“தொண்டைமண்டல வேளாளர்களின் சமூக அதிகங்கள்”

May 19, 2022

நம்ப முடியவில்லை. இல்லை. வில்லை. இல்லை… அவனா சொன்னான்? இர்க்காது. இர்க்கவும் கூடாது… …

…எனவெல்லாம் புலம்பலாம். ஆனால்…

-0-0-0-0-0-

எம்ஃபில் (சமூகவியல்/மானுடவியல்) ஆராய்ச்சியாள மாணவன். என்னைப் போலவே உடைந்த ஆங்கில அறிவும் தமிழறிவும் உடைத்தவன், அதாவது சொல்லிக் கொள்ளும் படிக்கு இல்லை – அதாவது, சர்வ நிச்சயமாக அதிகமில்லை. ஆனால், இந்த மாணவனுடன் என் புதுச்சேரி அன்பர் ஒருவரால் கோர்த்துவிடப்பட்டேன்.

“டேய், இவனுடைய தகப்பன் என்னுடன் வேலை செய்பவன். இவனுக்குத் தன் தீஸிஸ்/ஆய்வறிக்கையை எழுதுவதற்கு உதவி செய்யவேண்டுமாம், நீதான் வேலைவெட்டியில்லாமல் எத்தையோ நோண்டிக் கொண்டிருக்கிறாயே, இதனைச் செய்தால் என்ன குறைந்தா போய்விடுவாய்?”

சரி.

மூன்றுநான்கு முறை, முடிந்தவரை விரிவாக, என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் அந்த இளைஞனுடன் பேசினேன், இரண்டுமூன்று முறை அவன் ஆய்வறிக்கையைத் திருத்தியும் கொடுத்தேன். (முழி பிதுங்கி விட்டது; ஆகவே ஓரளவுக்குப் பின் மிடீல என ஒதுங்கிவிட்டேன் – இதெல்லாம் சென்ற  8-9 மாதங்களில் நடந்த விஷயங்கள்…)

. இது என்னப்பா தலைப்பு, யார் கொடுத்தார்கள், உங்களது ஆராய்ச்சிக்கான கேள்விகள் யாவை என்று கேட்டால் 1) ‘Mores of the Vellalas of Thondaimandalam’ என்பதன் தமிழாக்கம் 2) என் வழிகாட்டி/கைட் பேராசிரியர் 3) கேள்வி ஒன்றும் இல்லை ஆனால்  பொதுவாக 80-100 பக்கம் வரும்படி எழுதச் சொன்னார் – என்றான்.

. தம்பீ, அந்த Mores என்பது அதிகம் போன்ற More அல்ல – மாறாக அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பாரம்பரியங்கள், குறிப்பிடத்தக்க குணாதிசியப் பழக்கவழக்கங்கள் குறித்தவை. மேலும் அது மோரெஸ் அல்லது மோரீஸ் என ஒருமாதிரி உச்சரிக்கப் படவேண்டும்.  அவர்கள் வேளாளர்கள், வெள்ளாளர்கள் அல்லர் என நினைக்கிறேன். உங்கள் கைட் இந்த மொழிபெயர்ப்பைப் பார்த்தாரா? (சரீங்க, அவரும் பாத்து அப்ரூவ் செஞ்சத்துக்கு அப்புறம் தான் உங்க ஃப்ரெண்டு கிட்ட போனேன்!)

சரிதான்!

. நீங்கள் வேளாளரா? (இல்லை, நான்… …) ஒ! உங்கள் ஆய்வானது வேளாளர் பற்றியது என்கிறீர்கள். யாருடனாவது பேசினீர்களா? அந்தச் சமூகத்தை அறிந்துகொள்ள சான்றோர்கள், அவர்கள் ஜாதித்தொகையினர் என யாரையாவது கலந்தாலோசித்து அறிவுரைகளைப் பெற்றுக் கொண்டீர்களா? (இல்லீங்க, கைட் ‘லிட்டரேச்சர் சர்வே’ செஞ்சாப் போதும்ணார்.)

. என்னது? யாரோடவும் பேசவேயில்லையா? பின்னே எப்படி… … (என் கைட் கிட்ட சிலமுறை கலந்தாலோசித்தேன்) ஓ! அப்ப உங்க கைட் வேளாளரா இருக்கணும் – இல்லைன்னாக்க அச்சமூகத்தினை அல்லது தொண்டை மண்டலத்தைக் குறித்த ஆராய்ச்சியாளராக இருக்கவேண்டும்… (இல்லை சார்) அப்ப அவரோட ஆராய்ச்சி என்ன, எந்த விஷயத்தில் அவர் முனைப்பாக இருக்கிறார்? (சார், எனக்குத் தெரியாது)

. சரி, எந்தமாதிரி ‘லிட்டரேச்சர் ஸர்வே’ செய்தீர்கள் – என்னென்ன ஆராய்ச்சியறிக்கைகள்? யாருடையவை? அவற்றின் மின்படிகள் உங்களிடம் இருக்கின்றனவா? (இல்லை. என் கைட், அப்ஸ்ட்ராக்ட் மட்டும் பட்ச்சா போதும்ணார்).

சரி, அதன் லிஸ்டையாவது அனுப்புகிறீர்களா, நான் பார்க்கவேண்டும்… தலைப்பு ரொம்ப பொதுவாக இருக்கிறது – மாறாக – குறிப்பிட காலம், உள்ஜாதி அல்லது பொதுவாகவே இருந்தாலும் பரவாயில்லை, அதற்குள்ளாக அச் சமூகத்தினுடைய பலதரப்பட்ட பழக்கவழக்கங்களில் உங்கள் குவியத்துக்குட்பட்டவை யாவை, அவற்றின் மாற்றம் அல்லது தேக்கம், பரிமாணவளர்ச்சி – அப்படியிப்படி என இருந்தால் பரவாயில்லை, இல்லையா? (சார், என் கைட், மோர்ஸ் பற்றி ஒரு லிஸ்ட் கொடுத்தால் போதும்ணார்)

. அப்ப ரீஸர்ச் கேள்வி என ஒன்றுமே இல்லையா, உங்கள் கைட் ஒன்றும் சொல்லவில்லையா? (இல்லை சார்,  அப்டீன்னா என்ன? என் கைட் பொதுவாக 80-100 பக்கம் வர்ரா மாரீ எழுதச் சொன்னார்). ஐயோ! குறைந்த பட்சம், ஆராய்ச்சிக் கேள்விகள் என எவை கேட்கப் படலாம் எனும் ஒரு ஆராய்ச்சிக் கேள்வியையாவது கேட்டு பதிலளிக்க முயற்சி செய்யலாமே! (புரியல சார்)

. ஐயோ தம்பீ, எனக்கு இப்படி முழுவதுமா ஓபன்-எண்டட் ஆக இருந்தால் ஒத்துவராது, மேலும் நான் உங்கள் கைடோ, அல்லது உங்கள் துறையில் (அந்த்ரபாலஜி – மானுடவியல்) விற்பன்னனோ கிடையாது. என்னை மன்னிச்சிருங்க தம்பி.  உங்களோட பின்புலம் பற்றியும் எனக்கு அவ்வளவு தெரியாது… உங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு இல்லை. என்னை விட்டுடுங்க…

-0-0-0-0-0-

“டேய், கைகழுவி விட்டுட்டியே! அவன் கைட் ஒரு சும்பக்கூவான்னிட்டுதான உங்கிட்ட அன்ப்ச்சேன். பையன் நல்லவண்டா, அப்பாவி. எம்ஃபில் முட்ச்சிட்டா அவ்னுக்கு ஒரு லெக்சரர் போஸ்டாவது  எவன் கால்லியாவது விழுந்து வாங்கிக் கொடுத்திடுவேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிடுடா.”

“..ய்யப்பா, என் வாழ் நாளில இப்படியொரு டைரக்ட் அந்த்ரபாலஜி கொடுமை அனுபவிச்சதில்லபா. சரி. என்னால் முடிஞ்சத செய்யறேன், ஆனால் எனக்கு இதில் அதிக நேரம் செலவழிக்கமுடியாது. ஆனா பாக்கறேன், முடிஞ்சத செய்யறேன்…”

அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்குக் கொஞ்சமேனும் ஆராய்ச்சி முறைமைகள் சட்டகங்கள் வேளாளர் திரள் வரலாறு என எனக்குத் தெரிந்ததை, அவனுக்குப் புரியக் கூடியவற்றைப் புகட்டினேன். தலைப்பையும் மாற்றினேன். (விழலுக்கிறைத்த நீர்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்)

அவன் ஒரு டப்பா ஆராய்ச்சிச் சஞ்சிகையில் அவனுடைய (படுமோசமில்லாத) ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து (+ரூ 5000/-), அவர்கள் அடுத்த வாரமே (அடுத்த வாரமே!!) அதனைப் பதிப்பித்தார்கள்!! (அவன் கைட் இதற்கெல்லாம் ‘புதிய ஏற்பாடு’ செய்தார்)

பின்னர் எம்ஃபில். கர்வம். சந்தோஷம்.

அதற்குப் பின்னர் என் நண்பர் அவனுக்கு எவர் ‘காலிலேயோ விழுந்து’ அவனுக்கு ஒரு தனியார் கலைக்கல்லூரியில் துணைலெக்சரர் போஸ்ட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் (ரூ 15,000/- மாத சம்பளம்) எனக் கேள்விப்பட்டேன்.

…முடிந்தது என ஒருமாதிரிப் பெருமூச்சு விட்டால்… சென்ற வாரம் அந்த இளைஞன் பாவம், நன்றிக்கடன்பெருக்குடன் தொல்லைபேசினான்.

இப்படியாகத்தானே இந்த இளைஞனிடமிருந்து மூன்று புதிய பிரச்சினைகள் கிளம்பின:

1. நான் மேற்படிப்பினைத் தொடர்வதாக, பிஹெச்டி பண்ணலாம் என்றிருக்கிறேன். எங்கே, எதற்கு யாரிடம் செய்யலாம். (ஐயோ என முதலில் துணுக்குற்ற நான், அந்தப் பாவப்பட்ட இளைஞனுக்குப் படு ஸீரியஸ்ஸாகச் சொன்ன பதில் – “இப்போது அயோத்திதாசர், சமூகநீதி, நாட்டாரியல்/நாட்டுப்புறவியல், கல்வெட்டு, கார்பன்டேட்டிங், திராவிடமாடல் போன்றவை எல்லாம் ஏறுமுகத்தில் இருக்கின்றன. மாதிரிக்கு ‘அயோத்திதாச திராவிடமாடல் பார்வையில், தமிழகத்துப் பார்ப்பனீய நியூட்ரினோவுக்கு அணுக்கரு  எதிர்ப்போராளிகளின் எதிர்நாட்டாரிய மாற்றுப்புராண ஸிமுலாக்கிரம அழகியல்.’

2. அயோத்திதாசர் யார்ணு தெரியல. ஆனா உங்க சஜ்ஜெஷன்படி யார் இதற்கு கைடாக இருக்கலாம்? (என் படுஸீரியஸ் பதில்: கிழக்கு பதிப்பகத்து அயோத்திதாசர் புத்தகத்தை அணுகவும்)

3. எனக்குத் திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். என் திருமணத்துக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும். (நன்றி, வாழ்த்துகள் – ஆனால் வரமுடியுமா எனத் தெரியவில்லையே தம்பீ, எனக்கு எக்கச்சக்க வேலைகள் இருக்கின்றனவே… (பச்சைப் பொய்தான், ஆனால்… …))

-0-0-0-0-0-

மேற்கண்டவற்றால், எனக்குக் கிடைத்தாக நான் நம்பும் படிப்பினைகள்:

1. இளைஞன் – ‘தொண்டை மண்டலம்’ என்பதை, நம் கழுத்தில் இருக்கும் பிரதேசம் எனவொரு நவ, பின்நவீனத்துவப் புரிதலை அடையவில்லை. நல்லவேளை.

2. தம் ஆசிரியர்கள்(!) இணையம்(!!) தவிர – பிறரிடமும் தன் ‘ஆராய்ச்சி’ எழவைக் குறித்து பேசலாம், ‘அறிவுரை’ பெற்றுக்கொள்ளலாம் என இவ்விளைஞன் யோசித்ததே மிகப்பெரிய விஷயமும் ஆறுதல் கொடுக்கக் கூடியதும்தாம். (இதனை ஏன் இவன் செய்தான், என் நண்பருடைய கண்டிப்புக்குப் பயந்து போய்விட்டிருந்தானா… கேள்விகள், கேள்விகள்…)

3. இனிமேல் எனக்கு இம்மாதிரி அமெச்சூர் கைட் / வழிகாட்டுபவராக ஆக ஆசை வந்தால், நானே என் ஜோட்டால் என் மண்டையில் பொளேர் எனப் போட்டுக்கொள்வேன்.

4. இம்மாதிரித் தமிழப் படுகொலைகளுக்கு முழுமுதல் காரணம் எஸ்ராமகிருஷ்ணன் போன்ற மகத்தான முழிபெயர்ப்பு அரைகுறை அழகர்களே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

5. அடுத்த ஐந்தாண்டுகளில், இந்த அயோத்திதாசமுதல்வாத திராவிடமாடல் பித்தம் உச்சத்தை அடையும்போது – அதன் உயர்மட்ட அறிவுஜீவிகளில், என்னுடைய பிரத்யேக இளம் ஒற்றர் செங்கோலோச்சும் காலமும் வரத்தான் போகிறது, ஜாக்கிரதை!

6. எதிர்காலத்தின் என் இளைஞன் ‘கைட்’ செய்யக்கூடும் புலங்களையும் ஆராய்ச்சியாள மாணவர்களையும் நினைத்துக் கொள்கிறேன்.. வெளங்கிடுண்டே!

:-(

:-( :-(

8 Responses to ““தொண்டைமண்டல வேளாளர்களின் சமூக அதிகங்கள்””


  1. /தொண்டைமண்டல வேளாளர்களின் சமூக அதிகங்கள்/

    translates to

    The Social excesses of ThoNdaiMandala véLāLars

    Now that’s a good topic.


    • ஐயா, உங்களுக்கு இவ்விஷயத்தில் ஆர்வம் மிகுதி எனப் படுகிறது.

      ஆதலால்.

      உங்கள் மின்னஞ்சல் முகவரியை (பிஹெச்டி வழிகாட்டுதலுக்காக) இளம் அன்பரிடம் கொடுக்கட்டா?

      வாழ்த்துகள்.

  2. தமிழன்'s avatar தமிழன் Says:

    ஐயா, இத்தனை அப்பாவியாய் இருக்கிறீர்களே? திராவிட மாடல் உபயத்ததில் இம்மெனும் முன்னே இங்கே எவரும் ஆராய்ச்சியாளர் ஆகிவிட முடியுமே?

    வழிகாட்டியின் கணக்கில் வேண்டியதைச் சேர்ப்பித்தால், உடனடியாகப் பட்டம் வாங்கிப் பறக்கவிடலாம், கண்ணால் காணாமலே ‘காதல்கோட்டை’ பாணியில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து அறிஞரும் ஆகலாம், பின்னாளில் பற்பல பதவிகளை அலங்கரித்து இறும்பூது எய்தலாம்.

    ஆறே மாதத்தில் ஐபிஎஸ் ஆவதற்கான உபாயத்தை உரைக்கும் அறிஞர்கள் இவ்வண்ணமே உருவானார்கள் என்பதைத் தங்கள் மனதில் கொள்ள வேண்டும். உயர்கல்வியை இப்படிப் பாய்ந்தோட வைத்த திராவிடியா மாடலுக்கு எனது வந்தனங்களைச் சமர்ப்பித்து அமைகிறேன், நன்றி! நமக்கம்!! வால்க பேமிலி, ஒலிக பால்டாயில்📣


    • //ஆறே மாதத்தில் ஐபிஎஸ் ஆவதற்கான உபாயத்தை உரைக்கும் அறிஞர்கள்

      ?

      ஹ்ம்ம்… நீங்கள் சொல்வது புரிகிறது – இருந்தாலும் ஐயா, நான் வெறும் பாவிதான், அப்பாவியில்லை.  ஆனாலும்… (என்ன செய்வது சொல்லுங்கள், இயலாமை என்பது கொடூரமான விஷயம்தான்)


    • /இம்மெனும் முன்னே/

      ஆறு வருடங்கள் முன் கேட்டது
      அதன் பிறகு பணவீக்கம், சூழியல் மாற்றங்களைக் கணக்கில் கொண்டால்…

      https://www.twitlonger.com/show/n_1so9crf


      • 😳

        இவ்விஷயங்கள் தெரியாதென்றில்லை – ஆனால், இதை திராவிட மாடல் எனும் சட்டகத்தின் படி, இதுவரை பார்க்கவில்லை…

        வேறெந்த மாநிலத்திலும் இந்தக் கேவலம் இந்த அளவுக்கு இல்லை என்பதை நான் அழுத்தம்திருத்தமாகச் சொல்லமுடியும், என்ன செய்ய. :-(


  3. M.Phil பெறுவது இத்துணை எளிதா? அவர் கற்றுத் தந்து படிப்பை முடிக்கும் மாணவர் எப்படி இருப்பார்? தலை சுற்றுகிறது.


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *