர்க்கொத்த சினிமாவைப்பற்றிய தவறான தகவலை திருத்தவே சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்…]

    • ramasami Says:

      அய்யய்யோ! அய்யா சான்றோன் அவர்களே, திருத்திக் கொள்கிறேன். :-)

      கள் தோன்றி மப்பு தோன்றாக் காலத்திலிருந்தே இருந்துவரும் மூத்தகுடியான பெருங்குடிகாரத் தமிழகத்தின் மகாமகோ அதி உன்னதப் பண்பாட்டுக் கூறான திரைப்பட சமாச்சாரம் பற்றி, இனிமேல் எழுதவே மாட்டேன்.

      ஹ்ம்ம்… இல்லையில்லை. எழுதுவேன்.

      தமிழில் ஒருவன் இயங்க வேண்டுமென்றால், அது, தமிழகத்தின் அந்தக் கேடுகெட்ட திணையைச் சுற்றி மட்டும்தானே இயங்கவேண்டும்? ஒப்புக் கொள்கிறேன். கேகெதிணை = தமிழ்த் திரைப்படமும் அதனைச் சார்ந்ததும்.

      ஏதோ சின்னஞ்சிறு பிராயத்தில் பார்த்த படம், நினவிலிருந்து எழுதினேன். ஐயன்மீர் பொறுத்தருளவும். இனிமேல் இப்படி எழுதவில்லை சரியா? ஒரு அனாமதேயம் கூட இந்த திருத்தத்தைச் சொல்லியிருக்கிறார்.

      ஆனாலும் எனக்கு இது, என்னருமைக் காதலி மனோரமா அவர்கள் நடித்தது போலத்தான் தோன்றுகிறது.

      ஆக என்னைப் பொறுத்தவரை அந்த முத்துலட்சுமி அவர்கள் மனோரமாதான்.

      மேலும் நான் அறிவாளியல்லன். அரைவாளிதான், சரியா? ;-)

  5. சான்றோன் Says:

    தமிழாய்ந்த தமிழனுக்கே[!]உரிய இலக்கணப்படி , வடையை விட்டுவிட்டு துளையை எண்ணும் வேலையை [ கட்டுரையின் ஆதாரமான கருத்தை விட்டுவிட்டு அதில்வரும் சிறிய தவறைப்பிடித்துக்கொண்டு தொங்குவது ] செவ்வனே செய்தேன்……[ இம்மாதிரி வேலையை யார் செய்தாலும் நானும் அவர் தோழனே! ]……….

    மற்றபடி நான் என்னளவில் உணவை வீணடிப்பதை கடுமையாக எதிர்ப்பவன்……. முன்பெல்லாம் நண்பர்கள் கிண்டலடித்தே ஒரு வழி செய்துவிடுவார்கள் என்பதால் [ நான் சாப்பிட்ட இலை அவ்வள‌வு சுத்தமாக இருக்கும்] பெரும்பாலும் நண்பர்கள் , சம்பந்தகார வழிமுறை உறவினர்களுடன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன்….இன்றும் திருமணங்களுக்கு சென்றால் தாமதமாகத்தான் சாப்பிடசெல்வேன்……அப்போதுதான் இலைகளில் உணவு பறிமாறி வைக்கப்பட்டிருக்காது……. ஒவ்வொரு ஐட்டமாக பரிமாறும் நிலை வரும் வரை காத்திருப்பேன்….தேவையான அள‌வு
    மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுவேன்…….

    நம் பாரம்பரிய வழக்கப்படி உணவின் அருமை தெரியாமல் வீணடித்துவந்த என் குழந்தைகளை அரும்பாடுபட்டு வழிக்கு கொண்டுவந்துவிட்டேன்……அதற்கு நான் உபயோகப்படுத்தியது ஒரு உலகப்புகழ்[ !] பெற்ற புகைப்படம்…….[ ஒரு எத்தியோப்பிய [அல்லது சோமாலிய] குழந்தை சாகும் நிலையில் மடங்கி உட்கார்ந்திருக்கும்…அதன் சாவுக்காக அருகிலேயே ஒரு பினம்தின்னிக்கழுகு காத்திருக்கும்……அதை என் குழந்தைகளிடம் காட்டி விளக்கினேன்…… ஒருகைப்பிடி உணவுகிடைத்தால் கூட அந்தக்குழந்தை பிழைத்துக்கொள்ளும்…….உலகம் இப்படியெல்லாம் இருக்க நாம் உணவை வீணடித்தால் நமக்கும் அந்த கழுகுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன்……குழந்தைகள் புரிந்துகொண்டார்கள்……..அதுமுதல் உணவை வீணடிப்பதில்லை….என்னைப்போலவே என் குழந்தைகளும் கிண்டலடிக்கப்படுகிறார்கள்….. பரவாயில்லை……அவர்களுக்கு தெரிந்தது அவ்வள‌வுதான் என்று விட்டுவிடுகிறேன்

  6. poovannan73 Says:

    உணவை வீணாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்கும் நல்ல பதிவு.ஆனால் இதிலும் பெரியார் மீதான வன்மம் நுழைந்து விட்டதே

    சிக்கனம்,எந்த பொருளாக இருந்தாலும் வீணாக்குதலை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் அவர்.அவரை படித்ததால் கெட்டு குட்டிசுவராக போனவனோ என்ற எண்ணத்தில்
    உங்களின் ஏதாவது உண்மை உள்ளதா

    சமைக்கப்பட்ட உணவு மட்டும் தான் உணவு போல எண்ணுவது வியப்பு தான்.தினமும் பாலபிஷேகம் என்று வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால்,லட்சக்கணக்கான சூறை தேங்காய்கள்,யாகம் வளர்க்க ஊற்றப்படும் நெய்,உடைக்கப்படும் பூசணிக்காய்கள் எல்லாம் உணவு கிடையாதா

    சிறு குழப்பம் என்றாலும் என் தாயும்,தாத்தா பாட்டியும் சந்து பிள்ளையாருக்கு சூறை தேங்காய்,வடபழனி முருகனுக்கு பாலபிஷேகம் என்று வேண்டி கொள்வார்கள்.வாரம் இரு முறையாவது சூறை தேங்காய் ,மாதம் ஒரு முறையாவது பாலபிசேகம் இருக்கும்.பெரியாரை படிதததால்,இதை பின் தொடராததால் எவ்வளவு லிட்டர் பால் வீணாகாமல் தப்பித்தது,தேங்காய்கள் பாழாகாமல் பயன்படுகிறது என்று பார்த்தால் பெரியாரால் வீணாகாமல் காக்கப்படும் உணவுகளின் அளவு புரியும்

    சாப்பிடாமல் விடும் முருங்கை கீரை,தூது வேலை கீரை,நச்சுகொட்டை கீரை,முள்ளங்கி கீரை,மணத்தக்காளி கீரை,குப்பைமேனி கீரை,பலா கொட்டை எல்லாம் வீணாக்கப்படும் உணவுகள் தான்.இதில் கறி மீன் சாப்பிடுபவர்கள் எவ்வளவோ மேல்.ரத்தம்,தலை,கால்,குடல் எதையும் விட மாட்டார்கள்.

    • ramasami Says:

      வன்மம் என்பதை விட வருத்தம் என்று இருந்திருக்கலாமோ? :-)

      ஈவெரா அவர்களின் எழுத்துக்களைப் பெரும்பாலும் (~90%) படித்திருப்பவன் என்கிற முறையில், அவற்றைப் பற்றிப் பலருடன் (படித்தவர்களுடன் தான்) உரையாடியிருக்கிறவன் என்கிற முறையில், அவர் சிந்தனைகள் வளர்ச்சி பெறவேயில்லை என்பதை நான் உணரும் போது எனக்கு வருத்தம் தான்.

      இன்னொன்று: மனமுதிர்ச்சியோ சுயானுபவங்களோ அல்லது படிப்பறிவு கூடவோ இல்லாதவர்கள், இவரை – ஒரு முழுமுதல் தமிழ்ச் சிந்தனையாளர் என்று சொல்வது இன்னமும் வருத்தமாகவே இருக்கிறது. என்ன செய்வது சொல்லுங்கள்.

      உங்கள் வருகைக்கு நன்றி.

  7. rk Says:

    .””ஆனால் இதிலும் பெரியார் மீதான வன்மம் நுழைந்து விட்டதே”””..
    வன்மத்தை பற்றி பெரியாரியர்கள் பேசுவது நகை முரண் ..
    சுதந்திரத் தலைவர்கள் , தமிழ் அறிஞர்கள் , மாற்று கருத்து உடையவர்கள் மீது
    பெரியார், பெரியாரிய இயக்கங்கள் ,அனுதாபிகள் வைத்த கருத்துக்களை விடவா இது வன்மம் உடையது …

  8. ss Says:

    ஒடுக்கப்பட்ட மக்களின் கழுத்தை அறுக்கும் இந்தத் திட்டத்தை கருவிலேயே முறியடிக்கும் முயற்சியில் நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், பூகம்பப் புயலாக எழுந்து நின்று முறியடிக்க வேண்டும். குறிப்பாக கல்வி அமைச்சர் பதவி என்பது உயர் ஜாதியினரிடமே இருக்கவே கூடாது என்கிற அளவுக்கும் பிரச்சினையை முழு வீச்சில் முடுக்கி விட வேண்டும். See the last line… This was the article from viduthalai… If Ram’s writings are venomous… I wonder what will be people’s comments on the last line…

  9. poovannan73 Says:

    கடந்த இரண்டு நாட்களாக விளக்கு ஏற்ற வீணாகும் எண்ணெய் மட்டும் பல ஆயிரம் லிட்டர்களை தாண்டும்.இது எல்லாம் உணவு பொருள் வீனக்குதலில் வராதா.நூறு கிராம் வடிக்கப்பட்ட சாதத்தை வீணாக்கியதற்கு வேலை போகும் அளவிற்கு வரும் கோவம் இங்கு நைச்சியமாக ஒதுங்கி விடுவது ஞாயமா

    உனக்கேன் இந்த அக்கறை ,யாருக்கும் இல்லாத அக்கறை யென்று கேட்கிறீர்களா.இதில் ஏன் சுயநலமும் கலந்து இருக்கிறது.

    சரக்குக்கு சைடு டிஷ்ஷாக சாலட் சாப்பிடும் போது ,அந்த சால்டின் மீது எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் தடவி சாப்பிட ஒரு பாட்டிலில் எண்ணெய் வைத்திருந்தேன்.அதை எடுத்து கொண்டு விளக்கு ஏற்ற சென்ற என் மகளை பார்த்தவுடன் ஒரு கணம் இதயம் நின்று விட்டது.அதற்கு பதிலாக மனைவி எடுத்து கொடுத்த நல்லெண்ணெய் கிலோ 280 ரூபாய்.

    நாம் சாப்பிடாமல் வீணாக்கும் உணவு பொருட்களை சாப்பிட ஆரம்பித்தால் அனைவருக்கு உணவு கிடைக்க வைப்பதில் கடினம் இருக்காது

    வட மாநிலங்களில் வாழைப்பூ,வாழை தண்டு,பலவேறு கீரைகள் போன்றவற்றை யாரும் சாப்பிட மாட்டார்கள்.இங்கு சுரைக்காய்,மூங்கில் வேர் போன்றவற்றை உணவாக உட்கொள்பவர் வெகு சிலர். இயற்கையில் கிடைக்கும் பழங்கள்,காய்கறிகள்,இலைகள்,செடிகள் போன்றவற்றில் இருந்து உணவுகளை உருவாக்குவதில் சரியான கவனம் செலுத்தினால் உணவு இல்லை என்ற பேச்சே வராது.

    சமைப்பதற்காக வாங்கி வரப்பட்ட காய்கறிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் காய்கறிகள் வெட்டப்படும் போதே வீணாகிறது.

    மிக அதிக அளவில் உணவு பொருட்களை வீணாக்குபவர்கள் சமையல்காரர்களும் ,கடவுளுக்கு அபிசேகம் செய்பவர்களும் தான்.
    சரியான ருசி வர வேண்டும் என்று ஒதுக்கும் வெண்டைக்காய்,கத்திரிக்காய்,வெங்காயம் (சற்றே முற்றி இருந்தாலும்)போன்றவை வீணாக்குதலின் கீழ் வராதா.
    சாக்கலட் விளம்பரத்தில் வரும் ஒதுக்கப்பட்டதால் அழும் கோகோவின் கதை அனைத்து காய்கறிகளுக்கும் பொருந்தும்.இப்படி வீணாக்குபவர்கள் உணவு தெய்வம் எனபது நல்ல பொருத்தம்.உணவை அதிகம் வீணாக்குவது கடவுள் தானே


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: