கபாலி புராணம்: சில சத்தீஸ்கட் குறிப்புகள்

August 3, 2016

என் ஊர்சுற்றிப் புராணங்களில், சுயப்பிரதாபங்களின் ஒரு அங்கமாக – தற்போது சத்தீஸ்கட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான தம்தரீ-யில் இருக்கிறேன். முன்னமே சிலபல முறை நான் சென்றிருக்கும் பிரதேசம்தான் இது.

…இப்பகுதிகளில்,  எனக்குத் தெரிந்தே கடந்த 30-32 வருடங்களில் அரசுகள்  முழுமையான வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சி செய்துவந்தாலும்  (=தற்போதைய பாஜக அரசு ஆத்மார்த்தமாக முயன்று கொண்டிருந்தாலும்) – முன்னேற்றம், மகிழ்ச்சி போன்றவையெல்லாம் இன்னமும் அமுக்கப்பட்டேதான் இருக்கின்றன. போதாக்குறைக்கு ஒரு பதட்டம்வேறு. இந்த நிலைமைக்கு  ஒரே+முக்கிய காரணம்: இதுவும் நக்ஸல்பாரி அயோக்கியர்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் பகுதிகளில் ஒன்று.

நக்ஸலைட்டுகளாலோ, அல்லது பிற போராளிக் கூவான்களாலோ, தொழில்முறை/கையேந்தி மனிதவுரிமைக் காரர்களாலோ, வக்கிரம் பிடித்த சுயமுன்னேற்றவாதிகளாலோ (ஒரு எடுத்துக்காட்டு: அம்மணி அருந்ததி ‘அரைகுறை’ ராய்)  சமூகத்துக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதற்கு அப்பாற்பட்டு – அவர்களால் விஷயங்கள் இன்னமும் படுநாசமும் மோசமும்தான் அடையும் என்பதுதான், பொதுவாகவே என் அனுபவம்.  பாவப்பட்ட பஸ்தார் பிரதேசங்களிலும் இதுவேதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. (உங்களுக்கு இந்த பிரத்தியட்ச உண்மையைப் போய் விலாவாரியாக விவரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமேயில்லை, அல்லவா?)

-0-0-0-0-0-0-0-

சரி. கடந்த சில மாதங்களாகவே ஏதோ கல்வி, கலவி என்று கலந்தடித்துக் கொண்டு குழந்தைகள், ஆசிரியர்கள், பயிற்சி, முகாம்கள், தணிக்கைகள் என ஆனந்தமாக வியர்வை நசநசப்புடன், தாடிவுட்டுக்கினு அலைந்துகொண்டிருக்கிறேன். விஷயங்கள் திரண்டுவரும், ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் பலன் தரும் என்ற பிரமையில் இருக்கிறேன் – தொடர்ந்து இந்தப் பிரமையில் இருக்கவே எனக்கு விருப்பமும் கூட.

பஸ்தர் பிரதேசத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலைப் பக்க விடுதி ஒன்றில் சென்ற இரண்டு நாட்களாகத் தங்கியிருக்கிறேன். இனிது இனிது மழைக்காலச் சத்தீஸ்கட் இனிது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைப் பசேலென்று வயற்காடுகள். மகாமகோ மஹாநதி ஆனத்தமாகப் பல்கிப் பெருகிப் பாயும் பிரதேசமிது. ஒருகாலத்தில் 20,000க்கும் மேற்பட்ட அழகழகான அரிசி வகைகளைப் பேணிய சமூகம் இது! இன்னமும் வளமும், நம்பிக்கை மிக்க மக்களையும் கொண்ட பிரதேசம்.

… வீர்நாராயண் ஸிங், ஆர்எஸ் ரிச்சரியா, அரிசி ஆராய்ச்சி, ஷங்கர் குஹா நியோகி, சீரழிவில் க்றிஸ்தவ நிறுவனங்களின் நேரடிப் பங்கு (பாவப்பட்ட சாதா க்றிஸ்தவர்களைச் சொல்லவரவில்லை இங்கு, சோதா க்றிஸ்தவர்களை மட்டும் தான்; மேலும் க்றிஸ்து பற்றிய மேதாவித்தன போதனைகளையும் வேதனைகளையும் செய்யாமல் – க்றிஸ்துவாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் சில அற்புதமான மனிதர்களை, சேவை செய்பவர்களை, நான் நேரடியாகவே அறிவேன்; அவர்களுடைய  சொற்களிலும் செயல்களிலும் இருக்கும் தொடர்ந்த ஒத்திசைவைப் பற்றிய என் பொறாமைகளையும் அறிவேன்!), அபரிமிதமான இயற்கை வளம்சூழ வறுமையில் வாழ்வது எப்படி –   என ஆயிரம் விஷயங்கள் எழுதலாம். ஆனால் அவையெல்லாம் பின்னொரு சமயம்…

-0-0-0-0-0-0-

ஒரு விஷயம் – இது #லவ்டேக்கபாலி என நான் எழுதியதைப் பற்றி:

நான் இந்த ஸூப்பர்இஷ்டார் நடித்த,  பாரஞ்சித் இயக்கிய கபாலியைப் பார்க்கவில்லை. பார்ப்பதாகவும் இல்லை. எனக்கு அதன்மேல் ஒரு கருத்தும் இல்லை.  இதற்காக நான் பெருமையோ சிறுமையோ படவில்லை.

ஆனால் கபாலி கபாலியென தமிழகத்தில் புகழ்ச்சியாகவும் எதிர் மறையாகவும் அதன் அரசியல் பற்றியும் பலப்பல, பலதரமான மறைகழன்ற விவாதங்கள் நடப்பதைத்தான் புரிந்துகொண்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

அதாவது – என் சராசரித் தமிழனின் ஆவேஷத்தையும், உணர்ச்சிபூர்வமாக மட்டுமே, மிகைசினிமாத்தனத்துடன் வாழ்க்கையை அணுகுவதையும் பார்க்கிறேன். இறும்பூதடைகிறேன்.

அதேசமயம் – கேளிக்கைகளையும் அவற்றுக்கு நம் வாழ்க்கையில் இருக்கும் பங்கையும் மதிக்கிறேன். நகைச்சுவை உணர்ச்சியை மிகவும் அதிகமாகவே மதிக்கிறேன்.

ஆனால்… கேளிக்கை என்பது மட்டுமே வாழ்க்கையல்ல.  பிற அங்கங்களும் இருக்கலாமோ எனச் சந்தேகப் படுகிறேன். அவ்வளவுதான்.
 திரைப்படக் கோமாளிக் கேளிக்கை = தமிழ உரையாடல்களின் ஆதார சுருதி
…என, மிகச் சரியாகவே நான் புரிந்துகொண்டிருந்தாலும், எனக்கு இந்த நிலைமையானது மிகச் சோகமாகவே இருக்கிறது, என்ன செய்ய. எதற்கெடுத்தாலும் திராவிடத்தின் மேல் பாய்வது (அது மிகமிகச் சரியாகவே இருந்தாலும்) எனக்கும் அயர்வாகவே இருக்கிறது, என்ன செய்ய…

இந்த #லவ்டேக்கபாலி என மிகக் கோபத்துடன் நான் எழுதியது பற்றி, ஒரு இளைஞர் மிக வருத்தப்பட்டு எழுதியிருந்தார் (அவற்றை அப்படியே, பெயரை மற்றும் எடுத்துவிட்டுக் கொடுக்கிறேன்):

ராம்,

#லவ்டேக்கபாலிகள் .. நானும் அதுல ஒருத்தன்னு நினைக்கும் போது வெக்கமா இருக்கு. இது ஒரு குடிபழக்க்கம் மாதிரி ஆயிருகிச்சு .. சின்ன வழசு inertia கூட இருக்கலாம்.. ஒண்ணே ஒன்னு என்னால பன்ன முடியும் . என் பசங்க என் மாதிரி ஆக கூடாதுன்னு வேண்டிக்க முடியும்.
நான் அவருக்கு அனுப்பியது:
Yo! Don’t take it personally, dear!

But I really wish we discussed things of substance, along with banters on those that provide entertainment value.

But, in general, conversations about serious matters do  not happen at all… therefore the opinion making in our dear TN is oh so lopsided… :-(

Hugs:

__r.

அவர் பதில்:

போட்ட enthu என் பசங்க படிப்புல போட்டிருக்கலாம் … இல்ல நான் ஏதாவது கத்துக்க போட்டிருக்கலாம் .. ஆனா நான் நினைச்சா மாதிரி இதுக்கெல்லாம் ஒரு அமைப்பு 

வரணும்னு சொல்றாங்க .. பார்ப்போம் 

ஹ்ம்ம்… சரி. என் கருத்து என்னவென்றால் – கேளிக்கை முக்கியம். ஆனால், வாழ்க்கையும் முக்கியம். நானும் 16வயதினிலே பரட்டை போல ‘இதெப்டீ இருக்கு’ என அலைந்துகொண்டிருந்த அக்கால திராவிடன் தான். நன்றி. ;-)

0-0-0-0-0-0-0-

நிலைமை இப்படி இருக்கையிலே, ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்த நான், இன்று காலையில் 3 மணிக்கு முழித்துக்கொண்டவுடன் நெடுக ஒரு நடைப்பயணம் செய்தேன் –  கும்மிருட்டு நெடுஞ்சாலை வழியாக சுமார் 8 கிமீ சென்று இருக்கலாம், மழை பெரிதாகப் பெய்ய ஆரம்பித்ததால் திரும்பி விடுதிப்பக்கம் நடக்க ஆரம்பித்தேன். விடுதிக்கு அருகில் ஒரு நெடுஞ்சாலையோரக் குக்கிராமம்.  நனைந்த உடையுடன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த நான், சூடாகச் சாய் சாப்பிடலாம் என அக் கிராமத்தின் கடைவீதிக்குள் சென்றேன்.

தூரத்திலிருந்து ஒரு சுவரொட்டி கண்ணில் பட்டது. ஆ! அய்யோ!
IMAG0006
அருகே சென்றால் – அது…
IMAG0008
அதுதான் – இந்தியாவில் எந்த டொக்குக்குச் சென்றாலும் தப்பமுடியாத ரஜினி!

எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. ஆனால் சுதாரித்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தேன்.

-0-0-0-0-0-0-

காலை சிற்றுண்டி சமயம், என்னுடன் வந்திருக்கும் பிஹாரி பாபு (இவன் தில்லி பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியன்,  இளைஞன்) ஆசாமியுடன் என்னுடைய சோகத்தைப் பற்றிப் பேசினால் – அவனும் ரஜினி விசிறியாம். அய்யகோ! ரஜினி படம் ஒவ்வொன்றும் போஜ்புரியில் டப்பிங் செய்யப்பட்டு, அந்த எழவுகளையெல்லாம் இவனும் பார்த்திருக்கிறானாம்!

மண்டையில் அடித்துக்கொண்டு – அவனுக்கு நான் எடுத்த மேற்கண்ட படங்களைக் காண்பித்தால், அவனுக்கு ஒரே சந்தோஷம். இன்றிரவே அமர் தியேட்டர் போய்,  கபாலி பார்க்கலாம் என்றானே பார்க்கலாம்! எப்படியோ அவனுடைய ஆஃபரை அவாய்ட் செய்துவிட்டேன். :-(

இன்று விட்டுவிட்டு நாளெல்லாம் கபாலி ரஜினி நினைவுக்கு வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். இரவு உணவு  – அதாவது,  ஒரு ஸமோஸா + இரண்டு டீ :-(( –  உண்ட பின்னர் துணைப் பேராசிரியன், கபாலி மோட்சத்துக்கு, என்னைச் சபித்துக்கொண்டே (‘நீயெல்லாம் ஒரு மதறாசியா!’) கிளம்பிவிட்டான்!

என்னால் நம்பவேமுடியவில்லை – இந்த ரஜினியின் தாக்கத்து பாயும் திசைகளையும், வென்றெடுக்கும் படித்த விசிறிகளையும் பிரத்தியட்சமாகப் பார்த்த எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது… எதிர்காலத்தை நினைத்தால் ஒரு இனம் புரியாத பயமும் கூட வந்து என் குருவிமூளையை ஆக்கிரமித்தது…

இரண்டு விஷயங்கள், இந்த பயமுறுத்தல்களால் எனக்குத் தோன்றுகின்றன:

1. ‘பாரத ஒருங்கிணைப்பில் ரஜினிகாந்தின் பங்கு’ அல்லது ‘இந்தியாவில் வடக்கு-தெற்கு உரையாடல்கள்:  ஒரு தமிழ் திரைப்பட ஹீரோ சாட்சியம்’ என பிஹெச்டி செய்ய பதிவு செய்துகொண்டால் – இரண்டே நாட்களில் என் தீஸிஸ்ஸை முடித்து விட்டு டாக்டர். வெ. ராமசாமியாகிவிடலாம். என்னிடம் உள்ள மசாலாவின் திடமும் பராக்கிரமும் அப்படி!

2. நக்ஸலைட் பரவாயில்லையா, ரஜினி விசிறி பரவாயில்லையா என யாராவது என்னைக் கேட்டால், நான் சர்வ நிச்சயமாக ‘ரஜினிக்கு ஜே’ தான்! நன்றி. நக்ஸலைட்டுகளை ஒழிக்கிற மாதிரி ரஜினி ஒரு படத்தில் நடித்தால், அவர்கள் நிஜமாகவே ஒழிந்துவிடுவார்களோ?

பின்குறிப்பு: துணைப் பேராசிரியன் தொங்கிய முகத்துடன் திரும்பிவந்தான் – அவனுக்கு டெண்ட் கொட்டாயில் கபாலி மோட்சத்துக்கு நைட்ஷோ டிக்கெட் கிடைக்கவில்லையாம், பாவம். ஒரே புலம்பல். சரிடா பொலம்பாதடா,  நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் – நான் காலையில் உன்னுடன் பள்ளிகளுக்கு வரவில்லை – எப்படியாவது மேட்னி ஷோவுக்கு டிக்கெட் வாங்கப் போகிறேன் என்கிறான் பாவி. #லவ்டேக்கபாலி

சுபம்.  நானும் இந்தக் குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன். பிழைத்துக் கிடந்தால், நாளை காலையிலும் அந்த கபாலி சுவரொட்டி தரிசனம் செய்யவேண்டும். எல்லாம் கபாலிஸ்வரன் அருள்.

 

6 Responses to “கபாலி புராணம்: சில சத்தீஸ்கட் குறிப்புகள்”

  1. டாக்டர் வெங்கடேசன் Says:

    டாக்டர் பட்டம் வாங்க அந்தளவுக்கெல்லாம் கஷ்டப்பட வேணாம் சாரே :-)


    • யோவ்! அதே வேங்கடேசா? இன்னாபா ரொம்ப நாளா காணவேகாணோம்!

      நான் இன்னிக்கு டாக்குட்டர் பட்டம் வாங்கிட்டேன் – அத்தே ரஜினி டாபிக்தான், ஜேஎன்யுல சல்லீஸ்ஸா கொட்த்தாங்க; நாளெக்கி போஸ்ட்டாக் விஷயத்துக்கு ரெஜிஸ்டர் பண்லாம்னுகீறேன்.

      சும்மா நக்கல் பண்ணாம, ஆசீர்வாதம் செய்வியா…

    • Venkatesan Says:

      Congratulations, Dr. Ramasami and the very best for your post doctoral study. May I suggest the topic, “Hair styles of Rajinikanth from Murattukkalai to Kabali: A postmodern study”

      ஹி ஹி. வழக்கம் போல எலி புடிக்கிற வேலைதான்! என்னா, புச்சா ஒன்னு பின்னால சுத்திக்கிட்டு இருக்கறதுல கொஞ்சம் பிஸி. https://en.wikipedia.org/wiki/Tucker_decomposition

      :-)


      • ​யோவ் வேங்கடேசு, ஒரு மண்ணேரம் முன்னாடி போஸ்ட்டாக்கும் முட்ச்சுட்டேன். நீ சொன்ன தலைப்புதான் – ம்ம்ம், தலைமசுறோட தொடர்பு இருக்றதுதான்.

        ஜேஎன்யூல டென்யூர்ட் ப்ரொப்பஸாராவும் ஆய்ட்டேன்! நான்தாண்டா அடுத்த (இர்ஃபன் ஹபீப் + ரொமிலா தாபர்)/2! ஹஹ்ஹா!

        நன்றி! நன்றி!! நன்றி!!!

  2. Hemaravii Says:

    நன்பரே
    ​இப் பதிவு கபாலி படத்திற்கு விளம்பரம் என்று நினைக்கவில்லை.​


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s