நான் ஒரு கொக்கரக்கோழி –  ஜென் கலை, காலநிலை, கர்மா, க்வாண்டம் மெக்கானிக்ச்

October 6, 2025

இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்)

-0-0-0-0-

முந்தைய வாரம் காலை, ஒரு அழகான ஈரமான வியாழக்கிழமை – அப்போது எப்போதோ படித்த  ஜென் கவிதையொன்று நினைவுக்கு வந்தது, ஆனால் இப்போது அது மறந்துவிட்டது. ஆனால், ஹைக்கூ என்பது முட்டாக்கூ போன்ற தமிழ்வசைபாடலல்ல என எனக்கு நானே சொல்லிக்கொண்டு அழுதேன். ஒருகால் அது பல்லவகால போதிதர்மன், கவிஞன் பாஷோவுக்கு சொல்லிக்கொடுத்த, தற்காலத் தமிழ்ப் பதங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

ஆனால்,  உலகவெப்ப மயமாதல் காரணமாக உன்மத்த உப்புமாபாண்டவ வெறிகொண்ட என் பழைய மிதிவண்டியின் துருப்பிடித்த இரும்புச்சக்கரம் துருதுருவென உருண்டோடிக்கொண்டு மாடிப்படி இடுக்கில்  இருந்து என்னை கொரில்லாதாக்க வந்தது. அதனைத் தவிர்க்கும் முயற்சியில் போர்க்கால ரீதியில் ஈடுபட்ட என் தனித்துவ வலதுகாலும் உருவக இடது பாதமும் விபரீதமாக பக்கத்து வீட்டுவாசலில் இருந்த ஒரு மந்தாரைமரக் கிளையில் சிக்கின. இதை எல்லாம் ஒரு அறிகுறியாகக் கருதி நான் உடனே நான்காவது மாடியில் இருந்த எனது விற்காத புத்தகங்களால் மட்டுமே பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி வீட்டிற்கு வந்து என் கடைசி மழைக்கால குறிப்பு நூலின் விற்காத கலகப் பிரதியொன்றை எடுத்தேன்.

அந்தக்காலத்தில், பாரதி “தூக்கமென்னும் கூண்டில் சிறைபட்ட” போது நம்மைப் போல அவனும் வைஃபி  சிக்னல் வராததைக் கவனித்தான். ஆனால் அந்தத் தொல்லையை ஒரு மஞ்சள் வெயிலாகத் தந்தான், ‘வைஃபி விடுதலையாகிவிட்டாய், மைக்ரோவேவ் குருவியைப்போலே’ எழுதினான். நானும் இன்று என்னுடைய கைபேசியின் சிக்னல் களைந்து விட்ட தொலைபேசி டவர் ஒன்றைப் பார்த்தபடியே “ஓ! நீயுமா புலோமி ரெட்மீ ஷோமீ!” என்று சொல்லிவிட்டு என் வளமையான பெருந்தொப்பையில் இருந்து சதா நழுவிக்கொண்டிருந்த லுங்கியை என் யானைத்தோல் பெல்ட்டுக்குள் அடக்க என் இடுப்பைச் சுற்றி என் மார்க்கச்சையைக் கட்டிக்கொண்டேன். எல்லாம் கர்மா என்றால் நேர்நேர் தேமா என்பதே புளிமா? புனித தோமாவைச் சரணடைந்தவர்கள் இப்படித்தான் சந்தில் சிந்திப்பார்கள்.

எப்படியும், அவ்வளவு எளிதாகவா இந்தக் காலத்தை, நவயுகத்தை எதிர்கொள்ள முடிகிறது நம்மால்?

இல்லை.

அதே நேரத்தில், ஜப்பானில் ஒரு காகம் தனது நிழலைத் தவிர்த்துப் பறந்து கொண்டிருக்கிறது. அந்த நிழல் ஒரு மூத்த பௌத்தத் தத்துவத்துடன் இணைந்து, “சதாசிவப்ரம்மேந்திரர்  ஃபேஸ்புக்கில் இல்லை” என அறைந்து உரைத்தது.

கடந்த வாரம், குரோம்பேட்டை பாதாளசாக்கடையில் இருந்து சுயம்புவாகக் கிளம்பிய குப்பைக்கூளச்சித்தர் சாமி என்னிடம்:  “நீ ஓட்டுநர் அல்ல. நீ ஓட்டப்படும் பயணியுமல்ல. ஏன், நீ ஒரு பேருந்து வாகனமே அல்ல… நீ ஒரு வெறும் பஸ்-ஸ்டாப் தான்.”

இந்த சத்தியத்தத்துவ வார்த்தைகள் எனது உள்ளுக்குள் ஒரு மெதுவான நரம்புக் கணக்கிலிருந்து ஓர் மெலிந்த பத்தியப்பித்துவ இசையை எழுப்பின. அதில் நாத்திகமும் நரிக்குறவர்களும் கூடி, சிரிக்கும் பிணங்களாக விரிவடைந்தார்கள். அதன் பின்னணி இசையில் ஒளிர்ந்து ஒலித்த ‘டோலாக்கு டோல்டப்பிமா’ எனும் குறுந்தொகை வரிகள், என்னைக் கிளரச் செய்தன! இன்றும் நான் ஒரு மாறுதலுக்காக உப்புமாகௌரவம் கிண்டவேண்டும் எனக் குறித்துக்கொண்டேன்…

நாம் வேறு நம் உப்புமா வேறு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அல்லது நானே உப்புமா என்கிற வேதாந்த அத்வைத நிலையை எப்போதுதான் அடையப் போகிறோம்??

சமீபத்தில் நான் ஒரு கண்ணாடிக் குவளை ஒன்றை என் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசலில் போட்டேன். அது நம்மைச் சார்ந்த, ஆனால் நம்மால் புரிய முடியாத அந்த ஆழ்த் தெளிவைக் கொண்டது. அதன் குவளைக் க்வாண்டம் மெக்கனிக் தத்துவ எண்டேங்கிள்மெண்ட் சிடுக்கில் நான் என் முகத்தைப் பார்த்தேன். அதில், நான் தொடர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்த சோர்வும், புத்தமத பிக்குகளின் சமம் புணர்ந்த நெளிவும் கலந்து இருந்தது. அலுப்பும் சிலிர்ப்பும் பின்னிப் பிணைந்ததுதானே வாழ்க்கை?

இந்நேரம் ஒரு யோகி தனது விரலைச் சுட்டிக்கொண்டு, “வாட்ஸப் பார்த்து மூளைச் சிந்தனையை விட்டுட்டேன்” என சொன்னதை விக்கிரமாதித்யன் போன்ற கவிஞர் புறமாக சித்திரிக்கலாம்.

நாம் யாரும் புறம் இல்லை. நாம் அனைவரும் ஒரு பெரும் அகத்துக்குள் அடைந்து கிடக்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டாலே நாம் புறம் ப்ரம்மாஸ்மி என உச்சத்தை மிச்சம் வைக்காமல் அடையலாம்.

அவ்வளவுதான். இந்த இக்கட்டுக் கட்டத்தில்,  இக்கட்டுரையில் திடீரென பவ்லோ கோயலோ எழுதின மாதிரி ஒரு எழுத்துக்கருத்துச் சிதறல் கதறியபடி இருக்கணும். இல்லையென்றால் என் வாசகன் தியானிக்க மாட்டான்.

ஆகவே இந்த அனுபூதி மலச்சிக்கல் கவிதையை நினைவு வைத்துக்கொண்டு கட்டுரையில் உட்செருக வேண்டும்:

“கால்நடைகளை மேய்க்கும் ஓவியர்
கழிப்பறைகளைச் சுத்தமிக்கும் திரைவசனகர்த்தா
மூச்சுக்காற்றில் அருவியொழுகாக வாசிப்பவர்
அவர்களும் நம்மைப் போலவே –
அருவியில் சிறுநீர் கழிப்பது போலவே.”

இது இப்போதைக்குப் போதும். மப்பு கழிந்ததும் மீண்டும் சந்திப்போம் – அதாவது ஒருமாதிரி வேறுவிதமான தத்துவாலஜி விளக்குமாறு விளக்கங்களுடன்…

…அதோ… முன்பின் யாமத்தில் அதோ ஒரு காட்டுக்கோழி அகாலத்தில் கொக்கரக்கோ என அமானுஷ்யமாகக் கூவுகிறது… அதன் எதிர்வாக, தெருவில் சுருண்டு படுத்தபடி சிந்தனையை மோப்பமிட்டிருந்த தெரு நாய் சிலிர்த்துக் குதித்து பேரோசையுடன் எழும்புகிறது.

(ஆகவே: என் காலைக் கடன்களை முடித்துவிட்டு அதன் எச்சங்களை எனது அடுத்த நெகிழ்வாலஜி கட்டுரையாக, உலக சினிமாக்களையும், டால்டாஸ்டால் டாஸ்டாவ்ஸ்கியையும் கலந்துகட்டி எழுதவேண்டும் எனக் குறித்துக் கொள்கிறேன்)

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *