கம்பன் அப்படி என்ன [மசுத்துக்கு] தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?
July 21, 2013
(அல்லது) “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”
ஆ! க ம் ப ன். % ^ # @ ! *& சும்பன்.
கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?
சரி. ஒப்புக் கொள்கிறேன். அவன் ஒன்றும் பெரியதாகச் செய்து கிழித்து விடவில்லைதான். நானும் கம்பராமாயணம் முழுக்கவெல்லாம் படித்துக கரைத்துக் குடித்தவனில்லை – ஆகவே என் அரைகுறைப் படிப்பு தந்த அதிகாரத்தில், அற்பகுஷியில், நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.
என்ன பெரியதாகப் புடுங்கி விட்டான் இந்தக் கொம்பன்? நேரடித் தன்மையும், புதிய பைந்தமிழ்ச் சொல்லாடல்களும் ( = ’ஜிங்குச்சான்’) கொண்டு வீரிட்டெழும் நம் திரைப்படப் பாடல் எழுத்தாளர்களின் வீரியத்துக்கும், ஆழத்துக்கும் வீச்சுக்கும் எதிரில் – இந்தக் கம்பன் எம்மாத்திரம்!
நம்மவர்கள் அடலேறுகள் போல் ஆர்பரித்து முன்னேறிச் சென்றால் – அவன் வீட்டிலிருந்து கட்டுத்தெறிக்க, விதிர்விதிர்த்து, தட்டுத்தடுமாறி ஓட விட மாட்டானா?
கட்டுத் தறியாவது, கவி பாடுவதாவது, காட்டுக்கோழிக் கறியாவது! ஆழி சூழ் உலகாம் – அண்டப் புளுகாம்…
இதெல்லாம் இன்னாடா? ரொம்ப ஊத்திக்கினு மானாவாரியா கத வுட்ரயே கம்பா!
வொங்க வூரு டாஸ்மாக்கு சரக்கு எப்டீ? மப்பு சுர்ருன்னு ஏறுமோ??
-0-0-0-0-0-
நீங்கள் ஒரு கவிஞர். தமிழ்க் கவிஞர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் கவிஞர். தமிழினம் என்ற ஒரு இனத்தில் பிறந்ததாக உணர்ந்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் கவிஞர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்று தமிழ்க் காற்றைச் சுவாசித்து, தமிழ் மூச்சு விட்டுக்கொண்டு, தமிழ்மூளை கொண்டு, தமிழ்ப்பெயர் கண்டு, தமிழ்ப்பணி செய்து, தமிழ்ப்பணம் சம்பாதித்து, தமிழ்ப் பெட்ரோலும், தமிழ் டீஸலும் கொண்டு ஓடும் தமிழ் வண்டிகளில் பயணம் செய்து, தமிழ்ச் சட்டையும், தமிழ்ப் பனியனும், தமிழ்க் கோமணமும் தரித்து, தமிழ்க் கால்சராயும் தமிழ் ஸிப்பும் போட்டுக் கொண்டு, தமிழ் ஸாம்ஸங் தொலைபேசியில், தமிழ் மின்காந்த அலைகளை உபயோகித்து, தமிழ் ஹல்லோ சொல்லிக்கொண்டு தமிழில் வளைய வருபவர்.
தமிழைப் பிற மொழிகளும், ‘கல்தோன்றி மண் தோன்றாக்காலம் தொட்டு’ தமிழர்களை மற்ற மொழிக் காரர்களும் அடக்கி ஓடுக்கி, தமிழகத்தின் வளமையைச் சூறையாடுபவதாக நம்புபவர். தமிழை அழித்தொழிக்க, தமிழர் பண்பாட்டை சீரழிக்க, தமிழனை நசுக்க — மாற்றார், இன விரோதிகள் ‘குறிப்பிட்ட சில சக்திகள்’ சதித்திட்டங்கள் பல போட்டு, தொடர்ந்து ஒருமித்துச் செயல் படுவதாக நினைத்து அங்கலாய்ப்பவர்.
தமிழன் ’களம்’ பல கண்டாலும் அந்தப் ‘பிறர்’ வந்து மாய்மாலம் செய்வதை, அதுவும் களப்-பிரர் காலத்திலிருந்தே இப்படி அயோக்கியத்தனம் நடப்பதை எண்ணிக் குமுறுபுவர்.
மேற்கண்ட தருக்க அநியாய லோகாயதச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு மேலே சென்று, கம்பன் – கற்புக்கரசி கண்ணகி பற்றி, நப்பின்னை, ஜி யு போப், பெரியார், கார்ல்மார்க்ஸ் (வயது 195, கம்யூனிஸ்ட்(!) ஆண்), கார்ல்மார்க்ஸ் (வயது 63, திமுக பெண்(!!)) பற்றியெல்லாம் எழுதாமல், போயும் போயும் அந்த ஆரியச் சதிகார அயோக்கிய ராமனின் காதையை ஏன் காப்பியடித்து எழுதினான் என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் ஒரு கேள்வி ஞானி (அல்லது ஞாநி) என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
உங்கள் தொண்டரடிப் பொடிகள், திரைப்படவுலகைக் கலக்குகலக்கோதிகலக்குக் கலக்கிக் கொண்டு புரட்சிகள் பல செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழனின் ரசனை உணர்ச்சியை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மிக அதிகமான உயரங்களை எட்ட வைக்கிறார்கள் – ஆனால், இவ்வுயரங்களில் நமக்கு மூச்சு முட்டுகிறது, மன்னிக்கவும்.
ஆனால் இந்தக் கம்பன்? என்ன கிழித்து விட்டான் இவன்? யோசித்தால், மிகச்சிறிய மூளை கொண்ட எனக்குமே கூடப் புரிகிறது – இந்த ஆளுக்கு ஒரு எழவு புதுக் கவிதையும் எழுதத் தெரியவில்லை. ஒரு சினிமாப் பாட்டுக் கூட எழுதத் துப்பில்லை. தன் வாழ்க்கையில் முன்னேறத் தெரியாத, கோடம்பாக்கத்துக்கு உங்கள் தலைமையில், உங்கள் பரிந்துரைப்படிக் காவடி எடுக்கத்தெரியாத இந்த ஆள், எப்படி ஐயா, பத்துகோடித் தமிழர்களின் ரசனையையும் மேம்படுத்த முடியும்? ஹ்ம்ம்… எனக்கும் இந்தக் கம்பனுடையதைப் பிடித்துக் கொண்டு இவ்வளவு காலம் தொங்கிக் கொண்டிருந்துவிட்டேனே என மிக வருத்தமாக இருக்கிறது. *ப்ச*
ஆனால் நல்லவேளை – உங்கள் பேச்சைக் கேட்டேனோ, பிழைத்தேனோ. இல்லாவிட்டால், இந்த வெட்டிக் கம்பப் பித்தும் பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் இத்யாதிகளின் அடிப்பொடிகளாகிய சில இளம்பித்தர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டத்திற்கு, அவசியம் சென்றிருப்பேன்.
இவர்களில் ஒருவருக்காவது உங்களளவு தமிழில், இலக்கியத்தில், புடம்போடப்பட்ட அறிவோ ஆழமோ வீச்சோ உள்ளனவா என்றால் இல்லவேயில்லை. பெரியார் அருளால், உங்களுடைய அறைகூவலைச் சரியான சமயத்தில் கேட்டேன்… நீங்களும் என்னைத் தடுத்தாட்கொண்டீர்கள். இல்லாவிடில்? நினைக்கவே படு பயங்கரமாக இருக்கிறது – அதல பாதாளத்தில் தலைகுப்புற விழ இரு்ந்தேன்! எல்லாம் வல்ல அந்தப் பெரியார்தான் உங்கள் ரூபத்தில் வந்து என்னைக் காப்பாற்றினார்.
உங்கலை வால்த்த வயதிள்ளை. வனங்கி மகில்கிறேண்!
… ஆனாலும் கவிஞரே, நீங்கள் இப்படி நினைப்பதைப் பார்த்தால், எனக்கும் மிகப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தமிழுடைய நிலைமையைப் பார்த்தால் இன்னமும் மிகமிகப் பரிதாபமாகவே இருக்கிறது. (இருந்தாலும் நான் தொடர்ந்து தமிழில் எழுதுகிறேன்; ஏதோ, தமிழை நசுக்குவதற்கான உலகளாவிய சதியில், அடியேனுடைய சிறிய பங்கு என வைத்துக் கொல்லுங்கல், வோக்கேவா??)
-0-0-0-0-0-
அந்தக் கிராமாந்திரத்தில் சிலருக்குத் தமிழ் என்றால் வெறி. ஆனால் அவர்கள் தமிழ் வெறியர்கள் இல்லை. வெறுப்பு வியாபாரிகள் இல்லை. பிரிவினைவாதிகளல்ல. களப் பிணியாளர்கள் இல்லை. மனோவியாதி பிடித்தவர்கள் இல்லை. தாம் நம்பாததைப் பிறர்க்கு போதிப்பவர்கள் அல்லர்.
அயோக்கிய இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். அவர்கள் சாதாரணமான, சந்தோஷமான, நேர்மையான, விதம்விதமான மனிதர்களே.
இவர்களில் சிலர் தன்னார்வக் காரர்கள். சிலர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகச் சார்பினர். சிலர் தொண்டு நிறுவனக் காரர்கள். ஆனால் அனைவருக்குள்ளும் ஊடாடும் இழை – தமிழ் மீதான தணியாத ஆர்வம். நமது பண்பாட்டுப் பொக்கிஷங்களின் மீது மதிப்பு.
இந்த மனிதர்கள், ’யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்’ என்று, தங்களுக்குப் பிடித்த தமிழ் இலக்கியங்களை, சுற்று வட்டாரக் கிராமங்களில், முதல் தலைமுறை படிப்பறிவு பெற்று ஓரளவுக்கு ஆர்வமிருக்கும் மக்கள் மத்தியில் (வியாழன் வட்டம் எனும் சிறு அமைப்பு சார்பில் என நினைவு) அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாலை வேளையில் (கடந்த ஒரு வருடமாக) கம்பராமாயணத்தைக் கையாண்டுகொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக, நம் இலக்கியங்களை (இதற்கு முந்தைய வருடம் சிலப்பதிகாரம்) இப்படி அணுகி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட கம்பராமாயண மாணவர்களில் பெரும்பாலோர் இளம் பெண்கள். சுற்று வட்டார தலித், வன்னியக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.
வெள்ளந்தித் தன்மையும் (பாட்டாளி மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற வெறுப்புவாதக் கட்சிகளையெல்லாம் மீறி) ஒருவர் மேல் ஒருவர் அன்பும் மதிப்பும் பிணைப்பும் கொண்டவர்கள். பொருளாதார ரீதியில் பின் தங்கி இருந்தாலும், மாளா வேலை அழுத்தங்கள் இருந்தாலும் இலக்கியங்களையும் நுண்கலைகளையும் நுகர முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்.
தன்னார்வ நிறுவனங்களின் முனைப்புகளினால் இவ்வட்டாரங்களில் கலை இலக்கிய ரசனை மேம்பட்டு வருகிறது. வாழ்க்கைத்தரங்களும், கல்வியூட்டல்களும், இயற்கை வளங்களும், பரஸ்பர அன்பும் மரியாதையும் பெருகிக் கொண்டு இருக்கின்றன.
-0-0-0-0-0-0-
நீங்கள் நினைப்பது சரிதான். இது நம் தமிழகத்திற்குச் சரியானதொன்று இல்லைதான். ஏன் இந்தத் தேவையற்ற கவைக்குதவாத நல்லிணக்கம்? ஏன் இந்த ஆரியச்சதிக் கம்பராமாயணத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்? ஏன் இந்தத் தேவையற்ற ரசனை? நம்முடைய அடுக்குமொழி பொறுக்கிநடை போதாதா?
பாவி ஜய் ஒருவர் மட்டுமே, இந்தக் கம்பராமாயணத்தை இடக்கைச் சுட்டு விரலால் தூக்கி எறிந்து விட முடியாதா?
’ஊக்கு ஒண்ணு கொக்கி போடுது…’ தர திரைப்படப் பாடல்கள் போதாதா?
இரண்டு விரல்களால் தேடித்தேடித் தட்டித் தட்டித் தட்டச்சு செய்ய முடிந்தவன் கூட மானாவாரியாக துபுக் கவிதைகள் எழுதுவது கூடப் போதாதா என்ன?
நம்முடைய நிலைமை இவ்வளவு சுபிட்சமாக இருக்கும் போது, இவர்கள் வியாழன் வட்டம் – சனி சதுரம் – செவ்வாய் செவ்வகம் என்று புற்றீசல் போலக் கிளம்பி – இந்தக் கம்பராமாயணப் படிப்பைப் பற்றி ஒரு கூட்டம் நடத்தி, சில பேச்சாளர்களைக் கம்பன் பற்றிப் பேசக் கூப்பிட்டு, ஒரு சுற்று வட்டார நடனவிற்பன்ன இளம்பெண்ணிற்கு – அதுவும் அது ஆரிய ஒடிஸ்ஸி நடனமுறைவேறு – விருது எல்லாம் கொடுக்கிறார்கள்! அதில் நீங்கள் பங்குபெறவேண்டிய கொடுமை வேறு!
பாவம் நீங்கள். உங்களை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.
-0-0-0-0-0-
சரி.
1. உங்களை நீங்களே கூப்பிட்டுக் கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள். இப்படி வந்து விட்டு, ”கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?” என்று பேச ஆரம்பித்தீர்கள். நான் பயந்தபடி நினைத்தேன், சபாஷ், இப்படி ஆரம்பித்து 180 டிகிரி திரும்பி கம்பராமாயணச் சுவையைப் பிட்டுப் பிட்டு வைத்து விடுவாரோ என்று! நமக்கு ஒரு நடிகர் சிவகுமார் அவர்கள் போதாதா என்று!
நல்லவேளை. நீங்கள் அப்படிச் செய்யாமல், நீங்கள் பிடித்த கழுதைக்கு ஐந்தேகால் என, பொதுவாக தமிழனின் இக்கால நிலைமையைப் பற்றி, இனம் அழிவதைப் பற்றி, தமிழன் இழந்த மானம் பற்றி, தேவையற்ற கம்பராமாயணம் பற்றி என்கிற ரீதியில்பேசினீர்கள். விருந்தாளியாக ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்து, பின் விருந்தோம்பல் செய்பவர்களை, பாடுபொருளை, மரியாதைக் குறைவாகப் பேசுவது எனும் நம் நடைமுறைத் தமிழர் பண்பை மீண்டும் நிலை நாட்டினீர்கள்! நன்றி.
ஊக்க போனஸாக – உங்களுடைய சொல்லாடல் மூலமாக, அரங்கில் இருந்த, கம்பனைப் பற்றி பேச இருந்த விற்பன்னர்களை அவமதித்தீர்கள். மிக்க நன்றி.
இந்த பண்பற்ற அவமதிப்பு விஷயத்தைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் எண்ணாத, முகச் சுணக்கம் காட்டாத அவர்களின் பண்பின் தரத்தைப் பற்றிய புரிதல்களை எனக்கு அளித்தீர்கள். மிக்க மிக்கமிக நன்றி. [’ரவி அண்ணா’ அவர்களும் அந்த கம்பராமாயண விற்பன்னர்களில் ஒருவர் – அவரும் அங்கே இருந்தார் – இவரைப் பற்றி நான் முன்னொரு பதிவில் எழுதியது: ’ரவி அண்ணா’ என்று வாஞ்சையுடன் அழைக்கப் படும் மதிப்புக்குரிய அ. வேதரத்னம் அவர்கள்: இவர் ‘சர்தார்’ வேதரத்தினம் பிள்ளை என்று சுதந்திரப் போராட்ட காலத்தில் அறியப்பட்ட மாமனிதரின் பேரர். தாயுமானவரின் பத்தாம் தலைமுறையினர் கடந்த சுமார் 67 வருடங்களாக, இவர் தாத்தா ஆரம்பித்த குருகுலம், வேதாரண்யத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது – இந்த அற்புத மனிதர்தான் இப்போது இதனை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். (நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் – எனக்கு 602 பெண் பிள்ளைகள் – ஆதரவற்ற அவர்கள் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் தங்கிப் படிக்கிறார்கள் – ஒரு நாளைக்கு 8 மூட்டை அரிசி தேவைப் படுகிறது- சுமார் 6000 என் பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள் ++ எனக்குக் கூட கண்ணில் நீர் மல்கி விட்டது. இவரல்லவோ உண்மையான களப்பணியாளர்! அவர் நன்கொடையெல்லாம் கேட்கவில்லை…) ராசாக்கள் ஆளும் இக்காலங்களில், இப்படிப்பட்ட மனிதர்களின் சமூக மேன்மைப் படுத்தல்களில் இல்லாத நேர்மையான அரசியலா? நெகிழ வைக்கிறது – இம்மனிதர்களின் நம்பிக்கையும் அரசியலும்.]
இப்படிப்பட்ட பல கல்யாணகுணங்களைக் கொண்ட பலரைத் தான், நீங்கள் அவமரியாதை செய்தீர்கள்.
நன்றாக வேண்டும் அவர்களுக்கு. இவர்கள் முகமூடியைக் கிழித்ததற்கு என் நன்றி பல, உங்களுக்கு.
2. ‘வியாழன் வட்ட’த்தைச் சேர்ந்த எளிய மக்கள், தங்களுடைய கம்ப ராமாயணம் பற்றிய கருத்துக்களை, அதிலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டதை, தங்களுக்குக் பிடித்ததைப் பற்றியெல்லாம் பேசினார்கள். அது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை உங்கள் உடல் மொழி மூலமாகவும், பின், உங்கள் உரை மூலமாகவும் தெளிவாக வெளிப்படுத்தினீர்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது – இவர்கள் இந்தக் கம்பராமாயணக் கந்தறகோளங்களை விட்டு விட்டு – அந்த நேரத்தில் ‘நாலு காசு சம்பாரிச்சால்,’ நம் தமிழ் மானம் காக்கப் படுமே, தமிழ் ஈழம் கிடைத்து விடுமே, இன்னமும் உங்கள் அடிப்பொடிகள் பாடல்கள் எழுதிய தமிழ்சினிமாக்கள் பலவற்றை அவர்கள் பார்க்கலாமே, வீடுபேறு பெறலாமே என்று… ஹ்ம்ம், விட்டு விடுங்கள், அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நம்முடைய சுத்த சுயம்பு திராவிட இனமான ஆட்சி முளைக்கும் போது கம்பனோடு சேர்த்து இவர்களையும் ஒழித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை – இல்லையா?
3. அந்தப் பெண்ணிற்கு, நடனமணிக்கு, விருதை உங்கள் திருக்கரங்களால் அளித்தீர்கள் – நாங்கள் அனைவரும் இறும்பூதடைந்தோம். அவர் உடல் நிறத்தைப் பார்த்து விட்டு, இவர் தலித் என முடிவு செய்தீர்கள். ’அம்பேட்கரின் பேத்தியே வா’ என்றீர்கள் – எனக்கு என் நண்பர் கருணாநிதி அவர்களின் ‘ நேருவின் மகளே வருக…’ நினைவுக்கு வந்து மயிர்க்கூச்செறிந்தது. பொதுவாக அண்ணாவின் தம்பிகள், கருணாநிதியின் உடன்பிறப்புகள், எம்ஜியாரின் ரத்தத்தின்ரத்தங்கள் போலச் சொல்லவில்லை நீங்கள். அவர் தலித், ஆகவே அம்பேட்கரின் பேத்தி எனும கோணத்திலிருந்து மட்டும் வந்தீர்கள். மேம்போக்காக, இந்த உடலமைப்பையும் நிறத்தையும் பார்த்து ஜாதியைத் தீர்மானம் செய்யும் அதீத ஜாதி வெறிஈடுபாடு, இதைவிட அழகாக, வேறு யாராலாவது வெளிக் கொணரக் கூடுமா என்று தெரியவில்லை. இதற்கும் நன்றி.
ஆனால், அவர் தலித் அல்லர்; ஆகவே அரங்கில் இருந்த சில தலித்களுக்கும் வன்னியர்களுக்கும் ஆச்சரியம், சிலருக்குக் கோபம் – ஏன் நீங்கள் இப்படிச் சொன்னீர்கள் என்று. அவர்களில் இரு இளைஞர்கள் ( நான் அழைத்துக் கொண்டு சென்றவர்கள் – ஒருவர் தலித், இன்னொருவர் வன்னியர்) பின்னர் என்னிடம் இதைப் பற்றிக் கேட்டபோது நான் – நீங்கள் பொதுவாக அப்படிச் சொன்னீர்கள், என்று பொய் சொன்னேன்; அம்பேட்கர் நம்ம எல்லாருக்கும் தலைவர் தான, நம் சட்டஅமைப்புக் குழுவுக்கெல்லாம் அவரு தான தலைவர், என்று மழுப்பினேன்; எது எப்படியோ – முனைந்து பேசி, ஜாதிப் ப்ரக்ஞை இல்லாத இந்த எளியமக்களை ’இப்படியும் பார்க்கலாமோ!’ என்கிற எதற்கெடுத்தாலும் ஜாதிப்பார்வை பார்க்க வைத்து விட்டீர்கள்! ஜாதி நல்லிணக்கத்துக்கும், தீண்டாமையொழிப்புக்கும் எதிராகவும், விடாமுயற்சியுடன், கூர்மையான மதியுடன் நீங்கள் பாடுபடுவதை நினைத்தால் எனக்குக் கண்கள் பனிக்கின்றன. இதயம் இனிக்கிறதும் கூட! ]
4. தமிழர்கள் தமிழ்ப் பெயர்கள் வைப்பதில்லை என்றும், மாதம் குறைந்தது பத்து ‘வெளிநாட்டில் வாழும்’ தமிழர்கள் உங்களிடம் விண்ணப்பித்து பரிந்துரை பெற்று, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ள முனைவதாகக் கொஞ்சம் பெருமையுடனே சொன்னீர்கள். உள்ளுர் தமிழர்கள் அப்படியில்லை என்கிற விஷயம் அதில் தொக்கி நிற்பதால் எனக்கு மிகவும் ஆசுவாசமாக இருந்தது.
இம்மாதிரி அற்ப விஷயங்களில் – மேலோட்டமாக ஐஸ்க்ரீம மாற்றங்களை, சுய அர்ப்பணிப்புடன் செய்வதில் நமக்கு நிகர் நாம் தாம்.
சொக்காய், ஜட்டி, கண்ணாடி, செல்ஃபோன், இன்டெர்நெட், மூச்சு, மூச்சா என்று அனைத்திலும் தமிழ் என்று நாம் காலத்தோடு பொருதி ஆரியச் சிந்தனைகளை எதிர்த்து, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று – நம்மைப் போன்றவர்கள் அலைந்து கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் – பாவம், தமிழ்ப் பொதுமக்களை – எந்தப் பொந்தில் எந்தத் தமிழோ என மட்டும் அவர்கள் அல்லாடும் படி வைத்துவிடவேண்டாம். பாவம், பிழைத்துப் போகட்டும் அவர்கள். என்ன சொல்கிறீர்கள்? நன்றி.
5. நடனமணி அவர்களின் ஆடலைப் பார்த்துவிட்டு, ஆடல் கண்ணகி எனும் தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதை(!) நினைவுக்கு வருவதாகச் சொல்லி , எந்த விதத் தொடர்புமில்லாமல், ஒரு எட்டு நிமிட நேரத்திற்கு உங்களுடைய சொந்தக் குரலில் உங்களுடைய கவிதையைப் படிப்பதை – ஒரே க்றிச்சிட்டபடி இருந்த ஒரு எழவும் புரியாத ஒலிப்பதிவை, ஒலிபரப்பினீர்கள்.
என்னுடைய வாழ் நாளில் இம்மாதிரி நரக வேதனையை நான் அனுபவித்ததில்லை என நினைத்தேன். என் இளைஞ நண்பர்களும் இதனை ஆமோதித்தனர். (ஒரு வழியாக, அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, சில நாட்களுக்குப் பின் என்னதான் அது இந்த ஆடல்கண்னகி கவிதை என்று பார்த்தால் – முந்தைய நரகத்தைவிட மிகமிகமிக மோசமான நரக வேதனை; ஆக எனக்கு தமிழில் கவிதை படிக்கும் ஆசையே போய்விட்டது. நன்றீ!)
… ஆனால் நீங்கள் (மட்டும்) தான் உங்களுடைய சொந்தக் குரலை செல்ஃபோன் – மைக் – ஸ்பீக்கர் வழியாக, மிகவும் அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள், கூட்டத்தில் இருந்த மற்றவரிகள் முகத்தில் ஈயாடவில்லை. ஆனால் நெளிந்து கொண்டிருந்தனர்.
கடைசியில், ஒரு வழியாக அது முடிந்தவுடன் “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?” என்று கேட்டீர்கள். நீங்களாகவே சிரித்துக் கொண்டீர்கள்.
ஆனால் – ஒருவர் கூட – ‘நீங்கள் அப்படியென்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டீர்கள்’ எனக் கேட்கவில்லை. அனைவருக்கும் அந்தக் கேள்வி கேட்காமலேயே பதில் புரிந்திருக்கும்.
ஆனால், நீங்கள் பழகுவதற்கு இனிமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பலபத்தாண்டுகளுக்கு முன்பு உங்களை அறிந்திருக்கிறேன் கூட… ஆனால், கூட்டத்தைப் பார்த்தால், மைக்-ஸ்பீக்கர்களைப் பார்த்தால் தான் பிரச்சினை வருமோ என்னவோ? ஹ்ம்ம்.
ஒரு பின்னிணைப்பு
உங்கள் கவிதைகளின் மகாமகோ ரசிகன் நான்.
குறிப்பாக, உங்கள் ஆடல் கண்ணகி கவிதையை, அதிலும் குறிப்பாக, கீழ்க்கண்டவை போல திரும்பித் திரும்பி உச்சாடனம் செய்யப் படும் வரிகளை… படு பீதியுடன் ரசித்தவன் நான்…
மகளே
அருமைக்
கண்ணகி
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடடி யம்மே
ஆடு
ஆடு
ஆடு!
எனக்குப் புல்லரிக்கிறது.
ஆகவே உங்கள் பாதார விந்தங்களில் உங்கள் கவிதையை அடியொற்றி எழுதிய என்னுடைய புதுக்கருக்குக் குலையாத பின்நவீனத்துவக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன். என்னை ஆசீர்வதியுங்கள். எனக்கும் சினிமாவில் பாட்டெழுத ஆசையாக இருக்கிறது. என்னால் பாவி ஜய் போன்றவர்களை விட நன்றாகவே எழுதமுடியும் என நம்பிக்கை உங்கள் அருளால் எனக்கு இருக்கிறது! எனக்கு ஒரு ‘சான்ஸ்’ வாங்கிக் கொடுப்பீர்களா?? உடனே உங்களைப் புகழ்ந்து ஒரு ‘தூக்கு’ எழுதி விடுகிறேன்…
நொண்டல் கழுதை
கழுதை?
ஓடு.
இல்லை. கவிதை!!
அய்யோ!
அய்யய்யோ!!
அம்மாடியோ!!!
ஓடு!
ஒடு!!
ஓடு!!!
ஓடு!!!!
தைகவி?
விதகை??
தைவிகை???
விகைத????
கதைவி?????
க வி தை.
க
வி
தை
க
விதை?
கவி
தை!
தை! தை!
ஆடு
ஆடு மனமே ஆடு
ஆடு (சீ, இது வேறு!)
ம்ம்ம்மே
ம்ம்ம் மே ம்ம் மே
கவி?
கதை
வி
தை
வி
க
கட்டெறும்பு!
(’நில் வா போ’ நகுலன் அவர்களின் ஆன்மா என்னை மன்னிக்குமா?)
பின்குறிப்பு: கம்பன் ஒழிக! கம்ப ராமாயணம் கொளுத்தப் படவேண்டும்!! கம்ப ராமாயண ரசனையைப் பரப்பும் திரியாவரங்களைத் தூக்கில் போடவேண்டும்!!! (கவிஞரே, திருப்தியா?)
பின்பின்குறிப்பு: இந்தக் கட்டுரைத் தலைப்பில் உள்ள ‘மசுத்துக்கு’ என்பதை நீங்கள் உபயோகிக்கவில்லை. ஆனால் உங்கள் இனமான நியாயாவேசத்தில், உடல்மொழியில் அது தொக்கி நின்றது.
பின்பின்பின்குறிப்பு: “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”
July 21, 2013 at 14:56
யாருங்க அது கம்பனைப்பற்றி இழிவாகப்பேசி உங்களை இப்படி பேயாட்டம் பேயாக அல்ல ஆடவைத்தது? சிரித்து சிரித்து வயறு புண்ணாகி விட்டது.
July 22, 2013 at 09:58
அந்த அறிவுக்கொழுந்து யார் என்பதை தெரிவித்திருக்கலாமே அய்யா…….? ஒரு க்ளூவாவது கொடுங்களேன்…………………………..[ இம்மாதிரி குப்பைகளே திரும்பிய பக்கமெல்லாம் தெரிவதால் யூகிப்பது கஷ்டமாக இருக்கிறது ]
July 22, 2013 at 10:51
https://twitter.com/Poet_Arivumathi
அறிவுமதி @Poet_Arivumathi 13 Mar, 2013
”மானத் தமிழினம் தூங்கிவிடாது மாணவர் எழுச்சிகள் தூங்கவிடாது..”
8-))))
இவர்தான்.
இவருடைய வலைப்பதிவுக்குச் சுட்டியு்ம் கூடக் கொடுத்திருக்கிறேனே!
July 23, 2013 at 12:01
நன்றி ஐயா…..கட்டுரையை படிக்கும் ஆர்வத்தில் இணைப்புகளை கவனிக்க மறந்து விட்டேன்………சில நல்ல சபைகளில் இது போன்ற வஸ்துக்களும் மேடையேறிவிடுவது துரதிர்ஷ்டவசமானது……