அரைகுறை விகடனின் அகடவிகடம்: ‘மாடி வீட்டுத் தோட்டம்… மர்மத்தை விளக்குமா அரசு?’ – சில குறிப்புகள்

February 10, 2016

‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

என்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள்.

ஆ.விஜயானந்த்‘ எனும் நபர் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. பயிருக்கும் மயிருக்கும் ஆறு வித்தியாசங்களை அறியாதவராகத்தான் இருக்கவேண்டும் இவர்! இவரும் ஒரு அமாணவப் அபயிற்சியாளக் குளுவானாகத் தான் இருக்கவேண்டும். (சில ‘விகடன் குழும’ மாணவப் பத்திரிகையாளக் குளுவான்களுடன் சென்ற தேர்தல் சமயம் (2011?) மனம் பதறப் பேசியதால்தான் இப்படிச் சொல்கிறேன்!)
  • மாடிவீடுகளில் தோட்டம் போடுபவர்களால், விவசாயிகள் என்ன என்ன பெரிய பாதிப்பினை அடைந்துவிடமுடியும்?
  • ஏன் விவசாயிகளிடம்(!) மட்டுமே இம்மாதிரி சதித்திட்டக் கேள்விகள்(!) கேட்கப்படுகின்றன?
  • மாடிவீட்டுத் தோட்ட ஆர்வலர் ஒருவரிடம் கூட உரையாடாமல்,  இக்கட்டுரையை எப்படித்தான் ஒருவர் அயோக்கியத்தனமாக எழுதக்கூடும்?
  • அல்லது தமிழக விவசாயிகள் அனைவரும் – சென்னைக்கும் கோவைக்கும் குடிபெயர்ந்து, மாடிவீடுகளில் தோட்டம் அமைக்கும் கட்சி என ஒரு புதிய கொள்கைக்கூட்டணிக் கட்சியை ஆரம்பித்து விட்டார்களா?
இப்பதிவில் நான், இம்மாதிரி ஏடாகூடமான கேள்விகளைக் கேட்கப்போவதில்லை, கவலை வேண்டேல்.

-0-0-0-0-0-0-0-

பொதுவாகவே — சிரத்தையோ, மூளையோ, துளிக்கூட அற்ற – ஹோம்வர்க் என்பதைத் துளிக்கூடச் செய்யாத, யாரையோ என்னவோ கேட்டு ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், அப்படியே கருத்து வாந்தி எடுப்பது மட்டும் தான் படுமட்டங்களுக்குச் சாத்தியம். அதுவும் ஊடகப் பேடிகளை எடுத்துக்கொண்டால் – நிலைமை இன்னமும் மோசமாகிவிடுகிறது.

விதைகள் என்றால் என்ன, அவற்றின் விதம்விதமான வகைகள் யாவை, அவற்றைத் தெரிவு செய்யும் /பகுக்கும் முறைகள் யாவை, மரபணு மாற்றம் என்றால் என்ன, எவ்வளவு பல்லாயிரம் வருடங்களாக நம் பாரம்பரிய விவசாயிகள், செயற்கை முறைகளை மட்டுமே (இயற்கைக்கு எதிராக மட்டுமே!) நம்பியிருக்கிறார்கள், ‘இயற்கை’ என்பதே எப்படி ஒரு ‘செயற்கையான’ கருத்துருவாக்கம், வணிகம் என்றால் என்ன, லாபம் ஒன்றும் ‘அடிக்கப்பட’ வேண்டியதொன்றல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாமே அயோக்கியமானவையல்ல, வேளாண் பல்கலைக்கழகங்கள் எதற்காக உள்ளன, அவை என்ன செய்கின்றன, என்ன செய்யமுடியாது, வேளாண்மை ஆராய்ச்சிகளுக்கான திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன, என்ன-ஏன் செய்கிறார்கள், அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன, அவைகள் முன்னோடி (பைலட்) திட்டங்களாக இருக்கும்போது எவையெல்லாம் மிக முக்கியம், பின்னர் பரந்துபட்டு செயல்படும்போது எவை முக்கியம், வயலுக்கும் தோட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்கள், தரைத் தோட்டங்களுக்கும் மாடித் தோட்டங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் யாவை … …

… இப்படி ஒரு எழவைப் பற்றியும் ஒரு துணுக்கைக் கூடத் தொட ஆர்வமோ உழைப்போ இல்லை.

ஆனால்… உட்கார்ந்த இடத்தில் இருந்து, சக அரைகுறைகளின் கருத்துகளை மட்டுமே கேட்டுக்கொண்டு, அமோகமாக உளறிக் கொட்ட மட்டுமே முடியும். (யார் இந்த  ‘அறச்சலூர் செல்வம்?’ கோமாளித்தனமான கருத்துகளை வாரி வழங்கியிருக்கிறார் இவர்!)

ஆகவே…  சதித் திட்டங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் பகீர் திட்டங்களைப் பற்றி மட்டுமே முகாந்திரம் இல்லாமல் பேச முடியும்…

ஆகவே… அற்ப வதந்திகளை தேவை மெனெக்கெட்டுப் பரப்ப முடியும். (நான் இந்தத் திட்டத்தைப் பற்றி நேரடியாகச் சிறிது அறிந்தவன் – இது ஒரு நல்ல, பயன் தந்துள்ள திட்டம்; இந்த விதைப்போராளிகள் சொல்வதுபோல் அநியாய லாபத்தையோ வேறேது ஆதாயத்தையோ இந்தோஅமெரிக்கன் நிறுவனம் பெற்றிருக்கவே முடியாது; இந்த ஐந்துகோடி ரூபாய் திட்டத்தில், விதைகளின் மதிப்பு மிகவும் குறைவு. அது சுமார் 4% மட்டுமே. இதிலும், அந்த நிறுவனத்துக்கு அமோக லாபம் இல்லை; சின்னஞ்சிறு பொட்டலங்களைத்தான் கொடுக்கிறார்கள், அவற்றையும் பிரித்துப் பிரித்துப் பல பகுதிகளுக்கு அனுப்பவேண்டும். அனுப்பும் செலவும் அடக்கம்  — ஆக, லாபம் இருந்தால் அது சுமார் ரூ 1.5-2 லட்சம் மட்டுமே, அதுவே மிகமிக அதிகம்!

நான், வெறும் மாடித் தோட்டங்களை மட்டுமல்ல, ஓரளவுக்குப் பெரிய அளவிலும் தோட்டம் போட்டிருக்கிறேன். பல பெரிய பண்ணைகளில், அடிமட்ட உதவியாளனாகப் பணி புரிந்திருக்கிறேன். இந்தோ அமெரிக்கன் விதைகளையும், ‘நாட்டு’ சாதா விதைகளையும், ‘திறந்த வெளி’ சேர்க்கைசெய்யப்பட்ட விதைகளையும் நான் உபயோகித்திருக்கிறேன். பின்னவற்றைச் சேமித்து பிறருக்குக் கொடுத்தும் இருக்கிறேன்.

அதனால்தான் சொல்கிறேன்: ‘அரசு வழங்கிய விதைகள் அத்தனையும் கலப்பின வீரிய விதைகள். இதில் இருந்து உருவாகும் வெண்டையில் நாம் விதைகளை எடுக்க முடியாது.’ என்பது அரைகுறைப் பொய். நானே இந்தோஅமெரிக்கன் விதைகளை, அதுவும் வெண்டைவிதைகளைக்கூட உபயோகித்து வளர்ந்த செடிகளில் இருந்து விதைகளை எடுத்து மேலும் தோட்டம் போட்டிருக்கிறேன். கிருமி நாசினிகளை, பூச்சிக் கொல்லிகளை ஒருபோதும் உபயோகிக்கவேயில்லை! எப்படி வாய்கூசாமல் பொய் சொல்கிறார்கள், இந்த ஊடகப்பேடிகள்!)

ஆனால் – ஏதாவது, ஒரு குசுவையாவது ஆக்கபூர்வமாக விடச் சொல்லுங்கள், இந்த ஜந்துக்களிடம் – எல்லா ஓட்டைகளையும் மூடிக்கொண்டு, அடுத்த வதந்திக்குச் சென்றுவிடுவார்கள், அயோக்கியர்கள்! (ஊழலேயில்லை எனச் சொல்லவரவில்லை நான்; சிறிய அளவில் அது நடந்திருக்கலாம் – ஆனால், அதற்கு அப்பாற்பட்டும் வேலைகள் நடந்திருக்கின்றன என்பதைச் சுட்ட விரும்புகிறேன். மேலும், இந்த மாடித்தோட்டத் திட்டம் என்பதன் திட்டமதிப்பே மிகவும் சிறியது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்!)

இந்தக் கேடுகெட்ட விகடச் செய்தி எழவுக்கு, குளுவான் பின்னூட்ட எழவுகள்/பொழிப்புரைகள் வேறு. குளுவானின் உளறலை சககுளுவான் அறிவான்.

இந்தக் குளுவானார் – தளத்திற்குக் கடவுச்சொல் கேட்டால், உடனே சதி என்கிறார். இணையத் தளம் என்றாலே எல்லாருக்கும் எல்லாவற்றையும் விரித்துக்காட்டிக்கொண்டிருக்கவேண்டுமா என்ன?   மூன்று தொடர்ந்த பின்னூட்டங்களில் மேலதிகச் சதித் திட்டங்களை விரிக்கிறார்! வாழ்க!!

Screenshot from 2016-02-10 09:39:05

ச்சீ. வெறுப்பாக இருக்கிறது.

இந்த மெய்ன் விகடன் எழவு என்பதன் குவியம் வேளாண்மையோ சுற்றுச்சூழலோ அல்ல என்றாலும், அது அக்கப்போர்களில் மட்டுமே ஈடுபடும், அதற்கு கிளுகிளுப்புகள் மட்டுமே பிரதானம் என்றாலும் – ‘பசுமை விகடன்’ என்பதாவது வேளாண்மையை அறிவியல் பூர்வமாக அணுகும் என்றால்…

பசுமையைக் கூட விகட விட்டேற்றித்தனமாகவே இக்காலங்களில் அணுகுகிறார்கள். ஒரே பிரச்சாரப் பொய்மைகள், வேறென்ன சொல்ல…

-0-0-0-0-0-

இவ்வளவு பெரிய தமிழ் நாட்டில் – படிப்பறிவும், செயலூக்கமும், திறமையும் உடைய இளைஞர்களே இல்லையா என்ன? இவர்களில் ஒரு சிலராவது பத்திரிகைக்காரர்களாக ஆக விரும்ப மாட்டார்களா என்ன?

ஆனால் — அரைவேக்காட்டு பத்திரிகை சூழல்களில் இருந்தும், அலுப்புத் தரவைக்கும் சராசரித்தனத்திலிருந்தும், இம்மாதிரி அரைகுறைகளில் ஆகாத்தியங்களில் இருந்தும் – ஒரு சில பிரகாசமான இளைஞர்கள் ஜெகஜ்ஜோதியாகக் கிளம்பிவருவார்கள் எனும் அற்புதம்தான், தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.

விகடன் குழுமத்திலிருந்தும், அப்படி யாராவது வெடித்துக் கிளம்பிக் கொண்டிருப்பதாக, யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். எனக்குக் கொஞ்சமாவது ஆசுவாசமாக இருக்கும்.

நன்றி. :-(

-0-0-0-0-

8 Responses to “அரைகுறை விகடனின் அகடவிகடம்: ‘மாடி வீட்டுத் தோட்டம்… மர்மத்தை விளக்குமா அரசு?’ – சில குறிப்புகள்”

  1. M.Sekhar's avatar M.Sekhar Says:

    முற்றிலும் உண்மை.

    இங்கு சென்னையில் நான் என் வீட்டில் பயிரிட வாங்கி வந்துள்ளேன். விதைகள் hybrid ஆனால் Genetically Modified அல்ல. அவற்றில் மூன்று விதைகள் கோவை அரசு அறிவியல் கல்லூரி உருவாக்கி வர்த்தக முறையில் வெளிட்யிட்ட கோ-xx என்ற பெயருடன் உள்ள விதைகளே.

  2. ravi's avatar ravi Says:

    அறச்சலூர் செல்வம் – இயற்கை விவசாய அமைப்பு ஒன்றை நடத்துகிறார் .. நம்மாழ்வாரின் நண்பர்..

  3. A.Seshagiri.'s avatar A.Seshagiri. Says:

    திரும்பவும் தொந்தரவு தருவதற்கு மன்னிக்கவும்.வரும் தமிழ் நாடு சட்டசபை தேர்தலை பற்றிய தங்கள் கருத்துக்களை ஜெமோ வும் ,பத்திரியும் தெரிவித்து விட்டார்கள்!உங்களுக்கு இது பற்றி ஏதாவது கருத்து உண்டா? ஏனென்றால் போன தேர்தலில் தங்களைப் போன்றவர்களின் ”தாக்கம்” அதிகம் இருந்தது!
    http://www.jeyamohan.in/84578#.Vrw7z2ewvMk
    http://www.badriseshadri.in/

  4. ravi's avatar ravi Says:

    என்ன நைனா .. jnu விவகாரத்தில் இந்தியாவே பற்றி எரிகிறது .. என்ன பண்ணிகினு இருக்க நீ? சொம்மா பயிர், விகடன் அது இதுன்னு


    • ராமசாமி Tue Apr 02, 09:18:00 PM GMT+5:30

      நான் முதலில் 1984-ல் ஜேஎன்யு போனேன் – ஒரு ‘இடது சாரி’ சார் மாணவனாக. பின்னர் 88-89ல் ஒரு ஆர்கனைசராக (ஸாவ்ல் அலின்ஸ்கி தான் என் குரு) சில தடவை. 90களின் இறுதியில் – சமூகக் கட்டமைப்பு வேலைகளுக்கு ஆர்கனைசர்களாக (களப் பணி + பரந்து பட்ட அமைப்புகளைக் கட்டமைத்தல் வேலைகளுக்காக) ஆள் பிடிப்பதற்காகச் சில தடவை. 2002ல் கடைசியாகப் போனேன் – என் தனிப்பட்ட வேலைகளுக்காக. இரண்டு மாதங்கள் முன்பு, இப்போது சென்னை கணித கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பழைய ஜேஎன்யு (புத்திசாலி) மாணவர் என்னுடன் சுமார் 30 மணி நேரம் ரெய்ல் வண்டியில் பிரயாணம் செய்தார். சுவையான உரையாடல்கள்! ஆக, சென்ற 30 வருடங்களாக விட்டு விட்டு (ஒரு மாணவனாக, ஆர்கனைசராக, வேலை கொடுப்பவனாக, உடையாடுபவனாக) ஜேஎன்யுவைப் பார்த்து வரும் என்னுடைய எண்ணங்கள்:

      1. ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் அன்றும் இருந்தார்கள். அவர்கள் நம்பிய அரசியலை முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால், ஜேஎன்யு மாணவர் தலைவர்கள், பின்னர் பெரிதாக அரசியல் வானில் வளர முடியவில்லை. கடந்த பல வருடங்களில் நான் ஜேஎன்யுவிலும் சரிவைத்தான் பார்க்கிறேன்.

      2. இப்போதும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக (செந்நிறம் போய் இப்போதெல்லாம் ரோஜா நிறம் தான்) ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் ப்ரொடெஸ்ட் செய்கிறார்கள். ஆனால், பொது வாழ்வில், அரசியலில் இவர்களுடைய ’தாக்கத்து’ – இம்பேக்ட் என்பது மிகக் குறைவு. தற்காலத்தில், ஊடகங்களுக்கும் கூட இது அயர்வாக இருக்கிறது. இவர்களும் நம் தமிழக மாணவர்கள் போலத்தான், உள்ளீடற்று இருக்கிறார்கள். மேலதிகமாக, கட்சி ரீதியாக துண்டாடப் பட்டு ப்ரொடேஸ்ட், எதிர்ப்ரொடேஸ்ட், மாற்றுப்ரொடேஸ்ட் என ப்ரொடேஸ்ட் மயம்.

      3. ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் தான் அந்தக் கால இடதுசாரி அறிவுஜீவிகளின் ஊற்றுக் கண். ஆனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜேஎன்யு மாணவர்களின் படிப்பறிவும், செயலுக்கமும் இன்று இல்லை. அல்துஸர், க்ராம்ஷி என்பார்கள். நிச்ச என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பிப்பார்கள் – ஆனால் அதற்கு மேல் கோர்வையாகப் பேச, கட்டமைக்க வராது. இப்போது EPW போன்ற பத்திரிக்கைகளில் கூட ஜேஎன்யு-வின் பங்களிப்பு மகத்தானதாக இல்லை. ஆசிரியர் தரமும், கவலைக்கிடமாகத் தளர்ந்து வருகிறது.

      4. ஜேஎன்யு நிர்வாகத்தினர் – லிபரல்கள், தாராளவாதிகள் என்றெல்லாம் இப்போது இல்லை. தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள் என்பது தான் சரி. மாணவர்களின் படிப்பறிவு, விஷயஞானம் எல்லாம் எப்போதோ வடக்கிருக்க ஆரம்பித்துவிட்டன – going south, that is.

      விதிவிலக்குகள் இருக்கிறார்கள் தான். ஆனால், விதிவிலக்குகள் சுட்டிக் காட்டுவது ஒரு பொது விதியையே. நான் சுமார் 40 வேன்கார்ட் மாணவர்களுடன் 90களின் இறுதியில் நேர்காணல் நடத்தி – ஒரு மாணவனையே (அரை மனதுடன்) தேர்வு செய்ய முடிந்தது.

      என் நோக்கில், ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாதவ்பூர், வாரணசி ஹிந்து பல்கலைக் கழகங்கள் ஜேஎன்யு-வை விட செயலூக்கம் கொண்ட, படிப்பார்வம் மிகுந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ’ப்ரொடெஸ்ட்வாலா’க்கள் அலட்டல்கள் இவ்விடங்களில் இல்லை.

      YMMV – ஆனால் உங்கள் எதிர்கால ஜேஎன்யு க்ஷேத்ராடனத்தில், குறிப்பிடத்தக்க மாணவர்களைக் கண்டு களிக்க முடிந்தால், எனக்கும் மகிழ்ச்சியே.

      http://www.badriseshadri.in/2013/04/blog-post.html?showComment=1364917694236#c3691779206616390672

      • ravi's avatar ravi Says:

        இதெல்லாம் பத்தாது .. காவிகளின் சதி.. எங்களக்கு தனி பேப்பர் (பதிவு) வேணும் !!


      • அய்யா ரவி, என்னை மன்னித்து விடுங்கள். ஜேஎன்யு சார்ந்த ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குளுவான்கள் என்னைப் பெரும்பாலும் அழமட்டுமே வைக்கிறார்கள். சில சமயம் சிரிக்கவும் வைக்கிறார்கள். இது பல பத்தாண்டுகளாகவே நடந்து வரும் சோகம். என்னை மேலும் அழச் சொல்லாதீர்கள்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *