நானும் துரந்தர் 1 & 2 படங்களை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன் – அதாவது, காதும்காதும் வைத்தாற்போல இரவு 10 மணிக்குமேல் ஒருமாதிரி திருட்டுத்தனமாகக் கிளம்பி, பின்னர் தூக்கக் கலக்கத்துடன் அதிகாலை  2-3 மணிக்குத் திரும்பவருகயென…

…எது எப்படியோ… அப்படங்கள் குறித்த என் கழுதைத் தனமான கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும் – நம் பொதுவெளி அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், யூடூப்பர் பெருந்தகைகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்….

துரந்தர் என்றால் என்ன?

கோலாஹல ஸ்ரீநிவாஸ்

“அனைவரும் இதை வடமொழி-ஹிந்திச் சொல்லாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் உண்மையென்னவென்றால், இந்தப் படத்தின் ஹீரோ, ஆஃப்கனிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட துரந்த் லைன் Durand line எனப்படும் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் சென்று (இந்த உள்ளே என்பதை ஹிந்தியில் ‘அந்தர்’ எனச் சொல்வார்கள்)  தாக்குகிறான்.

ஆகவே இவன் துரந்த் + அந்தர் = துரந்தர்.

நான் சிறுவயதிலேயே என்னுடைய  அஞ்சாங்க்ளாஸ் அட்லஸ்ஸில் இந்தச் சிவப்புக் கோட்டைப் பார்த்திருக்கிறேன்!”

சீமான்

“படத்தின் தமிழினப் போராளி தன்னுடைய எல்லாவற்றையும் துறந்துவிட்டு இனப்போர்த் தியாகியாக உருமாறி இனமானத்தைக் காக்க அன்னியதேசத்துக்குச் சென்று, நம் தேசியத் தலைவரைப் போல பகையை வென்று வெற்றிவாகை சூட்டிக் கொள்கிறான்!

…அவன் திறைமைசாலி. தோள்வலி மிக்கவன்! தோல்வியே காணாதவன்… அவன் தன் குறிக்கோளைத் தவிர அனைத்தையும் துறந்தவன். ஆகவே அவன் துறந்தர். ஹஹ்ஹா!!!!”

டெல்லி ராஜகோபாலன்

“டெல்லியிலிருந்து இந்த ஸ்கூப்! ஒத்திசைவுடீவி சேன்னல் ஓனர் ராமசாமிக்கும், அவருடைய ஏழரைத்தன ரசிகர்களுக்கும் மட்டும், இதை பிரத்தியேகமாக, இந்த ஏப்பிரல் 1 தேதியன்று சொல்வதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ, இந்தியாவின் ரகசிய உளவாளி என்பதுதான் பெரிதும் வெளிவராத ஸ்கூப் தகவல்!

இன்னொரு பயங்கர ஸ்கூப் என்னவென்றால் அமித்ஷா, தமிழகத் தேர்தலுக்கு முன் தமிழகம் விஜயம் செய்யவிருக்கிறார். அவர் தங்கும் ஹோட்டல் சென்னை லீமெரிடியன் எனச் சொல்கிறார்கள். ரூம் எண் 007.”

மூத்த பத்திரிகையாளர் மணி

“தூர தேசத்துக்குச் சென்று, அந்த எதிரிதேசத்தின் தொங்குசதையாக இருந்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொண்டு, வெற்றிபெறுகிறான் இதன் ஹீரோ என நினைக்கிறேன். ஆகவே தூர + தந்திரர் = துரந்திரர் எனவாக இருப்பதுதான் தமிழிலக்கணம் வழியாகச் சரி என்பதை தொல்காப்பியர் ஒப்புக்கொள்வார்.

ஸ்டாலின் ஆட்சி மட்டமாக ஆட்சி. ஆனா எக்காரணம் கொண்டும் பாஜக உள்ள வந்துடக் கூடாது. ஸ்டாலின் ஊழல். ஆனா ஹிந்துத்துவாவோட அடிமை அதிமுக அதுக்கு ஒரு மாற்று இல்லை. திமுக கொத்தடிமைங்க ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. ஆனால் நான் அப்படியில்ல – எனக்கு சமூக நீதி முக்கியம். ஆகவே விஜய் கட்சியும் வராம இருக்கணும்னா, திமுகதான் திரும்ப வரணும்…”

ரவீந்திரன் துரைசாமி

“அங்கிட்டு இந்த ஒற்றன் போறான். நாம் மோதிக்கு முன்னமே அறிவுரை சொன்னதுபோல, பாகிஸ்தானில் 24% பலூச்சி ஜாதியினர் கீ ஃபேக்டர் ஆய்ட்டு – அவ்ங்க ஒப்புதல் இல்லாம ஒண்ணுமே அங்கே நடக்காது.

…அதே சமயம் அவங்களோட ஒற்றுமையாக, சப்போர்ட்டாக இருக்கிற இன்னொரு ஜாதி தான் இந்த துரந்தவங்க – இவங்களுக்கு நேப்பாள்ல 3% ஓட்டு கேரண்டி. கூட்டணிலே இருந்தாலும் தூர தேசத்துக்காரனுங்கன்னு ஒரு ஃபேக்டர். இவங்கதான் ஆஃப்கனிஸ்தான்ல பக்தூன் ஜாதியோட இன்னொரு மறைமுகக் கூட்டணி வெச்சி செக்கோஸ்லாவியாவுக்கு செக் வெக்கறாங்க. அதனாலதான் துரந்தர் பேரு வந்திட்டு.”

ரங்கராஜ் பாண்டே

“முறையாக இதைப் பற்றி அறியாமல் கருத்து சொல்லமுடியாது. நான் பிஹார்லேர்ந்து வந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த ஸமஸ்க்ருதத்தின் படி சொல்லவேண்டாம் என்றாலும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்திச் சொல்லவேண்டும் என்பதால், பெரும்பாலோர் 11% கருத்துப் படி, இது தூர + இந்திரர் என்பதன் மாடிஃபிகேஷனாக ஒரு ரெட்டாரிக்கா இருக்கலாம். அதுல ஒரு பிரச்சினையுமில்ல…

ஆனா தேர்தலுக்குப் பின்புதான் அதன் முடிவுகள் எப்படி அமையும் எனச் சொல்லமுடியும். எல்லாம் சுமுகமாக முடியும்.”

பாரிசாலன்

“இந்த படத்தோட ஹீரோ ரண்வீர்சிங் இல்லுமினேட்டி வடவ சதிகாரன். தமிழ்த் துரோகி, ஏகாதிபத்தியன். அவன் தன்னோட சொந்த வரலாற்றைத்தான் கதை போல எடுத்திருக்கிறான். நாமதான் அவனத் தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கோம்…

ஒரு தமிழின உணர்வாளனாக, ஆகவே உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் ஆராய்ச்சியாளனாக உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த துரந்தர் என்பதே தமிழ் வார்த்தைதான்.   துரோகி என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்து துர வந்தது; அந்த என்பது தமிழ் அந்த தான்;  +  ர் என்பது மரியாதைக்குரிய ஒட்டு – அதுவும் தனக்குத்தானே அவன் சுயமரியாதை கொடுத்துக் கொண்டதுதான்… துர + அந்த + ர். இதெல்லாம் புரியாம பேசிட்டிருக்கோம்!”

ஜெயமோகன்

“அப்படத்தின் டைரக்டர் ஆதித்ய தர் அதன் திரைக்கதை வசனத்துக்காக என்னைத் தான் முதலில் அணுகினார். கொஞ்சம்  சுயவிலக்கத் தயக்கத்துடன் தான் அதற்கே ஒப்புக்கொண்டேன் – ஏனெனில் தீவிரவாதக் கருத்துகளை நான் உள்வாங்குவதைவிட வெளிவிற்பதுதான் சாலச் சிறந்தது எனும் என்னுளப்பாங்கை நான் என் சிறுவயதிலேயே உள்ளமர்த்திக் கொண்டுவிட்டேன்.

…மேலும், உள்நோக்கிய நுணுக்கமான ஆன்மிகத் தேடலில் துரிய நிலையை துரிதமாக அறியவோ அடையவோ முடியாது.  அந்தப் படக்கதையில் கதாநாயகன் சுயதேடலில் ஈடுபட அதன்வழியாக வன்முறையக் கண்டுகொள்வதைத்தான் துரந்தர் எனும் ஒரு பெரும்வரலாற்றுப் படிம உருவகமாக, ஒரு கோட்டோவியமாகக் காண்பிக்க முயன்றேன் – அவரிடம் வாதம் செய்தேன்.  ஆனால், என் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுத்துவிட்டார்கள்.”

பிடிஆர் பழநிவேல்ராஜன் / ஆ இராசா

“இந்தப் படத்தில் வரும் துரந்தர் நானில்லை. ஏதோ ஏஐ ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் வைத்து மார்ஃப் செய்து விஎஃபெக்ஸ் பண்ணி என் குரல்நடையுடை பாவனைகளைச் சேர்த்துக் கோர்த்துவிட்டார்கள்.

நான் மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன். லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.”

 (சரி. அண்ணாமலையும் பத்ரிசேஷாத்ரியும் இதில் விதிவிலக்குகள் – அவர்கள் தொழில்முறை யூடூப்பர்களோ கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பாளர்களோ அல்லர், நல்லவேளை!)

அண்ணாமலை

“நான் அந்தப் படத்த பாக்கலீங்கண்ணா. பாத்துட்டு கருத்து சொல்றேன். ஹிந்தியும் ஓரளவுதான் தெரியும்.  நீங்க எவ்வளவு முறை, எந்த மாதிரி மாத்திமாத்திக் கேட்டாலும் இதுதான் என் பதில். தெரியாத விஷயத்த தெரியறமாரீ காட்டிக்கறது ஊழலில் திளைக்கும் திராவிடர் குணம். ஆனா அந்தச் சண்டையை இப்ப போடவேண்டாம், அததுக்கு நேரம் சமயம் வரரும்.

ஆகவே அண்ணாதிராவிட ஆட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.”

பத்ரி சேஷாத்ரி

“ஸ்ஸ்ஸ்… அப்பாடா… இந்தக் கட்டுரையை அப்படியே படித்துவிடுகிறேன். அதையே இந்தக் கேள்விக்கான என் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்..

நான் பத்ரிசேஷாத்ரி, இது கிழக்கு நியூஸ்!”