எழவாவது அறிவு
March 1, 2013
(அல்லது) ஒரு பின் நவீனத்துவ மஹாபாரத பேதி தர்மன் கதை
தர்மன் முதலில் பவுடர் போட்டுக் கொள்ளாமல் வேர்க்குருக்ஷேத்ரத்தில்தான் இருந்தான். பாடுபட்டு உழைக்காமலேயே வியர்வை வர விரும்பியவனாகவும், சூர்யா வம்சத்தைச் சேர்ந்தவனாகவும் இருந்ததால், அவன் அரைகுறைப் படங்களில் அழுது மூக்கைச் சிந்தி, அடித்துப் புரண்டு, கத்தி வசனம் பேசி, மேதகு டாலி பார்ட்டன் அவர்களே கூடப் பொறாமைப் படும் அளவுக்கு, ப்ரா போடாத வளப்பமான மார்பகங்களுடனும், கஷ்க மயிர் ஷவரம் செய்யப் பட்டும், எதற்கெடுத்தாலும் கைத்தசைகளை முறுக்கிக் காட்டியும், உதட்டைச் சுழித்தும், புருவத்தை நெரித்தும், காதல் பண்ணிக் கொண்டும், பன்ச்லைன் பேத்தியும் நடித்து வந்தான்.
அவன் படையில், நிறைய சொறி சிரங்குகளுடன், விசிலடிச்சான் குஞ்சுகளும், ஃப்ளெக்ஸ் பேன்னர் குஞ்சாலார்டுகளும், பல்வேறு ஜாதிகள்சார்ந்த வீரமணியால் மெச்சத்தக்க பால்-பீர் அர்ச்சகர்களும் இருந்தனர்.
ஆனால் தர்மனின் வளர்ச்சி – அவன் பங்காளிகளுக்குப் பிடிக்காத காரணத்தால், சகுனம் பார்த்து அஜித் சத்ரு, விக்ரம் வேதாளன் போன்றவர்களுடன் கொள்கைக்கூட்டணி வைத்து, மங்காத்தா ஆட்டத்திற்கு அவனை அழைத்து சகுனி மூலம் தோற்கடித்தனர்.
ஆக, அவன் அலையோஅலை என்றலைந்து, அங்காடித்தெருவெல்லாம் சுற்றிக் கடைசியில் ஒரு பாண்டு குழுவில் சேர்ந்தான். இந்தப் பாண்டு வாத்தியப் பாண்டுவுக்கு ஒரு மனைவி, ஒரு துணைவி. மூன்று பையன்கள். பெண்களுக்கு இட அல்லது வல ஒதுக்கீடு இல்லை.
பாண்டு, தர்மனுக்கு தன் குடும்ப அங்கத்தினர்களை அறிமுகப் படுத்துகிறார்: அவள், என் மகனின் தாயார் – ஆனால் இவள், என் தாயாரின் மருமகள் – இவன், என் மகன் – அவன், என் தாயாரின் பேரன் – நான், என் துணைவியின் மகனின் தந்தை – அவர், என் மனைவியின் மகனின் தாத்தா – இவர், என் துணைவியின் மகனின் பாட்டி,,, விதிர்விதிர்த்துப் போகிறான், தர்மன்!
…பாண்டுட்ரம் ரோல், பின்னால் ஒநாயின் ஊளை, நம்பியாரின் எக்காளக் கடகடாகுடுகுடு சிரிப்பு…
இப்போது ஒரு கார்ட்: ‘திரைச்சதை, இயக்கம்: பம்ப்கின்’
… அங்கு, அந்த பாண்டுக் குழுவில் தர்மனுக்கு சரியான வாசிப்பு அனுபவம் கிடைக்காததாலும், தினமும் குறளோவியம், முரசொலி படித்து மனப்பிராந்தியும் டாஸ்மாக் விஸ்கியும் அடைந்ததாலும், பாண்டு குடும்பத்தில் யார் எப்படி மற்றவர்களுக்கு உறவு, எச்சமயம் எவர்களுக்குள்ளே பிணக்கு எனச் சரியாகவே புரிபடாததாலும், ஆங்கிலத்துப் band என்கிற இதனை வேண்டுமென்றே சில ஆரியச்சதிகாரச் சக்திகள் தமிழில், பேண்டு என்று ரசாபாசமாகச் சொல்லி கெக்கலி கொட்டிச் சிரித்து விஷம் கக்கியதாலும், மிகவும் மனக்கிலேசமடைந்து, அவன், வேறு ஏதாவது கௌரவமான வேலை கிடைக்குமா எனத் தேடினான்…
… பாண்டுவின் மனைவியான தயாள குணம் படைத்த குந்தியோட சும்மா குந்திக்கினு இருக்காம, அல்லது துணைவியான மாத்ரி தீக்ஷித்துடன் திடீரென்று ஸ்விட்ஸர்லேன்ட்ல போய் டூயட் பாடாம – திமுக இல்லாத, ஆனால் திமுக மடங்களுக்கு – அதிமுக, ஆதிமுக, இதிமுக, ஈதிமுக.. … என அகரவரிசையில் போனான். ஃதிமுகவிற்கு அப்பால் தமிழ் நெடுங்கணக்கின் அனைத்து மயிர்ப்பொய் எழுத்து திமுகக்களுக்கும் போனான்…
அங்குமிங்கும் அலைபாய்ந்தான்… ஓடினான், ஓடினான், வாழக்காயின் விளிம்புக்கே ஓடி வழுக்கி விழுந்து, ஜாக்கி வாசுதேவ் மகனான கண்ணன் ஜாக்கியை ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்டு பிடித்தான்; அந்தக் கண்ணன் குதிரைசாரதியாக வண்டியோட்டிக்கிட்டிருந்த ஆக்ஷன்கிங் அர்ஜுனையும் சேத்திக்கிட்டான், இவன் வில்லாதிவில்லவீரன் வீரமணிகுண்டன் என்பது நமக்கு முன்பே தெரியும்.
… அவ்வப்போது இந்தக் கண்ணன், கேட்டதும் குரல் (’வாய்ஸ்’) கொடுக்காமல், தசாவதாரவிஸ்வரூப கமல்ஹாசனாக வேறு மாறுவேடமணிந்து, ஆனந்த விகடனில் அரசே-மந்திரி ஜோக்குகள் வரக் காரணமாகிறான் என்பது பொதுப்புத்தியில்லாமையில் இல்லாமலானது நமக்குத் தெரிய வரும்போது…
இங்க ஒரு பவர் கட். (அய்யோ!)
… அண்ணாதுரை அவதரித்து ஈரோட்டு ஆதீனத்திலிருந்து பிரிந்து காரோட்டு புதிய இளைய சன்னிதானமாக, நேப்பியர் பூங்கா வழியாகக் காஞ்சியில் ஸ்ரீமடம் ஆரம்பித்துப் பின் எம்ஜிஆர் ’நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ என அரசகுமாரப் பஞ்சுமிட்டாய்க்கலர் பாவாடை அணிந்துகொண்டு பெரியவாளையும் சின்னக்கத்தியையும் வைத்துக் கொண்டு பாடப் போவதற்குக் காரணமாகப்போவதை, தன் யானை திருஷ்டியால் முன்னமே உணர்ந்ததால், தர்மன்…
… துணுக்குற்று – மாவோவின் சீனத்துக்கு, சிவப்பு மேலாடையும், சின்னஞ் சிறுபெண் போலே இடுப்புச் சிற்றாடையும் மட்டும் உடுத்திக் கொண்டு, சீர்காழி கோவிந்தராஜன் பாட்டின் பின்புலத்தில் புறமுதுகிட்டு பரபரக்கப் பறந்து எரியாத இமாலயப் பனிக்காட்டைத் துச்சமென மதித்து, பல் தேய்த்துக் கொள்ளாமல், ஏன், மூத்திரம் கூடப் போகாமல் (ஸில்லி, அதுதான் சிறு நீரகப் பைக்குள் ஐஸ்கட்டியாக ஆகியிருக்குமே!), பாவப்பட்ட குதிரையையும் மூத்திரம் சாணி என்று எதையுமே போக விடாமல், அதனை அடித்து விரட்டிக் கொண்டு — போனான். (நான்லினியர் நரேட்டிவ் ஆக, மேஜிக் ரியலிஸக் கண்ணாடியோடு பார்த்தால், யோசித்தால், இந்தக் குதிரையின் சாணியில் செய்யப் பட்ட சாணிக்காகிதம் தான் இந்தத் திரைப்படக்கதை எழுத உபயோகப் பட்டிருக்கிறது. அதாவது, horse-powerக்கும் arse-powerக்கும் உள்ள முரணியக்கத்தில்தான் இந்தப் படமே ஓடுகிறது, தியேட்டரை விட்டு?)
அங்கே, இதற்கு முன்பே பாயும் புலி ரஜினிகாந்திடம் கூடப் பாடம் கற்றுக் கொள்ளாத சில முட்டாள் ஷாவ்லின் கோவில் வில்லன்களுடன் ஒத்த புருவம் படைத்த வேலவர்களை, தன் வாயால் துர்நாற்றத்தைச் செலுத்தியும், மாபெரும் அணை போல அடக்கி வைத்திருந்த தன்னுடைய சிறுநீரை, வெள்ளமாகப் பீச்சியடித்து, அவர்களை அதில் திக்குமுக்காடி மூழ்க வைத்தும், வெற்றுவாகை சூடிக் கொண்டான்.
மேலும், அடிவர்மம் தொடுவர்மம் கண்டகருமம் போன்ற கலைகளைத் தாண்டி, அவன் விடுகர்மம் என்கிற தொழில் நுட்பத்திலும் தேர்ச்சி பெற்று, விட்டேனா பார் என்று விடாமல் டர்டர்ரென்று விட்டு மிச்சமிருந்த 100,000,000,000,000,000,000 சொச்சம் சைனாக்காரர்களையும் மூச்சடைக்க, கதிகலங்க விரட்டி ஜப்பானுக்கு அனுப்பியதும்…
… அங்கே முன்னமேயிருந்த அந்த பாவப்பட்ட ஜப்பானியர்கள் அகிரா கரசேவா தலைமையில் சுற்று வழியில் ஆஸ்ட்ரேலியா பக்கம் ஓடிப்போய் அங்கு ஒரு ராமர் பாலம் கட்டினர். அது தான் பார்ரியர் ரீஃப் என அழைக்கப் படுகிறது. இதை இடித்து அந்த இடிமானங்களை (பயப்படாதீங்க. இவங்கெல்லாம் நம்ம இனமானத்துக்கு அத்தை பசங்க தான்) வைத்து இலங்கைத் தீவினிற்கோர் பாலமைப்பதற்கான காண்ட்ராக்ட் எடுக்க, ராஜபட்சத்து இரவில் சாண்டில்யனை வைத்து, கதாநாயகியின் மார்புக்கச்சையைத் தளர்த்தி அதரபானத்தைக் குடிக்க, ஈழத்தை வெல்ல – டிஆர் பாலு ஒரு பினாமி டெண்டர் எடுப்பது… ஒரு ஃப்லேஷ் ஃபார்வேர்ட்!
இப்ப ஒரு மேட்ச் கட். (அடச்சே!)
… அதே சமயம், இவ்வளவு சீனாக்காரர்கள் திடீரென்று புலம் பெயர்ந்ததால், இந்தப் பூவுலகம் கிழக்குப் பக்கம் சரிந்து, மேற்குப்பக்கமிருந்த ஜெர்மானியப் படைகள் வழுக்கிக் கொண்டே போலந்திற்கு லந்து பண்ண வந்ததும், அகிலவுலக கம்யூனிஸ இளைஞர் அணித்தலைவர் ஸ்டாலினுக்கு இதனைப் பிடிக்காமல் மேற்கு குண்டல நாயகன் அழுகுணி ஹிட்லருடன் ஒரு சண்டைக் காட்சி. அதகளம்.
… இசுடாலினுடைய இந்த அப்பாவி இளைஞரணி இளைஞர்களை — குப்பை வாசிப்புகளால் தவித்துக் கொண்டு, குண்டிப்பட்டையில் படிகாரத்தைத் தடவிக் கொண்டு எதற்கடா அடுத்து (கெடுத்துப்) போராளிலாம் என அலையும் களப்பிணியாளர்களும், மேற்கு குண்டல நாயகனும் — youth என ஆங்கிலத்தில் அரைகுறையாகப் புரிந்து கொண்டு youதர்களையெல்லாம் ஸ்டாலின் ஆட்கள் என்று அட்டாக் பாண்டியாட்டம் ஆடி அந்த யூதர்களை, ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் கான்சென்ட்ரேஷன் முகாம்களில் போட்டுத் தள்ளுவது ஒரு துன்பியல் நிகழ்வு.
… இப்படித்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. இதே சமயம், உலகநாயகன் இந்தப் போர்களில் எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் விதம்விதமாக மேக்கப் போட்டுக்கொண்டு, ரஷ்ய பாலேயும் பஞ்சாபி பலேபலேயும் ஆடி மட்டுமே அம்மாவாசையில் அப்துல்காதர்களை வெற்றுவாகை சூடுவது ஒரு காமெடி ஸீன்.
இங்கே இனிமேல் அல்லது இனிஃபீமேல் என்ன நடக்கப் போகிறது என்பது, புத்திசாலி திரைஆர்வலர்களின் கற்பனைக்கு விட்டுவிடப்படுகிறது. (முழுக் கதையும் சொல்லிவிட்டால், அது அறமல்ல)
வைப் அண்ட் டிஸ்ஸால்வ்.(அடடா!)
இப்படியாகத்தானே இந்த பேதிதர்மன் பெயர் மாற்றம் கொண்டு – செஞ்சீனம் கண்ட கண்டமேனிக்கு கண்டராதித்த சொறி காலன் (பாவம், அவன் உயர்ந்த பனிமலைகளில், கண்ட மேனிக்கு சூர்யா ஒளியில் திரியாவரத்தால், அவனுக்கு photo or film sensitive dermatitis வந்து தொலைத்திருக்கிறது) என அறியப் பட்டு, தன் முழுப் பெயரை பாஸ்போர்ட், விஸா, விமானடிக்கெட், ரயில்டிக்கெட், க்ரெடிட்கார்ட், டெபிட்கார்ட் என்பது போல பல விஷயங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியே – முதல்பெயர், கடைசிப்பெயர் (ஆனா கடைசிப்பெயரை மொதல்ல சொல்ங்க, ப்ளீஸ்!), இடநடுப்பெயர், வலநடுப் பெயர், நடுநடுப்பெயர்… – பாவம், சோறுதண்ணி சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் வடைக்கிருக்கிறான்…
… ஆனால் வட போச்சே என என்வழியே தனிவழியென்று ஒருவழியாக அறிந்துகொண்டு, அவன் ஈரோட்டு வெங்காயத்தை தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாக அரிவதற்குள்…
ஒரு சோகப் பாட்டு: ‘என் கதை முடியும் நேரமிது’
கடைசியில், மிகவும் துக்கித்துப்போன அவன் சென்னை திரும்பி வந்ததும், மஹா பார் (நம்ப டாஸ்மாக் கடை மாதிரிதான் இது, ஆனா கொஞ்சம் பெருசு) ஒன்றில் அளவுக்கு மீறிக் குடித்து ரத்தவாந்தி எடுத்து, அப்படியும் விடாமல் பத்துகிலோ மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு, மேலதிகமாக ரத்தம் கக்கி, பேதியில் ஒருவழியாக, தனிவழியாக, ஸிங்கிளாக, அசிங்கமாகப் போய்ச் சேர்ந்தான்.
மஹா பார் ரத பேதி தர்மன் கதை முற்றியது. (அப்பாடா!)
-0-0-0-0-0-
குறிப்பு: என் அக்காள் மிகவும் பரிந்துரைத்தார் என்று அண்மையில் இரண்டு படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று ஏழாவது அறிவு எனும் முழுநீள நகைச்சுவைப் படம், வெளி வந்து சில வருடமாயிற்றென்றார்.
ஒரு மணி நேரம் போல இந்தப் படத்தை முக்கிமுனகிப் பார்த்தேன், அதற்கு மேல் என்னால் தாளமுடியவேயில்லை. கதறிவிட்டேன். இந்தப் பதிவானது, இந்த எழவெடுத்த ஏழாம் அறிவைப் பார்த்ததால் வந்த படுபயங்கர பீதியும் பேதியுமளித்த கனவின் ஸப்டைட்டில்ஸ்.
கடன் கொடுத்த இந்த எழவு டிவிடி-யை, அடுத்தநாள் திரும்ப வாங்கிக்கொண்டு போகவந்த என் அக்காளின் தோழி சொன்னார் – எவ்ளோ நல்லா எடுத்திருக்கான் இல்ல – நமக்கு இந்த மாதிரி தமிழ் ஆளுங்க எவ்ளோ பெரிய்ய விஷயமெல்லாம் பண்ணியிருக்காங்கங்றதயெல்லாம் சொல்றத்துக்கு யாருமே இல்ல. எவ்ளோ நமக்கெல்லாம் தெரியாத – மறைக்கப்பட்டன்னுகூட சொல்றாங்க – வரலாறு விஷயம்லாம் சொல்லியிருக்கார் இந்த டைரக்டர்.
நான் சொல்ல ஆரம்பித்தேன் – ஆமாங்க, அதோட அவர் பல ஆழமான, நமக்கெல்லாம் புரிபடாத புவியியல், உடற்கூறுவியல், பொறியியல், குதிரையியல், சாணியியல் இதிலெல்லாம்கூட…. … …
”டேய் ராமா, இப்பவே கிச்சனுக்குப் போய் ஒன்னோட காப்பிய எடுத்துக்கோ. சூடு ஆறிடும்.” (என் அக்காளின் பதட்டத்துடன் கூடிய சுட்டெரிக்கும் பார்வையின் அன்பு காரணமாகப் புறமுதுகு வாங்கினேன்)
அவர் பரிந்துரைத்த இன்னொரு படம் இங்க்கீஷ்-விங்க்லீஷ் – இது நன்றாகவே இருந்தது, நம் ஸ்ரீதேவி எவ்வளவு அழகாக நடிக்கிறார், ஜொலிக்கிறார்! அமிதாப் பச்சனும்தான்!
இருந்தாலும் என்னுடைய ’கூட இருந்தே கிலி கொடுக்கும் கோடாலிக் காம்பு’ அக்காளுடன் ஒரு வருடத்திற்குப் பேசவே போவதில்லை.
பின்குறிப்பு: சமையலறையில் காப்பியும் கிடைக்கவில்லை. ஐந்து நிமிடத்திற்குப் பின் அர்ச்சனைதான் கிடைத்தது.
-0-0-0-0-0-
ஒருவழியாகப் படித்து முடித்தீர்களா? சரி. விருப்பப்பட்டால், இ்வற்றையும் படித்து வாழ்க்கையை வெறுக்கலாம்:
March 1, 2013 at 15:26
அப்பப்பா தாங்கலை சாமி. . . சிறித்து சிறித்து இதயக்கணி வாய்க்குள் ஆனாலும் ஆயிருக்கும் போணி.
(ஏன் சிரிப்புக்கு வல்லினம் என்று கேட்கிறீர்களா? பின் இதையும் சாதா சிரிப்பையும் வேறு படுத்திக்காட்ட வேண்டாமா?)
March 2, 2013 at 17:14
படம் பார்க்கவில்லை. லா.சா.ரா பச்சைக்கனவில் சஞ்சரிப்பது போல் உணர்வு. பாலுணர்வை தூண்டி பயமில்லாமல் குற்றமிழைக்கத் தூண்டும் படங்கள். நச்சு மரம் பழுத்ததென நாம் காணும் காட்சிகள்.
May 27, 2018 at 07:36
இத பத்தி ஒரு விடியே சோல்லமுடி
May 27, 2018 at 08:15
??
July 21, 2019 at 11:37
[…] புகழ் பெற்ற ஏழாவதுஅறிவப் பாண்டியப்பெருவழுதி இளம்பொறை […]
March 3, 2021 at 11:33
[…] எழவாவது ஏழாம் அறிவு பிலிம் பார்த்துத்தானே நான் அறிவுடையவன் என்பதையே அறிந்தேன்? […]