மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தில் செஸ், ‘செச்’ என அழைக்கப் பட்டது
July 28, 2022
உண்மை. ஆம்.
செஸ் என்பதே தமிழ் வேர்ச்சொல் கொண்டதுதான்.
நீங்கள் உடனடியாக அது எப்படி, என்ன கிண்டல் செய்கிறாயா எனக் கேட்கலாம். ஆனால் அம்மணிகளே & அம்மணர்களே, உங்களுக்குத் தெரியாததல்ல – நான் எப்போதுமே படுஸீரியஸ்தான்!
பிரச்சினை என்னெவென்றால், ஒரு சராசரித் தமிழக் கூவானுடைய மூளைமழுங்கலின் அளவு மிகவும் அதிகம்; ஆனால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை. சங்ககாலப் பெருமைகளை நம் சககால எருமைகள் உணரமுடியுமா?
அப்படியே உணர முடிந்தாலும் அப்பெருமைகளை எடுத்தியம்ப, என்னைப் போன்ற சான்றோர்கள் வேண்டாமா?
நமக்கு எல்லாவற்றுக்குமே தட்டுப்பாடுதான்.
நாமிருக்கும் அழகில், ஆரியர்களும் வடுகர்களும் குறிப்பாகக் குயுக்திமிக்க பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து கொள்ளைக் கூட்டணி அமைத்துப் படையெடுத்து வந்து நம் பழஞ்செல்வங்களை ஒழித்ததற்கு அப்பாற்பட்டு, நம் தமிழினத்தையே நசுக்கி, மிதித்து, கடித்துக் குதறி, அமிழ்த்தி, ஒடுக்கித் தேய்த்தே விட்டார்கள்…
அது மட்டுமல்ல… நம் திராவிடத்தமிழ மூளைகள் எங்கு இருக்கின்றன என நம் மண்டைக்குள் மைக்ராஸ்கோப்பு போட்டுத் தேடிப் பிடித்து அதனை மோஸ்ட்மாடர்ன் ஐஎஃப்பி வாஷிங் மெஷினில் போட்டுக் சுழற்றிக் கசக்கிச் சலவை செய்துவிட்டார்கள்…
ஐயகோ!
-0-0-0-0-
சரி.
புற நானூறு தொகை நூலில் 286வது பாட்டு. கரந்தைத் திணையில் வேத்தியல் துறையில் கீழ்கண்ட வரிகள் வருகின்றன:
…வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப…
‘வெள்ளை வெள்யாட்டு’ = வெள்ளை நிற ஆட்டக் காய்களை வைத்து ‘வெள்யாட்டு’ விளையாடும் சங்ககால விளையாட்டு
‘செச்’ – சங்ககாலப் பலகை விளையாட்டுகளில் ஒன்று.
விளக்கவுரை:
நமக்கெல்லாம் தெரியும். வெள்ளையர்களுக்குத் தான் முதலிடம், அதனால்தானே பாவப்பட்டத் திராவிடத் தமிழன் ஆரியத்தின் சதிக்குள் வீழ்ந்தான்? ஆனால், இந்தப் பிலாக்கணம் முக்கியமல்ல.
எது முக்கியமென்றால் – வெள்ளை நிற ஆட்டக் காய்களை வைத்து உருவாக்கப் பட்ட சங்ககால உருட்டு விளையாட்டுகளில், தன்னைப் போன்ற பிற இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதை, ஒரு புற நானூற்று வீரன் உணர்ந்து புளகாங்கிப்பதை இந்த வரிகள் உணர்த்துவதுதான். அதேசமயம் எதிரிக்காய்களாக இல்லாமல் இருந்திருக்கவேண்டிய எதிர்க் காய்கள் பிற நிறங்களில், கறுப்பு உட்பட இருந்திருக்கலாம் என்பதும் ஆங்கே தொக்கி நிற்பது வெள்ளிடை மலை.
அதே சமயம் – இந்த வெள்ளிடைமலை என்பது அக்கால முற்சங்ககால கீழடி வேளிர்கள் சிலரின் இடைகள் மலைபோல தொந்தித்தொப்பைச் செழுமையுடன் (வேள் + இடை + மலை) வளப்பமாக இருந்திருக்கலாம் என்பதைத்தான் குறிப்பிட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது….
-0-0-0-0-
இந்த செச் என்பதைப் பாவி வெள்ளைக்காரன் திருடிக்கொண்டு போய் செஸ் எனச் செய்துவிட்டான் என தேவநேயப்பாவாணதாசருடன், அயோத்திதாசதாசரும் அப்போதே அம்பலப் படுத்தியிருக்கிறார்கள்.
நமக்குத் தான், நமது திராவிடக் கலாச்சாரச் செல்வங்களான அவை குறித்து ஒன்றும் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை…
ஏனெனில் நாம் சோற்றால் அடித்த பிண்டங்கள், வாழை மட்டைகள், முட்டுக் கலப்பை முண்டங்கள்…
மீளுதமிழாமீளு!
-0-0-0-0-
இம்மாதிரியான காத்திரமான கண்டுபிடிப்புகளுக்காகவே எனக்கு ரெண்டு கலைமாமணி விருதுகள் ஆஃபரில் (‘பை ஒன் டேக் ஒன் ஃப்ரீ’ எனும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படி) கொடுக்கப் படவேண்டும் என நீங்கள் நினைப்பது சரிதான்.
ஆனால், எனக்கு விருதுகளில் நாட்டமில்லை.
மாறாக, பாரிசாலன், பேசுதமிழாபேசு, மன்னர்மன்னன், தமிழகத் கொல்லியல் துறை, உதயசந்திரன் ஐஏஎஸ், பாலகிருஷ்ணன் முன்னாள்ஐஏஎஸ், ஜெயரஞ்சன் போன்ற பராக்கிரமம் மிக்க இடங்களுக்கு இவ்விஷயத்தை நீங்கள் ரீச் செய்து, அதற்கு விளம்பரம் கிடைக்க உதவினால், நம் தமிழ எதிர்காலம் முழுவதுமே உங்களுக்குக் கடமைப்பட்டுக் கிடக்கும்.
மற்றபடி உங்கள் இஷ்டம். நன்றி.
பின்குறிப்பு: க்ரிக்கெட் எனப்படும் கிரிக்கெட்டு விளையாட்டும் ஒரு சங்ககால விளையாட்டுதான்.
தொடர்ந்து விளையாடுவோம்!
July 28, 2022 at 20:52
நண்பர் ஒருவருக்கு, நான் இந்தப் பராக்கிரமச் சான்றோர் ஜாபிதாவில் ரவிஷங்கர் கண்ணபிரான் @kryes பண்டிதரைச் சேர்க்கவில்லையே எனும் ஆதங்கம்.
ஆகவே, இந்த ஆள் பெயரையும் சேர்த்துக் கொள்ளவும்.
நன்றி.
July 29, 2022 at 07:11
இன்னுமொரு தரவு. தமிழக வரலாறின் தனிப்பெரும் பேராசிரியர் இசுடாற்கலைஞரார் அவர்களே முழங்கி விட்டார்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் போலவே… ‘செச்சு’ விளையாட்டும் பல்லாயிரம் வருடங்களாகத் தமிழில் இருக்கிறது.
அரவ சரித்ரமூ செச்சிப் போயிந்தே! அட தேவுடா!!