ப்ரூஸ் ஷ்னெய்ர்: அதிகாரமும், இன்டர்னெட்டும்
February 12, 2013
ப்ரூஸ் ஷ்னெய்ர் (Bruce Schneier) உ;லகளாவிய அளவில் மதிக்கப் பெறும் இணையம் / தொலைத்தொடர்புசார் பாதுகாப்பியல் வல்லுனர்களில் ஒருவர் – அதிதொழில் நுட்பம் சார்ந்த கருத்துக்களானாலும் சரி சாதாரண இன்டர்னெட்டின் உபயோகிப்பாளர் கண்ணோட்டமானாலும் சரி, இணையத்தின் அரசியலானாலும் சரி – அனைவருக்கும் புரியும்படி, தெளிவாகவும், சரியாகவும், உணர்ச்சிக்குவியலில்லாமலும், எதை எடுத்தாலும் ’அமெரிக்க கார்ப்பொரேட் சதி’ என்றில்லாமலும் எழுதக் கூடியவர்.
இவருடைய ’க்ரிப்டோக்ராம்’ எனும் மாதாந்திர மின்னஞ்சல் செய்தித்தொகுப்பு 1998ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது, அதற்கு முன் அவர் பங்கேற்ற சில மடற்குழுக்களில் (மெய்லிங் லிஸ்ட்ஸ்) தொழில் நுட்ப அரட்டைகள் வேறு! சுமார் ஐந்து வருடங்கள் முன்பு வரை நான் இவரைத் தொடர்ந்து படித்துவந்திருக்கிறேன், சிலசமயம் இவர் கருத்துக்களைக் காராசாரமாக விவாதித்திருக்கிறேன். மேலும், நான் ஒருகாலத்தில் செய்துவந்த தொழிலுக்கு, இம்மாதிரி திறமையாளரிகளின் பரிந்துரைகளும், அபிப்ராயங்களும், கருத்தாக்கங்களும் மிக முக்கியமானவை, கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவேண்டியவை – விடிகாலை நேரப் பொன்னிறக் காப்பி போன்றவை.
…ஆக, பலவருடங்களுக்குப் பின்னர், சமீபத்தில் அவர் தளத்திற்குப் போய்ப் படித்தபோது, அவருடைய எழுத்துக்கள் தொடர்ந்து கூர்மையாகவும், தெளிவாகவும் (அரைத்த மாவையே அரைக்காமலும்) இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இவர் அண்மையில் எழுதியுள்ள ’அதிகாரமும் இன்டர்னெட்டும்’ கட்டுரை இன்டர்னெட்டின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ள அனைவரும் படிக்கவேண்டியது – இதிலிருந்து சில பகுதிகளை சிறிது மொழிமாற்றி, இடம் சுட்டிக் கொடுத்திருக்கிறேன். (இவை மொழிபெயர்ப்பு அல்ல)
இப்படி ஆரம்பிக்கிறார் ப்ரூஸ்:
அனைத்து சமன் தகர்க்கும், உடைக்கும் தொழில் நுட்பங்களைப் போலவே, இன்டெர்னெட்டும் மரபுசார் சமூக அதிகாரப் பங்கீடுகளை, அதன் சமனத்தைக் குலைக்கிறது. ஆக நாம் பொதுவாகக் கேள்விப்படும் அபிப்ராயம்: ’அதிகாரமற்றவர்களுக்கு, இன்டெர்னெட் அதிகாரமளிக்கிறது.’
ஆனால் – இது ஒரு தரப்புக் கதை மட்டுமே. ஏனெனில் இன்டெர்னெட் அனைவருக்கும் அதிகாரம் கொடுக்கிறது – அதிகாரமற்றவர்களிக்கும் சரி, சக்திவாய்ந்த நிறுவனங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் சரி. இன்டெர்னெட் அனைவருக்கும் அதிகாரம் கொடுக்கிறது
இந்தக் கட்டமைப்புக்கள் இந்தப் புதிய அதிகாரத்தை உபயோகப் படுத்திவதில், ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தத்தன்மை இருக்கலாம், ஆனால், அவை அடிப்படையில் சக்திவாய்ந்தவையாதலால், அவற்றால் இந்த அதிகாரத்தைத் திறம்பட உபயோகிக்கமுடியும்.
ஆக – அரசுகளும், கார்ப்பொரேஷன்களும் – இன்டெர்னெட்டை உபயோகிப்பது மட்டுமில்லாமல், அதனை தங்கள் வசதிக்காகக் கட்டுப்படுத்தவும் முடியுமென்று இப்பொது புரிந்துகொண்டுவிட்டன.
நாம் இப்போது உரையாட, விவாதிக்க ஆரம்பிக்க வேண்டும் – எப்படிப்பட்ட எதிர்காலத்தில் நாம் வாழ வேண்டும் என்று, எப்படி அவ்வுலகத்தை, தகவல் தொழில் நுட்பங்களால் கட்டமைக்க வேண்டும் என்று. இல்லாவிடில் நாம் பெறக்கூடிய எதிர்கால இன்டெர்னெட், சமூகம் முழுவதற்கும் பயனளிக்காமல், சக்தி வாய்ந்த கட்டமைப்புகளுக்கே பயனளிக்கும்.
ப்ரூஸ் ஷ்னெய்ர், இக்கட்டுரையில், பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார்:
இன்டெர்னெட்டின் எதிர்காலம் பற்றிய வாதப்-பிரதிவாதங்கள், அறரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மிகவும் சிக்கலானவை. இவற்றில் நாம் உரையாட வேண்டிய சிந்தனைகள், கேட்க வேண்டிய கேள்விகள், பெற வேண்டிய பதில்கள் மிக முக்கியமானவை.
எப்படி நாம் நமது சொந்த விவகாரங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை, நமது ‘ப்ரைவஸி’யை, — காப்புரிமை மீறல்களுக்கெதிரான, குழந்தை போர்னோக்ராஃபிக்கெதிரான அரசின் நடவடிக்கைகளோடு சமனம் செய்து கொள்வது?
கண்ணுக்குத் தெரியாத கணினி வழிமுறை நியமங்களால் (அல்காரித்ம்ஸ்) நாம் மதிப்பிடப்பட்டு தேடுதல் சார் முடிவுகளை (செர்ச் ரிஸல்ட்ஸ்) பெற்றுக் கொள்வதை நாம் ஒப்புக் கொள்ள முடியுமா?
இதேபோல், இம்மாதிரி நியமங்களால் அளிக்கப் பட்ட செய்திகளை பெற்றுக் கொள்ளும்போது? விமான நிலைய பாதுகாப்பாளர்களால் பாதுகாப்பிற்காக, கூடுதல் வடிகட்டல்களுக்காக இந்த நியமங்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கும்போது?
நம்மைப் பற்றிய விவரங்களை நாம் சரிசெய்வதற்கு, நமக்கு உரிமை உண்டா? அவற்றை நம்மால் நீக்க, முழுவதுமாக அகற்ற முடியுமா?
நான் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு, சில வருடங்களுக்குப் பின், விவரங்களை மறக்கக் கூடிய கணினிகள் நமக்குத் தேவையா?
இம்மாதிரி சிக்கலான விவகாரங்கள் நம்மால் அலசப்பட வேண்டும் – பொருளார்ந்த உரையாடல்களினால். சர்வதேச கூட்டுமுயற்சிகளினால், திரும்பத் திரும்பப் பலதளங்களில் உரையாடி, மேன்மேலும் வாதங்களை இட்டுச் செல்வதன் மூலம்…
… யாருக்காவது நம்பிக்கை இருக்கிறதா – நம்மால் இம்மாதிரி செயல்படமுடியுமென்று?
முடிவில் ப்ரூஸ் ஷ்னெய்ர் சொல்கிறார்:
பிரச்சினை என்னவென்றால், நம்மால் இப்படிச் செயல்படமுடியாது.
நம்மால் எப்படி இந்த எதிர்கால இன்டெர்னெட்டை – அதன் பாதக அம்சங்களைவிட சாதக அம்சங்கள் அதிகமாக இருப்பதுபோல் – உருவமைப்பது வடிவமைப்பது, என புரிந்துகொள்ள முயற்சிக்க முடியவில்லையானால், சர்வவல்லமை படைத்த அந்த அதிகார அமைப்புகள் வடிவமைக்கும் காரியத்தைச் செய்யும்.
இன்டெர்னெட்டின் உருவரைத் திட்ட அமைப்பானது (டிஸைன்) ஏதோ இயற்கையான பௌதீக விதிகளின் பாற்பட்டதன்று. அதன் வரலாறானது அழகான தற்செயல் நிகழ்வுகளின் ஒரு கோர்வையே. தொடக்கத்தில் வணிகரீதியான ஆர்வலர்கள் இல்லாமை, அரசாங்கத்தின் தீதிலி அசட்டை மனப்பான்மை (பினைன் நெக்லெக்ட், அவ்வளவே அய்யா!), ராணுவத்தினரின் தேவைகளான தொடர்ந்து நீடித்திருத்தல் (ஸர்வைவபிலிடி), அதைப்புச் சக்தி (ரெஸிலியென்ஸ்), கணினிப் பொறியியலாளர்களின் இயல்பான உந்துதல்களினால் கட்டமைக்கப் பட்ட, எளிமையாகவும், சுளுவாகவும் வேலை செய்யும் திறந்தநிலை கணினித் தொகுதிகள் (ஓபன் ஸிஸ்டெம்ஸ்) – போன்ற பல்வேறு காரணிகள் தான் நாம் இன்றறிந்த இன்டெர்னெட்டிற்கு அடிப்படைகள்.
ஆனால், அக்கால / அச்சமய உந்துசக்திகளின் அதே குழுமத்தை வைத்துக் கொண்டு எதிர்கால இன்டெர்னெட்டை உருவாக்க முடியாது.
அதே சமயம், பல்வேறு உலக நாடுகளின் சட்டசபைகளிலும், நாடாளுமன்றங்களிலும், பன்னாட்டுக் கட்டமைப்புகளிலும் (உலக தொலைத்தொடர்புக் குழுமம் – ITU, உலக வணிக நிறுவனம் – WTO), இன்டெர்னெட் நிமயங்களைக் கட்டமைக்கும் நிறுவனங்களிலும் (IETF போன்றவை) – இன்டெர்னெட்டின் எதிர்காலத்தைப் பற்றி சூடான விவாதங்கள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நான் எப்படி உருவாக்குகிறோமோ அப்படித்தான் இன்டெர்னெட் உருவெடுக்கிறது. வணிக நிறுவனங்களாலும் [கூக்ள், ஃபேஸ்புக்…], குறிப்பிட்ட தந்திரோபாயங்களும் குறிக்கோள்களும் கொண்ட நாடுகளினாலும் [சீனா, வட கொரியா. சௌதி அரேபியா…] அது சதா மறுஉருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது வேறு.
ஆக, நாம் நம் குரலை எழுப்பாவிட்டால், நம் பக்க நியாயத்தை வாதிடாவிட்டால் – இன்டெர்னெட்டின் எதிர்காலம் என்பது நாம் விரும்பும்படி இல்லாமல், மற்றைய சக்திவாய்ந்த கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்டு நமக்கு அளிக்கப் படும்.
”Either we fight for a seat at the table, or the future of the Internet becomes something that is done to us.”
ப்ரூஸ் ஷ்னெய்ர் அவர்களின், நம்மில் ஒவ்வொருவரும் படித்துச் சிந்திக்கவேண்டிய முழு கட்டுரை.
August 12, 2014 at 18:33
I hope you write more articles on Computer science..It will be very useful for Software engineers like me.