இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n)

August 18, 2015

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.

கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி,  தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

அவருடைய எதிர்வினை:

ராமசாமி சார் இஸ்லாத்தை பற்றி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க அதே சமயம் கொஞ்சம் பிழையாவும்.

முஹம்மது நபி இஸ்லாத்தின் ஸ்தாபகர் இல்லை.இஸ்லாத்தின் ஸ்தாபகர் அல்லாஹ் தான்.முஹம்மது இஸ்லாத்தின் கடைசி தூதர்.மூசா(மோசஸ்)ஈசா(ஜுசஸ்)இப்ராகிம்(ஆப்ரகாம்) இந்த மாதிரி இன்னும் நிறைய தூதர்கள்,இவர்கள் யாவரும் முஸ்லிம்களே.பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன,மொழி மக்களுக்கு தூதராக அல்லாஹ்வால் வேதம் கொடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள்.முஹம்மது இந்த வரிசையில் இறுதி தூதர்.அவருக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட வேதம் குர்ஆன்.அவர் எழுதியது அல்ல. அவர் மரணிக்கும் தருவாயில் இந்தியா அளவுக்கான நிலபரப்புக்கு அவர் அரசர்(அமீர்),ஆன்மீக தலைவர்.அவரின் வாழ்க்கையை இப்போதுல்ல முஸ்லிம் மன்னர்கள் படித்து திருந்தினால் இஸ்லாத்திற்கு நல்லது.

அவரின் போதனைகளை தமிழக முஸ்லிம்கள் முறையாக ஆரம்ப காலத்திலிருந்து பின்பற்றியிருந்தால் நீங்கள் இப்போது ராமசாமி யாக இருக்க மாட்டீர்கள்.ஒரு அப்துல்லாவாக இருந்திருப்பீர்கள்.

-0-0-0-0-0-0-0-

அய்யா மொஹெம்மத், உங்களது பண்புடன் கூடிய குறிப்புக்கு என் நன்றி. ஆனால், அது – ஒரு மதபோதகப் பார்வையுடன், ஆகவே அதற்கே உரிய தர்க்கமின்மையுடன் இருக்கிறது. இருந்தாலும் மறுபடியும் நன்றி.

சரி. முதலில் என்னைப் பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லிவிடவேண்டும், இது முக்கியம்:

0. நான் ஒரு நாஸ்திகன். இந்த எழவால், எனக்குப் பெருமைகிருமை என்றெல்லாம் இல்லை. இதனால் நான் தன்னளவில் முழுமையடைந்தவனாகக் கருதிக்கொள்ளவில்லை. என்னுடையது – ஒரு பார்வை,  பல சாத்தியக்கூறுகளில், என்னுடைய பல பரிமாணங்களில் ஒன்று, அவ்வளவுதான். அதனால், நான் மத நம்பிக்கைகளை கீழ்த்தரமாக வீசித் தள்ள மாட்டேன். எல்லா மதங்களையும் மதிப்பேன், அதே சமயம் எனக்கு வாய்த்த  – சிறிய அளவிலான அறிவியல்-கணித-தொழில் நுட்பப் பயிற்சிப் பின்புலங்களிநால் உந்தப்பட்ட படிப்பறிவு + பல செறிவான அனுபவங்களின் காரணமாக, எனக்குச் சிலபல விஷயங்களை எழுதவேண்டுமென்று தோன்றினால், சில கருத்துகளையும் முன் வைப்பேன். நான் ‘விடுதலை’ வீரமணி அவர்கள் போன்ற ஒரு காரிய அரைகுறை அல்லன்; எனக்கு, அற்பக் கோமாளி வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை; என் மடியில் திருட்டுமதச்சார்பின்மைக் கனமில்லை, ஆகவே, வழியில் மதபயமில்லை.

மறுபடியும் சொல்கிறேன்: எனக்குக் கடவுள் எனப் பொதுவாகச் சொல்லப்படும் பதத்தில் – அது அல்லாவாக இருக்கட்டும், யாஹ்வேயாக இருக்கட்டும் – துளிக்கூட நம்பிக்கையில்லை; ஆனால் அது தொடர்பான கருத்தாக்கங்களின்மீது மரியாதையிருக்கிறது. ஏனெனில் இந்த கடவுளானது – மானுடத்தின் பொதுப்புத்தியின் படைப்பூக்கத்தால் வடிவம் கொடுக்கப் பட்டதொன்று. எவ்வளவோ மகாமகோ மனிதர்களால் அவதானிக்கப்பட்ட ஒன்று – அவர்களது கால்தூசு அளவுக்குக்கூட நானில்லை. ஆகவே மத நம்பிக்கை உள்ளவர்களை நான் இகழவே மாட்டேன். என் கருத்துகளை அவர்கள் மேல் கவிழ்க்கமாட்டேன். மாறாக, சகபயணிகளான அவர்களைப் போற்றுவேன்; ஏனெனில் ‘மற்றவர்களைப் படுமோசமாக பாதிக்காத கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடுகள்’ மீதும், ஜனநாயகத்தின் மீதும் மதிப்பு வைத்திருக்கிறேன்.

1. மத நம்பிக்கையின்மை என்பது ஒருபக்கமிருக்க, எனக்கு, உரையாடல்களின்  மீது மகாமகோ நம்பிக்கையிருக்கிறது. மேலும் – மதங்களின் மூலமாகச் சாத்தியமாகியிருக்கும் பலப்பல விஷயங்களை, நான் மிகவும் மதிப்பவன்;  போற்றத்தக்க மரபுகளைப் பேணுதலையும், தத்துவங்களையும், பன்முகத்தன்மைகளையும், தொன்மங்களையும், புராணங்களையும், எண்ணற்ற படிமச் சாத்தியக் கூறுகளையும், குறியீட்டுச் செல்வங்களையும், இசைப் பிரவாகங்களையும், ஓவியங்களையும், இலக்கியங்களையும், சிற்பக் கலைகளையும், உருக்கு-வார்ப்புகளையும், கட்டிடக் கலை உச்சங்களையும், ஏன், இவற்றையெல்லாம் சாத்தியப் படுத்தியிருக்கும் தொழில் நுட்பங்களையும் கூட நான் மாய்ந்துமாய்ந்து மதிப்பவன்; மதம் என்று ஒன்று இல்லாவிட்டால், பலப்பல உச்சங்கள் எட்டப்பட்டிருக்கமாட்டா, என்பது என் அபிப்ராயம்.

ஆகவே, நடைமுறை மதங்கள் (= ‘அரேபிய’ ஸலாஃபி-வஹ்ஹாபிய கொடும் இஸ்லாம்) உன்னதமான கலைகளுக்கு எதிராக, மானுட மேன்மைக்கான எத்தனங்களுக்கு எதிராக, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிராக – அசிங்கமான கழுத்தறுத்தல்களை அரங்கேற்றிக்கொண்டேயிருக்கும்போது, அச்செயல்பாடுகளுக்கு ஆதரவாக, வாயோர நுரைதள்ளல்களை கொர்-ஆனிலிருந்து (மிகச் சரியாகவே) மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கும்போது, இந்த இழிவுக்கு நம் இந்தியாவில்கூட ஆதரவு திரண்டுவரும்போது – நான் வாய்மூடிக் கொண்டிருப்பது எனக்கு ஏலாது.

2. நாம் உரையாடுவதற்கு – ஒன்று, அரேபிய மூலம் சார்ந்த சொல்லாடல்களை (அஹ்லாஹ்) உபயோகிக்கலாம் – அல்லது அதன் தமிழ்ப் படுத்தலை (=அல்லா) உபயோகிக்கலாம். இரண்டும்கெட்டானாக அல்லாஹ் என்றெல்லாம் எழுதவேண்டாமே!

அதேபோல ஸுஹ்னாஹ் அல்லது ஸுன்னா; க்வொர்-ஆன் அல்லது கொர்-ஆன் அல்லது குர்-ஆன் என ஒன்றுக்கொன்று ஒத்திசைவுள்ள சொற்களை உபயோகிக்கலாமே!

3. அப்துல் கலாம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது ‘அப்துல் கலாத்தை’ என்றா சொல்கிறோம்? அப்துல் கலாமை-த்தான் நாம் புகழ்ந்து பேசுகிறோம் – அல்லவா? ஆகவே இஸ்லாம் குறித்து எழுதும் போது  ‘இஸ்லாமை’ என்று எழுதுவது ‘இஸ்லாத்தை’ விடச் சரியாக இருக்கிறது அல்லவா? இஸ்லாத்தை என்று எழுதுவது ஏதோ சொத்தை போன்ற காட்சியைத் தருவது சங்கடமாக இல்லையா? (எனக்கு அப்படித்தான் இருக்கிறது)

மேலும் – வேதம், ஆகமம் என்ற ஹிந்து மதங்களைச் சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக இஸ்லாமை அணுகவேண்டாமே! ஹிந்து மதங்களின் வேதம் போன்றவை தொகுக்கப்பட்ட விதமும், கொர்-ஆன் போன்றவை தொகுக்கப்பட்ட விதமும் – அவற்றின் சாரமும் வெவ்வேறு. இதற்கெல்லாம் வரலாற்றுரீதியான காரணங்கள் இருக்கின்றன.

இதன் காரணமாக (அல்லது) அதேபோல, புதிய ஏற்பாடு + பழைய ஏற்பாடு போன்ற க்றிஸ்தவத் தொகுப்புகளை வேதாகமம் என்று அழைப்பதும் நம்பவேமுடியாத அரைகுறைத்தனம் தான். அதேபோலத்தான் ப்ஸாம்களை(=psalms) – சங்கீதங்கள் என்றழைப்பதும்…

4. ஹிந்துமதங்கள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஸனாதனதர்மத்தின் வேதங்கள், என் பெருமதிப்புக்குரிய யூதத்தின் டோரா, க்றிஸ்தவத்தின் பைபிள்கள்-ப்ஸாம்கள், இஸ்லாமின் கொர்-ஆன் – அனைத்தும் – ஒரு விதிவிலக்குகூட இல்லாமல் – தொகுப்புகளே. பல மனிதர்களால், பல காலகட்டங்களில் தொகுக்கப்பட்டவையே! அவைகளில் சிலவற்றில் ஒரு ‘அதிகார்வ பூர்வ’ வடிவம் இருப்பதெல்லாம் அதற்குமுன் பலப்பல வடிவங்கள், விதம் விதமான தொகுப்புகள் இருந்தமைக்குச் சான்றுகள்தானே!

ஒரு தனி மனிதரின் முயற்சியால், அவர் தன்னைக் கடவுளாகவே கருதிக்கொண்டாலுமேகூட இம்மாதிரி படைப்புகள் சாத்தியமில்லை. ஆகவே, தொகுப்புகளிலும் தொகை நூல்களிலும் வெகு இயல்பாகவே இருக்கும் உள்முரண்கள் (வெளியுலகத்துடன் இருக்கும் முரண்சிக்கல்களை விடுங்கள்!) இவை அனைத்திலும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி யோசிக்கும்போது, விமர்சிக்கும்போது – இந்த அடிப்படைகளை நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டும்.

கொர்-ஆன் என்பது பல வித மானுடச் சிந்தனைகளை,  மிக முக்கியமாக, முஸ்லீம்களின் அன்றாட, சமூகச் செயல்பாடுகளை ஒரு திசை நோக்கிக் குவிக்க, பெரும்பாலும் கையேடு போன்ற வகையில் தொகுக்கப் பட்ட தொகை  நூல்; இதில் தத்துவ விசாரம் இல்லை. பின்னர், இஸ்லாமின் வாயிலாக எழுதப் பட்ட இப்ன் ரஷீத், இப்ன் கல்டூன் போன்றவர்களின் தத்துவ நூல்களில் தரிசனங்கள் இருக்கின்றன, உச்சங்கள் இருக்கின்றன, அறிவியல் கருதுகோள்கள் இருக்கின்றன. இவையனைத்தும் போற்றத்தக்கவை. இவைகளில் பலவற்றை ஊன்றிப் படித்துள்ள நான், ஒரு மகாமகோ பாக்கியசாலி என்பதில் ஐயமேயில்லை.

5.  தீர்க்கதரிசி/ஞானி (=prophet, நபி) என்பது வேறு;  இறைதூதர் (=divine messenger, ஒருமாதிரி ரஸுல்) என்பது வேறு; அனுப்புபவர்களிடமிருந்து செய்திகளைப் பெற்று, அதனைப் பெறவேண்டியவர்களிடம் சேர்ப்பிக்கும் பணி செய்யும் அஞ்சல்காரர் (=messenger, குற்றேவலாள்) என்பது வேறு!  (எனக்கு, அஞ்சல்காரர் எனும் சாதாரண வாழ்க்கைப் பகுப்பைத்தான் ஒப்புக்கொள்ளமுடிகிறது என்பது வேறு!!) இவையெல்லாம், அடிப்படையில் ஹீப்ரு மொழியிலிருந்தும், பின்னர் கிரேக்கத்திலிருந்தும் எடுக்கப்பட்ட சொல்லாடல்களும் கருத்தாக்கங்களும்தான். கொர்-ஆன் தொகுப்பின் பலப்பல விஷயங்கள் பழைய ஏற்பாட்டிலிருந்தும் புதிய ஏற்பாட்டிலிருந்தும் எடுக்கப் பட்டவையே.

மொஹெம்மத் நபி, பொருளாதார/சமூக அதிகார ரீதியில் அவர் சார்ந்திருந்த குறுங்குழுவின் நிலை – சமூக அடுக்குப் பிரிவில் கீழாக இருந்ததால், அவர் அதனால் பாதிக்கப்பட்டதால் – அதற்கான தீர்வாகவும், தீர்க்கமாகத் தனிமையில் யோசித்தும், அவரிடம் வந்து சேர்ந்திருந்த அப்ரஹாமிய மதக் கூறுகளையும், தொன்மங்களையும் கருத்தில் கொண்டும் – அவருடைய வீச்சுக்கு எட்டிய செயல்பாடுகளை முன்வைத்துப் பிரசங்கங்களைச் செய்தார்; தன்னை ஒரு இறைதூதராகக் கருதிக் கொண்டார். பின்னர் ஒரு தீர்க்கதரிசியாகக் கருதிக்கொண்டது மட்டுமல்லாமல். தன்னை ஒரு சான்றோர்/தீர்க்கதரிசி வரிசையில் கடைசியாக வந்தவராகவும் கருதிக்கொண்டார்; தன் வாழ்க்கை நிகழ்வுகளின், தன் முனைப்பின் காரணமாக, அக்கால சமூக-பொருளாதாரச் சூழல்களுக்கான இஸ்லாம் எனும் பெரும் மதத்தை ஸ்தாபனம் செய்தார். தான் நம்பிய மார்க்கத்தை வளர்த்தெடுப்பதற்காக – குறுங்குலக் குழுக்களை, சாமதானபேததண்ட முறைகளை உபயோகித்து, சிலசமயம் திருமண உறவுகளால், சில சமயம் பதவிகளைக் கொடுத்தலால், முக்கியமாக தண்டமுறைகளினால் – வன்முறைகளினால் ஒருங்கிணைத்தார். முன்னேபின்னே ராணுவப் பயிற்சியோ ஆயுதப்பயிற்சியோ பெறாவிட்டாலும் –  திட்டமிடுதல், தந்திரோபாயங்களையும் சூழ்ச்சிகளையும் உபயோகப்படுத்தி இலக்குகளை அடைதல் எனப் பலவகைகளிலும் ஒரு மகத்தான, வெற்றிகரமான ராணுவத் தளபதியாகவும் இருந்தார்.

நான் முன்னமே எழுதியிருந்தபடி, அவர், பல கல்யாணகுணங்களைக் கொண்ட ஒரு மகத்தான மனிதர்.

6. கொர்-ஆன் புத்தகத்தின் சாராம்சமான சில கருத்துகள், மொஹெம்மத் நபி அவர்களின் கருத்துகள்/செயல்பாடுகள், இஸ்லாமின் சடங்குகள், உருவ வழிபாடு போன்றவை அவர் காலத்திலேயேகூட சமூக/அரசியல் எதிர்பார்ப்புகளூக்கேற்ப மாற்றப் பட்டிருக்கின்றன என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

தன்னம்பிக்கையும் செயலூக்கமும் கொண்ட மொஹெம்மத் அவர்கள், தன்னை ஒரு இறைதூதராகவும், தீர்க்கதரிசியாகவும்  கருதிக் கொண்டதால் – மேலும் அப்ரஹாம், இஸையா, மோஸஸ், யேசு கிறிஸ்து போன்றவர்களிருந்த வரிசையில் தன்னை வைத்துக் கொண்டதால், சில எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். ஆக –  கிறிஸ்தவர்களும், யூதர்களும் – குறைந்த பட்சம் அவர்களில் யத்ரிப்  (இப்போதைய மதினா​) நகரத்தைச் சேர்ந்தவர்களாவது அவர் மார்க்கத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார். யத்ரிப் நகர யூதர்களில் பெரும்பாலோர் செல்வந்தர்கள் – அவர்களுடைய வரிப்பணமும், கொடையும் இளம் இஸ்லாமுக்குத் தேவையாக இருந்தது; ஆகவே – அவர்கள் தங்கள் பங்கைக் கொடுத்தாலும், அவர்கள் மார்க்கத்தில் சேர்ந்தால் பலன் அதிகமாக இருக்கும் என மொஹெம்மத் எண்ணினார்.

இந்த எதிர்பார்ப்பினால், இணக்கத்திற்கான எத்தனங்களாக, அவர் சிலபல விஷயங்களில் முனைந்தார்; அவற்றில் சில:

அ.  யூதர்களின் பண்டிகையான யோம்-கிப்பூர் என்பதை (=யூதர்கள் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொண்டு முக்தி/மன்னிப்பு பெற அவர்களின் ஆண்டவனை வேண்டும் தினம்) முஸ்லீம்களும் கொண்டாடவேண்டும் என ஆணையிட்டது.

ஆ. முஸ்லீம்கள் தங்கள் ஐந்து அனுதினத் தொழுகைச் சமயங்களிலும்  ஜெருஸலேம் (=யெருஸலாயிம்) நோக்கித் தொழவேண்டும் என்பது.

ஆனால் யூதர்கள், ஏகோபித்துத் திரண்டு அவர் மார்க்கத்திற்கு வர மறுத்தனர். தண்ட முறைகளை உபயோகித்து, யத்ரிப் நகரத்தில் இருந்த இரண்டு யூதக் குறுங்குழுக்களை அழித்தபின்னரும் (ஒரு குலக்குழு, யத்ரிப் நகரத்திலிருந்து துரத்தியடிக்கப் பட்டது; இன்னொன்றில் நிராயுதபாணி ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் – குழந்தைகளும் பெண்களும் அடிமைகளாகப் பட்டனர்)   இந்த நிலை.

ஆக, முஸ்லீம்கள் ஜெருஸலேம் பக்கம் திரும்பித் தொழுகை செய்யாமல், மக்கா பக்கம் திரும்பவும், யோம்-கிப்பூர் தினத்தை அனுசரிக்கவேண்டாம் எனவும் ஆணையிடப் பட்டனர்.

மேலிரண்டு விஷயங்களை நான் எழுதியதற்குக் காரணம் – எல்லாவற்றிலும் மீள்பார்வைகள், சமரசங்கள், திருத்தங்கள் இருந்தன – இருந்துகொண்டே இருக்கின்றன என்பதைச் சுட்டத்தான். தொடர்ந்த, பரீசிலிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் எந்த ஜீவராசியும் கருத்தும் மாற்றங்களுக்கு உரியன என்பது வரலாற்று நியதி. மாற்றம் இன்றேல், வளர்ச்சியில்லை.

மேற்கண்ட பின்புலத் தகவல்களை மனதில் வைத்துக்கொண்டு – அடுத்த பகுதியில் ‘மொஹெம்மத்’ அவர்களின் கருத்துகளுக்கு என் பதிலை, வரி வரியாக – கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (10 ஆகஸ்ட், 2015 வரை)

7 Responses to “இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n)”

  1. nparamasivam1951 Says:

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்

  2. k.muththuramakrishnan Says:

    இதைப் பலருடன் பகிர விரும்பினலும், அவர்களுடைய தற்காலத்திய‌ செயல்பாடுகள், உங்கள் அளவுக்குத் துணிச்சலை அளிக்கவில்லை.

  3. kasran64 Says:

    I wish you get some healthy response from many Muslim leaders.

  4. A.Seshagiri. Says:

    இன்று ஜெயமோகன் தளத்தில் வந்திருக்கும் கட்டுரையின் சுட்டியை கீழே கொடுத்து இருக்கிறேன்.நாட்டின் நலம் விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஓன்று.

    http://www.jeyamohan.in/77891

  5. Anonymous Says:

    *** முழுவதும் அகற்றப்பட்டது ***

    அய்யா, மறுபடியும் மறுபடியும் வெறுப்புமிழும் கருத்துகள் வேண்டா. உங்கள் கீபோர்டுக்கும் ஓய்வு தேவை. கும்பலோடு கோவிந்தா போட்டுக் கூத்தாட வினவு தளத்திற்குச் செல்லவும். அல்லது ஜவாஹிருல்லா பின்னர் அலையவும்.

    இப்படிப்பட்ட அற்பத்தனங்களால், நீங்கள் இஸ்லாமுக்கோ, சகமுஸ்லீமுக்கோ நல்லதையா செய்கிறீர்கள்??

    நன்றி.

    __ரா.

  6. சான்றோன் Says:

    முஹம்மது நபி அவர்களைப்பற்றிய தங்களின் கருத்துக்களை என் ஃபேஸ்புக் சுவரில் பதிவு செய்ய தங்கள் அனுமதி வேண்டும்…. நன்றி…


    • அய்யா, தாராளமாகச் செய்துகொள்ளுங்கள். நான் எழுதுவதற்கு ஒருவிதமான காபிரைட். க்ரியேடிவ்காமன்ஸ் எழவும் இல்லை. எல்லாம் காபிலெஃப்ட்தான்.

      என்னிடம் சொல்லவேண்டும் எனும் அவசியமும் இல்லை, சரியா?


Leave a reply to kasran64 Cancel reply