மங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள்

May 24, 2014

இந்த மங்கோலியச் சாகசப் பயணத்தின் முதல்பகுதியைப் படித்தால், இந்த இரண்டாம் பாகம் மேலதிகமாகப் புரியாமல் போகலாம்.

… சரி. நான் முன்னமே சொன்னது போல, என் துணைவியாருக்கு சந்தோஷத்தைத் தந்துகொண்டு என் மங்கோலியப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்…

விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளில் மறுபடியும் மறுபடியும் என் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவண்ணம் இருந்தனர் – ஏனெனில், அந்த பரிசோதக முட்டாள்கள், என்னுடைய புத்தகக் கட்டுகளை ஒரு நூதன வெடிகுண்டு என நினைத்துவிட்டனர் போலும். அல்லது, ஒருகால்,  என் புத்தகங்களின் பின் அட்டைகளில் என் மகாமகோ தொப்பையுடனான குண்டுப் படத்தைப் பார்த்து, அவை குண்டு தயாரிப்புக் கையேடுகள் என நினைத்துவிட்டனரோ?

… இந்தியன் இம்மிக்ரேஷனில் உட்கார்ந்திருந்த, டெனிம் போட்டிருந்த உற்சாகப்பூ என்னிடம் ஹலோ என்றது. உங்களுக்காக நான் என்ன செய்யக் கூடும் என்று தொடர்ந்தது. நான் ஒரு புகழ்பெற்ற் எழுத்தாளன் என்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் – ஒரு வடக்கத்தி இளம் பஞ்சுமிட்டாய்க்கும் என்னிடம் பரிச்சயம் இருந்ததில் எனக்கு ஆச்சரியம் மேலிட – நான் ஒரு நொபெல் பரிசு வாங்கப்போகும் எழுத்தாளன் என்பது உனக்கு எப்படித் தெரியும் கண்ணே என்றேன்.

ஆனால், வருந்தத்தக்க விதத்தில், என்னை மதிக்காமல் என் பாஸ்போர்ட்டில் ஒரு ரப்பர்ஸ்டேம்ப் ஒன்றை விட்டேற்றியாக அமுக்கி – உங்கள் நாள் நல்லதாக இருக்கட்டும் என்று இயந்திரத்தனமாகச் சொல்லி, பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு பல்லற்ற தொண்டுகிழத்திடமும் அதே  உற்சாக ஹலோ! எனக்கு இந்த இளம் தலைமுறையினரையே பிடிக்காததற்கு இம்மாதிரி விஷயங்கள் தான் காரணம்; மட்டு மரியாதையில்லாமல், எடுத்தெறிந்தாற்போல் பேசிக்கொண்டு, கைபேசியில் கெக்கேபிக்கே என்று பேசிக்கொண்டு இளிப்பதற்குத்தான் இவர்கள் லாயக்கு! இவர்களுக்கெல்லாம் இலக்கியமாவது ரசனையாவது. எல்லாம் ஃபேஸ்புக் முண்டங்கள். ட்விட்டர் டம்மிகள்.

… ஒரு வழியாக, அலைகடலெனத் திரண்டுவந்திருந்த ‘கேளிர்’களிடன் பிரியாவிடை பெற்றுவிட்டு விமானத்தில் ஏறிப் பயணித்தேன். வழக்கம் போல பக்கத்து இருக்கைக் காரருடன் எல்லைக் கலகம்; கடோத்கஜன் போக இருந்த அந்த வலஇருக்கைக்கார ஆள், ஒரு இங்கிதமுமில்லாமல் என்னுடைய இருக்கைப் பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து – என் வலது கையை அதன் கட்டையில் வைக்கமுடியாமல் செய்தார்! எவ்வளவோ வெல்ல முயன்றும், அவர் பார்க்காதபோது சட்டென என் வலது முழங்கையை நகர்த்தினாலும், அந்த ஆள் ஒரு எம்டன் – கொஞ்சம் கூட அசராமல், என் கைமேலேயே அவர் கையை வைத்தார். என்ன செய்வது சொல்லுங்கள்? வேறு வழியில்லாமல் அந்த எல்லையை விட்டோடி வந்து, நானும் என் பங்கிற்கு, என் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என் இடதுகைக்கட்டையை அப்படியே செய்தேன்; எனக்கு இடதுபக்கம் உட்கார்ந்திருந்தது ஒரு சிறுவன், அவன் ஒன்றும் சொல்லவில்லை; ஆக, ஒன்றுக்கொன்று பர்த்தியாகிவிட்டது. ஸ்ஸ்ஸ் அப்பாடா

இருபத்தியோராம் தடவை நான் குளிர்பானம் கேட்டதற்குப் பின் – விமானச் சேடிகள் நான் என்னதான் அழைப்புமணியை அடித்தாலும், கையை ஆட்டிக் கூப்பிட்டாலும், என் பக்கமே திரும்பாததன் மர்மம் எனக்குப் புரியவில்லை. என்ன விமானப் பணிப்பெண்களோ, என்ன சேவையோ? லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பிளாஸ்டிக் புன்னகையுடன் மினுக்கிக் கொண்டிருந்தால் போதுமா? இப்படி வேலைக்குச் சுணங்கினால், வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும், சொல்லுங்கள்? இக்கால இளைஞர்களை என்னால் சுத்தமாகப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

… இமயமலையைத் தாண்டும்போது மறுபடியும் நெடும்பனிகளைப் பற்றியும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவை, மவுனமாக கடந்துகொண்டிருக்கும் காலவெளிகளை அவதானித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், நெடுங்குளிர் திபெத்திய யாக் எருமைகள் பனிப்புயலின் நடுவே வாழ்க்கையின் அர்த்தமுள்ள அர்த்தமின்மையைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பதையெல்லாம் எழுதலாமென்றால், எனக்கே என் நடை கொஞ்சம் போரடித்துவிட்டது. ஆகவே தப்பித்தீர்கள்.

எப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியாமல், மங்கோலியா போய்ச் சேர்ந்தேன்.

-0-0-0-0-0-

உலான் பாடர் விமான நிலையத்தின் விடிகாலைப் பனியில், என்னை வரவேற்க, என்னுடைய வாசகி திருமதி. மங்கோலியர்க்கரசி அவர்கள், தன் கணவர் திரு மங்கோலாதித்தனுடன் வந்திருந்தார். பூச்செண்டு கொடுத்தார். அது மதுரை மரிக்கொழுந்து வாசனையுடன் இருந்து என்னை நெகிழ்வடையச் செய்தது.

எவ்வளவு பூச்செண்டுகள் என்னைப் பார்த்து வாசத்தைச் சொறிந்திருக்கும் என, தன்னளவில் நெட்டை நெடுமரமாக எண்ணிக் கொண்டேன்.

தமிழகத்தில் தேசாந்திரியாகத் திரிந்துகொண்டிருந்தபோது அந்தத் திரியில் திரியாவரங்கள் நெருப்புவைத்த நிகழ்ச்சியை நினைத்து, பின் முன்னுணர்வுடன் பின்னங்கால்கள் பிடறியில் பட நான் நாடோடியாக ஓடிக்கொண்டிருந்த  நாட்களை நினைத்து தன்னைத்தானே பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்.

விமான நிலையத்தில் பார்த்த மங்கோலியர்களுக்கும் இரண்டு கண்கள் ஒரு மூக்கு ஒரு வாய் என்பது போலத்தான் இருக்கின்றன. ஓ இவர்களும் மனிதர்கள் தானோ? நான் பார்த்த புத்தகப் படங்கள் தட்டையாக, முப்பரிமாணம் இல்லாமல் இருந்தது ஒரு பிரச்சினைதான். இவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை – எல்லோரும் முகத்தின் முன்பக்கம் மட்டும் தெரிய உடையணிந்து வலம்வருகிறார்கள். இதற்கான காரணத்தை ஆய்ந்து ஒரு பேருரை கொடுக்கவேண்டும் எனக் குறித்துக் கொண்டேன். அவர்களுக்கு காதுகள் இல்லையோ அல்லது குளிரால்தானா இப்படி?

ஆனாலும், எப்படித்தான் என் பேருரைகளைக் கேட்டு வாழ்வில் உய்யப் போகிறார்களோ என நினைத்தால் பாவமாக இருந்தது.

மங்கோலியர்க்கரசி அவர்கள், குளிர்பானத் தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகிறார்கள். இவருடைய ‘மங்கோலா’ ப்ராண்ட் மங்கோலியாவில் மிகப் பிரசித்தம் என்பது எனக்கு முன்னமே தெரியும்.  அங்கு சென்று நிறைய குளிர்பானங்கள் குடித்தேன். கூட குடிப்பதற்கு குடும்பத்தினர் இல்லையே என ஏக்கம் இருந்தாலும், கொஞ்ச நாள் குடும்பத்தினரை விட்டுவிட்டு வந்தால்தான், திரும்பிப் போகும்போது குடும்பம் என ஒன்று அங்கே எனக்கு இருக்கும் என்றும் தோன்றியது.

மங்கோலாதித்தன் அவர்கள் ஒரு காசீனோ நடத்திவருகிறார் – ‘மங்காத்தா மாலைகள்’ என்கிற பெயரில். மாலைகளில் மங்காத்தா போய் சில விளையாட்டுக்களை விளையாடினேன்.

மனித வாழ்க்கையில் எல்லாமே விளையாட்டுதானே! காலம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க மனிதன் விளையாடுவது மட்டும் தானே மனிதனின் புராதனச் சின்னங்களின் எச்சமாக தொன்மங்களின் நிலவுகிறது  என ரிச்சர்ட் ஃபெயின்மன் தத்துவார்த்தமாகச் சொன்னது  நினைவுக்கு வந்தது.

கூடவே, ஜென் கவிஞர் பாஷோவும் இது பற்றி வேசைகளோடு சல்லாபித்துக்கொண்டிருந்த போது எழுதினார் என – அண்மையில் ஜப்பான் சென்றபோது நான் கண்டுபிடித்துப் பேசியதும் நினைவிற்கு வந்தது. என்னுடைய கற்பனைத் திறனே தனிதான்!

இந்த மங்கோலியத் தமிழ்த் தம்பதிகளுக்கு இரு குழந்தைகள், இரண்டுமே ஆண்பிள்ளைகள். எவ்வளவு சௌகரியம், பாருங்கள்! பாலியல் விஷயங்களில் கொஞ்சம் தாராளமாக இருக்கக்கூடும் தேசங்களில் வசிக்கும்போது, பெண்பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட பாவத்தைச் செய்யாமலிருந்தால், அவர்கள் பூப்படையும் பருவத்திற்குச் சற்று முன்னால், திடீரென தாய் நாட்டுப் பற்று மிகுந்து தேசத்திற்குத் திரும்பிவந்து தொண்டாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

-0-0-0-0-0-0-

… நான் சென்ற இடங்களில்லாம் மக்கள் திரள்கள் குழுமியிருந்தனர்; அவர்கள் என்னைப் பார்க்கத்தான் திரண்டிருக்கிறார்கள் எனும் எண்ணமே எனக்குப் புளகாங்கிதம் கொடுத்தது. தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புதான் – ஆனால், அவன் தமிழகத்தை விட்டு வெளியேறினால்தான் சிறப்பு நடக்கும். இல்லாவிட்டால் செருப்புதான்.

மங்கோலியர்க்கரசி அவர்கள் என்னை மற்ற தமிழ்க் குடும்பங்களுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தார். மொத்தம் ஒன்றரை தமிழ்க் குடும்பங்களை இப்படிச் சந்தித்தேன். ஒரு குடும்பம் மங்கோலா தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருந்தவருடையது. மிச்சமிருக்கும் அரை குடும்பம், வழக்கம்போல ‘தகவல் தொழில்நுட்ப’ வேலை செய்கிறேன் என்று பொட்டி தட்டிக் கொண்டிருக்கும் இளம் அரைகுறைக் கணவன்+மனைவியர் வகையறா; ரஜினி படம் மங்கோலியாவில் ரிலீஸ் ஆகும்போது முதல் ஷோ பார்த்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் ரகத்தினர். பெரிதாகச் சொல்வதற்கு, மேலதிகமாக ஒன்றும் இல்லை.

ஆனால், இந்த இரண்டரை குடும்பங்களும் என்னுடைய எல்லா பேருரைகளுக்கும் மறக்காமல் வந்தனர். மங்கோலியர்க்கரசி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பீட்ஸாவை சாப்பிட்டனர். எல்லோருக்கும் திருப்தி/

-0-0-0-0-0-0-0-0-

… அங்கு, பல பேருரைகள் ஆற்றினேன்; அவற்றுள் சிலவற்றைப் பற்றிய விளக்கங்களின் சுருக்கங்களை இங்கு அளிப்பதில் எருமைப் படுகிறேன்:

மங்கோலியா-வைச் சார்ந்த திடுக்கிடவைக்கும், மறைக்க வைக்கப் பட்டுள்ள உண்மைகள்:  (என்னுடைய அட்லஸ் வரைபடத்தில் மங்கோலியாவுக்கும் தமிழகத்துக்கும் ஒரே நிறம் கொடுக்கப் பட்டிருக்கிறது – இது ஒன்றே போதாதா, தமிழகத்தின் அங்கம் தான் மங்கோலியா என்பது?)

தமிழ் உலக சினிமாவில், உலக சினிமாவின் பங்கு: (தமிழ் சினிமா எல்லாம் டவுன்லோட்தான், காப்பிதான்; உலகத் தரப் படங்களைக் கமுக்கமாக உல்டா செய்வதுதான்.)

தஸ்தயாவாசுகி எனும் உருசியட் டமிள் எள்த்தாளர்: (வாசுகி அப்பனார் எழுதிய ‘முட்டாள்’ தான் என்னுடைய ஆதர்சமான நாவல்; அவருடைய கரசேவா சகோதரர்கள் அல்ல!)

மங்கோலியாவின் அடியில் வைக்கப்படும் சீன அணுவுலை பயங்கரம்: (அட்லஸ் வரைபடங்களில் மங்கோலியாவுக்குக் கீழேதான் சீனா இருக்கிறது. ஆகவே, அனைத்து சீன அணுவுலைகளும் மங்கோலியாவுக்குக் கீழேதானே இருக்கின்றன?)

மங்கோலியாவில் ஜென்: ( நான் உலான் – பாடர் சென்றபோது, அங்கு ஒரு மாருதி ஸுசூகி ஜென் காரைப் பார்த்தேன் – அது குறித்த என் ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொண்டேன்)

ஜென்னில் மங்கோலியா: (நான் சென்னை விமான நிலையத்திற்குப் போனபோது மாருதி ஸுசூகி ஜென் காரில் தான் சென்றேன்; அதில் உட்கார்ந்துகொண்டு மங்கோலிய வரைபடத்தைப் பார்த்தபோது என்னில் எழும்பிய சிந்தனைகள்)

பாஷோவும் ஓஷோவும்: (இவர்கள் இருவரும் மாருதி ஸுசூகி ஜென் காரில் சேர்ந்து பயணம் செய்தபோது, சல்லாபம் பற்றிய அவர்களுடைய சிந்தனைகளைப் பற்றிய என் சிந்தனைகள்)

-0-0-0-0-0-0-0-

என்னுடைய கீழ்கண்ட புத்தகங்களை பின்வெளியீட்டுச் சலுகைத் திட்டம் (இதனை நீங்கள் உடற்கூறுவியல் உடலியங்கியல் விஷயங்களுடன் குழப்பிப் கொள்ளக் கூடாது) மூலமாக ஹேர்டை பப்ளிஷன்ஸ் நிறுவனத்தின் (மயிர்மை பதிப்பகம்) நண்பரும், விரோதியுமான ராக்ஷசபுத்ரி அவர்கள் வெளியிட்டார்.

முப்பதே வினாடிகளில் அணுவுலை பாஷை: இதனை நான் பத்து நிமிடத் தளரா உழைப்புக்குப் பின் விக்கிபீடியா பார்த்து எழுதினேன் (பாலாஜி பப்ளிகேஷன்ஸ், திருவல்லிக்கேணி)

ஹை டீ அன்ட் லோ டீ: சப்பானிய அகிரா கரசேவா அவர்களின் படமான ஹை அன்ட் லோ பற்றிய என் விமர்சனம்; வலக்கையால் குவளையைப் பிடித்துக்கொண்டு டீ குடித்துக் கொண்டே – இடக்கையால் தட்டச்சு செய்தேன். (விதண்டாவிகடன் பதிப்பகம்)

ராயல்டீ:  ராயல்டீக்காக அலையும் தமிழ் எழுத்தாளனின் அவல நிலையைக் குறிப்பிடும் நவீனம்; கடைசியில் அவன் ஒரு டீ கடையை ஆரம்பித்து வாழ்க்கையில் செழிப்பதை விளக்கும் உலகத் தர நாவல். (ப்ரூக்பாண்டு பதிப்பகம்)

வினையெழுத்து: தன் வினை தான் எழுத நினைத்ததை சுட்டு எழுதுவது – அதாவது: தன் வினை தன்னைச் சுடும் – என்பதன் தத்துவார்த்தமான விரிப்பு (ஹேர்டை பப்ளிகேஷன்ஸ்)

காப்பியடிக்கப் பிறந்தவன்: டீக்கடை வைத்து பின்னர் காப்பிக் கடை ஆரம்பித்து லக்கியாக உலகப் புகழ் பெற்ற மாமனிதனின் சுயம்பு வரலாறு; நான் எழுதிய சுயமுன்னேற்றப் புத்தகங்களிலேயே எனக்குப் பிடித்தது இதுதான்! (உழக்கு பதிப்பகம்)

வெக்ஸைல் ரிட்டர்ன்ஸ்: நாடுகடந்து போனவொருவன் வெறுத்துப் போய் தாய் நாட்டுக்கே திரும்பிவருவது குறித்த நவீனம். இதன் மூலத்தை நான் மங்கோலிய மொழியில் எழுத, என் நண்பர் கல்யாணராமன் அவர்கள் தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்துக்கும் ஆங்கிலத் தலைப்புதான்! (கரசேவை பதிப்பகம்)

சிவஅகம்: திருவண்ணாமலையில் நடைபெறும் ஞானமார்க்க உரையாடல்களில் அகநானூற்றின் பங்கைக் குறித்த புதினம். அனைத்து வெஜிட்டேரியன் சைவர்களும் படிக்கக் கூடாத புத்தகம். (பல்பழசு பதிப்பகம்)

மங்கோலியன்கள் இருக்கிறார்களா? : அறிவியல் கட்டுரைத் தொகுப்பு. ஏலியன்கள் எனப்படுபவர்கள் மங்கோலியன்கள் தான் என ஆணித்தரமாக, சுத்தியில் அடித்தாற்போல நிறுவும் புத்தகம். (டமிலினி படிப்பகம்)

ஸ்பெக்ட்ரம் மூர்ச்சை: அளவு கடந்த ஒளிக்குவியத்தால் மூளை உருகிய ஒரு ராசா மூர்ச்சித்து, பின் மாயயதார்த்தவாத பல்நிறக் கனவுகளைக் கண்டு, ஒப்பாரும் மிக்காரும் அற்ற கலைஞனுக்கே கலையைக் காட்டும் கலைஞனான கதை (வடக்கு பதிப்பகம்)

ஓஓ: சில குறிப்புகள்: ஓ போடு ஆனால் ஓட்டுப் போடாதே. ஓட்டு போடு ஆனால் 49ஓ போடு. பொதுவாக ஆப்பு வை, எனக்கு ஆப்பு வைக்காதே. ஆனால் ஆப்புக்கு ஆப்படிக்காதே – என்கிற ரீதியில் அறிவுரைகளை இளைஞர்களுக்கு அள்ளித்தரும் திரிகாலம் அறிந்த ஞாநியின் ஓஓ வாழ்க்கைத் தற்குறிப்புகள். (காலக்குரடு பதிப்பகம்)

-0-0-0-0-0-0-

என் பேருரைகள் அனைத்தும் டிவிடி- யாக கிடைக்கின்றன; இதற்கு என் ஆஸ்தான பதிப்பகமான உழக்கு பதிப்பகத்தை அணுகவும்.

திருட்டுப் பகிர்வு / டவுன்லோட் செய்துகொள்ள வேண்டாம்; நான் மட்டும்தான் இதனைச் செய்யவேண்டும். என் அறிவுரைகள் மற்றவர்களுக்கு மட்டுமே!

-0-0-0-0-0-0-0-

… ஒரு வழியாக, இந்தியா வந்து சேர்ந்தேன்.

பார்த்தால், என் ஆசி பெற்ற மோதி, பிரதமராகவே ஆகப் போகிறாராமே? ;-)

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

13 Responses to “மங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள்”

  1. lakshmi narayanan Says:

    hairdye.. மயிர்மை….. முடியல…… ha ha ha

  2. ganeshmurthi Says:

    ஹ ஹ ஹா!

  3. Venkatachalam Says:

    அன்பு நண்பர் ராமசாமிக்கு வணக்கம். ஒருவழியாக சிவ்விஸ்வநாதன் கட்டுரையை மொழி பெயர்த்துவிட்டேன். அதை எப்படி அனுப்புவது எனத் தெரியவில்லை. தெரிவிக்கவும்.

  4. Nandu Says:

    வேணாம் சார் அவர விட்டுருங்க… செம அடி வாங்கியும் வலிக்காத மாதிரியே இருக்கார் பாருங்க… நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார் போல…

  5. சரவணன் Says:

    “மோடியின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக உள்ளது தெரியுமா? 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா?”

    கேட்டிருப்பவர் மது கிஷ்வர். நான் உட்பட அத்தனை இந்தியர்களும் கேட்க நினைத்ததைக் கேட்டிருக்கிறார். என்னத்த மோடி சர்க்காரோ?!

    • A.Seshagiri Says:

      ஐயோ பாவம் சரவணன்,வெயில் வேற ஜாஸ்தியாக இருக்கு,என்ன தான் முட்டி மோதி புலம்பியும் ,மோதி சர்க்கார் மத்தியில் அழுத்தமாக அமைந்து விட்டது.பள்ளி நிழலில் கூட ஒதுங்காத,மிகத் திறமையாக ஆட்சி புரிந்த காமராஜர் பிறந்த மண்ணிலிருந்து இப்படி ஒரு வெட்டி புலம்பல்.

      • சரவணன் Says:

        என்னது, மது கிஷ்வர் அம்மணி காமராஜர் பிறந்த மண்ணில் வசிப்பவரா? தெரியவே தெரியாதே!!

    • Venkatesan Says:

      நண்பர் சேஷகிரி சொல்றது சரிதான். இப்படியே போனா, பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு துப்பாக்கி சுட தெரியுமா, கப்பல் துறை அமைச்சருக்கு கப்பல் ஓட்ட தெரியுமா, தொலை தொடர்புத் துறை அமைச்சருக்கு செல்போன் ரிப்பேர் பண்ணத் தெரியுமா அப்படின்னெல்லாம் கேள்வி வரும். இன்னும் ஒரு படி மேலே (கீழே?) போனா, பிரைம் மினிஸ்டருக்கு பிரைம் நம்பர்ஸ் பத்தி என்ன தெரியும், ஹோம் மினிஸ்டருக்கு வீடு கட்ட தெரியமா அப்பிடின்னும் கேக்கலாம்.

      சரி விடுங்க. இந்த அம்மா 2004 தேர்தல்ல தான் BA படிசிருக்கறதா பொய் சொல்லி இருக்காங்க. இப்போ பன்னென்டாங்கிளாஸ் படிசிருக்கிறதா சொல்றாங்க. நம்ப முடியாது. +12 மார்க் ஷீட் வாங்கிப் பாத்தாதான் நிச்சயமா தெரியும். இந்த டுபாக்கூர் பார்ட்டிய போய் காமராஜரோட கம்பேர் பண்ணிட்டீங்களே!

      கல்வித் தகுதி முக்கியமில்லை. சரி. வேற ஒருத்தர் எந்த நாட்டுல பொறந்தாங்க அப்பிடின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாங்களே. அதை எல்லாம் நீங்க கேள்வி கேக்க மாட்டீங்களா சார்?

  6. krishna kumar Says:

    திரு.ராமசாமி அவர்களுக்கு மனநோய் முற்றிவிட்டது போல் தெரிகிறது,சீக்கிரம் மன நல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

  7. க்ருஷ்ணகுமார் Says:

    @ krishna kumar

    On just clicking othisaivu I was surprised since I did not post any comment in the past couple of days.

    யப்பா ஒரே பேரில் நூறு பேர் இருக்கலாம் தான்.

    ஆனால் whether to call a spade a spade or not

    a prankster shall be called a prankster.


Leave a reply to சரவணன் Cancel reply