வெந்தயக் குழம்பும் பெண் சுதந்திரமும் (விருந்தினர் காட்டுரை: சாருநிவேதிதா)
October 9, 2025
இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன.
வெந்தயக் குழம்பும் பெண் சுதந்திரமும்
அந்த காலை ஒரு மாதிரியாக அதேமாதிரி சாதாரணமாகவே இருந்தது. காயும் தாடியுடன் கூடிய பொசுக்கும் வெயிலில், தட்டில் மிதப்பது போல நடந்தேன். அடுக்குமாடி வீட்டு சமையல்கட்டு சாக்கடைகளின் மொத்த வாடைக் கலவைகளுடன் சேர்ந்து என் வீட்டில் இருக்கும் சின்ன வெந்தயச் செடியின் கசப்பு வாசனையும் வரலாற்று நாயகிகளின் கர்ப்பமேவிய நிழலாக, தமிழ் சினிமா நடிகைகள் போட்டுக்கொள்ளும் பெர்ஃப்யூம்களின் சாயலாக இருந்தது.
என் செல்ல நாய் ஸொற்றோ வேறு, ஈளையும் இழுப்புமாக இருந்தாலும் கலகக்குரலில் ஊளையிட்டுக் கொண்டிருந்தது… உள்ளே ஆன்மாவுக்கும் ஆஃப்மாவுக்கும் நடந்துகொண்டிருக்கும் மௌனப் போராட்டம், வெளியே வேறு எப்படித்தான் பிரதிநிதித்துவம் பெறும்?
வீட்டில் அவந்திகா கெட்டியாக வெந்தயக் குழம்பு செய்து போட்டாள். என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் என் அம்மா என்னை அன்புடன் மிகச் செல்லமாக பாலபட்டரை என அழைப்பாள்…
“இது ஒண்ணும் சும்மா ஒரு வெந்தயக் குழம்பு இல்லடா! Feminist Assertion-ம், Resistance-ம் அதுல இருக்கு” என்று அவந்திகா சொன்னாள்.
முதலில் புரியவில்லை. ஆனால் எனக்குள் ஒரு பின்-நவீனத்துவ ஃபூக்கோ சார்ட்டரை அது கட்டுடைத்து, பிரதி தன்னைத்தானே ஆட்டோ-ஃபிக்ஷன் முறையில் வெளிப்படுத்திக் கொள்கிற மாதிரி இருந்தது.
அடுத்த முறை ராப்பிச்சை எடுத்து மெடிட்டரேனியன் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்யும்போது, இதைக்குறித்து அல்ழியே நகரத்தில் ஸார்த்தரைப் பார்த்து அறிவுரை சொல்லவேண்டும்; பிரச்சினை என்னவென்றால், எனக்கு இன்றுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று என் வாசகர்கள் உருகுகிறார்கள் – ஆனால், உண்மையில் என் பல்மருத்துவர் என் பற்கள் அனைத்தையும் பிடுங்கி ஏற்கனவே நோபல் பரிசு கொடுத்துவிட்டார் – இதற்கும் நான் க்ரௌட்ஸோர்ஸ் பண்ணித்தான் செலவு செய்ய முடிந்தது… இவ்வளவுதான், ஒரு உலகப்புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளனுக்கு தமிழ் வாசகர்கள் கொடுக்கும் மரியாதை!
இதே நான் கஸக்ஸ்தானில் பிறந்திருந்தால், அந்த நாட்டின் அனைத்து மக்களும் என்னைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை, எவர் எள்ளினாலும் சரி – அதே சமயம், கஸக்ஸ்தானில் பலர் வழுக்கைத் தலையர்களாக இருந்து என் கதிமோட்சம் அங்கே போர்க்காலரீதியில் நடக்கலாம் என்கிற சாத்தியக் கூறும் இருக்கிறது என்று எனக்கு பயமிருந்தாலும் அவந்திகா கேட்டாள்:
“இது வெந்தயக் குழம்பா, இல்லை அகத்தியர் எழுதி இப்போது தொலைந்தே போய்விட்ட புதிர்க்குறள்நுணுக்கமா?
அவள் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க – என் மனதில் தொடர்புள்ள இன்னொரு விஷயத்துக்காக அச்சம் தோன்றிக் கிளைபரப்பி விழுதுகளும் விழலுக்கு இறைத்த நீர்போல சிதறிக் கொண்டிருந்தன. மொட்டைமாடியில் பத்தாம் வகுப்பு பாடத்தை நெட்டுரு போட்டுக்கொண்டிருக்கிற பையன் “சுதந்திரம்” பற்றி பேசினான், நானும் அப்படிப் பேசலாமா? நெட்டுரு என்றாலே ஏதோ இணையதளத்தில் எதைப் பற்றியோ எவனோ எழுதிவைத்திருக்கும் ஒருமாதிரி உருவகம்-படிமம் தானே?
அதே சமயம், குக்கரில் சீறிய குரல் கேட்கிறது; உள்ளே இருந்தது கோயம்பேடில் நான் வாங்கிவந்த பீன்ஸ் – ஆனால் அது வெறும் பீன்ஸ் அல்ல; அது சமூக ஒடுக்குமுறையின் சின்னமான காஷ்மீரி அடக்குமுறை மெட்டில் கறியாய் வெந்து கொண்டிருக்கிறது. இதே மெட்டில் இஸ்ரேலை எதிர்த்து இஸ்லாமியர்களும் காலைவேலைகளில் மசூதிகளில் இருந்து ஊக்கபோனஸ்ஸாகக் கூவலாம்.
இப்போது எனக்கு ஒரு Flashback.
கூட்டுறவு ரேஷன் கடையில் ஒரு முப்பத்தேழாயிரம் வார்த்தையால் கலந்து கட்டி ஒப்பாரி பாடி ஆடிய பாட்டி ஒருத்தி, “சேலையில் நாம்ப ஜாலியா இருக்கணும், மனசுல Revolutionம் இருக்கணும், முதலமைச்சர் ஸ்டாலிலுக்கு நன்றி, நரேந்திரமோடி ஒழிக!” என்றாள்.
அவள் பெயர் சுப்புலட்சுமி. ஆனால் நாமெல்லாம் Subverting the Lakshmi Archetype!
என் பசுமை நினைவுகளில், கிச்சன் மேடையில் சாய்ந்து நின்ற என் அம்மா, மெல்ல மிளகுத் தூளைக் கரைத்து, “வீட்டு வேலை செய்யறது அடிமைத்தனம் இல்லடா பாலபட்டரை… அது நம்ம choice!” என்றாள்.
அந்த “choice” என்னுடைய மூளையில் ஒரு பாபா ராம்தேவ் doing yoga with Karl Marx – மாதிரி தோன்றியது. ஒரு feminist ஏன் மசாலா அரைக்கக்கூடாது?
இப்படி என் தலைக்குள் நவீனத்துவமும் நாகரிகமும் குழம்பு போட்டுத் தாளித்துக் கொண்டிருந்தபோது, என் WhatsAppல் ஒரு forward வந்தது:
“வெந்தயம் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.”
— மாணிக்க வாசகர்
இப்போதுதான் புரிந்தது: வெந்தயக் குழம்பு ஒரு தத்துவம். நம் பதினெண் சித்தர்களின் கொடை.
அது மட்டுமல்ல – எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு slow-cooked resistance.
அது – சமையலில் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் வக்கிரங்களால் மூடி மறைக்கப்பட்ட அன்டர்கிரவுண்ட் அறிவுப் போராட்டம். ஆனால் அது எப்படி இருந்தாலும் செக்யூலரிசமும், சமவெளியும், பின் நவீனத்துவமும் கலந்த பருப்பு ரசத்தோடு போட்டிபோட்டால் அது விழுந்துவிடும் என நினைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இந்தக் கட்டுரை ஒரு சிந்தனை அல்ல. இது நெய்யில் விழுந்த ஒரு வெந்தயத்தைப் போல் ஒரு அனுபவம். இதற்கு முடிவு எழுத முடியாது — ஏனென்றால் உணவு போல, சுதந்திரமும் உண்ணப்படும் போது மட்டுமே உணரப்பட முடியும்.
அதற்குள், பக்கத்து வீட்டு மூதாட்டி வாசலில் நின்று சொல்லுகிறாள்: “இஞ்சி-பூண்டு பேஸ்ட் இல்லாம வெந்தயக் குழம்பா? இன்னைக்கி பொண்ணுங்க எல்லாம் அவ்வளவு லிபரல், ஆனா இன்னமும் ப்ரா போட்றாங்க!”
அதுவும் ஒரு உண்மைதான்.
ஆனாலும் நான் பெண்ணிய வாதிகளுடன் வாதிக்கமாட்டேன்.
ஆகவே நான், வெறும் சிறிது தயிரினை மட்டும் வெந்தயக் குழம்புடன் கலந்து போட்டுக் கொண்டேன்.
டாஸ்டாவ்ஸ்கி டால்டாஸ்டால் இதனை நிச்சயமாக விரும்பியிருப்பான். யுகப்புரட்சியாள கூபா சேகுவாராவுக்கும் வெந்தயக் குழம்பு ரொம்பப் பிடிக்கும் என எனக்கு அர்ஹெந்தினாவின் போர்ஹெஸ் எனச் சொன்னது நினைவுக்கு வருகிறது. போர்ஹெஸ்ஸும், “ஏன் உனக்கு இன்னமும் நோபல், புலிட்ஸர் என ஒன்றுமே இதுவரை ஒன்றுமே கிடைக்கவில்லை – கேவலம் ஸாஹித்ய அகடெமி பரிசுகூடவா உனக்குக் கிடைக்கவில்லை? உங்கள் ஊர் வெத்துவேட்டு சுவெங்கடேசனுக்குக் கூட அது கிடைத்துவிட்டதே” என்றார்!
நான், பதிலே பேசாமல் மௌனமாக முளைக்கேற்றிய வெந்தயத்தை மென்றேன். அது ஹார்மோன் சுரப்புக்கு உதவும்.
(வாசகர்களுக்கு, என் வழமையான அன்புக் கோரிக்கை – எனக்கு யூபிஐ மூலம் பணம் அனுப்பலாம், க்ரெடிட் கார்ட் மெஷின் ஒன்றையும் நான் க்ரௌட்ஸோர்ஸ் செய்து வாங்கியிருப்பதால் அதன் மூலமாகவும் நான் பணம் பெற்றுக் கொள்ளத் தயார் – ஏனெனில் வீட்டில் வெந்தயச் செலவே மாதம் ரூ 50,000/-த்தை எட்டி விட்டது!)

