அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம் 😡😠
October 5, 2024
பிரச்சினை என்னவென்றால், அவருடைய அவதூறான ஃபேஸ்புக் பதிவுக்கு என்னால் அங்கேயே, என்னுடைய மேலான கருத்துகளைப் பதிவு செய்யமுடியாத படிக்கு என்னத்தையோ சதி செய்து வைத்திருக்கிறார்; அதனால் தான் இந்தக் குழாயடிச் சண்டையை இங்கேயே நடத்திக் கொண்டு சுயராஜ்ஜியம் அல்லது ப்ளாக் சுயாட்சி காணலாம் என்று…
என்னமோடாப்பா, சலிப்பாக இருக்கிறது… :-(
1
Aravindan Neelakandan
எந்த அளவுக்கு அறிவிலித்தனமாக இந்து ஆன்மிகம் எனும் பெயரில் உளறப்படும் விடயங்கள் இருக்கின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த நேர்காணல்.
https://www.youtube.com/watch?v=zWSA4Pf9iQI
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்று. இந்த இஸ்கான் துறவி சொல்கிறார்: (காணொளி 16:20 இல்) . 1946 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு எலெக்ட்ரான் ஒரு துகள் என கண்டுபிடித்தமைக்காக இயற்பியலாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாம். 1948 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு எலெக்ட்ரான் அலை இயல்பைக் கொண்டது என்று கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டதாம். அந்த துறவி இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் (இப்படி சொல்லிக் கொண்டே போகலாமாம்) ’அப்ப 1946 இல கொடுத்த நோபெல் பரிசு தவறுதான … சயின்ஸ் குறைபாடாத்தான இயங்கியிருக்காங்க.’ துறவி பூர்வாசிரமத்தில் பொறியியல் படித்தவராம்.
ஹே கிருஷ்ணா!
1924 இல் துகள் இருப்பையும் அலை இருப்பையும் இணைக்கும் அழகிய சமன்பாடொன்றை பிரெஞ்சு இயற்பியலாளர் லூயிஸ் டி ப்ராக்லி அளித்துவிட்டார். 1927 இல் இந்த சமன்பாடு எலெக்ட்ரான்களின் அலைத்தன்மையை காட்ட பயன்பட்டது. அதாவது நிறையற்ற ஒளித்துகள்களான ஃபோட்டான்கள் மட்டுமின்றி நிறை(mass) கொண்ட துகள்களான எலெக்ட்ரான்களுக்கும் அலைவரிசை உண்டு என்பதை வெளிக்கொணர்ந்தது. எலெக்ட்ரான் நுண்ணோக்கிகள் எலெக்ட்ரானின் அலை இயற்கையை ஆதாரமாக கொண்டு செயல்படுகின்றன. 1929 இல் எலெக்ட்ரான்களின் அலை இயற்கையை வெளிக் கொணர்ந்தமைக்காக டி ப்ராக்லிக்கு நோபெல் பரிசு அளிக்கப்பட்டது. 1940களிலெல்லாம் இந்த இரட்டைத் தன்மை இயற்பியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 1946, 1948களில் இயற்பியலுக்கான நோபெல் பரிசுகள் கொடுக்கப்பட்டது வேறு வேறு விடயங்களுக்காகவே அன்றி, அந்த துறவி சொல்லும் காரணங்களுக்காக அல்ல.
பேட்டி கேட்ட இடத்தில் அடிப்படை அறிவியல் அறிவு கொண்ட ஒருவர் இருந்திருந்தால் துறவி துடிதுடித்து போயிருப்பார். சர்வக்ஞ இறுமாப்பு புன்முறுவலுடன் அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் உடைக்கப்பட்டிருக்கும்.
எனவேதான் சொல்கிறேன் துறவிகள் ஆன்மிகவாதிகள் கட்டாயமாக அடிப்படை அறிவியல் படிக்க வேண்டும்.
அறிவியலும் நம்பிக்கை ஆன்மிகமும் நம்பிக்கை என்று சொல்வது போல அயோக்கியத்தனமான மூளைச் சோம்பல் வேறெதுவும் இல்லை.
@highlight
2
😡 அரவிந்தனுக்கு இது நீள கண்டனம்!
உங்களுடைய விதண்டாவாதம் துளிக்கூட ஒப்புக் கொள்ளமுடியாததொன்று.
நீங்களே அஞ்ஞானியைத் துறவி என்கிறீர்கள். அதற்கு முன்னால், சிரமப்பட்டு அவர் பொறியியல் படித்தார் என்றும் சொல்கிறீர்கள்.
அப்போது அவர் பொறியியல் உள்ளிட்ட அனைத்தைப் பற்றிய அஞ்ஞானத்தையும் கைகழுவிவிட்டு, அவற்றைத் துறந்துதானே இஸ்க்கானால் இஸ்க்கப்பட்டுத் துறவியாகச் சென்றிருக்கவேண்டும்?
அத்துறவியை நீங்கள் கொண்டாடாமல் இருந்தாலும் பரவாயில்லை – ஆனால் இப்படிக் கரித்துக் கொட்டுவது சரியல்ல.
அன்னப்பறவை-பால் கதைபோல, நீங்கள் ஏன் அவருடைய புன்முறுவலையும் மகத்தான தன்னம்பிக்கையையும் போற்றக் கூடாது? மேலும் அவியல் அரைவேக்காடாக இருந்தால்தான் தானே கடுக்முடுக் என்று சுவையாக இருக்கும்? அதேபோலத்தானே அறிவிலியியலும்?
அவர் சொல்வதையெல்லாம் ஒருமாதிரி stonepalm (இந்த அழகான மொழிபெயர்ப்பினை நல்கியவர் உங்கள் நண்பர் தாம், எஸ்.ராமகிருஷ்ணன்) என எடுத்துக் கொண்டால், குறைந்தா போய்விடுவீர்கள்?
வக்கணையாக ஐஸக் அஸிமோவ் அப்படியிப்படி என்று படிப்பவருக்கு, ஒரு நாளாவது அவர்களுடைய புனைவுகளைக் கேள்விகேட்கும் திராணியிருந்திருக்கிறதா?
வரவர நீங்கள் எலக்ட்ரான் அலைபாய்தல் என்றலைவது என்னைத் துணுக்குற வைக்கிறது, என்ன செய்ய! கொத்துப் புரோட்டாவின் துணுக்குகள்தாம் புரோட்டான்கள் என்று அவர் சொல்லியிருந்தால் தான் உங்களுக்குத் திருப்தியாகியிருக்குமோ?
ஏமாற்றமாக இருக்கிறது. இப்படி அவியலை ஒப்புக்கொள்ளாமல் சோரம் போவீர்கள் என நான் என் நினைவில் கூட கனைக்கவில்லை. என்ன செய்ய…


October 9, 2024 at 13:47
அன்பு ஐயா,
திரு அ.நீ அவர்களின் பல கட்டுரைகளை வாசித்து+புரிந்த வரையில் அவர் நாத்திகர் (non believer)/ அல்லது அவ்வாறு தன்னை முன்வைப்பவர் என்று நினைக்கிறேன்.
objective மனநிலையில் ஆன்மீக/மத விஷயங்களை அணுகுபவர் என்றே எனது புரிதல். விவேகானந்தர், நாராயணகுரு ++ அவரின் பதிவுகள்+கட்டுரைகள் அவரைப்பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை அளிக்க உதவும்.
காலத்தை ஒதுக்கி விட்டு விரும்பும் மாற்றத்தை அடைய விரும்பும்/யோசிக்கும் அவரின் மனநிலையில் இருந்தே அவரின் சிந்தனைகள், கோட்பாடுகள் ++ இருக்க வாய்ப்பிருக்கின்றது. உரத்துச்சொல்லும்/எழுதும் இவரைப்போன்றவர்கள் மேல் சிறிது விலக்கம் எப்போதும் உண்டு எனபதைச்சொல்லவும் தயக்கமேதுமில்லை.
இந்தப்பின்புலத்தில் திரு.அ.நீ அவர்களின் பதிவிற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு நான் அளிக்கமாட்டேன். இல்லை என் தொடக்கப்புள்ளி தவறு+என் புரிதல் கோளாறு என்று புறந்தள்ளவும் உங்களுக்கு உரிமையுண்டு.
ஆன்மீக/மத குருமார்கள், பிரச்சாரத்தில் நிரூபணஅறிவியலோ அல்லது வேறு எதுவோ அதை உபயோகிக்கும் வழிமுறைகள் சார்ந்து ஒரு அவநம்பிக்கையாளருக்கு இந்தக் கோபமும் கவலையும் ஏன் என்றே எனக்கு புரியவில்லை.
‘கந்தனிருக்க பயமேன்’ எனபதே எனது சுருக்கமான பதில்.
October 11, 2024 at 09:57
Well said!!