“டேய்! காட்ட வித்தே கள்ள குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டா…”

April 17, 2023

1

கடந்த இரண்டு வருடங்களாக பலப்பல உறவினர்களும் நண்பர்களும் (ஏன், ஒருகாலத்தில் என் குழுவில் இருந்த இளவயதுக்காரர்களும்) போய்ச் சேர்ந்த மணியம். ஏறத்தாழ மாதத்துக்கு இருவராவது இப்படி.

இதில் சிலர் வயதில் மிகவும் இளைய குடும்பஸ்தர்கள், வயிற்றெரிச்சல்;  இவ்விறப்புகளின் காரணங்களாக – சில விபத்துகள், சீனாக்கார கோவிட், சிலர் திடுதிப் மாரடைப்பு, சில குடிகாரக்கூவான்கள், பெருந்தீனிக்காரர்கள், வெகு சிலர் மூப்பின் காரணம்.

என்னுடன் அதேவருடம் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து முடித்தவர்கள்/பேட்ச்மேட்ஸ் 174 பேர் என நினைவு. அதில் 7 பேர் ஏற்கனவே காலி. சில நாட்கள் முன் ரீனெ அப்ரஹாம் போய்ச்சேர்ந்தான். இன்னொருவன் கடந்த மூன்று வருடங்களாகவோ என்னவோ தொடர்-கோமாவில் இருக்கிறான். அவன் குடும்பத்தினர் இன்னமும் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏறத்தாழ பெங்களூர், புதுச்சேரி, சென்னை வட்டாரங்களில் உள்ள அனைத்து எரியூட்டுமிடங்களுக்கும் சென்றாகி விட்டது. போய்ச் சேர்ந்தபின் என் பிணம் கூக்ள்மேப்ஸ் உதவியேயில்லாமல் ஆட்டொமெடிக்காகப் போய் உலைச் சிதையில் படுத்துவிடும் அளவுக்குப் பழக்கமாகி விட்டது.

ஏதேதோ மங்கல் நினைவுகள். நான் கொஞ்சம் திடமனதினன் தான் – நெகிழ்வாலஜியை ஏளனம் செய்பவன்தாம் – இருந்தாலும் வாழும் ஒவ்வொரு கணமும் பொன்னானது எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொள்கிறேன்.

ஏனெனில் கேர்லஸ் கேஸ்டனடா ஒரு நாவலில் ஒருமாதிரியாக எழுதியது போல, ~~”In the game of life where death is the hunter, my friend, there is no time to waste…”

2

நேற்று இன்னொரு பதின்மூன்றாம் நாள் சடங்கு. சுபஸ்வீகாரம்.

இவன் என்னுடைய அண்ணன் முறை. பெரியம்மாள் மகன். ஈரோடு பக்கத்துப் பெருந்துறைக்காரன். (நானும் பிறந்ததும் சிறிது அப்படியும் இப்படியும் வளர்ந்ததும் அங்கேதான்)

என்னுடைய  ஒரளவு சமவயது உறவுமுறையினரிடையே இவனிடம்தான் நான் பெருமதிப்பு வைத்திருந்தேன். இத்தனைக்கும் அவன் செய்யாத ரவுடித்தனம் இல்லை. 11 வயதில் வீட்டை விட்டு ‘ஓடிப் போய்’ பலப்பல வருடங்கள் அகப்படவேயில்லை… வெளியூர்களில் கோலிசோடா வண்டி தள்ளி விற்றிருக்கிறான். பஞ்சம் பிழைக்க எங்கோ வயற்காட்டில் வேலை செய்யப் போய் பெருச்சாளிக்கடி பட்டு பல காலம் மருத்துவமனையில் கழித்திருக்கிறான் – காலே வெட்டியெடுக்கப்படவேண்டியது, ஆனால் தப்பித்தான். பின்னர் ஏதோ பேக்கரியில், பின் ஹோட்டல்களில் எடுபிடி வேலை.

பெரும் எம்ஜிஆர் ‘வாத்தியார்’ ரசிகன். அற்புதமான குரல்வளம். விதம் விதமாகக் குரலை மாற்றி ஸிஎஸ்ஜெயராமன் போல நடுங்கும்குரலில், திருச்சி லோகநாதன், சந்திரபாபு, பிபிஸ்ரீநிவாஸ், டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன் என்று…  பாவி, வெறும் மெல்லிசைப் பாடகனாகவே பெரிய ஆளாக வந்திருக்கலாம். ஆனால்…

பின் எப்படியோ முட்டிமோதி எஸ்எஸ்எல்ஸி முடித்தான், ஒருமாதிரி ஒருவழியாக…

பலகாலம் பெருங்குடிகாரனாக இருந்திருக்கிறான். ஒரு குமாஸ்தா சம்பளத்தில் எப்படி இதையெல்லாம் மேனேஜ் செய்தான் என்பதே எனக்குச் சந்தேகம். பின்னர் ஓரளவுக்குச் சரியாகிவிட்டான் என்றாலும்… நடுவில் திருமணம், பிள்ளைகள் – குடும்பச் செலவுக்கு ஏதாவது பணம் கொடுத்தானா என்பதே சந்தேகம்…

ஆனால் அவன் மனது விசாலம். கருணை மிக்கவன். ஏழ்மையில் இருந்தாலும் யாராவது வந்து உதவி கேட்டால், கடன் வாங்கியாவது கொடுத்துவிடுவான். இதனாலும் அவன் குடும்பத்துக்கு அவன் கொடுத்த உபத்திரவம் பெரிது; பாவம், அவர்கள்.

அவனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள்… பெருந்துறை ஈரோடு பக்கம் சென்றால் வாரக்கணக்கில் நண்பர்களோடு செலவழிப்பான் – கொஞ்சம் பொறுப்பின்மைதான். “பம்ப்செட்ல குளிச்சு, பழையசோறு சாப்டுட்டு துண்ட விரிச்சு தோட்டத்துல மல்லாக்க படுக்கறதுதாண்டா சொகம்.”

இருந்த சொற்ப சொத்தையும் (பிதுரார்ஜிதம்; அவன் தகப்பனார் சில ஏக்கர் நிலபுலம் வைத்திருந்தார்) குடித்தோ தானம் கொடுத்தோ அழித்தான். வாழ்ந்து கெட்டவன் எனச் சொல்ல மாட்டேன் – ஆனால் சிறுவயதிலிருந்து தொடர்ந்து பிரச்சினைகளுடன் மட்டுமே கூடிக் குலவிக் கொண்டிருந்திருக்கிறான், ராஸ்கல்.

அவனைவிட வயதில் பத்துவயது+ இளையவனானாலும் சிலபல முறை அவனிடம் கோரிக்கைகளை வைத்திருக்கிறேன்…

அவனுடைய பொதுவான பதில், “தம்பி, உனக்கு மூளை ஜாஸ்தி, உன்னால என்ன வேணும்னானும் முடியும்… ஆனால் உன் அண்ணன் ஒரு அடிமுட்டாள் எனக்கு வாய்த்தது நாய்வால், என்னை நிமிர்த்திக்கொள்ள நான் நினைத்தாலும் முடியாது…”

பின்னர் ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே…’ பாட்டினை அட்சரம்/சுருதி பிசகாமல் பாடி, கையில் வைத்திருக்கும்  ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நாற்காலிப் பலகையில் அல்லது தரையில் தட்டி அழகாக பின்புல ரிதம் கொடுத்தபடி… …

எப்போதோ ஒருமுறை சொன்னான் என நினைவு – எனக்கு நீதாண்டா உண்மையான தம்பி, உங்கிட்ட தாண்டா மனம்விட்டுப் பேச முடியுது++ ஆனால், கடந்த 20 வருடங்களில் பெரிதாகப் போக்குவரத்து என்று இல்லை – வருடத்துக்கு ஒருமுறை பார்த்துக் கொள்ள முடிந்தால் அதிகம். இருந்தாலும் mutual admiration club உறுப்பினர்கள்.

இவன் பொய் சொல்லிப் பித்தலாட்டம் செய்ததில்லை. நேரடியாக ‘நான் இப்படித்தான்” வகை ஆசாமி – இப்படியாப்பட்டவர்கள் அபூர்வம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

…மனைவியிடம் பலமுறை இவனைப் பற்றி பேசியிருக்கிறேன். அதாவது he is a lovable rogue என்று – ஆகவே அவனை மதிக்கிறேன் என்று. அவர்: “கிறுக்கர்கள் குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டேன் என்று எனக்கு நன்றாகவே, எப்போதோ தெரியும்.”

3

13ஆம் நாள் நீத்தார் கடன் தொடர்புள்ள சடங்குகளில் பொதுவாக, கர்மங்களை மேற்பார்வை பார்க்கும் தலையாய ஸாஸ்திரிகள், இறந்தவரின் ஆன்மா பயணம் செய்யும் ஐதீகங்களைக் கூறுவார். அந்த விவரணை பெரும்பாலும் – கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு விஷ்ணு கூறியதான கருத்துகளின் அடிப்படையில் அமையும்.

பின்னர் இறந்தவரின் குடும்பத்தினர், போய்ச்சேர்ந்தவரைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வர். அவருடைய நண்பர்களும் பகிர்வர். (சில சமயம் இது கேலிக்கூத்தாக மாறவும் செய்யும் – அ என்றால் ஆ என்றால் என ஆரம்பித்துச் சிலர் பட்டிமன்றங்கள் போலக் கழுத்தை அறுத்து விடுவர்; ஆனால் பல சமயங்களில் இது ஆத்மார்த்தமாக இருக்கும்; நம் வாழ்க்கையை நாம் பரிசீலிக்கவும் வைக்கும்)

நேற்று, குடும்பத்தினர் பகிர்ந்த நெகிழ்வு சம்பவங்களுக்குப் பிறகு.

பெருந்துறையிலிருந்து வந்திருந்த நண்பர் குழாமில் இருந்த ஒருவர் – இவர் இறந்தவருடைய ஜிகிரிதோஸ்த் – அழகாக, க்ளிப்தமாக சுத்தத் தமிழில், அடுக்குமொழியோ எதுகைமோனைகளோ இல்லாமல், தம் எண்ணங்களைப் பகிர்ந்தார்… நேற்று வரை நான் அறிந்திருக்காத, சில அண்ணன் குறித்த நிகழ்வுகளைச் சொன்னார்.

(என் சிறுவயதில் கொஞ்சம் குறும்புக்காரனாக நான் இருந்தேன் என்பது நினைவுக்கு வந்தது – என் அப்பா, என்னைச் செல்லமாக, என்னுடைய பெருந்துறைப் பூர்வீகக் காரணத்தால்,  ‘முரட்டுக் கவுண்டன்’ எனவெல்லாம் அழைத்திருக்கிறார்… ஏறக்குறைய அண்ணனும் ஒரு முரட்டு ஆசாமியாகத் தான் இருந்திருக்கிறான் எனத் தோன்றியது.)

…உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய அந்த நண்பர், கடைசியில் என் அண்ணனின் மாலையிட்ட புகைப்படத்தைப் பார்த்து, “டேய்! காட்ட வித்தே கள்ள குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டா…” என்றார்.

‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்பதில் பொதிந்திருக்கும் நியாயமான பெருமிதத்தின் கவுண்டப் பதிப்பு இது என நினைக்கிறேன்.

16 Responses to ““டேய்! காட்ட வித்தே கள்ள குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டா…””


 1. மறுபிறவி நம்பிக்கை உண்டா


 2. ‘காட்ட வித்தே’ என்பது சிலருக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன்.

  ‘வயலை விற்றுவந்த பணத்தைக் கள் குடித்தே செலவழித்தாலும்…’ என விரித்துக் கொள்ளவும்.

  பொதுவாக, விவசாய வட்டாரங்களில் – காடு என்பது ஒருமாதிரி வயக்காடு – வயல் என்பதன் சுருக்கம். (இது காடு/வனாந்தரம் என்பதல்ல)

  சிலசமயம் இதனை ‘தோட்டம்’ என்பதைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

 3. Ramesh Narayanan Says:

  Accept our condolences, ராம்.

  /என்னுடைய ஒரளவு சமவயது/

  /அவனைவிட வயதில் பத்துவயது+ இளையவனானாலும்…/

  பிர்ல


  • hmm… I do not see any contradiction or internal inconsistency.

   //என்னுடைய ஒரளவு சமவயது உறவுமுறையினரிடையே

   I feel that, in general, anyone above my chrnological age is my ageie. Any one below my age is an adolescent.

   Hope that nonexplains. Oh well.

 4. Ramesh Narayanan Says:

  Thanks very much for quoting Stephen Wolfram’s article.
  All, especially Physics students to read and ponder about


 5. Correct quote: (ref: section 1, 6th/last paragraph)

  “In a world where death is the hunter, my friend, there is no time for regrets or doubts. There is only time for decisions.”

  ― Carlos Castaneda, Journey to Ixtlan (1972)

 6. Prathap Says:

  My condolences Ram.

  Waves are nothing but water. So is sea.
  – Shri Atmananda

 7. Ramanathan N Says:

  ஆழ்ந்த இரங்கல்கள்.
  “I am moving on to other deaths” எள்ளலாக தோன்றினாலும் யதார்த்தம்.


  • ஐயோ ஐயன்மீர்! அது எள்ளல் அல்ல, வெறும் எள் மட்டுமே…

   இருந்தாலும், ALL created things have got to move on, yeah?

   No regrets, no wistfulness – it is merely the reality of rta. :-)

 8. Paramasivam Says:

  Ram,
  Accept my condolences for the loss of your dear brother .

  As I was born and raised in Erode this article bring the memory of past events. Some words are typical to Erode slang.

  -Sivam


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s