‘பொறியியலின் அடிப்படைகள்’ பணிமனை – சில படங்கள், குறிப்புகள்
June 4, 2017
இப்படியாகத்தானே மே2017ல் மூன்று வாரங்கள் கழிந்தன…
இப்பணிமனையில், என்னுடைய சக வாத்தியானவன் – இன்னொரு கிறுக்கன், கொல்டி, மாணிக்கம் – எனக்கு ஐந்துவருடம் ஜுனியர்; சென்னப் பட்டணத்தில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் செய்யும் தொழில் முனைவோன். + இரண்டு அடிப்பொடி பொறியியலாள எடுபிடிகள் = ஷிவ்நாடார் இளம்பெண், ஐஐடி-அஹ்மெதாபாத் பையன்.
காலை 7.15 மணிமுதல், இரவு 9.00 மணி வரை ஒவ்வொரு நாளும் – ஏழாம், எட்டாம், ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுடன் காகிதம், கண்ணாடி, காற்று, மரம் என நான்கு விதமான கச்சாப் பொருட்களைக் கொண்டு விதம்விதமான விஷயங்களைச் செய்தல், அவற்றுக்குத் திட்டமிடுதல் + தயாரித்தல் + மதிப்பிடுதல்; அவற்றின் பின்னுள்ள அறிவியல் கற்றுக்கொள்ளல். +அறிவியல் புதிர்கள் + மின்னியல் கொஞ்சம்; எஞ்சினீயரிங் என்றால் என்ன, எப்படிப் பொருட்களை வடிவமைப்பது என அது விரிந்தது – வருடத்துக்கு ஒருமுறையாவது நான் பங்கேற்கவேண்டிய அந்தப் பணிமனை/வகுப்பு. கோடைவிடுமுறை சமயம், அதுவும் பெற்றோர்களை விட்டுவிட்டு மூன்றுவாரம் வெளியுலகத்தில் வாழநேர்ந்த அந்தச் சிறுபிள்ளைகளுக்கு எக்கச்சக்க விளையாட்டுகள் இன்னபிறவும் இருந்தன. (இதற்கும் எங்கள் வாத்தி கும்பலுக்கும் தொடர்பில்லை)
சென்ற வருடப் பணிமனை பற்றிய குறிப்புகள் – பள்ளிச் சிறுவர்களை-சிறுமிகளை வைத்துக்கொண்டு ஆனந்தமாக, ஒன்றரை நாட்களில் மர நாற்காலி செய்து இன்புறுவது எப்படி (29/05/2016)
ஹ்ம்ம்… …அசுர உழைபபு தேவைப்பட்டாலும் இது திருப்தியைக் கொடுக்கும் விஷயமாகவே இருந்தது.
-0-0-0-0-0-
எது எப்படியோ – கொஞ்சம் கூச்சம் தரும்படிக்கு, அந்தப் பணிமனையின் தலைப்பு – Essence of Engineering; இருந்தாலும் – பொறியியல் எனும் மகோன்னதத்தை அணுக முயல்வதற்கான அடிப்படைகளைப் பற்றி நாங்கள் அறிந்துகொண்டுவிட்டதாகப் பெரும் பாவலா செய்துகொண்டிருக்கும் 0.001% எழவில் – 1%ஐயாவது எங்கள் குழந்தைகள் கற்றுக்கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ஹ்ம்ம்… எங்களுடைய எஞ்சினீயரிங் காலட்சேபத்தைப் பற்றி நாங்கள் என்னதான் நினைத்தாலும் – குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் திருப்தி என்றே கேள்விப்பட்டோம். ஏதோ கொஞ்சம் திருப்தி; அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என மனம் அலை பாய்ந்துகொண்டிருந்தாலும், குழந்தைகளும் அவர்கள் பங்குக்கு இன்னமும் ஒரு மாதம் தொடர்ந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கத் தயார் என்று சொன்னாலும் – அவர்களுக்குப் பள்ளிகளும் எங்களுக்குப் பிற வேலைகளும்+குடும்பங்களும் இருக்கின்றனவே!
…சரி. அந்தப் பணிமனையில் பல விஷயங்கள் நடந்தன – இவற்றை எடுத்த எடுபிடிகளிடமிருந்து கொஞ்சம் படங்களைக் காப்பியடித்துக் கொடுத்திருக்கிறேன்… ஆனால், அத்தனை எழவுகளையும் கொடுக்கப் பொறுமையில்லை (பல படங்களில் குழந்தைகள் முகங்கள் அல்லது எடுபிடிகளின் முகங்கள், தேவையா?) + இவ்வளவு சுயம்பிரகாசப் புராணமும், மினுக்கிக்கொள்ளலும் போதும் அல்லவா?
என் குருக்களில் ஒருவரான தியோடொர் வான் கர்மன் சொல்கிறார் –>>
அடிப்பொடிகளின் ஆதர்ச பொறியியலாளர்கள்… –>>
பிரகடனங்கள், கோரிக்கைகள், எச்சரிக்கைகள்… –>>
பொருட்களின் பௌதிகத் தன்மை குறித்த, எனக்கு மிகவும், மிகமிகமிகவும் பிடித்தமான அழகுப் படங்கள்… —>>
மரவேலை… –>>
பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் எனக் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பிள்ளைகள் இப்படிப் போட்டது போட்டபடி அல்லது குவித்துவைத்து அட்டூழியம் செய்தார்கள்… (சில சமயம் வெறுத்தே விட்டது, கத்தினேன் கூட!) ஒத்திசைவு இல்லாத, அடிப்படை ஒழுங்கு இல்லாத எந்த காரியமுமே ஆபாசம்தானே? :-(
பெற்றோர்கள், வந்தேறிகள் புகழ்ச்சி (எங்களுக்குப் புல்லரிப்பு) –>>
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது! –>>
…பிள்ளைகளும் எடுபிடிகளும் வாட்ஸ்அப் எழவில் போட்டுப் பகிர்ந்துகொள்வதற்காக – புகைப்படங்களும் விடியோக்களும் எடுத்த மணியம். ஓரளவுக்குச் சொல்லிப்பார்த்தேன். எதிர் நீச்சல் போடமுடியவில்லை. ஆகச் சலிப்புடன் – சனியன்களா, எடுத்துத் தொலையுங்கள் என விட்டுவிட்டேன்; ஸெல்ஃபிக் கூவான்கள், நம் குழந்தைகளையும் கெடுத்துவிட்டார்கள், பாவிகள்!
ஆனால் ஒரு நாளுக்கு சுமார் 10 நிமிடத்துக்கு மேல் இந்த எழவைத் தரவேற்றுவதை அனுமதிக்கவில்லை…
-0-0-0-0-0-0-
வழக்கம்போல இந்த வருடமும் – பெற்றோர்களும் சக ஆசிரியர்களும், தங்களுக்கும் இம்மாதிரி வகுப்புகள் நடத்தமுடியுமா எனக் கேட்டார்கள்… பிரச்சினைதான்!
…சென்றவருடம் இப்படி எழுதியிருந்தேன்:
பல பெற்றோர்கள், தங்களுக்கும் இப்படி ஒரு பணிமனை நடத்தமுடியுமா எனக்கேட்டார்கள். நான் பணிவுடன் முடியாதென்று சொல்லிவிட்டேன்.
ஏனெனில், சொல்லித் தெரிவதில்லை, கற்றுக்கொள்ளும் கலை, முக்கியமாக, வயதானவர்களுக்கு… எப்படியும் உண்மையாகவே கற்றுக்கொள்ளவேண்டும் என்றால், கொட்டிக்கிடைக்கின்றன வாய்ப்புகள்… என்னிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டுமென்பதும் இல்லை.
மேலும் எனக்குக் குழந்தைகளுடன் ஒத்துவருவதுபோல வளர்ந்தவர்களுடன் முடியாது. நன்றி.
…இந்த வருடம் பிடுங்கல் அதிகமாகி விட்டது. ஆக, என் மனமாச்சரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு – நானும் என் சக ஆசிரியனுடன் சேர்ந்து ஒரு தச்சுப்பணிமனை ஒன்றை வயதுவந்த கபோதிகளுக்கு நடத்தலாமோ என யோசித்துக்கொண்டிருக்கிறோம். பார்க்கலாம்…
…நன்றி. நீங்கள் போகலாம். பல முக்கியமான காரியங்கள் உங்களுடைய கடைக்கண் பார்வைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன:
- ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?
- மாட்டிறைச்சித் தடை – என ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் பேசுவது எப்படி?
- டொனல்ட் ட்ரம்ப் இன்று என்ன ட்வீட் செய்தார், அதில் எவ்வளவு குறைகளைக் கண்டுபிடிக்கலாம்?
- நாளைய மனிதவுரிமை மாட்டுரிமை மீறலுக்கெதிராகக் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கொதிக்க, இன்றே அறச்சீற்ற மசாலாக்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்வது எப்படி?
- … …
- வெ. ராமசாமியின் திமிருக்கு அளவேயில்லை; அவன் கொட்டத்தை அடக்குவது எப்படி?
வேகமய்யா வேகம்…
June 5, 2017 at 18:35
ராம் வயது வந்த கபோதிகளுக்கான பணிமனை எங்கே, எப்போது?
June 5, 2017 at 21:05
உண்மையான மிக்க உபயோகமுள்ள படிப்பு இது வெகுவாக பரவவேண்டும் கீழே காணப்படுகிற பர்னிச்சர் டிசைன்கள் (விளம்பரம்) புகழ் பெற்ற டிசைனர்களால் செய்யப்பட்டவை அதுவும் நன்றாய் இருக்கிறது
June 13, 2017 at 23:15
<< மாட்டிறைச்சித் தடை – என ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் பேசுவது எப்படி?
இதை பற்றி உங்களின் புரிதலை அறிய விரும்புகிறேன்
June 15, 2017 at 09:55
அய்யா, கொஞ்சம் ந்யூட்ரினோ குறித்த தாபத்தில் இருக்கிறேன்.
மாட்டிறைச்சி குறித்து ஒரு மசுத்துக்கும் தடை வரவில்லை – இந்தத் ‘தடை’ என்பதே சரியான பதமில்லை என்பது என் கருத்து. பல சான்றோர்கள் (=என்னைப் போன்றவர்கள் அல்லர்!) கருத்தும் இதேதான் அய்யா!