ஆதித்தமிழன் – ஐயய்யோ குறிப்புகள்
July 31, 2022
ஆதிதிராவிடன் என்பதெல்லாம் பழைய கதை, ஆதிபுருடா – ஆதிஆரியனுக்கு மாமேன்மச்சான்முறைதான் அவன் என்றாலுமேகூட…
ஆதித்தமிழன் என்பதுதான் லேட்டஸ்ட் & க்ரேட்டஸ்ட்!
-0-0-0-0-
வருமானவரிப் படிவத்தை மூச்சுமுட்ட இக் இச் விடாமல் நிரப்பி முழிபிதுங்கிக் கொண்டிருக்கும் இத்திரு நாளில்…
(ஓரு வழியாக, ப்ளடி முடித்துவிட்டேன்!)
…இன்று ஒரு இளைஞர் தன்னை ‘ஆதித் தமிழன்’ என அழைத்துக்கொண்டதைக் கேட்டேன்.
நெற்றிப்பொட்டில் வியர்த்துவிட்டது.
சில மாதங்களுக்குப் பின் அவருடன் தொலைபேசியில் பேசியதால் அவருக்கு ‘உலகின் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு’ எனும் வேர்ல்ட்ஃபேமஸ் சித்தாந்தத்தின் படி + அவர் அளவுக்கு ஏற்றபடியும் வால் சுயம்புவாக வளர்ச்சி பெற்றிருக்கிறதா எனத் தெரியவில்லை – ஒரு வருடம் முன் பார்த்தபோது நன்றாகத் தான் இருந்தார் – ஆனால் தற்போது அவருக்கு தமிழ்த்தேசிய வியாதி பிடித்திருப்பதால்… …. ஒருவேளை தமிழ்வால் செவ்வால் முளைத்திருக்கலாம்தான்!
அவர் பிறந்த ஜாதிதான் ஆதித்தமிழ ஜாதி என்றார். ஏண்டா பாவீ நீங்கதானடா வொங்க டமிளகத்ல ஜாதியே இல்லேன்னீங்க வெறும் குடிதானனீங்க, இப்ப யின்னாடா இது என்றால்…
‘ஐயா, என் கண் திறந்துவிட்டது!’
அப்ப இத்தினி நாளா கண்ணெ மூடிக்கினு வொளறிக்கினா இர்ந்தீங்க? டாஸ்மாக்கு குடி தமிள்க்குடி செங்குடி கூத்துன்னிட்டு…..
சார், நக்கலடிக்காதீங்க சார்.
சரிதான்.
-0-0-0-0-0-
வெட்டித் தமிழ்ப் பெருமை பேசும் தமிழன்-திராவிடன் என்றால், அவன் சொல்வதெல்லாம் ஜோக் + அவன் தன் வரலாற்றை முன்னுக்குப் பின் முரணாகப் பின்னோக்கிப் பொழுதன்னிக்கும் அமோகமாகத் துரத்திக்கொண்டு போவான் என்பதெல்லாம் எனக்குப் புரியாமல் இல்லை.
இருந்தாலும், திடுக்கிட்டு விட்டேன். எத்தை எட்த்தாலும் ப்ளடி இப்டியாடா ‘ஆதி’ன்னிட்டுச் சேத்துப்பீங்க, டுபாக்குருங்க்ளா.
எப்போது புற்றீசல் போல ஆதிச்சோழர் ஆதிப்பாண்டியர் ஆதிச்சேரர் எல்லாம் கிளம்பி வரப்போகிறார்களோ எனப் பயமாக இருக்கிறது.
இதைத் தவிர கீழடிக்கும் முந்தைய ஆதிக்கீழடியில் நமக்குக் கிடைக்கப்போகும் கொல்லியல் தடயங்களை நினைத்தால் அடிவயிற்றில் கலக்கம்.
முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் அல்லாத்துக்கும் முன்னாடி ஒரு ஆதி சங்ககாலம் எனவொன்று இருந்ததை, அரையனார் புறப்பொருள் உரையில் யாராவது அரையணாஅரைகுறை கண்டுகொண்டு அறிக்கை விடுவாரோ?
அத்தை வைத்துக்கொண்டு மன்னர்மன்னன் பாரிசாலன் போன்ற ஆன்றோர்கள் நீட்டி முழக்கி இல்லுமினேட்டி கம்மினேட்டி எனப் பிதற்றுவார்களோ?
“ஆதிச்ச நல்லூர் என்பதே ஆதிச்சங்க நல்லூர் என்பதன் ஊழலே” (corruptionஏ) என யாராவது ரோட்லபோற எஸ்ராமகிருஷ்ணன் பெயர்த்து நிறுவினால்?
-0-0-0-0-0-
வரவர எனக்கு இளைஞர்களோடு சுமுகமாகப் பேசுவதே இனிமேல் ஒத்துவராதோ எனக் கலக்கமாக இருக்கிறது.
ஓரளவு படித்தவர்கள், யோசிப்பவர்கள் என நான் கருதும் இளைஞர்கள் (குறிப்பாகத் தமிழ் மொழி பேசுபவர்கள்தாம்! நான் groom செய்துகொண்டிருக்கிறேன் என நானே கற்பனை செய்துகொண்டிருக்கும் நபர்கள்) எதையும் ஐயம்திரிபறக் கற்றுக்கொள்ளாமலேயே டபக்கென்று அந்தப் பக்கம் போய் பினாத்த ஆரம்பித்து விடுகிறார்கள், என்ன செய்ய…
இதைப் படிக்கும் உங்களுடைய அனுபவம் எப்படி எனத் தெரியவில்லை. என்னுடைய அனுபவம் சுமார் 5 இளைஞர்களுடன் தான், அதிகமில்லை.
-0-0-0-0-0-
எது எப்படியோ.
பிள்ளைக்குப் பாவம், என்னுடைய எதிர்-தமிழ்தேசியம் பிடிபடவில்லை. அது ஒரு உள்ளீடற்ற கருதுகோள், வெறும் உணர்ச்சிபூர்வ உச்சாடனம் என்பதற்கு விளக்கம் கொடுத்துக் கொடுத்து மாளவில்லை.
தாங்க முடியாமல் ஓரிரு மாதங்கள் முன், எழுத்தாளர் பிரபாகரன் (இவரை அறிமுகப் படுத்திய நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்களுக்கு நன்றி!) அவர்களின் தெளிவான பேசுதமிழாபேசு பேட்டிச் சுட்டிகளைக் கொடுத்தேன்.
அவற்றைப் பார்த்த பின், மற்ற சில வீடியொக்களையும் பார்த்திருப்பான் போலும்.
நெட்-ரிஸல்ட் என்னவென்றால் – அவனும் ‘விடயம்’ எனப் பேச ஆரம்பித்துவிட்டான், ப்ளடி.
தமிழ்தேசியம் எனும் ஃபேக்மாடல் பற்றி வேறொரு சிந்தனையோ கேள்வியோ இல்லை.
(இப்படி விடயம்விடயம் எனப்பேசித் தொந்திரவு கொடுக்கும், முந்தைய இரவு எத்தையாவது தூக்கக்கலக்கத்தில் படித்துவிட்டு அடுத்தநாள் காலையில் அதில் வல்லுநராகிவிடும் பராக்கிரமம் மிக்க பேசுதமிழாபேசு இளைஞரின் பெயர் நினைவில் இல்லை – ஆனால் அவர் ஆங்கிலம் உபயோகப்படுத்தும்போது மட்டும் ஷ என்பத ட என உச்சரிப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன்)
என்ன செய்ய. ஆனாலும் அவன் என் பிள்ளையே! இந்த ப்ளடி ஸென்டிமென்டல் நான்ஸென்ஸ் தான் என் பிரச்சினை…
:-(
ஆகவே, ‘அவர்களை அடிக்க முடியாவிட்டால், அவர்களை இணைத்துவிடு’ எனும் கிழமொழி நாற்பதின் சூத்திரத்தை (if you can’t beat them, join them) முன்வைத்து – கர்மசிரத்தையுடன், ‘ஆதிக் கலைச் ஆதிச் சொல்லகராதி’ ஒன்றைத் தயாரிக்கலாம் என ஒரு திட்டம்.
இப்படிக்கு,
ஆதி இராமசாமி.
பின்குறிப்பு: இந்த வலைத்தளம் சுமார் 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒருமாதிரி ஓட்டப்படும் காரணத்தால், இனி இதனை ஆதிஒத்திசைவு என அழைத்து அலைகடலென ஆர்பரிக்க, ஒரு திட்டம் கைவசம் இருக்கிறது. பார்க்கலாம்.
மற்றபடி, ‘ஆதிக் கலைச் ஆதிச் சொல்லகராதி’ விவகாரத்தில், நம் சங்ககால சக ஆதிஏழரைகள் நினைத்தால், ஒரே அணியில் திரண்டால், முடியாதது என ஏதேனும் இப்பூவலகில் இருக்கிறதா என்ன? ஹ்ஹ!
August 14, 2022 at 23:43
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
நாம் இன்று கண்டுபிடிப்பதற்காகவே ஆதிகாலத்து எச்சங்களை விட்டுச்சென்றதோடு நல்லதாக ஒரு ஊரை வடிவமைத்தனர்.
அதுவே
ஆதி + எச்ச + நல் + ஊர்
August 16, 2022 at 14:16
😡