பெரியவர், பேராசிரியர் ஜிடி ‘ஸ்வாமி க்யான் ஸ்வரூப் ஸானந்த்’ அக்ரவால், க்ருதக்ஞ – சில குறிப்புகள்
January 16, 2016
பலப்பல வருடங்களாக இவரைப் பற்றிச் சிலபல அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டு / அறிந்துகொண்டிருக்கும் எனக்கு, அடுத்த இரு வருடங்களிலாவது இவர் தங்கியிருக்கும் சித்ரகூட் பிரதேசத்திற்கு செல்லவேண்டும், அவரிடம் உரையாடவேண்டும் என்ற அரிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக, இவ்வரிய சந்தர்ப்பம் இன்று வாய்த்தது.
இம்மாதிரி அபூர்வமான மனிதர்களுடன் பழக, பேச – அழகான, செறிவான அனுபவங்களைப் பெறக் கொடுப்பினை வேண்டும் – ஆனால் எந்த எழவைச் செய்து புண்ணியம் தேடிக்கொண்டதால், எனக்கு இம்மாதிரி விஷயங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது எனக்கு, சத்தியமாக இந்த வினாடி வரை தெரியவில்லை.
-0-0-0-0-0-0-
சரி. அரவிந்தன் கண்ணையன் அவர்களின் அரைகுறைத்தனமான அரைவேக்காட்டு அபத்தக் கட்டுரைக் களஞ்சியங்களைப் படிப்பதும், அவற்றில் சிலவற்றுக்குப் பதிலாக எழுதும் பாவனையில், நானும் கோபப்பட்டுக் கிண்டலாக எழுதுவதும் – அவற்றையெல்லாம் படிக்கும்போது எனக்கே சகிக்கவில்லை. நான் பொதுவாக வைத்துக்கொண்டிருக்கும் சிலபல சராசரி குமாஸ்தாவிய + என்ஆர்ஐ அளவுகோல்களை, இம்மனிதரைப் புரிந்துகொள்ள உபயோகித்தால் அரவிந்தப் புதிரை அவிழ்ப்பது ஒன்றும், பெரிய விஷயமில்லை.
ஆக, இவரை வேறு ஏன் பொருட்படுத்தி நான் எழுதவேண்டும், வேறு ஏதேனும் எழுதலாமே என்கிறான் ஒரு நண்பன்; எவ்வளவோ பேர் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு போவதில்லையா என்கிறான். ஆனால், அவர்களுக்கு இருக்கும் சமன நிலை எனக்கு இல்லை – ஆகவே இப்படிச் செய்கிறேன். உண்மை, என் எதிர்வினையும் நாராசமாகவேதான் இருக்கிறது — ஆனால் அற்பத்தனமான கருத்துப்பூனைகளின் அழிச்சாட்டியங்களுக்கு, யாராவது ஒரு கிறுக்கனாவது கிண்டாமணி கட்டவேண்டும் அல்லவா? [அரவிந்தாயணம் இரண்டாம் பகுதி தயாராகி விட்டது! :-(]
நிலைமை இப்படி இருக்கையிலே…
-0-0-0-0-0-0-0-
பொதுவாக, நான் தங்கியிருக்கும் பகுதிக்கு அண்மையில் இருக்கும் சில குறிப்பிடத்தக்க பள்ளி முயற்சிகளைக் கண்டுகொண்டு, அவற்றுக்கு ஒரு உதவியாளனாக, முடிந்தவரை கூட-ஓடுபவனாக இருப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கும் எனக்கு, நேற்று, அப்படிப்பட்ட ஒரு பள்ளியிலிருந்து ஒரு செய்தி வந்தது: பேராசிரியர் மகாமகோஅகர்வால் அவர்கள் நாளைக்கு வருகிறார், உனக்கு வரமுடியுமா?
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? அதுவும், பொங்கல் சமயத்தில்?? வீட்டுவேலைகளை அப்படியே போட்டுவிட்டு, மற்ற பணிகளைக் கடாசிவிட்டு, சந்தோஷமாகச் சென்றேன்.
-0-0-0-0-0-0-0-
உத்தரப் பிரதேசத்தில், விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு வைசிய சிறுகுலக்குழுவில் 1932ஆம் ஆண்டு பிறந்த நம் பெரியவர், தம் படிப்பை தாய்மொழிக் கல்வி மூலம் படித்தார். ஸம்ஸ்க்ருதத்தைத் தன் சிறுவயதிலேயே, ஒரு குருகுலத்தில் (=கிராம வித்யாபீடம்) கற்றுக்கொண்டார். ரூட்கி கலாசாலையில் ஸிவில், கட்டுமான எஞ்சினீயரிங் படித்து, பின் சில வருடங்கள் அரசின் நீர்வளத்துறையில் பணி புரிந்து, அதற்குப் பின்னர், அமெரிக்க பெர்க்லீ பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
பின்னர் இந்தியா வந்து ஐஐடி கான்பூரில் பேராசிரியராக, துறைத்தலைவராக ஒரு மாமாங்கத்துக்கு மேல் பணியாற்றினார். அவருடைய அக்கால மாணவர்கள் பலர்(கொடுத்துவைத்தவர்கள்தான்!), அவருடைய ஆகிருதியாலும், அறிவினாலும், உழைப்பினாலும் ஈர்க்கப்பட்டு – பிற்காலங்களில், மகத்தான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கின்றனர்; பங்களிப்புகளைக் கொடுத்திருக்கின்றனர்.
பின்னர் இந்திய அரசு அமைத்த மாசுக்கட்டுப்பாட்டுத் துறையில் பலகாலம் முனைப்புடன் பணியாற்றினார். கங்கை நதியை, நம் நீர்வளங்களைக் காப்பாற்ற, அவற்றைப் பராமரிக்க, அதிகப் பாதிப்பில்லாத கட்டுமானங்களை அறிவியல் பூர்வமாகக் கட்டியெழுப்ப, ஒரு உற்சாகமான இளைஞர் குழாமைக் கட்டியெடுக்கவென அவர் சாதித்துள்ளவை கணக்கிலடங்கா!
பலமுறை உண்ணாவிரதங்களையும் (முப்பது நாள், நூறு நாள் என்றெல்லாம்!) அறப்போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி — அவற்றின் மூலமாக நம் கங்கை சார்பாக, நம் பாரம்பரியங்களின் சார்பாக, நம் நீர்வளங்களின் மேலாண்மை சார்பாக – பல வெற்றிகளைப் பெற்றிருப்பவர். (எனக்கு இப்போது, நம்முடைய தொழில்முறை உண்ணாவிரதக் காரர்களான சுப.உதயகுமார், கருணாநிதி போன்றவர்களின் நினைவு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!)
தன் 79ஆம் வயதில் ஸந்யாசம் வாங்கிக்கொண்டு சித்ரகூடத்தில் வாழ்கிறார். கௌரவப் பேராசிரியராக வேலையும் செய்கிறார்.
காந்திய வழிகளில் உறுதியான நம்பிக்கை. வெகு எளிமையான வாழ்க்கை. ஸம்ஸ்க்ருத ஞானம் படிப்பறிவு. காத்திரமான அறிவியல் பின்புலம். பழமையையோ புதுமையையோ வெறுமனே வெறுக்காமல் அல்லது போற்றாமல் சமனத்துடன் அணுகும் தன்மை. பொறியியலாளர்களின் பொறியியலாளர் (Engineer’s Engineer!)எனும் அளவில் தொழில்நுட்ப ஞானம். இந்திய சுற்றுச்சூழல் பாதிப்புக் கணிப்பாளர்களிலேயே ஒரு உயர்ந்த இடம். கண்மூடித்தனமாக எதனையும் எதிர்க்காத தன்மை. அரசுகளுக்கு ஆக்கபூர்வமாக அறிவுரை கொடுக்கும் மேதமை. அயரா உழைப்பு. முன்வைத்த காலை பின்வைக்காத தன்மை. நகைச்சுவை உணர்ச்சி. கனிவு.
பெரியவருக்கு இப்போது 84 வயது இளமை. தானே சமைத்துச் சாப்பிடுகிறார், துணி துவைத்துக்கொள்கிறார், படிக்கிறார், படிப்பிக்கிறார். சொற்ப உடமைகளுடன் துறவியாக வாழ்கிறார். ஆங்கிலம், ஹிந்தி, ஸம்ஸ்க்ருத மொழிகளில் சொற்பொழிவும் ஆற்றுகிறார். தொடர்ந்து பாரதத்தின் பல பாகங்களுக்கும் சென்று சிறுசிறு குழாம்களாகப் பணியாற்றுபவர்களுக்கு உத்வேகம் தருகிறார். அவர் ஞானிதான்; எனக்குச் சந்தேகமேயில்லை.


பெரியவர், कृतज्ञ [க்ருதக்ஞ – kritagnya] [being grateful, நன்றியுடைமை] என்கிற பதத்திற்கு வியாக்கியானம் கொடுக்க ஆரம்பித்தார். இப்பதத்தை நான், நம் சுற்றுச்சூழலைப் பொறுத்தமட்டில் stewardship. சமனத்துடன் வளங்களைப் பேணுவது என மட்டுமே புரிந்துகொண்டிருந்தேன்.
ஆனால் அவர் இதனை விரித்து – யாராவது நமக்கு நல்லது செய்தால், அதைவிட அதிகமாக அதனை அவர்களுக்குத் திருப்பி விடுவது என்று பேசினார். க்றிஸ்தவ போதனைகளில் திரும்பத்திரும்ப வரும் நன்றியுடைமை (=thankfulness) பற்றிச் சிலாகித்துச் சொன்னார். இம்மனோபாவத்தை அனைவரும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்…
… வெளியே வரும்போது நான், யார்யாரெல்லாம் எனக்கு, நமக்கு உதவி செய்திருக்கிறார்கள், எம்மாதிரியெல்லாம் அவர்களுக்கு நான் பெற்ற உதவிகளை, உபரியுடன் திருப்பக் கூடும் என யோசித்துக்கொண்டிருந்தேன்…
-0-0-0-0-0-0-
“சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர். கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உத்தராகண்ட் மாநிலத்தின் நதிகளையும், அதன் இயற்கைச் சூழலையும் அறிவியல் பூர்வமாக நன்கு அறிந்தவர். அன்னை கங்கையை நேசிப்பவர்” (ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி)
இது ஒரு சிறுகட்டுரைதான், சுலபமாகப் படித்துவிடலாம்.
நேஷனல் ஜியாக்ரஃபிக் கட்டுரை: Dying for the Ganges: A Scientist Turned Swami Risks All
விக்கிபீடித்த தகவல்கள்: https://en.wikipedia.org/wiki/G._D._Agrawal
January 17, 2016 at 07:48
இப்படியான உன்னதர்கள் இன்றும் நம்மிடையே, அவர்களை அறிமுகப்படுத்தும் அரிய, அத்தியாவசியமான பணியைச் செய்வதற்காக மட்டுமே உங்கள் புண்ணியக் கணக்கில் கணிசமான கையிருப்பு எப்போதுமிருக்க வேண்டும், நியாயமாக. தங்களுடைய தொடரும் சமூகப் பங்களிப்புகளுக்கான கணக்கு தனி. என் போன்றோர் கடைத்தேறுதல் எந்நாளோ?
January 17, 2016 at 08:57
கொடுத்து வைத்த மாணாக்கர்கள். கொடுத்து வைத்த ப்ரௌடர்கள்.
ஹிந்தி, ஆங்க்லம், சம்ஸ்க்ருதம், ஆன்மீகம், அறிவியல், புதுமை, பழமை என்ற பன்முக அடையாளங்களுடன் கூடிய …….. இதெல்லாம் குறச்சல் என்று தொட்டுக்க ஊறுகாய் மாதிரி ……… நகைச்சுவையுடன் கூடிய பேச்சு என்று ……… இந்த உயர்ந்த மனிதருடன்…….. ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க சன்யாஸி ஒருவருடன்……..நேரத்தை பயனுடன் செலவழித்திருக்கிறீர்கள்.
சர்க்காரின் செயல்பாடுகள் என்று வந்தால் குறைகள் தான் நிறைவாகத் தெரியும். நிதர்சனம் அப்படியிருக்க அதில் சோர்ந்து போகாது ஆலோசனைகள் வழங்குவதும்……..சர்க்கார் இடித்துறைக்கப்பட வேண்டிய கட்டம் வரும்போது……..ஒரு சன்யாஸியாக உண்ணாவ்ரதத்தில் இறங்குவதும் ……….
ஹிந்துஸ்தானத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பெரியோர்களில் ஒருவரை தாங்கள் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்.
January 17, 2016 at 09:19
தங்கள் மேலான நேரத்தையும், பொழிப்புலமையையும் பேராசிரியர் ஜிடி ‘ஸ்வாமி க்யான் ஸ்வரூப் ஸானந்த்’ அக்ரவால் போன்ற பெரியவர்களைப்பற்றி எழுதுவதில் செலவிட வேண்டுகிறேன். அக, திக, முக போன்றவற்றில் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
January 17, 2016 at 10:50
நாம் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய ஆளுமைகளை அறிமுகப்படுத்த வேண்டுவதை வழிமொழிகிறேன், இத்தளத்தில் அது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதேவேளை, நம்மைப் பீடித்துள்ள முடக்குவாதங்களை நாம் உணர்வதும் அவசியமே. அவற்றையும் அறியத்தரும் ஆசிரியருக்கு நன்றி.
January 18, 2016 at 17:55
பெரியவரை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி !
January 22, 2016 at 18:59
இவ்வளவு பெரிய மனிதரை சந்தித்துவிட்டு, இத்துனூண்டு எழுதினால் எப்படி ஐயா! இசுடாலினை மாதிரி ஆசாமிகளப் பத்தி எழுதச்சொன்னா மட்டும் ஒங்க பேனால இங்க் ஒரேயடியா சுரந்திடுதே!
July 24, 2018 at 09:59
[…] […]
July 24, 2019 at 13:20
[…] ஆர்வமானது – பெரியவர் ஸானந்த்ஜி (1, 2, 3), சித்பவன்காரர் (1, 2), ரவீந்த்ரஷர்மா […]
October 19, 2020 at 14:40
[…] […]