குழந்தைகள் (மழை, (இலைகள் + பூக்கள் + விதை நெற்றுகள் + மண்நிலம்), கற்பனை) = டிஎன்ஏ இரட்டைச் சுருள் வடம்!
September 19, 2013
And — Oh, the story of the impromptu DNA double helix structure…
சில நாட்கள் மிக அழகாகக் கழிந்து விடுகின்றன – குழந்தைகளுடைய குதூகலப் போக்கில் அவர்களுடன் ஒத்திசைந்து போவதில்.
சென்ற இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்கள் மப்பும் மந்தாரமுமாகவே கழிந்தன. பகல் வேளையிலேயே ஒரே ஜிலுஜிலுப்பு, மதிய வேளையில் பூந்தூரல்… கருகும்மென்று மேகம் நிரம்பிய வானம் திடீரென்று சில சமயம் எட்டிப் பார்க்கும் வெயில். மனதிற்கு, ஆன்மாவிற்கு அற்புதச் சுகமளிக்கும் (ஆனால் பரிசுத்த ஆவியை வேலைவெட்டியற்றுத் தட்டியெழுப்பாத) தருணங்கள்.
தலைக்குள், உணவுப் பாதைக்குள் செரட்டனின் ந்யூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் அநியாயத்துக்குச் சுரந்து, இப்பூவுலகில் அனைத்தும் இனியன இனியன என்று சொல்லிக் கொண்டேயிருந்தன… இருந்தாலும் மெலிதான துக்கம் படர்ந்து கொண்டிருந்தது. (அடிப்படைப் புரிதல் #1: அய்யய்யோ! சுஜாதாத் தனமாக எழுத பிரயத்தனப் படவேண்டிய அவசியமேயில்லையா?)
… எங்கள் பள்ளியில் ஆஹாவென்று வளமாக வளர்ந்துள்ள பசும் பூச்செண்டு மரங்களினால், மழை நாட்களில் பல வகுப்பறைகள் இருட்டாகவே இருக்கும். குழல் விளக்குகளை உபயோகிக்கலாம்தான் – தொடர்ந்து வகுப்புகளை நடத்தலாம்தான். ஆனால், இம்மாதிரி சமயங்களில் நாங்கள் எல்லோரும் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து விடுவோம்.
மழைச் சமய மேக ஓட்டங்களும், சில் தூரல்களூம், வர்ண வெளிச்ச மயக்கங்களும், பட்சி ஜாலங்களும் – வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியாதவை. அழகானவை. இந்த சமயத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியே வராமல் இருப்பது இயற்கையை அவமதிப்பு செய்வதுதான்…
கொஞ்ச நேரம் வெட்டவெளிக்கு வந்து, எங்களில் பலர் வட்டமாக, கை கோர்த்துக்கொண்டு உட்கார்ந்து கொள்வோம். சிலர் கண்மூடிப் பிரார்த்தனை செய்வோம். மழை என்றாலே என் மண்டையின் பின்புலத்தில் மந்த்ர புஷ்பம் ஓடிக் கொண்டிருக்கும்.
அதுவே அடைமழை என்றால், பாரதியின் மழை (திக்குகளெட்டும் சிதறி… எம் பி ஸ்ரீனிவாசனின் சேர்ந்திசை வடிவத்தில்).
… சிறிது நேரம் கழித்து, மின்னல்கள் இல்லாவிட்டால், நாங்கள் ஏதாவது மரத்தடியில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்போம் – என் குழந்தைகளுக்கு, இச்சமயங்களில் பொதுவாகப் பிடிப்பது படுபீதியளிக்கும் பேய்க்கதைகள் தான்; கதைகள் எல்லாவற்றிலும் ஏதாவது சில அறிவியல் / கணிதம் / புவியியல் / வரலாறு சார்ந்த கருத்துகளை, நிகழ்வுகளைப் புகுத்தி விடுவேன். இவற்றுக்குக் குழந்தைகள் வைத்திருக்கும் பெயர் – விஞ்ஞானப்(!) பேய்க் கதைகள்…
கதை ஒடிக் கொண்டிருக்கும்போதே, பயங்கர நிகழ்ச்சிகளின் காரணகாரியங்களை யோசித்து, மாற்று வழிகளை, முன்னெடுத்துச் செல்லுதல்களைச் சொல்லி, கதையின் ஓட்டத்தை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள் இந்தப் பிள்ளைகள். ஹீரோ வில்லன் என்றெல்லாம் கிடையாது. எல்லாருமே சாதாரணர்கள் தான். ஆனால், பேசும் வௌவால்கள், தங்களுடைய அல்ட்ராஸானிக் ஒலி அலைகளை, மனிதரால் கேட்கக் கூடிய ஒலியலைகளாக மாற்றி, மோர்ஸ் சமிக்ஞைகள் மூலம் உரையாடும். குழி விரியன் பாம்புகள் தங்கள் இன்ஃப்ராரெட் அலைவரிசைகளால் உணரக் கூடிய தன்மையினால், எந்தக் கருவிகள் எந்த சமிக்ஞை பெறுகின்றன என (எடுத்துக்காட்டு: தொலைக்காட்சிச் சேனல்கள் மாற்றப் படுவது) கண்டு பிடித்துக் கொள்ளும். பேய் ஒழிப்பாளிக்கு, பகுத்தறிவுப் பகலவிக்கு, கும்மிருட்டில் உதவும். என்னுடைய கதைகளில் அதிஆண்கள் இருக்க மாட்டார்கள். அதிபெண்கள் மட்டுமே.
இரண்டு மூன்று கதைகளுக்குப் பின் எனக்கு ‘தொண்டைத் தண்ணி’ வற்றி விடும். பிள்ளைகளை — அமைதியாக, பொறுப்புணர்வுடன் இருந்தால் போதும் – ஆனால் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் எனச் சொல்லித் துரத்தி விடுவேன்… பின்னர், சில ஆசிரியர்கள் மட்டும் பின்புலக் கண்காணிப்புக்காக, மைதானத்தின் மூலைகளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருப்போம்.
சில சமயம் குழந்தைகள் தனித்தனியாக, தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பர். சிலர் அணி சேர்த்துக் கொண்டு ஏதாவது நாடக ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பர். சிலர் இசை. சிலர் சங்கிலி அறுப்பு ஓட்ட விளையாட்டு. சிலர் தூக்கம்.
இப்படித்தான், சென்றவாரம் சில குழந்தைகள், காற்றுக்குக் கீழே விழுந்து கொண்டிருந்த பூக்களையும், இலைகளையும், விதை நெற்றுக்களையும் பொறுக்கிக் கொண்டு குவித்துக் கொண்டிருந்தனர்…
திடீரென்று ஒரு குழந்தை டிஎன்ஏ எனக் கத்தியது. ஒரு டிஎன்ஏ மாதிரி செய்யலாம் என்றது. சுமார் பத்து குழந்தைகள் ஒன்று சேர்ந்தன. அடுத்த ஒரு மணி நேரத்தில்…
இப்படித்தான் இருக்க வேண்டும், அறிவியலை அழகுணர்வோடு அணுகுவது.
… ஹ்ம்ம்… ஒவ்வொரு நாளும் இப்படிக் கழிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நான் அதிகமாகக் கேட்கவில்லை – ஒரு நாளுக்கு ஒரு சிறிய மனவெழுச்சி போதும், ஆஹா தருணம் போதும் – முடியாதா? சரி, குறைந்த பட்சம், ஒரு வாரத்திற்கு ஒன்றாவது? என்ன? அதுவும் சாத்தியமில்லையா?
ம்ம், மாதமொரு முறையாவது??… ? …எஞ்சிய வாழ்க்கையை, ஆனந்தமாக இப்படியே தள்ளி விடலாமே…
-0-0-0-0-0-0-
“கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத் திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
– – சுப்ரமண்ய பாரதி
பின்குறிப்பு: இந்தக் குழந்தைகளுக்கு, டிஎன்ஏ பற்றிச் சொல்லிக் கொடுத்தது நானில்லை, (அதனால் தானோ?) :-)
September 19, 2013 at 21:31
ஆஹா ஆஹா ஆஹாஹாஹா !!!
September 21, 2013 at 10:00
Nice. Glad you had a good camera around to capture this impromptu celebration.
September 21, 2013 at 12:44
என்னிடம் ஒரு கேமராவும் இல்லை. ஒரு சகஆசிரியையை – அவர் ஜிங்பேங் ஸாம்ஸ்ங் கைபேசியை வைத்து எடுக்கச் சொன்னேன், அவ்வளவுதான்.
அந்தக் குழந்தைகளின் இயல்பான மனவெழுச்சியை, உந்துதலை — புகைப்படமெடுக்கப் போகிறார்கள் என்று நினத்து இம்மாதிரி காரியங்களைச் செய்வது போல மாற்றக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். I want them NOT to get hung up about getting some external validation of their work.
என் பிள்ளைகள் பொதுவாக என்னை ஏமாற்றுவதில்லை…
pop: இருந்தாலும், ஒரிஜினல் நிகழ்ச்சியின் ‘மேஜிக்’ இந்த நீர்த்துப் போன புகைப்படங்களில், என் பதிவில் இல்லைதான்.
push: ஒரு நல்ல காமரா வாங்க வேண்டும் எனத் தோன்றுகிறது… பார்க்கலாம், அடுத்த வருடம். :-)
September 21, 2013 at 14:18
R,
The photo when viewed in picassa said it was taken with a Canon Powershot G2, which is a pretty decent camera. And the resolution is also good – if i am right, you can print postcard or maxi without loss of information.
While these kids look so involved in what they had set out to ( no looking into the camera), i am sure such moments need to be captured for the moment’s sake, if not anything else.
Thanks
Ramanan
P.S. Most of the digital camera nowadays are good enough for normal lighting.
September 21, 2013 at 18:09
‘Jag673,’
Thanks for the correction – gotta investigate. Will send a personal email.
September 21, 2013 at 15:49
அட்டகாசம். அருமையான பள்ளிச் சூழல்.. எங்கு இருக்கிறது? அரசு பள்ளியா, அரசு உதவி பெறும் பள்ளியா?
September 21, 2013 at 18:10
இரண்டுமில்லை, ‘ரவி’ :-)
September 21, 2013 at 22:28
ஆ! இரண்டாம் முறை படங்களை பார்க்கும் போதுதான் கவனித்தேன். சுற்றிலும் AGCT. அருமை! மாணவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள் :-)
September 22, 2013 at 20:17
உங்கள் பணியும் போற்றத்தக்கது ,அந்த குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள்.
September 30, 2013 at 07:28
உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது. ஒரு வலைப்பக்கம் தொடங்கி ஒத்திசைவை வெறுக்க 108 காரணங்கள் என்றொரு பதிவைப் போட்டுவிடுவேன் என்று எச்சரிக்கிறேன்.
September 20, 2019 at 10:03
Ram – I am reading this now. Thanks for sharing.
What a day it must have been with the kids: Relishing nature on a cool, cloudy day, narrating impromptu science – horror stories under a tree (the snake able to interpret infrared signals..!), and then (முத்தாய்ப்பாக) that magic by kids.