கலாபினி கொம்கலி எனும் பாடகி…
December 23, 2012
கடந்த பத்து நாட்களாக நான் பணி புரியும் பள்ளிகளில் கிறிஸ்த்மஸ்-புதுவருடப்பிறப்பு விடுமுறைக்கு முன்னால் முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளமாகக் குவிந்திருந்தன. ஒருவழியாக இன்று மாலை அவற்றை முடித்தேன். அலுப்போதி அலுப்பு.
ஆனால், திடீரென்று மாலையில், மனைவிக்கும் (=துணைவிக்கும்) எனக்கும் அழைப்பு.
ஆக, கலாபினி அவர்களின் ஒரு இரண்டு மணிநேர மெஹ்ஃபில் போகும் வாய்ப்புக் கிடைத்தது இன்று. எங்களையும் கலைஞர்களையும் சேர்த்து 20-30 பேர் கச்சேரியில் இருந்திருந்ததால் அதுவே அதிகம் சஞ்சய் தேஷ்பாண்டே அவர்களின் தப்லா. விரல்களாடும் நாட்டியம்.
மெஹ்ஃபில் நடந்தது ஒரு நண்பர் வீட்டில். மரத்துண்டுகளால் வேயப்பட்ட தரை. அழகான களிமண் சுவர்கள். உயரமான மெட்ராஸ் வகைக் கூரை. ஒலிபெருக்கி இல்லை. புகைப்படம் இல்லை. மூளைகெட்டு அச்சந்தர்ப்பமாகச் சிணுங்கும் கைபேசிகள் இல்லை. மின்சார விளக்குகள் இல்லை. இரண்டு மூன்று மெழுகு வர்த்திகளின் வெளிச்சம் மட்டுமே. ஜன்னல்களுக்கு வெளியே சில்வண்டுகள், அடர்ந்த காடு. உள்ளே இசை வெள்ளம். (கடவுள் இருக்கிறாரோ?)
யாம் பெற்ற பேறு, வேறென்ன சொல்ல.
எவ்வளவு பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்! (நான் சிறுவனாக இருந்தபோது இதே போல அகஸ்மாத்தாக, ஹைதராபாத்தில் ஒரு மெஹ்ஃபில் போக வாய்ப்புக் கிடைத்தது நினைவுக்கு வருகிறது – அது பர்வீன் ஸுல்தானா அவர்களின் மந்திர ஜாலம்! )
=-=-=-=-=
ஷாம் கல்யாண், துர்கா என்று நீண்ட வரிசையில், கபீரும் மீராவும் வந்து… இரண்டு மணி நேரத்திற்குப் பின் நிறுத்தினார், கலாபினி. எழுந்திருக்காமல் அமைதியாகக் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். நிசப்தம்.
தயக்கத்துடன் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருந்தோம், சில நிமிடங்களுக்கு – நப்பாசைதான், இன்னமும் பாடுவாரோ என்று.
ஆனால் – அவர் கலகலவென்று சிரித்துக் கொண்டே, ‘இட் இஸ் ஒவர், யு கேன் கோ ஹோம்’ என்றார்.
=-=-=-=
இன்னமும் கலாபினி அவர்களின் மஹா விஸ்தாரமான மியான் மல்ஹார் ஆலாபனை (குட்டி – Guddi (1971) எனும் ஹிந்திப் படத்தில் வந்த ‘போலெ ரே பபிஹரா…” எனும் பாடலும் இந்த ராகம் தான்) இன்னமும் மண்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது எனக்கு.
கலாபினி கொம்கலி அவர்கள், ’க்வாலியர் கரானா’ மாமேதை குமார் கந்தர்வ் அவர்களின் மகள். முகுல் ஷிவ்புத்ரா (இவரும் ஒரு அற்புதமான பாடகர்) அவர்களின் சகோதரி.
ஆழமும், வீச்சும், மேதைமையும் நிரம்பிய கலாபினி அவர்களின் நிர்குணி பஜன் (ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான்):
http://www.youtube.com/watch?v=3vX1f1Qgo64
யூட்யூபில் நிறையவே காண / கேட்கக் கிடைக்கிறார் இவர். முடிந்தால் அவசியம் கேளுங்கள்.
December 24, 2012 at 20:19
அன்புள்ள ராமசாமி அவர்களே தங்கள் பதிவு எழுத்து வரவில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தங்கள் உண்மையுள்ள அர.வெங்கடாசலம்
________________________________