என்னுடைய பாரதம் மஹோன்னதமானது!

January 26, 2015

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது குடியரசு தினம், அமைதியாக வீட்டில் கழிந்துகொண்டிருக்கிறது. ஏதேதோ சிந்தனைகள் – ஆக, அவை தொடர்பாக அலைக்கழிக்கும் நினைவுகளும் எண்ணக்கோவைகளும்.

சத்தீஸ்கட்டின் ஷங்கர் குஹா நியோகியில் இருந்து கஷ்மீரத்து ராஜீவ் குமார் வரை விகசிப்புகளும் வருத்தங்களும்…

-0-0-0-0-0-0-0-

ஆனால், பெருமூச்சுகளுக்கு அப்பாற்பட்டு – நம் உலகில் –  பல அழகான, மனவமைதியும் மனவெழுச்சியும்  புத்துணர்ச்சியும் தரும் விஷயங்களும் இருக்கின்றனதாமே!

உங்களில் பலர் – 40+ வயதானவர்கள், ‘அந்தக் காலத்தில்’ தூர்தர்ஷன் பார்த்திருக்கக் கூடியவர்கள் – இந்த ‘ஒரே ஸ்வரம்’ பாட்டைக் கேட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.  ‘மிலே ஸுர் மேரா, தும்ஹாரா‘ என மகாமகோ பீம்ஸேன் ஜோஷி அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு சுமார் ஆறு நிமிடம் ஓடும்பாடல் இது.

நமது இருவரின் ஸ்வரங்களும்(அல்லது பாடல்களும் அல்லது சிந்தனைகளும்) இணைந்தால் – எனும் வகையில் இந்தியாவின் சிலபல கலாச்சாரக்கூறுகளை/பிராந்திய மக்களை அவரவர்கள் மொழியில் (14 ‘பெரும்பான்மை’ மொழிகளில், சிந்துபைரவி ராகத்தில்) பாடவைத்து  எடுக்கப்பட்ட அழகு. சிலபல நடிகர்களும், மற்ற பிரபலஸ்தர்களும் பங்குபெறுகிறார்கள். Lilting melody.

அஸ்கர் கான் அவர்களால் தரவேற்றப்பட்ட, ‘ஒரிஜினல்’ தூர்தர்ஷன் ஓலிப்பதிவு – முதல் வடிவம் (நல்ல, தரமான நகரும் பிம்பங்கள்)
இதன் இனிமையும் கற்பனாவளமும் அவை கொடுக்கும் எழுச்சியும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில் நுட்பக் கழக  (MIT) இந்திய மாணவர்களால் ‘நடிக்கப்பெற்ற’ இதே பாடல் வரிகளும் எனக்குப் பிடிக்கும்.

https://www.youtube.com/watch?v=jh2KPaZ3_RE

மேலும், இதில் வரும் இரு இந்திய இளைஞர்களை எனக்குத் தெரியும் என்பது எனக்கு ஊக்க போனஸ். :-)

-0-0-0-0-0-

கேட்கும்போதெல்லாம் எனக்கு விகசிப்பு தரும் இப்பாடலை – மூன்று வருடங்களுக்கு முன்னால் நமது சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில் பாடினோம் – ஹார்மோனியமும், தப்லாவும், ரெகார்டர் எனப்படும் ஒருவிதமான ஊதுகுழலும்தான் பக்கவாத்தியங்கள்; 8-10 வகுப்புக் குழந்தைகளை 14 சிறு குழுக்களாகப் பிரித்து ஒரு  ‘சேர்ந்திசை’ முயற்சி செய்தேன். நானும் கூடச்சேர்ந்து பாடினேன். ஆச்சரியம்தான். எனக்கு இளையராஜா அவர்கள் அளவுக்காவது ‘பாடும்’ திறமையிருக்கிறது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது.

12 நாட்கள் பயிற்சி செய்து உச்சரிப்புகளையெல்லாம் திருத்திக்கொண்டு மிக நன்றாகவே பாடினார்கள் என் குழந்தைகள். ஆனால் இதனை நான் படமெடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செய்யவில்லை.

என்ன சொல்லவந்தேனென்றால் நமக்கு, முக்கியமாக எனக்கு,  ஞாபகங்களுடன் மறதிகளையும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிடில் பழைய நினைவுகளில் நீந்திக்கொண்டே தற்காலத்தையும் கழித்துக் கொண்டேயிருக்கலாம். (holmes, borges & valmiki on memories 05/10/2014)

-0-0-0-0-0-0-0-0-0-

 …திரைப்படம், அல்லாடும் அரசியல் கட்சிகள், தொலைக்காட்சிப் பப்பரப்பா பொழுதுபோக்கு, போங்காட்ட நியாயாவேசம், சமூகவலைத்தள போராளித்தனம், ஒருங்கிணைக்கப்பட்ட பாரதவெறுப்பு,  க்ரிக்கெட் (பத்ரிசேஷாத்ரி என்னை மன்னிப்பாரா?) போன்றவற்றால் தற்கால இந்தியாவில் பிணைப்புச் சங்கிலி வடங்கள் இணைக்கப் பட்டாலும் – இசை உள்ளிட்ட கலைகளும் அவை பங்குபெறும் பாரதீய மஹாநதியொழுக்கும் தான், மத-ஜாதி-வகுப்பு போன்ற  பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட நம்முடைய பாரதத்தின் நெடு நோக்கு மரபுத்தொடரைத் தொடர்ந்து பேணி வருகின்றன என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

ஆம். மேரா பாரத் மஹான். என் பாரத ஆழி பெரிது. ஆழியில் ஆயிரம் கசடுகள், உப்புக் கரிப்புகள், சிடுக்கல்வலைப் பின்னல்கள், எரிமலைகள் இருக்கலாம். பல தீர்க்கவேமுடியாத பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றலாம். ஆனாலும் எனக்கு என் பாரத் மஹான் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. அதே சமயம் மற்ற நாடுகளை, சமூகங்களை அற்பங்கள் எனச் சொல்லும் மனப்பிறழ்வும் இல்லை. ஏனெனில் நான் – மானுடவியல், சமூகவியல், வரலாறு, அறிவியல் போன்றவற்றின் ஒரு தரமான தொடரும் மாணவன். இதிலும்  எனக்குப் பெருமைதான்.

பின்குறிப்பு1: சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்வரை நான் ஒரு மாதமிருமுறை மின்னஞ்சல் (ஆங்கில, தனிச்சுற்றுக்கு மட்டும் என்கிற ரீதியில்) குறிப்புகளை அனுப்பும் வழக்கம் கொண்டிருந்தேன்; அதில் என்னை பாதித்த புத்தகங்கள், இசை, நகரும் பிம்பங்கள், சிந்தனைகள்(!) பற்றி – சில சமயம் சுட்டிகளுடன் சுமார் ஆயிரம் வார்த்தைகளுக்கு மனம்போனபோக்கில் எழுதுவேன். முதலில் எனக்கு நேரடியாகத் தெரிந்த, விரிவாக அளவளாவியிருந்த, பரஸ்பரம் மரியாதை இருந்த ஏறத்தாழ சுமார் 160 நண்பர்களுக்கு இது சென்று கொண்டிருந்தது. சில உபயோககரமான விவாதங்களும் எழும்பின என நினைவு. ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பின், சந்தாதாரர்கள் கிட்டத்தட்ட 600 ஆகி ஏகப்பட்ட முன்அறிமுகமில்லாத அரைகுறைகள் அதில் சேர்ந்து ஒருமாதிரி திருப்பித் திருப்பி அதேபார்வைகளை (=குருட்டாம்போக்குகளை) முன் வைத்து சப்தம் மட்டும் அதிகமானவுடன் – அதனை நிறுத்திவிட்டேன். அதில் ஒருதடவை இம்மாதிரி பாரதீயம் என எழுதியதற்கு என்னை ஜிங்கோய்ஸ்ட் எனக் ‘குற்றச்சாட்டு’ வைத்து பதில் கடிதம் எழுதினார்கள் இந்த கும்பலில் சிலர்.

இப்படித்தானே இவர்களுக்கு, நேஷன்(தேசம்), நேஷனலிஸ்ம் (தேசியம்), கல்ச்சர் (பண்பாடு), ஸ்டேட் (அரசு), பவர் (அதிகாரம்), ரெலிஜியன் (மதம்), ஸெக்யூலரிஸ்ம் (மதச்சார்பின்மை)  போன்ற மேற்கத்திய கற்பிதங்களைப் பற்றி, பகுப்புமுறைமைகளை, சட்டகங்களைப் பற்றி – அவற்றின் பின்புலங்கள், தேவைகள், ஊடாடும் களங்கள் என ஒரு நீண்ட பாலபாடமே எடுத்தேன்.

ஏனெனில் – இந்த மேற்கத்திய தத்துவார்த்த வகையறா துணுக்குக் கூறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மேற்கத்திய முப்பட்டக நிறப்பிரிகைகளின் மூலமாக மட்டுமே – அதுவும் அவற்றையும் அரைகுறையாகப் புரிந்துகொண்டு – நம்முடைய ஆஃப்ரிக, இந்திய, ஜப்பானிய, சீன, ஆதிஅமெரிக்க சமூகங்களைப் புரிந்துகொள்வது என்பது மிகவும் தவறான செயல்.

சரி. இந்த மறுமறுமறுஉரையாடல்களில் பல – கடைசியில் நான் என்ன ஜாதி என்பதில் முடிந்தன. சுபம். ஆகவே, திட்டி வரும் எதிர்வினைகளை, இம்முறை பொருட்படுத்தப் போவதில்லை. அவை கடைசியில் – எதற்கு எப்படி எங்கு போய் சுலபமாக முத்திரை குத்தப்பட்டு முடியும் என்று எனக்குத் தெரியும்.

பின்குறிப்பு2: மாளா அலுப்பின் காரணமாக இம்முறை, குடியரசு தினத்துக்காக – எங்கள் பள்ளியில் ஒரு சுக்கு நிகழ்வோ, அல்லது பாரதம் குறித்த என்னுடைய (அதிகப்)பிரசங்கமோகூட இல்லை – இன்று வெறும் விடுமுறை மட்டும்தான் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம். மேரா பாரத் மஹான். ஜெய் ஹிந்த். (கூட ஜெய் பாகிஸ்தானும்!)

10 Responses to “என்னுடைய பாரதம் மஹோன்னதமானது!”

  1. க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

    முதல் திட்டு………… எதிர்பாக்காத இடத்திலிருந்து

    \\ 12 நாட்கள் பயிற்சி செய்து உச்சரிப்புகளையெல்லாம் திருத்திக்கொண்டு மிக நன்றாகவே பாடினார்கள் என் குழந்தைகள். ஆனால் இதனை நான் படமெடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செய்யவில்லை. \\

    இப்படி பண்ணினால் திட்டாம வாழ்த்தவா செய்ய முடியும்? very bad ram.

    That would have been a memorable collection.

    குழந்தைகளுடன் சேர்ந்திசை போன்ற அருமையான அனுபவத்திற்கு ஈடே கிடையாது.

    MIT version of மிலே சுர் மேரா தும்ஹாரா………… அருமை.

    அதே காலகட்டத்தில் ப்ரபலமான இன்னொரு பாடலான அமரகவி முஹம்மத் இக்பால் சாஹேபின் தரானேஹிந்த் பாடலான சாரே ஜஹா(ந்) ஸே அச்சா ………….. இன்னொரு காலத்தை வென்ற எல்லைகளைக் கடந்து நிற்கும் பாடல்.

    பீம்சேன் ஜோஷி யுடைய தங்கக்குரலை மறக்கவே முடியாது. அவருடைய கன்னடா மற்றும் மராட்டி உபசாஸ்த்ரீய சங்கீதத்தைக் கேழ்க்க மிலே சுர் மேரா தும்ஹாரா உந்துதலாக இருந்தது என்பதை மறைக்க மாட்டேன்.

    ம்……. மேரா பாரத் மஹான்.

    29ம் திகதி சாயந்திரம் ராஷ்ட்ரபதி பவன் முன்னால் BEATING RETREAT CEREMONY நிகழ இருக்கிறது. குடியரசு தின அணிவகுப்பு ப்ராபல்யமானது போல இந்த நிகழ்வு ப்ரபலமாகாதது. ஆனால் அருமையான நிகழ்வு. மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அதுவும் நிச்சயமாக இசையில் ஆர்வம் உள்ள மாணவர்கள். இயன்றால் மாணவர்களுடன் சேர்ந்து இந்த நிகழ்வைப் பார்க்கவும்.

    ஜெய் ஹிந்த்

  2. சரவணன்'s avatar சரவணன் Says:

    ராஜீவ் குமார் பாவம்தான். அதே போலவே அதற்கு வெகு முன்பாக ஜம்முவிலிருந்து சிதறடிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களும். கஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட, பொல்லப்பட்ட பண்டிட்களைவிட், ஜம்முவிலிருந்து (பிரிவினையை ஒட்டி) விரட்டியடிக்கப்பட்ட, கொல்லப்பட்ட முஸ்லிம்களின் தொகை பல மடங்கு அதிகம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதுவரையில் ஜம்மு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியே. அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்ட பின்னரே (பெரும்பாலும் எல்லைப்புற, பிஓகே பகுதிகளுக்கு) ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மைச் சமூகம் ஆயினர்.

    http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/a-tale-of-two-ethnic-cleansings-in-kashmir/

    இந்த விஷயம் இந்தியப் பொதுப்புத்தியால் வசதியாக மறக்கப்பட்ட ஒன்று. கஷமீர் பிரச்னையில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் தீவிலவாதத்தை ஏற்காத முஸ்லிம்களே. 120 கோடி மக்களால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்போது (தாம் ஏற்காத ஒன்றுக்காக!) எப்படி அவர்கள் அனலில் இட்ட புழுவாகத் துடிப்பார்கள் என்பது எண்ணிப்பார்க்கத் தக்கது.

    மற்றபடி, இந்தியாவின் மகோன்னதத்தை எண்ணி கண்ணீர் மல்கக் கசிந்துருகுவதெல்லாம் கொஞ்சம் juvenile ஆன சமாச்சாரம். அந்த மனோநிலையைக் கடந்து வருவதே ஆரோக்கியமான விஷயமாக இருக்க முடியும். உலகத்தில் இருக்கும் 700 கோடி பேருக்கும் அவரவர் நாடு அப்படியே என்தும், குறிப்பிட்ட நாடு, மொழி, இனம், சாதி, மதத்தில் பிறப்பது என்பது தற்செயலானது (இந்தச் சொல் அவ்வளவு பொருத்தமில்லை, வேறு வார்த்தை எனக்குத் தெரியவில்லை) என்ற புரிதலோடுதான் இதை அணுக முடியும். அதற்காக இந்தியாவை வெறுக்கச் சொல்லவில்லை. எல்லா நாடுகளையும் போல இந்தியாவும் பல நிறை, குறைகளைக் கொண்டிருக்கும் ஒரு நாடு. அவ்வளவே.

    [இந்தியா என்று எழுதுங்களேன்… பாரதம் என்ற பெயர் சற்று uneasiness ஏற்படுத்துகிறது :)) ]


    • அய்யா சரவணன். தங்கள் கருத்துக்கு நன்றி.

      நான் இந்த க்றிஸ்டொஃபர் ஸ்னெட்டன் அவர்களின் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அதன்மேல் பல விமர்சனங்கள் இருக்கின்றன எனக்கு – எப்படி எண்ணிக்கைகளைச் சொல்கிறார் என்பதிலிருந்து, எப்படி விஷயங்களைச் சேகரித்தார் என்பதிலிருந்து – ஆயிரம் ஓட்டைகள். ஒற்றை வரியில் சொல்வதானால், அது அப்படியே பாகிஸ்தானியப் பார்வையை உள்ளிழுத்து அந்த காலணிக்கு ஏற்ப காலை வெட்டத் தேவையான, சந்தேகிக்கத்தக்க தரவுகளை வைத்து – மேலெழுப்பப்பட்ட பார்வை. எண்ணிக்கை வீங்கடிப்புகள், தர்க்கரீதியற்ற குதித்தல்கள் – சில இடங்களில் அநியாயப் பொய்கள் இந்த புத்தகத்தில் வெறுக்கத்தக்க அளவு அதிகம். நீங்கள் இதனைப் படித்திருந்தால் மேலே இதனை விவாதிக்கலாம். நானும் என் குறிப்புகளை தூசிதட்டி எடுக்கிறேன்.

      1947 வாக்கில் நடந்த விஷயங்களைப் பற்றி பாகிஸ்தானி மேஜர்ஜெனரல் மொஹெம்மத் அக்பர் கான் அவர்கள் எழுதிய ‘ரெய்டர்ஸ் ஆஃப் கஷ்மீர்’ புத்தகத்தைத் தாங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதில் அவர் சூட்டோடுசூடாக எழுதிய/குறிப்பெடுத்த விஷயங்களுக்கும் – ஸ்னெட்டன் எழுதியவைகளுக்கும் முதலில் சம்பந்தமேயில்லை. இப்போது அடுத்த பதிப்பில் அவர்களும் திரித்தல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

      இந்த ஸ்வாமினாதன் அங்க்லேஸரியா ஐயர் போன்றவர்கள் ஒரு துறையில் தமக்கு ஆழம் இருப்பதாக வரித்துக்கொண்டு – அதேபோல மற்றதுறைகளுக்கும் மினுக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். இவர் அடிப்படையில் ஒரு பரிணாமவளர்ச்சியுற்ற ஒரு வா. மணிகண்டன் தான். இவரைப் போய் மேற்கோள் காட்டுகிறீர்களே!

      மற்றபடி, நான் ஜுவினைல் பார்வையுள்ளவன் என்றால் தாங்கள் தாராளமாக என்னை ஒதுக்கிவிட்டுச் செல்லலாம். தங்களுக்குத் தேவையற்ற அனீஸினெஸ்ஸைக் குறைத்துக்கொள்ளலாம் இல்லையா? :-)

  3. க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

    உரலாயுதாய ஸ்வாஹா.

    உரலே உண்மை……….. நிதர்சனத்தை மிகைப்பட்ட பொய்க்கருத்துக்களால் காயடித்து ………….. உளுத்துப்போன பொய்களை பன்முறை காபி பேஸ்ட் செய்து செய்து புளகாங்கிதமடைவதில் த்ராவிட டம்ளர்களுக்கு இருக்கும் ஆனந்தமே ஆனந்தம்.

    பன்முறை காபி பேஸ்ட் செய்யப்பட்ட உரல் சொல்லும் செய்திகளை மெய்யென மதி மயங்குதலில் தவறில்லை. உண்மை வேறாக இருக்க வாய்ப்புண்டு என்பதனை அறிந்த பின்பும் உளுத்துப்போன உரலாயுதத்தாலேயே மொத்துண்ணப்படுவதில் புளகாங்கிதமடையும் த்ராவிட டம்ளர்கல் வாள்க வாள்க.

    ஐயகோ எம் நாடு எதுவோ? அறிகிலேனே? இண்டியா தட் ஈஸ் பாரத் என்று அரசியல் சாஸனம் சொல்வதா?

    த்ராவிட டம்ளர்கள் அண்ணாவுக்கும் ராமசாமி நாயக்கருக்கும் விசிலடித்து விசிலடித்து கயமை, கண்றாவி, கந்தறகோளத்தால் உருவாக்கி………….. மத்ய சர்க்கார் சட்டம் என்னும் ஆயுதத்தைக் காட்டி மிரட்ட……….. கோப்பிலும் நாடாவிலும் மறைத்தொளித்த த்ராவிட நாடா? சேர நாடா? சோழ நாடா? பாண்டி நாடா? கொங்கு நாடா? மதறாசப்பட்டண நாடா? பரங்கிப்பேட்டை நாடா? சைதாப்பேட்டை நாடா?

    ராம்!!!!!!!!!! நாடு நாடு நாடு

    அதை நாடு …………

    அதை நாடா விட்டால் ஏது வீடு…………..

    என்று புர்ச்சித் தலைவர் கையைக் காலை விலுக் விலுக் என்று ஆட்டி ……………… ஆடிப்பாடியே போதே கவனித்து நீவிர் நாடென்பதின் மெய்க்கருத்தை உணர்ந்திருக்க வேண்டாமோ?

    பூவண்ணன் சார் இல்லாத குறையைத் தீர்க்க சரவணன் சார் உரலாயுத சஹிதமாக பட்டறிவு அளிப்பது புளகாங்கிதமளிக்கிறது.

    கர்ம விசேஷத்தாலே………….. பாரத நாடு என்று சரவணன் சாருக்கு கூச்சமளிக்கும்…………. இந்திய நாட்டில்………….. உள்ள…………… ஜம்மு காஷ்மீர நாட்டில்…………..உள்ள ஜம்மு நாட்டில்…………….சில காலம் த்ரிகூடா நகர் நாட்டிலும்…………. நர்வால் நாட்டிலும்…………… பக்ஷி(bakshi) நகர் நாட்டிலும்…………..நானக் நகர் நாட்டிலும்……………அகதியாய்த் திரிந்த திரியாவரமான அடியேன்…………சரவண மஹாசயர் உரலாயுதத்தால் அடித்த கருத்துக்கள் டுபாங்கூர் டுபாங்கூர் டுபாங்கூர் என்று சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்…………. ஸ் மூச்சு வாங்குகிறது.

    விடாது கருப்பு………….. இப்படி நாட்டைப்பற்றி சகட்டுமேனிக்கு எளுதி புளகாங்கிதமடையும் நீர் பூவண்ணன் சாருடைய அதிவ்யாபகமான உரலாயுதத்தாலும் மொத்துண்ணப்படக் கடவது என்று அருந்ததி ராயையும் அர்ணாப் கோஸ்வாமியையும் இறைஞ்சுகிறேன். ராமுடைய anti missile shield ஆன spam folder ல் பூவண்ணன் சாரின் உரலாயுத சரங்கள் லயமாகி விட்டதோ எனவும் சந்தேஹம் வருகிறது.

    ஆயாசத்துடன்
    க்ருஷ்ணகுமார்


    • அய்யோ! பூவண்ணன் அவர்கள் கொஞ்சகாலமாக இங்கே வருவதேயில்லை என நான் சந்தோஷமாக இருக்கும் சமயத்தில்… நீங்கள் இப்படியெல்லாம் நீங்கள் பயமுறுத்தினால் நான் என்னதான் செய்யமுடியும், சொல்லுங்கள்.

      மற்றபடி என் பாரதத்தில் அனைவரும் நலம். சரவணன் அவர்கள் தன்னுடைய இந்தியாவில் ஈஸியாக இருப்பார் என்பது என் நம்பிக்கை.

      உங்கள் ஹிமாலயத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மாதொருபாகன் பற்றி ஒருவருமே அங்கு கொந்தளிக்கவில்லையா?

      இப்படியிருந்தால் எப்படித்தான் நாம் பாரத ஒருமைப்பாட்டை வளர்த்தெடுப்பது? வேறு வழியேயில்லாமல் ஆங்கிலத்திலேயே சிந்தித்துப் பெறக்கூடிய இந்திய ஒருமைப்பாடு மட்டும்தான் நம் தலைவிதியா?

    • சரவணன்'s avatar சரவணன் Says:

      இந்தியா என்றுதான் குறிப்பிடும்படிக் கேட்டேன். நீங்கள் சம்பந்தம் இல்லாமல் திராவிட நாடா, சேர நாடா சோழ நாடா என்றெல்லாம் புலம்பியிருப்பதால் சொல்கிறேன். அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது ஒரு விவேகமான முடிவு; கோழைத்தனம் அல்ல. ‘காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று சொல்லியிருக்கிறார். திராவிட நாட்டை இரத்தக் களறி மூலம் நாளைக்கே அடைய அவர் அவசரப்படவில்லை! காலம் கனியும், காத்திருப்போம் என்று சொல்லிச் சென்றிருக்கிறார். எதிர்காலத்தில், ஜனநாயகம் வளர்ச்சிபெறும்போது ஒருநாள் வன்முறை இன்றி, சுமுகமாக, சமாதானமாக, அனைத்து தேசிய இனங்களும் சுந்திரம் பெற்ற நாடுகளாகவும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஒன்றியமாகவும் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது இப்போதைய நாடாளுமன்றம் ஐரோப்பிய நாடாளுமன்றம் மாதிரியான அமைப்பாக இருக்கும். இவை அனைத்தும் சகல மாநிலங்களின் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே ஏற்படும், வன்முறைப் போராட்டத்தினால் அல்ல என்பது முக்கியம்.

      இப்போதே கடந்த தேர்தல் தவிர, மத்தியில் தனிக்கட்சி எதற்கும் பெரும்பான்மை கிடைப்பதில்லை. மோடிகூட ராஜஸ்தான் போல ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தொழிலாளர் சட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ், சில்லறை வர்த்தகத்தை அனுமதிப்பதில் மாநிலங்கள் தமக்கென தனித்தனியாக முடிவெடுத்துக்கொள்ள அனுமதித்தது. பொருளாதார விஷயத்தில் சிறிதுசிறிதாக மாநில அரசுகளை நோக்கிஅதிகாரம் பரவலாக்கப்படுவதைத்தான் இவை காட்டுகின்றன.

      • க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

        அன்பின் ஸ்ரீமான் சரவணன்

        \\\ எதிர்காலத்தில், ஜனநாயகம் வளர்ச்சிபெறும்போது ஒருநாள் வன்முறை இன்றி, சுமுகமாக, சமாதானமாக, அனைத்து தேசிய இனங்களும் சுந்திரம் பெற்ற நாடுகளாகவும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஒன்றியமாகவும் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. \\\\\\

        இந்த தேசிய இனம் என்பது ஆகப்பெரிய குழப்படி சொல்லாடல்.

        கயமை, கண்றாவி, கந்தறகோளம் இவற்றால் வளர்த்தெடுக்கப்பட்ட த்ராவிட இயக்கங்களில் த்ராவிடம் என்றால் என்ன என்பதற்கு எந்த வெவரமும் தெரியாது. தொல்தமிழ் நூற்களுடன் சம்பந்தமில்லாத இந்த சொல்லாடல் தமிழர்களை ஏமாற்றுவதற்காக த்ராவிட இயக்கத்தவரால் தமிழகத்தில் திணிக்கப்பட்ட சொல்லாடல்.

        இது பற்றிய கேழ்விகளுக்கு இவர்கள் நாக்கூசும் படி சட்ட சபையில் உளறி……… அது போதாதென்று ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் த்ராவிட விசிலடிச்சாங்குஞ்சுகள் விசிலடித்து மகிழ ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் கண்ணியமற்ற பேச்சாளர்களால் பினாத்தப்பட்ட சமாசாரம் த்ராவிடம்.

        சமீப காலங்களில் நாம் டம்ளர்கள் என்று புதிதாகக் கிளம்பியுள்ள புதுக்கும்பல் தமிழகத்தில் தெலுகு, கன்னடம், மலயாளம் பேசும் ஆசாமிகள் மண்ணின் மைந்தர்கள் இல்லை. எல்லாம் த்ராவிட எழவுகள் தமிழன் மீது திணித்த வந்தேறிக்கும்பல்கள் என்று த்ராவிடப் பாஷாணத்தில் புதுப்பாஷாணத்தைச் சேர்க்கிறார்கள். த்ராவிடப் பாஷாணத்தில் புழுத்து நெளியும் புழுக்களாகவே தங்களை (ஈ ஆர் ஸி உங்களுக்குத் தெரிந்திருக்குமே) முன்னிறுத்துவதில் த்ராவிடக் கும்பல்களுக்கு உகப்பு என்பதால் அந்தச் சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.

        சரி தமிழ் பேசுபவரெல்லாம் தனி தேசிய இனம் என்று அடித்து விடலாம் என்று பார்த்தால்…………. தமிழகத்தில் சமீப கால அரசியலில் இன்னொரு கோஷம் கமுக்கமாக முழங்கியுள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கும்………… வன்னியநாடு அன்னியருக்கில்லை………நல்ல வெவரமா ரோசனை செய்தால்……….. சைதாப்பேட்டை நாடு………… பரங்கிப்பேட்டை நாடு………… கண்ணம்மாப்பேட்டை நாடு என்று கூட தேசிய இனங்களை பகுப்பாய்வு செய்யலாம்………… என்ன ஃபோர்டு ஃபவுண்டேஷன் கொஞ்சம் பைசாவ அப்படி கண்ணில காட்ட வேண்டும். அம்புட்டே.

        ஹிந்துஸ்தானத்தை சுக்கு நூறாகப் பிளந்து ஒவ்வொரு கூறும் தம்மில் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்பது அன்னிய சக்திகளது ஆசை. நிதியே வாழ்க்கையின் லக்ஷ்யம் எனச் செயல்படும் நிதிப்பிள்ளைகளும் இந்த அன்னிய சக்திகளும் இணைகையில்……….. தேசிய இனம் என்பதனை எந்த அளவு பிரிவினை வாதத்துக்கு உரமாகச் சேர்க்கலாம் என்பது அவதானிக்கப்பட வேண்டிய விஷயம்.

  4. Unknown's avatar Anonymous Says:

    முகநூலில் ராம்ஜி யாஹூ ராம்ஜி யாஹூன்னு ஒருத்தர். கவிதை வாசிச்சா, புளியை வச்சி விளக்கிட்டிருப்பார். எனக்கு இந்த ராம்ஜி தான் சரவணனா காட்சி தர்றாரோன்னு சந்தேகமாயிருக்கு. இவிங்க எப்படின்ன, நிம்மதியா ஏப்பம் (வேறு ஒன்று சொல்ல வந்தேன்) விடக் கூட மாட்டாங்க

    • Unknown's avatar Anonymous Says:

      //நிம்மதியா ஏப்பம் (வேறு ஒன்று சொல்ல வந்தேன்) விடக் கூட விட மாட்டாங்க


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *