பாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள்

May 1, 2015

விஷயங்கள் நடக்க நடக்க அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வமோ, அதற்காக இணையத்திலோ தொலைக்காட்சிப் பொட்டியிடமோ நிபந்தனையற்றுச் சரணடையும் கொடுப்பினையோ எனக்கில்லை. ஏனெனில், சுடச்சுட என் மேலான கந்தறகோளக் கருத்துகளை எவர்மேலும் கவிழ்த்தவேண்டிய அத்தியாவசியமோ நமைச்சலோ என்னிடம் இல்லை; பொதுவாக, நான் என் எல்லைகளை உணர்ந்திருப்பவன். நான் எழுதுவதைப்(!) படிப்பவர்களும் வெகுசொற்பமானவர்கள் (அதாவது நான் உட்பட!) என்பதும் ஒரு வசதிதான்.

So, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா!

…ஆனால் – பாகிஸ்தானின் பிரபலமான டான் (Dawn, ‘விடியல்’ ) தினசரியை — அச்சிட்டதையோ இணையப் பிரதியையோ  – விட்டுவிட்டு, குறைந்த பட்சம் கடந்த 25 வருடங்களாகவாவது படித்துக்கொண்டு வருகிறேன்.

என் இளமையில் மிகுந்த நேரம் செலவு செய்து ஆனந்தமாக உரையாடிய பழைய ஹேம் ரேடியோத் தொடர்பு எச்சங்களான ஒருசில அருமையான பாகிஸ்தானிய இஞ்சினீயர்களையும், படிப்பாளிகளையும் அறிந்திருக்கிறேன். (அவர்கள் கூப்பிட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள், வா, சிந்துசமவெளி சிதிலங்களுக்கு, வஸீரிஸ்தான் போகலாம் என்று – ஆனால் அங்கு போவது, பலகாலங்களாக என் வேலைத்திட்டங்களில் இல்லை.)

பல சமயங்களில், பாகிஸ்தானில் குடிமைச் சமூகம் என்று ஒரு ஜந்து இன்னமும் கையைக் காலை அசைத்துக்கொண்டு இருக்கிறதா என அனுமானிப்பதற்கு, எனக்கு  இந்த ஹேம் தொடர்புகளும், டான் போன்ற தினசரிகளும் சில உரையாடல் வாய்ப்புகள். இச்செய்திப்பத்திரிகை டான் இன்னமும் வெளிவந்து கொண்டிருக்கிறது – அதில், பல படுபுத்திசாலிகளும், ஒப்புக்கொள்ளக் கூடிய நேர்மையாளர்களும் – பாகிஸ்தானின் பொதுமக்களின்மீது நடக்கும் அரசு/ராணுவ (=தீவிரப்பொறுக்கிவாத கும்பல்கள்) அராஜகங்களையும் மீறி – இன்னமும் இருக்கிறார்கள் என்பதே ஒரு பெரிய விஷயம்தான்!

baloochistansince1948… ஆக, பாகிஸ்தானில் ஒவ்வொருமுறை அட்டூழியங்கள் நடைபெறுவதாகத் தோன்றும்போலெல்லாம் – அல்லது பாகிஸ்தான் குறித்த சில கருத்துகளின்மீதான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்போதெல்லாம் — நதீம் பராச்சா, ஆயாஸ் அஹெம்மத், மார்வி அன்வர்-ஸிர்மத் (இவருடைய வலைத்தளம்: ஒரு சாதாரண பாகிஸ்தானிப் பெண்ணின் சிந்தனைகளும் கருத்துகளும்), அஸ்மா ஜெஹாங்கீர், அஞ்சும் ரெஹ்மான், மொஹெம்மத் ராஸா, பாகிஸ்தானிய வளர்ச்சி, பொருளாதாரக் கழகம்  போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் சிந்தனைப்போக்குகள் என்ன – அவர்கள்  இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முயல்வேன்.

இவர்கள் பரந்த படிப்பறிவும், வரலாற்றுப் பின்புலமும், சமனமும் உடையவர்கள் – மேலும், கோர்வையாக-தருக்கரீதியாகத் தங்கள் கருத்துகளைத் தொகுத்து விரித்துக்கொண்டு செல்பவர்கள்; தொடர்ந்து கதவுகளை உதைத்துத் திறந்துகொண்டு முன்னேறுகிறார்கள். உர்தூ, ஆங்கிலம், அரபிக் மொழிகளில் வெளுத்துவாங்குகிறார்கள்.

சும்மனாச்சிக்கும் பேசிக்கொண்டே, அறிவுரை கொடுத்துக்கொண்டே  இருக்காமல், களப்பணிகளையும் செய்கிறார்கள் – இவர்களில் பெரும்பாலோர்.

-0-0-0-0-0-0-0-

ஆனால் – இந்தியாவில் இப்படி (எம்ஜே அக்பர் போன்ற ஒருசில அதிசய விதிவிலக்குகளைத் தவிர) இம்மாதிரி நம்பிக்கை நட்சத்திரங்கள் இல்லை எனத் தான் நினைக்கிறேன். நம் தமிழகத்தில் இது இன்னமும் மோசம் – யாராவது இப்படி இருக்கிறார்களா என்ன? இருமொழி அல்லது பன்மொழிப் புலமைகூட வேண்டாம் – ஒருமொழியிலாவது இயங்குகிறார்களா?? (ஆனால் இம்மாதிரி மதிக்கப்படக்கூடிய ஆட்கள் தமிழகத்தில் இருந்து எனக்கு அதைப்பற்றித் தெரியாமலும் இருக்கலாம், ஒப்புக்கொள்கிறேன்; ஆகவே இப்படி யாராவது இருந்தால், அவர்களைப் பற்றி எழுத, சுட்டிகளைக் கொடுக்க முடியுமா?)

சமன நிலையுள்ள, நிதானம் மிகுந்த பத்திரிகையாளர்கள், காத்திரமான கருத்து சமைப்பாளர்கள், அனைத்து சமூகத்தினராலும் மதிக்கப்படக்கூடிய, மதிக்கப்படவேண்டிய சான்றோர்கள் – நம் செல்லத் தமிழகத்தில் எங்கே?

ஆக, நிலைமை இப்படி இருக்கையிலே – இந்த வெற்றிடத்தில், பரப்புரையாளர்களே, வதந்திக்காரர்களே, மதவாதம் பிடித்தவர்களே உட்கார்ந்துகொண்டுவிடுகிறார்கள். என்ன சோகம் இது!

… தீவிரவாத இஸ்லாம் வெறியர்களையே விடுங்கள் – அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நுரைதள்ளல்களும்,  வெறுப்புவாத ப்ரேன்ட் ஜிஹாத் ஜந்துவும்,  அராஜகமும், அநியாயக் குழந்தைப் படுகொலைகளும், பாகிஸ்தான் ஸவூதிஅரேபியாக்களின் தயவில் குண்டுவைத்தலும்தான்.  ஆனால், ஒரு சௌகரியம் என்னவென்றால், இவர்களைப் போன்றவர்கள் ஓரம்கட்டப்படுவதும், ஒழிக்கப்படுவதும் இயல்பாகவே நடக்கும். ஏனெனில்,  இந்தியா போன்ற நடைமுறை ஜனநாயகம் ஸ்திரமாக இருக்கும் நாடுகளிலும்கூட, ஓரளவுக்கு மேல் அயோக்கியத்தனம் கட்டுமீறப்பட்டால், தலையை விரித்துக்கொண்டு ஆடினால் – அரசு நின்று கொல்லும்.

பாவப்பட்ட பெரும்பான்மை முஸ்லீம்கள் அமைதிவிரும்பிகளே – அவர்களுக்கு இம்மாதிரி போக்குகள் அரைகுறைத்தனமாகப் படுவது உணரப்படமுடிந்தாலும், பொதுவாக அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஏனெனில் அவர்கள் சமூகத்தின் கட்டமைப்பு, அதிகாரவர்க்கம், அரசியல் எல்லாமும் மதவாதத்தைச் சார்ந்ததாக மாறிவிட்டிருக்கிறது. அ, ஆ எனும் இருமனிதர்களுக்கு/கோட்பாடுகளுக்கு ஒத்துவரவில்லை என்றால் – அவர்களுக்கு அந்த ‘ஒத்து வராததை’ மதம் சார்ந்து மட்டும் பார்க்கவேதான், ஊடக அயோக்கியர்களால் பயிற்றுவிக்கப் படுகிறது. ஆனால், இந்தப் போக்கும் மாறும் – மதவாதம் சாராத, படித்த, சிந்தனை செய்து செயல்படக்கூடிய இளைஞர் குழாமிடம் இச்சமூகத்திற்கான அரசியல்அதிகாரம் சென்றடைந்தால், முன்னேற்றம் எட்டக் கூடியதே!

ஆனால், இந்த தீவிரவாதத்திற்காகச் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வாதிடும் தொழில்முறை மிதவாத அரைகுறைகளிடம்தான் (Apologists)  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அனைத்து சமூகங்களிலிருந்தும் பிரதிநிதித்துவம் இருக்கும் இந்த கும்பலில், மனிதவுரிமை என்ற பெயரில்  ஆகாத்தியம் அமர்க்களம் அதிகமாகவே இருக்கும். கொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்லாமல், இவர்கள் – கொலைகாரர்களுக்கான சமூகக் காரணிகளை அலசிய வண்ணம் இருப்பார்கள். உசுப்பேற்றுவார்கள். பிரிவினை பேசுவார்கள். பொய்களை வதந்திகளைத் தொடர்ந்து பரப்புவார்கள் இவர்கள். கமுக்கமாக, ரத்தவெறிவாதத்தை வளர்ப்பார்கள். கல்லா கட்டுவார்கள்.

நம் பத்திரிகையாளப் பிதாமகர்களில் மிகப் பெரும்பாலோனோர் இம்மாதிரி அயோக்கிய அரைகுறைகள்தாம் என்பதை இச்சமயம் நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடாமல் போனால், எனக்கு விமோசனமே இல்லை.

-0-0-0-0-0-0-0-

இப்படிப்பட்ட சூழலில் தான், நதீம் பராச்சா போன்றவர்கள் மிகவும் மதிக்கத்தக்கவர்களாகவும், சமன நிலையுள்ளவர்களாகவும் இருப்பது – அதுவும் ஜனநாயகக்கூறுகளற்ற பாகிஸ்தானில் இப்படி தைரியத்துடனும் நேர்மையுடனும் இருப்பது – அதுவும் தளராமல், துவளாமல் தொடர்ந்து – மனதிற்கு நியாயம் எனப்பட்டதை எழுதுவது – எனக்கு ஒருங்கே ஆச்சரியத்தையும் ஆசுவாசத்தையும் தருவது.

பாகிஸ்தானின் பத்திரிகையாளர்களில் சிலரிடம் இருந்து நம் ‘சும்மனாச்சிக்கும் கத்திக் கொண்டிருக்கும்’ அரைகுறை ஸெக்யூலரிஸத் தவளைகள் கற்றுக் கொள்ளவேண்டியது, நிறைய…

எடுத்துக்காட்டாக, நதீம் பராச்சா ஏழுதியுள்ள இந்தக் கட்டுரை – இதில் இவர் – ‘கொலையாளிகள் – அவர்களின் மிதவாத அபாலஜிஸ்ட் சார்பினர் – பொதுமனிதன்’  என ஒரு அழகான உரையாடலை – ஆனால் நிதர்சன உண்மையை வெளிப்படுத்தும் சோகமாகப் பதிவுசெய்திருக்கிறார்: Anatomy of an apologist: A double-act play (Dec 20, 2014)

தமிழகத்து முஸ்லீம்களைப் பற்றிக் கரிசனப்படும் யாராவது – மிக முக்கியமான இந்தக் கட்டுரை/நாடகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நதீம் பராச்சா ஏழுதியுள்ள ஒரு அழகான பயணம் தொடர்பான கட்டுரை: I come in peace … (Apr 23, 2015)

நம் தமிழகத்துக்கான நதீம்பராச்சாக்களும் மார்விகளும் எங்கே? நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? ஹ்ம்ம்??

-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

6 Responses to “பாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள்”

  1. Unknown's avatar Anonymous Says:

    கூர்மழுங்கிப் போன திராவிட அபத்தங்களைப் பற்றியே எழுதும்வேளையில்…மத்திய ஆட்சிமாற்றத்துக்குப்பின் பேசும் பல இந்துத்துவ தலைவர்களின் அபத்தங்கள் பற்றியும் கொஞ்சம் எழுதலாமே…

  2. Unknown's avatar நா.பொ Says:

    ஐயா,
    தி.முக வின் மதச்சார்பின்மை கொள்கை பற்றிய தங்களின் கருத்து அறிய அவாலாக உள்ளேன்.


    • அய்யா, அவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?

      தயவுசெய்து புதுவதந்திகளைக் கிளப்பாதேயுங்களேன்! :-(

  3. A.Seshagiri.'s avatar A.Seshagiri. Says:

    “தமிழகத்து முஸ்லீம்களைப் பற்றிக் கரிசனப்படும் யாராவது – மிக முக்கியமான இந்தக் கட்டுரை/நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”

  4. A.Seshagiri.'s avatar A.Seshagiri. Says:

    “தமிழகத்து முஸ்லீம்களைப் பற்றிக் கரிசனப்படும் யாராவது – மிக முக்கியமான இந்தக் கட்டுரை/நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”

    தாங்களே இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடக்கூடாது?.இதன் ஆங்கில வடிவத்தை வாசித்தேன்.மிகவும் அருமை,பாகிஸ்தான் (என் இந்தியா கூட) போன்ற நாடுகளின் இன்றைய அவலமான நாட்டு நடப்பை அப்பட்டமாக சித்தரிக்கிறார் நதீம் பராச்சா அவர்கள்.இக் கட்டுரைக்கு கீழ் உள்ள பின்னூட்டங்களில் சிலர் முன்னால் கிரிக்கெட் வீரரும்,தற்போதைய பாகிஸ்தான் அரசியல் வியாதியுமான இம்ரான்கானின் அரசியல் நிலையை சுட்டி காட்டி விமர்சித்து இருப்பது நன்றாக உள்ளது.

  5. Unknown's avatar Anonymous Says:

    In the list of People from Pakistani Media, worth the respect, we can also include, 2 other contemporaries, Najam Sethi and Hassan Nissar.

    Vikram S Vaidya


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *