கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பாளர்

December 8, 2013

தமிழகத்து மொழிபெயர்ப்பாளர்களில் – அதுவும் பரவலாக வாசிப்பனுபவமும், பிற அனுபவங்களும் – மிக முக்கியமாக, அடிப்படை நேர்மையும் மிக்க படிப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கல்யாண்ராமன் அவர்களை மதிக்கிறேன். அவர்களின் நேர்முகம் சொல்வனம் – கல்யாணராமனுடன் ஒரு காஃபி – ஒரு நல்ல, அமைதியான, பழைய நினைவுகள் பூத்துக் குலுங்கும் நேர்காணல். (இந்தச் சுட்டி,  நண்பர் ஒருவரின் மின்னஞ்சலில் இருந்து கிடைத்தது)

சமீபத்தில் நான் படித்த நேர்காணல்களில் நன்றாக, ஆற்றொழுக்கு போல வந்திருக்கும் ஒன்று இது.

நல்ல காஃபி குடித்துக் கொண்டே உரையாடியதால்தான் இது சாத்தியமாகியிருக்கும் என்பதெண்ணம். உலகின் முதல் காஃபி, திராவிடக் காஃபியல்ல என்பதும் இன்னொரு  முக்கியமான எண்ணம்.

காஃபி நாமமும், நறுமணமும் வாழ்க, வாழ்கவே!

 -0-0-0-0-0-0-0-0-0-

கல்யாண்ராமன் அவர்களை, மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள செயின்ட் மார்க்’ஸ் ரோட்டோர கோஷி’ஸ் உணவகத்தில் நேரில் சந்தித்து (1999-01 வாக்கில்) கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன். பாவம்  அவர். ஆனால் அவருக்கு இது நினைவில் இல்லை என நினைக்கிறேன். நான் பொதுவாக (நாள் / புத்தகம் / திரைப்படம் / இசை / மனிதர்கள் பற்றிய) குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்பவனாதலால் எனக்கு இந்த விஷயம் இன்னமும் நினைவில் இருக்கிறது என் நினைக்கிறேன்.

நான் பொதுவாக எழுத்தாளரைப் போய் பார்ப்பது, பேசுவது என்றெல்லாம் முயலவே மாட்டேன் – அதுவும் தமிழ் இலக்கியக் காரர்களின் அருகே கூடப் போகமாட்டேன்; அவர்களில் பலருடனான என்னுடைய அற்புதமான அனுபவங்கள் அப்படி ஆக்கி விட்டிருந்தன என்னை.

… ஆனால் எங்கள் நிறுவனத்தில் (என்னையும் சேர்ந்து நான்கே பேர்தான் என்னுடன் – அதாவது, அந்த நிறுவனத்தின் முடிவு வரை)  என்கூட வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர் ‘எதற்காவது, எப்போதாவது உதவியாய் இருக்கும் – ஆகவே  இவனை  ‘ஃப்ரென்ட்’ பிடிக்கலாம்’ வகையறா விற்பனைமுதல்வாத ஆள் ( = obsessive compulsive networker and an inveterate marketer at that) ஒரு தடவை, நான்  – ஒரு சிக்கலான மின்பொருள் கோர்ப்புக்கு ( software compilation and build) நடுவில் வெட்டியாக உட்கார்ந்து மின்திரையை சும்மனாச்சிக்கும் வெறித்துக் கொண்டிருக்காமல், அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலை படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பேச ஆரம்பித்தான் – இது என்ன  என்பதிலிருந்து.

ஏனெனில் – அவன் தமிழனாக இருந்தாலும், நம்முடைய பல தமிழர்களைப் போல சுட்டுப் போட்டாலும் தமிழை எழுதவோ படிக்கவோ அறியாதவன், முனைப்பில்லாதவனும் கூட – அசோகமித்திரனையே விடுங்கள் அவன், பரவலாக அறியப் பட்டிருக்கும் நம் சுஜாதாவைக் கூட அறியாதவன்.

… ஆனால் இவன் ஒரு புத்திசாலி ஆள்; எந்தப் பேய்க்கு, பத்ரகாளிக்கு என்ன பலி கொடுத்தால் எப்படிப்பட்ட வரனைப் பெறமுடியும் என்பதை அறிந்தவன். அவன் மரபணுக்களிலேயே ஊறிய விஷயம் இது – கறக்க வேண்டிய அவசியம் இருக்கிறதோ இல்லையோ – ஆடுகிற மாட்டை ஆடிக் கற, ஆடாத மாட்டை ஆவணியில் கற என்கிற தர்க்க ரீதியில் தான் அவன் தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வான். ஓரு கோணத்தில், சுவாரஸ்யமான ஆள் – ஆனால் கிட்டே போனால் எனக்குச் சில சமயம் கஷ்டமாகி விடும். அடிப்படையில் நல்ல மனிதன் தான் – ஆனால், எனக்குத்தான்  சரியாக ஒத்துவரவில்லை என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.

… பின் சொன்னான் – எனக்கு இன்னொரு அசோகமித்திரன் படிப்பவரைத் தெரியும், உனக்கு அறிமுகப் படுத்தட்டுமா என்றான். நீயும் அவரும் ஒரே இணைய மின்னஞ்சல் குழுமத்தில் உறுப்பினர்கள் கூட என்றான். நான் வேண்டாமென்றுதான் சொன்னேன். ஆனால், அவன் ஒரு நெட்வர்க்கர் ஆள் – எப்படியாவது சம்மட்டியடித்துச் சரிசெய்யக் கூடிய ஆள்.எவ்வளவு பேர் இந்த ஐடி உலகத்தில் அசோகமித்திரனைப் படித்திருப்பார்கள்? ஏன் நீ இவருடன் பேசக் கூடாது. You should maximize your happiness. டட்டடா டட்டடா.

சரி, அவர் என்னைவிட வயதில் இளைஞரா பெரியவரா என்று கேட்டேன் – தேவைக்கதிகமாக அரைகுறை இளைஞர்களுடன் வேலை செய்ய வேண்டிவந்து, கொஞ்சம் வெறுத்துக் கொண்டிருந்த காலம் அது; அவர் உன்னைவிடப் பெரியவர்தான், உன் கல்லூரிதான் என்றான். ஆக, யாரடா இது எனக்கு முன்னமே தெரிந்த மூவருக்குப் பின் நான்காவதாக என்று, எங்கிருந்து முளைத்தார் என்று – ஆக, ஐவராகி விடுவோமோ என்று ஒரு கம்பராமாயணத்தனைய நப்பாசையில் சரியென்றேன். ஆனால் அவர் பெயரை என்னிடம் சொல்லவில்லை. ஸஸ்பென்ஸ் என்றான். அவரிடமும் அவன் அப்படியே சொல்லியிருக்கலாம்.

ஆக, அடுத்த சில நாட்களில் – அவரும் ஒரு மாலையில் கோஷி’ஸ் உணவகத்திற்கு வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அறிமுகப் படுத்திக் கொண்டோம். காப்பி குடித்தோம். அந்தக் காப்பி, இந்தியா காஃபி ஹௌஸ் காப்பி போல – காஃபிப் பொடிமேல் வென்னீரைக் கவிழ்த்திக் கொடுக்கும் பானகக் காப்பி – எனக்குச் சுத்தமாக இந்த ஜந்துக்களைப் பிடிக்காது.

எனக்கு, காப்பி (=தென்னிந்திய பால் கலந்த, சர்க்கரை கொஞ்சமாகக் கலந்த நறுமணம் கமழும் திரவம்)  பிடிக்கும். மேற்கத்திய காஃபி (=கிறக்க வைக்கும் சூடான கஷாயம் மட்டும்) இன்னமும் பிடிக்கும்.

ஆக, அந்தக் கந்தறகோளக் காப்பியின் காரணமாகவும் – ஒரு இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசமுடியவில்லை. இரண்டு பக்கமும் ஒரே மௌனம். ஒரு awkwardness. உங்கள் மொழிபெயர்ப்புகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன், நன்றாக வந்திருக்கின்றன என்றேன்.

அசோகமித்திரன் அவர்களின் எழுத்துகளைப் பற்றி மட்டுமே ஆயிரம் விஷயங்கள் பேசியிருக்கலாம்தான்.ஆனால், அன்று எனக்கு அலுவலக ரீதியான இன்னொரு சந்திப்பு வேறு இருந்தது. அக்காலகட்டங்களில், காலையில் இரண்டரை மணியிலிருந்து பதினோரு மணிவரை அசுர உழைப்பு செய்து கொண்டிருந்தேன். தொழில் நுட்ப ஆட்கள் என்னையும் சேர்த்து, என் நிறுவனத்தில் சுமார் 1.25 மட்டுமே; சிடுக்கல்கள் நிறைந்த மென்பொருள் மிக அதிகமாகச் சக்தியை, கற்பனையை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ஆக, அயர்வாக  இருந்தது. விடைபெற்றுக் கொண்டேன்; சந்திப்பு நீடித்த மொத்த நேரம்: சுமார் பத்து நிமிடங்கள். சுபம். அவர் தப்பித்தார்.

பின்னர், இவ்விஷயத்தை மறந்து விட்டேன். பல ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால், அவ்வப்போது கண்ணில் பட்டால் – முடிந்தபோதெல்லாம் இவர் மொழிபெயர்ப்புகளைப் படித்து வந்திருக்கிறேன்.

ஹோற்ஹெ  லுயிஸ் போற்ஹெஸ் அவர்களின் மகத்தான சிறுகதைகளில் ஒன்றான பிரியும் சாலைகளின் தோப்பு – (Garden of the Forking Paths) தான் சட்டென நினைவுக்கு வருகிறது.

-0-0-0-0-0-0-0-

பிரக்ஞை எனக்கு மிகவும் உவப்பான சிறுபத்திரிகைகளில் ஒன்றாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பாளரான பெரியவர் ஒருவர் வீட்டில் (1975 வாக்கில் என நினைவு – நான் ஒரு குட்டிப் பையன்) இம்மாதிரிப் புத்தகங்கள்/ சஞ்சிகைகளெல்லாம் படிக்கக் கிடைக்கும். சந்தோஷமாகப் படித்துக் கொண்டிருப்பேன். சில விஷயங்கள் எனக்குப் புரியாவிட்டால் அவரிடம் கேட்பேன்.  அவர் பொறுமையாகப் பதிலளிப்பார். அவர்தான் எனக்கு, அந்த மகாமகோ கவிஞனான தருமு சிவராம் அவர்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்தார்கூட. அவ்வப்போது சிவப்புப் பிரசங்கமும் நடக்கும். ஆ-வென்று வாயைப் பிளந்துகொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன். கல்யாண்ராமன் அவர்கள் சொல்லியிருக்கும் கட்டுரையையும் படித்திருக்கிறேன். :-)

பல வருடங்கள் கழித்து அந்தப் பெரியவர், மாரடைப்பால் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு அவருடைய புத்தகத் தொகுப்புகளையும், பைண்ட் செய்யப்பட்ட அனைத்துச் சஞ்சிகைகளையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். பொக்கிஷம்.

-0-0-0-0-0-0-0-0-0-

கல்யாண்ராமன் அவர்களின் நேர்காணல் – பல பழைய நினைவுகளைக் கிண்டிவிடுகிறது.

எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவரான என் டி இராஜ்குமார், அறிஞர்களான சூஸன் ஸன்டெக், வால்டர் பெஞ்சமின் மொழிபெயர்ப்பாளர் ஈடித் க்ராஸ்மன் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. :-)

நான் மொழிபெயர்ப்புகளின்மேல், அவற்றின் சமூகப் பங்களிப்புகளின்மேல், மகாமகோ நம்பிக்கை வைத்திருக்கிறேன். இவற்றால், பெரும்பாலும் வறண்ட நம் சிந்தனைவெளியில் பசுமையைக் காணமுடியுமென நினைக்கிறேன். பன்னாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் எல்லாம்  நம் தமிழ் மொழியில் வர மிகமிக விழைகிறேன்.

ஆனால், அதேசமயம்,  நம்முடைய ஆட்களின் பல மொழிபெயர்ப்புகளை, மொழிமாற்றங்களை, மறுசொல்லல்களை (விலை கொடுத்து வாங்கிப்) படித்து விட்டு கடும்பீதியும் மனவுளைச்சலும் அடைந்திருப்பதும் உண்மை. பின்னதற்கான, எனக்கே  தெரிந்த, ஆக  பலருக்கும் தெரிந்திருக்கக் கூடிய ஒரு எடுத்துக்காட்டு: ஆலிசின் அற்புத உலகம்

மொழிபெயர்ப்பு என்பதை அமெச்சூர்கள் செய்யக் கூடாது. அப்படியே செய்தாலும் கல்யாண்ராமன் அவர்கள் சொல்வது போல, “மொழிபெயர்ப்பின் செய்முறை பல தொழில்முறை நுட்பங்களால் நிறைந்தது. இவற்றை எந்தப் பாடப் புத்தகத்திலும் கண்டறிய முடியாது. செய்துதான் கற்கவேண்டும். Practice makes perfect என்பார்கள். மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, தொடர்ந்து பணியாற்றினால் செயல்திறன் முழுமையடையாவிட்டாலும் தரத்தில் கணிசமான முன்னேற்றம் காணமுடியும்” என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கடும் முயற்சி செய்து, முட்டிமோதி மீண்டெழுந்து, மறுபடியும் மறுபடியும் செப்பனிட்டு, மிகப் பின்னரே, ஓரளவு திடத்திற்கு வந்தபின்னர் மட்டுமே – மொழிபெயர்ப்புகளை –  பொதுவில், சபைக்குக் கொண்டுவரவேண்டும்.

பொதுவாக,  ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்’ முறை ஒத்துவராது.

இவர் அண்மையில் சி சு செல்லப்பா அவர்களின்  நாவலான வாடிவாசல்-ஐ மொழி பெயர்த்திருக்கிறார். அவசியம் படிக்கவேண்டும். (அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாவது)

கல்யாண்ராமன் அவர்களைப் போன்றவர்கள், தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு, மெல்லத் தமிழ் இனிச் சாகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பது என் நம்பிக்கை.

நேர்காணலைக் கண்டு, பதிவு செய்த ‘ஸ்ரீதர் நாராயணன்’ அவர்களுக்கு நன்றி. கொஞ்சம் பத்து நிமிடம் போல பழைய நினைவுகளின் மினுங்கல் ஓடையில் மிதக்க வைத்து விட்டார். இயல்பான தமிழ் நடை. இவர் வேறென்ன எழுதியிருக்கிறார் என்று தேடவேண்டும். பார்க்கலாம்.

இதனைப் பின் தொடர்ந்து இன்னொரு நேர்காணல் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதாவது, கல்யாண்ராமன் அவர்களின் – மொழிபெயர்ப்பு குறித்த அரசியல் எண்ணங்கள், மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள், உலகத்தின் மகத்தான மொழிபெயர்ப்பாளர்களான லிடியா டேவிஸ் போன்றவர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தல், தமிழகத்தை-அதன் அரசியலை, வரலாற்றைக் குறித்த முக்கியமான ஆங்கிலப் புத்தகங்களை தமிழுக்குக் கொண்டுவரவேண்டிய, உடனடி அரசியல் தேவைகள் — போன்றவற்றை நோக்கி அது இருக்கலாமோ?

2 Responses to “கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பாளர்”

  1. Ravishankar's avatar Ravishankar Says:

    ’மொழிபெயர்ப்பு என்பதை அமெச்சூர்கள் செய்யக் கூடாது. அப்படியே செய்தாலும் கல்யாண்குமார் அவர்கள் சொல்வது போல, ’ என்று துவங்கும் பத்தியில் கல்யாணராமன் என்று மாற்றினால் நல்லது. இத்தனை எழுதி ஒரு சிறு பிழையால் ஏன் உறுத்தல் வர வேண்டும், அதற்காகச் சொன்னேன்.

    உங்களின் இந்தப் பதிவையும் நண்பரொருவர் சுட்டி கொடுத்ததால் தெரிந்து கொண்டேன். நன்றி.
    ரவிசங்கர்
    பதிப்புக் குழு உறுப்பினர்::
    அன்று பிரக்ஞையில்,
    இன்று சொல்வனத்தில்)

    —>>> மதிப்புக்குரிய ரவிஷங்கர் அவர்களே, பிழையைத் திருத்திவிட்டேன். மிக்க நன்றி. பிரக்ஞை இன்னமும் பிரக்ஞையில் இருக்கிறது. சொல்வனத்திலும் இருக்கவேண்டும் அல்லவா? ஆகவே, இனிமேல் சொல்வனத்தையும், சொல்வனைத்தையும் படிக்கிறேன்.:-) (__ரா)


  2. இந்த நேர்காணல் உங்களைப் போன்ற கலை இலக்கிய பண்பாட்டு சூழலில் தீவிர செயல்பாட்டில் இருப்போரின் கவனத்தை ஈர்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

    அவருடனான சந்திப்பை நேர்காணலாக செய்யவேண்டும் என்ற என் விழைவை சரியானபடிக்கு வழிநடத்தி, தன்னுடைய கருத்துகளை அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்ததற்கான முழு கிரெடிட்டும் கல்யாணராமனையேச் சேரும்.

    ->>>>>>> //உங்களைப் போன்ற கலை இலக்கிய பண்பாட்டு சூழலில் தீவிர செயல்பாட்டில் இருப்போரின்…

    ஆ! அய்யய்யோ!! அபாண்டம்!!! ஆனால்… ராமசாமி வாசகர் ஐஸோஸெஹாஹெட்ரன் ஆரம்பிக்க வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறதோ! ;-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *