வெற்றிகரமாக ஒரு குழுவை, வர்த்தகத்தை வளர்த்தெடுப்பது எப்படி?

March 3, 2013

(அல்லது) கூடவே, என்னுடைய வெறுப்பாளர்களின் எண்ணிக்கையை, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, முனைந்து முழுமூச்சுடன் வளர்த்தெடுப்பது எப்படி?

எச்சரிக்கை: இந்தப் பதிவு ‘முஸ்லீம்களுக்கு எப்படி மேலதிகமாக வேலை வாய்ப்பு அளிப்பது’ இன்னபிற என, பின் வரப்போகும் பதிவுகளுக்கு ஒரு முஸ்தீபும் கூட.

-0-0-0-0-0-

1996 – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு மென்பொருள் வஸ்து (ஸாஃப்ட்வேர் ப்ரோடக்ட்) தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை. தொழில்நுட்பம் + வர்த்தகரீதியானச் செயல்பாடுகள்.

எனக்கு ஸஸ்பென் டர் போட்டுக் கொள்வது பிடித்ததேயில்லை. ஆனால் பெரும்பாலும் மார்பு வரை புரண்டு கிச்சுக் கிச்சு மூட்டும் தாடி வைத்திருந்திருக்கிறேன்...

எனக்கு ஸஸ்பென்டர் போட்டுக் கொள்வது பிடித்ததேயில்லை. ஆனால் பெரும்பாலும் மார்பு வரை புரண்டு கிச்சுக் கிச்சு மூட்டும் தாடி வைத்திருந்திருக்கிறேன்…

இந்த நிறுவனம், கண்டமேனிக்கும் வர்த்தகம் என்று வருவதையெல்லாம் அரக்கப் பரக்க எடுத்துக் கொண்டு – சகட்டுமேனிக்கு Y2K, மென்பொருள் சேவை (ஸாஃப்ட்வேர் ஸர்வீஸஸ்) – அதாவது: ஆரக்ள், ஜாவா, விஷுவல் C++, எஸ்ஏபி  (மன்னிக்கவும். குமுதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இது SAPதான் – இதனை ஸாப் என்று சொன்னால் அடிக்க வந்து விடுவார்கள் எஸ்ஏபிமுதல்வாதிகள்  வேறு) ஃப்ரன்டென்ட், பேக்கென்ட் மிட்டில்என்ட், மிட்டில்வேர், அன்டர்வேர் என்று மானாவாரிச் சாகுபடியாக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நிறுவனமல்ல.

… கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் – அந்தக் காலத்தில் C# போன்ற இழவுகள் இல்லை, லூனக்ஸ் (Loonux) கூடப் பெரிய அளவில் இல்லை. ஆனால்  மகத்தான யூனிக்ஸ் (UNIX!) இருந்தது, அதிலும் பர்க்லி மென்பொருள் பகிர்தல் (BSD 4.4) இருந்தது! ஜொலித்துக் கொண்டிருந்தது!! 

… ஸிலிகன் ஸெல்களினுள் உறைந்திருக்கும் பைனரி த்வைதக் கடவுளுக்கு நன்றி, மறுபடியும், மறுபடியும்

பௌல்-ஹென்னிங் கம்ப் அவர்களால் உருவாக்கப்பட்ட பிம்பம். ஃப்ரீபிஎஸ்டி-யால் ஓட்டப்படும் கணினி யந்திரங்களில் /usr/share/examples/BSD_daemon/ இருக்கும்.

பௌல்-ஹென்னிங் கம்ப் அவர்களால் உருவாக்கப்பட்ட பிம்பம். ஃப்ரீபிஎஸ்டி-யால் ஓட்டப்படும் கணினி யந்திரங்களில் /usr/share/examples/BSD_daemon/ விரிவில் இருக்கும்.

-0-0-0-0-0-

மொத்தம் சுமார் 50 பணியாளர்கள்தான் இருந்தனர் அப்போது அந்த நிறுவனத்தில்.

என் குழுவில் சுமார் 30 பேர். அதில் 6 பேர் போல நிஜமாகவே மென்பொருள் எஞ்சினீயர்களாக ஆகக்கூடிய சாத்தியக் கூறுகள். மற்றவர்கள், சாவி கொடுத்தால் மட்டுமே நடமாடும், சொன்னதை மட்டும் முக்கிமுக்கித் திக்கித்திணறி அரைகுறை கந்தரகோளமாக வேலை செய்பவர்கள், குறைகுடங்கள் – கற்றுக் கொள்வதில், உழைப்பதில் முனைப்பே இல்லை, மோசமான திறமையின்மை. டன்னிங்-க்ரூகர் விளைவின் மோசமான பிரதிநிதிகள். இவர்களுக்கெல்லாம் எப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள் என எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

அவர்களுக்கு மூன்று மாதம் (வேறு எந்த வேலையும் கொடுக்காமல்) ஒரு அடிப்படை பயிற்சி கொடுத்து – அதன் பின் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லையானால் வெளியில் அனுப்பிவிடுவேன் என்று சொன்னேன். என்னை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். மூன்று மாத முடிவில் ஒரே ஒரு பையன் தான் தேறினான்.

-0-0-0-0-0-

நான் அந்தக் கம்பெனியின் உரிமையாளரிடம் போய்  (இவர் ஒரு மாண்டயம் அய்யங்கார், படிப்பும் பண்பும் மிக்கவர், என்னைப் போலல்லாமல்   தர்மமயக்கங்களால் சதா அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்) – எனக்கு இந்தப் பையன்கள் வேண்டாம், இவர்கள் இல்லாமலேயே நம்  மென்பொருள் வஸ்துவை நம்மால் தரமாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் உருவாக்க முடியும் என்றேன்.

அவர் தடுமாறினார். இவ்வளவு பேரையா என்றார். ஒரே சமயத்திலேயா என்றார். இந்த எண்ணிக்கை நம் நிறுவனத்தில் பாதி! நாம் எப்படி இவர்களை வேறு வேலைகளுக்கு உபயோகிக்க முடியும்?

அப்படியென்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

ஒரே சமயத்தில் இப்படிச் செய்தால் நம் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடுமே என்றார். உனக்கு முன்னால் இருந்த மேனேஜர் இவ்வளவு பேர் இருந்தால்தான் வேலை செய்ய முடியும் என்றாரே என இழுத்தார்.

நான் சொன்னேன் இந்த நான்கு கீழ்கண்ட விஷயங்களை:

 1.  ஃப்ரெடெரிக் ப்ரூக்ஸின் Mythical Man Month படியுங்கள். எண்ணிக்கைகளால் மட்டுமே எதனையும் சாதிக்க முடியாது. தரம் தான் முக்கியம். என்னுடைய குழுவில், திறமைதான் பிரதானம்.
 2. எனக்கு என் திறமை மேல் நம்பிக்கை அதிகம். எனக்கு என் குழு விஷயங்களில் முழு சுதந்திரம் வேண்டும். என் முன் அனுபவங்களை நன்றாக விசாரித்துத்தானே என்னை  நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்த்திக் கொண்டீர்கள். எதற்கு?
 3. நான் உத்தரவாதம் – இந்த மென்பொருளை தரமாக, துரிதமாக நம்மால் ஏற்றுமதி செய்யப் படுவதற்கு.
 4. இந்த அரைகுறைகளை வெளியே அனுப்பினால், சோம்பேறித்தனத்துக்குச் சம்பளம் கொடுப்பது குறையும், இவர்கள் செய்து கிழிக்கும் வேலைகளால் மேலதிக வேலைகள் ஏற்படுவதும் குறையும்.

இருந்தாலும் அவர் இழுத்தார். ஆனா நீ தமிழன் – இந்தப் பையன்கள்ள நிறையபேர் கன்னடர்கள். ஏதாவது பிரச்சினை வருமோ?

அய்யா, இந்தக் கும்பலில் தமிழர்களும் எட்டு பேர் இருக்கிறார்கள். முஸ்லீம் க்றிஸ்தவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமில்லையா? பிரச்சினை ஏதாவது வந்தால் என்னை வேலையை விட்டு துரத்திவிடுங்கள், பரவாயில்லை.

சரிதான் ஆனால் இந்தப் பையன்களை நான்கு மாதம் முன்னர் தாம் நம் நிறுவனத்தில் சேர்த்தோம் இல்லையா? ஏன் சேர்த்தோம்? எப்படி ஒரே சமயத்தில் இவர்களை வெளியே தள்ளுவது? எனக்கு இது அறமாகத் தெரியவில்லை.

அய்யா, யோசியுங்கள். எனக்கு முன்னே இங்கு வேலை செய்தவர் இவர்களைச் சேர்த்திருக்கிறார். அது நிச்சயம் ஒரு அறிவில்லாத மடச் செயல் தான். ஆனால் அதற்காக உடனே இந்தப் பசங்களை நான் வெளியே அனுப்பிவிடவில்லை. அவர்களுக்கு, என் வேலையைத் தவிர, உயிரைக் கொடுத்து மூன்று மாதங்கள் பயிற்சி – ப்ரொக்ராமிங் வேலை, எடுத்துக் கொண்ட வேலையைத் தூய்மையாக, அழகாகச் செய்வது எப்படி, என்றேல்லாம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் அவர்களிடம் அதிகம் கேட்கவில்லை – 8 மணி நேரச் சராசரித்தனமான உழைப்புதானே கேட்கிறேன்? அதி அற்புதச் சாகசச் செயல்களைச் செய்யும் ஸாமுராய்களாகவா மாறச் சொன்னேன்?

ஆனால், ஹ்ம்ம். பாவம், அவர்கள் சரியான கல்லூரிகளில் படிக்கவில்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்?

அய்யா, உங்களுக்கு மென்பொருள் வர்த்தகம் வேண்டுமா, அல்லது அரைவேக்காடுகளைக் கொஞ்சிக் கொண்டு நல்லிணக்கம் என, வேலையக் கத்துக்குங்கடா, வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யுங்கடா தயவுசெய்து, ப்ளீஸ், ப்ளீஸ் எனப் பேசிக் கொண்டே யிருக்க வேண்டுமா?

நீ  உன்  கல்லூரியை, உன் படிப்பை வைத்துக் கொண்டு, மேட்டிமைத்தனத்துடன் இப்படிப் பேசுகிறாயோ? எல்லோரும் ஒரேமாதிரி தரத்துடன் இருக்கமாட்டார்கள் அல்லவா – அவர்கள் கல்லூரிகளில் ஆசிரியர்கள் சரியில்லையோ என்னவோ?

இல்லை. என்னிடம் இப்போது இருப்பது ஓரளவு தரமான 7 பேர்கள் – இவர்களும் ஸுப்பர் தரமென்றில்லை. ஆனால், இவர்களுக்குக் கற்றுக் கொள்ளும் முனைப்பு இருக்கிறது. இது போதும் எனக்கு, அவர்களைத் தரமானவர்களாக மாற்றுவதற்கு. ஆனால் மற்ற 24 பேர்களுக்கு அப்படியில்லை மேலும் இந்த 7 பேரில் ஒருவர் கூட என் கல்லூரியில் படிக்கவில்லை.

இருந்தாலும், என்னவோ இது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.

அய்யா, இந்தப் பையன்களை இப்படி விரட்டினால் தான், அவர்கள் அடுத்த வேலைக்காவது கொஞ்சம் கற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த விரட்டல், நம்முடைய எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, அவர்களுடைய  எதிர்காலத்துக்கும் மிகவும் முக்கியம். நாம் இதனைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு நாம் உதவவில்லை, துரோகம்தான்  செய்கிறோம். வேலை அறம், தர்மம் (Work Ethic) எனறால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இது அவர்களுக்கே நல்லதில்லையா?

என்னவோ எனக்கு இது சரியாகப் படவில்லை. அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. நீ என் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பாய்?

நான் சொன்னேன் – இது ஒரு தியரட்டிகல் கேள்வி, நம் புல்லரிப்புச் சினிமாவுக்கானது – ஆனால், யோசித்துப் பாருங்கள் – பன்றிக் குட்டிகள் அழகாக, பாவமாகத்தான் இருக்கின்றன. அந்த ரோஜாக்கலர் குட்டிகள் தங்கள் தாயிடம் முட்டி முட்டிப் பால் குடிப்பது அழகான, மெலிதான பரிதாபம் படர்ந்த மென்மையான விஷயம்தான். ஆனால், இந்தப் பையன்கள் பன்றிக்குட்டிகளுமல்ல (இந்த ஒப்புமைக்கு அந்தப் பன்றிக்குட்டிகள் கோபப் படும் என்றாலும்), உங்கள் நிறுவனம் ஒரு தாய்ப் பன்றியும் அல்ல. இல்லையா?

சரி,  நாளை இதைப் பற்றிப் பேசலாம் என்றார்.

சரியென்றேன். (வெண்ணெய் அய்யங்காரே, எப்படி அய்யா உங்களுடன் நான் பணிபுரிவது என்று,  தலையில் அடித்துக் கொண்டே…)

-0-0-0-0-0-

நான் அடுத்த நாள் அலுவலகம் போகவில்லை. அப்போதெல்லாம் செல்ஃபோன் பெரிய புழக்கத்தில் இல்லை. என் வீட்டில் லேண்ட்லைனும் இல்லை. பெங்களூரின் டெய்ரி ஸர்க்கிள் பக்கத்து லக்கஸந்த்ராவில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தேன். ஜாலியாக ’ஜேஜே சில குறிப்புகள்’ படித்துக் கொண்டிருந்தேன்.

மாலை அவரே வீட்டிற்கு வந்தார். அழுதுவிடுவார் போல இருந்தார். சரி என்றார். நீயும் நிறுவனத்தில் பங்குதாரராக ஆகிராயா என்று கேட்டார், நான், அது முடியாது என்றேன். முதலீடெல்லாம் வேண்டாம், நீயும் ஒரு இயக்குனராகிவிடு என்றார். நன்றி, ஆனால் மன்னிக்கவும் என்றேன். ஆனால் அடுத்த நாள் முதல்  நிச்சயம் வேலையைத் தொடர்வதாகச் சொன்னேன்.

-0-0-0-0-0-

அப்போது ஹாட்மெய்ல் பிரபலமாக இருந்தது அதில் மின்னஞ்சல் முகவரிகள் பலவிதமாகத் தயாரித்து – என்னை, என் மூதாதையர்களைத் திட்டிக் கண்டமேனிக்கும் மின்னஞ்சல்கள், அதிலாவது சரியாக நாலு வரி கோர்வையாக ஆங்கிலத்தில் எழுத முடிந்ததா இந்த ITயடிச்சான் குஞ்சுகளுக்கு? இந்தக் குப்பை மின்னஞ்சல் உழைப்பைக் கூட அவர்கள் தங்கள் வேலையில் காட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகம். (24 வெளியேற்றல்கள்; 100க்கும் மேலான வெறுப்பு மின்னஞ்சல்கள்)

-0-0-0-0-0-

கையால் ஒரு வரி கணினிக் கட்டளைக்கட்டுகளைக் (ப்ரொக்ராம்) கூட எழுதமாட்டேன் என்கிற மேலாண்மைத் தலைவர்கள் (Leaders & Managers) இல்லை. மேலோட்டமான கட்டமைப்பு (ஆர்க்கிடெக்சர்) மட்டும் தான் செய்வோம் என்பவர்கள் இல்லை. ஒப்புக் கொள்ளும் பரிசோதனைகளை நாங்கள்  (Acceptance Test) செய்யமாட்டோம் என்றில்லை. தரநிர்ணயக் குழு (Quality Assurance) என்றெல்லாம் தனியாக வினோத ஜந்துக்கள் தேவைப்படவில்லை. (ப்ரொக்ராம்களை) எழுதுகிறவன் தான், தரத்திற்கு உத்தரவாதம். எல்லோரும் எல்லாமும் செய்ய வேண்டும்.  ஒரு நாளைக்கு இரண்டு – ஐந்து நிமிடக் குழுக் கூட்டங்கள் / உரையாடல்கள் மட்டுமே. காலம் தவறாமை மஹாமஹோ முக்கியம். சிறிய தரம் வாய்ந்த, ஒருவரோடொருவர் ஒத்துழைத்துப் பணி செய்யும், நேர்மையா, மேற்குவியும் (overlapping) குழுக்கள். காலை சரியாக 7 மணிக்கு வரச் சொல்வேன். மாலை 4 மணிக்கு வீட்டிற்குக் கண்டிப்பாகப் போய்விட வேண்டும்.  நான் மட்டும் மேலதிகமாக ஆறுமணி நேரம் வேலை. ஞாயிறு மட்டும் விடுமுறை. வெட்டிப் பேச்சு, வேலை என்கிற பெயரில் பஜனை என்றில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் மட்டுமே மும்முரம். ஒரு மாதம் இப்படி வேலை செய்தபின் இந்தக் குழுவில் அனைவருக்கும் 25% சம்பள உயர்வு.

இந்த வேலைக்காக எனக்கு கொடுக்கப் பட்டிருந்த நாட்கள் 90. ஆனால், அடுத்த 78 நாட்களில் அந்த எழுவர் + நான், அசுரத்தனமாக வேலை செய்து அந்த மென்பொருள் வஸ்துவை வெளிக் கொணர்ந்தோம். வேலை செய்து முடிப்பதற்கான உத்தேசச் செலவுப் பணத்தில் (எஞ்சினீயரிங் பட்ஜெட்) 40% தான் செலவழித்தோம்.  (ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா! நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது!)

-0-0-0-0-0-

அச்சமயம் இந்த வஸ்து, ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் ஒரு மென்பொருள் வஸ்துவுடன் நேர் மோதலில் இருந்தது, ஆனால் எங்களுடையது அதைவிட விலை மலிவாகவும், தரம் வாய்ந்ததாகவும் உரிம ஷரத்துகள் (license terms) சுளுவாகவும் இருந்தது; இருப்பினும், வருந்தத்தக்க விதத்தில், அய்யங்கார் அவர்களின் வர்த்தகப்பிரிவைச் சார்ந்த RNI (Resident non-Indian) நண்பர்கள் விற்பனையில் சொதப்பி விட்டனர், சோம்பேறி முட்டாள்கள்.

வர்த்தகத் திட்டத்தை (பிஸினெஸ் ப்லான்) அவர் என்னிடம் காட்டியிருக்கலாம் – ஆனால்,  நான் முன்னர் கேட்டபோது, நீ எஞ்சினீயரிங் மட்டும் பார்த்துக் கொள் என்று சொல்லியிருந்தார் அவர். (இப்போது தோன்றுகிறது – ஷிவ் நாடார் அல்லது ப்ரேம்ஜி அல்லது நாராயணமூர்த்தி நிறுவனங்களில் சேர்ந்திருக்க வேண்டுமோ?)

பின்னர், ஐந்து மாதங்களில் இந்த வஸ்து, லாஸ் எஞ்சலிஸ் அருகில் இருந்த ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டது ( நான் இரண்டு மூன்று முறை இந்த டீல் விஷயமாகப் பேச்சுவார்த்தை, சரிபார்த்தல்களுக்காகப் (due diligence) போய்வந்தேன் – இந்த விற்பனையில் எங்கள் நிறுவனத்துக்குச்  சுமார் 117 லட்சம்  நிகர லாபம், ஆனால் எங்களுடைய வர்த்தகத்திட்டம் சரியாக இருந்திருந்தால் சுளுவாகப் பல கோடிகளை அள்ளியிருக்கலாம்).

பின் எங்களிடம் வாங்கிய ஒரே மென்பொருளை வைத்திருந்த அந்த எல்ஏ நிறுவனம், ஐபிஎம் நிறுவனத்தாலேயே – இரண்டு மில்லியன் டாலர்கள் – ரொக்கத்துக்கு ஆட்கொள்ளப் பட்டது. அவர்கள் அந்த மென்பொருளை மேற்கொண்டு விற்காமல், சரியாகப் பராமரிக்காமல் – வாங்கிய ஆறே மாதங்களில் –  இழுத்து மூடப் போகிறோம் (EoL – End of Life) என அறிவித்தனர்! (மென்பொருள், கணினி தொடர்பான வர்த்தகங்களில் இது சகஜம் தான்?

சுபம்.

-0-0-0-0-0-0-

ஒரு பொஷ்குக் குழந்தை சிரிப்பதைப் போலச் சந்தோஷமாக இருந்த அய்யங்கார், உனக்கு லாபத்தில் 25 சதம் பங்கு கொடுக்கிறேன் என்றார். நான் வேண்டாம் என்றேன். வர்த்தக அபிவிருத்திக்கு அதனை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். (அப்போது எனக்கு குழந்தைகள் இல்லை, இப்போது அப்படிச் செய்வேனா என்பது தெரியாது)

ஆனால் O’Reilly பதிப்பித்த அனைத்துப் புத்தகங்களும் LISP பற்றிய அனைத்துப் புத்தகங்களும் வாங்கி நம் தொழில் நுட்ப நூலகத்தில் வைக்கலாம் என்றேன். இரண்டு வாரங்களில் 8 பெரிய்ய்ய அட்டைப் பெட்டிகளில் பொக்கிஷங்கள் வந்தன.

lisp_cycles1

பின்குறிப்பு: Work Ethic எனும் பதத்திற்கு சுருக்கமாக 2-3 வார்த்தைகளுள்ள தமிழ்ப் பதம் இருக்கிறதா? எனக்கு முழ நீளப் பதவுரை தான் எழுத வருகிறது. வேலை அறம், தர்மம் என்பவை தான் கிட்ட வருகின்றன எனத் தோன்றுகிறது.  உதவ முடியுமா?

இவற்றையும் படிக்கலாம்:

6 Responses to “வெற்றிகரமாக ஒரு குழுவை, வர்த்தகத்தை வளர்த்தெடுப்பது எப்படி?”

 1. Sridhar Says:

  கட்டமும், அம்புக்குறியும் வரையும் கட்டமைப்பாளர்கள், மென்பொருள் தேவைகள் புரியாத மேனேஜர்கள், வெட்டி ஓட்டும் கணினி பொறியாளர்கள் என்று IT ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடம் ஒரு கம்பெனியில் இருந்தால் (வேலை பார்த்தால் அல்ல) ஓரளவு ஆங்கிலம் பேசினால் எல்லாரும் மேனேஜர் ஆகி விட முடிகிறது. முப்பது வயதுக்கு மேல் கோட் செய்பவன், முட்டாளாகவோ கிறுக்கனாகவோ இருக்க வேண்டும்.
  Mediocrity rules – இந்த உலகுக்கு இது போதும் என்று பல சமயம் தோன்றுகிறது. தொழில் தர்மம் இங்கு கெட்ட வார்த்தை.

 2. Anonymous Says:

  ஒத்திசைவில் எழுதுவது ஒருவரா பலரா


 3. ’செயல் அறம்’, வணிகத்துக்கெனில் ’வணிக அறம்’ தேவலாமா?

 4. பொன்.முத்துக்குமார் Says:

  மிக சுவாரஸ்யமான கட்டுரை. எனக்கு இப்படிப்பட்ட ஒரு மேலாளர் வாய்த்திருந்தால் … ஹ்ம்ம்.

  நீங்கள் உருவாக்கின மென்பொருள் பற்றி சிறுகுறிப்பு வரைய முடியுமா தயவு செய்து ?

 5. பொன்.முத்துக்குமார் Says:

  என் நண்பர்கள் சிலரோடு இந்தியர்களின் ஸோ-கால்ட் மென்பொருள் திறமை பற்றிய அரட்டையில் எனது இந்த ஆதங்கத்தை எப்போதும் தெரிவிப்பது வழக்கம்.

  இத்தனை நிறுவனங்கள் இருந்தும் – இத்தனை ஆயிரம் மென்பொருளாளர்கள் இருந்தும் ஏன் நம்மிடம் இருந்து ஒரு சிறப்பான மென்பொருள் வஸ்து உருவாகவே இல்லை ? அமைப்பு மென்பொருளை (இடையினம் – middleware மாதிரி வஸ்துக்கள்) விடுங்கள், SAP, Oracle Financials போன்ற பயன்பாட்டு மென்பொருள்கள் கூட இல்லையே ? (எப்போதோ ராம்கோ-காரர்கள் Marshal என்று ஏதோ ஒன்று எழுதியதாய் நினைவு. அதன் தலை எழுத்து என்னவென்று தெரியவில்லை)

  வழக்கம்போல நண்பர்கள், ‘அப்படி உருவாக்குவது பெரிய விஷயமில்லை; ஆனால் நாம் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் மிக மிக பலவீனமானவர்கள்; வெள்ளையர்களோடு அந்த விஷயத்தில் நம்மால் நெருங்கவே முடியாது. எனவேதான் எந்த நிறுவனமும் அந்த ரிஸ்கை எடுப்பதில்லை போலும்’ என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்.

  இதுகுறித்து உங்கள் பார்வை என்ன ?

 6. ramasami Says:

  work ethic என்பதற்கான தமிழ்ப் பதங்களுக்கு நன்றி – ஸ்ரீதர், வெங்கடாசலம் அவர்களே.

  அனாமதேயம் — விடை = பலர். நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

  பொன். முத்துக்குமார் – சொல்ல முடியும் (மின்னஞ்சலில், பின்னர்). நான் அடிப்படையின் மென்பொருள் வஸ்துக்களை, ஆராய்ச்சிகளைச் சுற்றி மட்டுமே இயங்கியவன். உங்கள் நண்பர்களுடைய கருத்துக்களை நான் சரியென்று நினைக்கவில்லை. இப்போது நான் பொழுதுபோக்குக்கு மட்டுமே மென்பொருட்களை எழுதுகிறேன் – வணிக/ நிறுவனச் சார்புகளை விட்டு சுமார் 7 ஆண்டுகளாகிவிட்டன. இருந்தாலும் என் கருத்துக்களைப் பின்னொரு சமயம் எழுதுகிறேன்.

  அனைவருக்கும் நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s