கருணாநிதியும் கத்தரிக்காயும்…
March 5, 2014
… இப்படியாகத்தானே, கருணாநிதி அவர்கள் உபயத்தில் கத்தரிக்காய் விளைந்தது… :-)
-0-0-0-0-0-0-
2009 மே மாதம். அச்சமயம் நான், என் குடும்பத்தினருடன் எங்களுடைய நெடுநாள் குடும்ப நண்பன் ஒருவனுடைய வீட்டில் தங்கியிருந்தேன் – இந்த வீடு சேலம் மாவட்டத்தின் மலைப் பிராந்தியங்கள் ஒன்றில் ஒரு குக்கோதிகுக் கிராமத்தில் இருக்கிறது. நண்பனின் அடுத்தவீட்டுக்காரர் சுமார் ஒரு கிமீ தள்ளி. ஆக – அழகும் அமைதியும் உள்ள பிரதேசம். இரவுகளில் மகாமகோ கும்மிருட்டு. நமக்கே கேட்கும் நம் இதயத்தின் துடிப்பு. கொசுவே இல்லை. இனிது இனிது ஏகாந்தமினிதுதான்… (1999 வாக்கில் இவன் அப்பகுதியில் குடியேறினாலும், 2007ல் தான் இவன் வீட்டிற்கு மின்சார இணைப்பே கிடைத்தது என நினைவு)
… விடிகாலையில் ஆரம்பிக்கும் பேச்சு. காலைக்குளிரில் (மேமாதத்திலும் கூட!) அண்மையில் உள்ள சிறு குன்றின்மீது உட்கார்ந்துகொண்டு சூர்யோதயத்துக்காக காத்திருந்து கொண்டு, கட்டங்காப்பி பருகுதல்; பேச்சு; கொஞ்சம் தோட்டவேலை; பேச்சு; பின்புலத்தில் தேர்ந்தேடுத்த ஜாஸ் இசை அல்லது கலாபினி கொம்கலி தரப் பாடகர்கள். விறகு அடுப்பில் எளிமையான ஆனால் மிகச் சுவையான கூட்டுச் சமையல்; துணிதுவைத்தல்; பேச்சு. பாத்திரம் கழுவுதல்; பேச்சு—; பேச்சு. —; பேச்சு… —; பேச்சு… —; பேச்சு… மதியம் சுமார் 3 மணி நேரம் பிடித்த புத்தக வாசிப்பு. மாலையில் நீண்ட நடைபயணம். பின் மறுபடியும் குன்றின் உச்சியிலிருந்து சூர்யாஸ்தமனம் பார்த்தல் (கையில் தேனீர்க் குடுவையுடன்); குளித்துவிட்டு இரவுணவு, சுத்தம் செய்தல். பின்னர் இருகுடும்பத்துக் குழந்தைகளும் போட்டுக்காட்டும் நாடகங்கள், படிக்கும் கவிதைகள், கதைகள் இன்னபிற போன்றவை. ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு நல்ல படம். ஆக ஒரு அந்த்ரெய் தார்கோவ்ஸ்கி / டெப்ரா க்ரானிக் / குரஸாவா அகிரா / ரிச்சர்ட் லின்க்லேடர் / ரித்விக் கடக் / பால் தாமஸ் ஆன்டர்ஸன் / ஆந்த்ரே வய்தா / இங்க்மர் பெர்ன்மன் படம்… பத்துமணிக்கு மேல் நட்சத்திரங்கள், ஆகாஷகங்கை (பால்வழிப் பாதை) தரிசனம். அன்றைய கேல் கதம்.
… கனவா நனவா எனக் கூடத் தெரியாமல் சில நாட்கள் இப்படிச் சென்றன. இப்படியே ஆனந்தமாகச் சென்றிருக்கலாம்தாம், ஆனால்…
அன்று மே மாதம் 16ஆம் தேதி. :-(
லோக்சபா தேர்தல்கள் முடிந்து, அதன் முடிவுகள் (வானொலியில்தான்; நண்பர் வீட்டிலும் தொலைக்காட்சி இல்லை!) வந்து கொண்டிருந்தன. திடுக்கிடவைத்த செய்தி: தமிழகத்து 39 தொகுதிகளில், திமுக-விற்கு 18 கெலிப்புகள்! அய்யய்யோ! எனக்குப் பிரமை பிடித்துவிட்டது. உண்மையிலேயே விக்கித்துப் போய்விட்டேன். :-( வெறுப்பாக இருந்தது – பாரதீயத்தின், தமிழின், தமிழகத்தின், தமிழனின் நிலை என்னவாகுமோ என்கிற மன பேதலிப்பில் பேயறைந்தவன் போலானேன்…
-0-0-0-0-0-0-
தேர்தலுக்கு முன், பல மாதங்கள்போல வெறி போல, திமுகவுக்கு எதிரான வாக்குச் சேகரிப்பிலும், இன்னபிற பணிகளிலும் மூழ்கியிருந்தேன். அவற்றைப் பற்றி இப்போது விவரமாகச் சொல்ல/எழுத எனக்கு அயர்வாக இருக்கிறது.
ஆனால், எனக்கு ஏற்பட்ட பல விதமான அனுபவங்களின் சாராம்சத்தைக் குறிப்பிடவேண்டும்; அவை :: தமிழகத்து நடைமுறை ஜனநாயகம் – படித்த பொதுஜனங்களின் விட்டேற்றித்தனம் – கீழ்மட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் – செயல்வீரர்களுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் – பாவப்பட்ட காவல்துறையினர், வருவாய்த் துறையினரின் கஷ்டங்கள் – தேர்தல் ஆணையத்தின் (பல) மகத்தான நம்பிக்கை நட்சத்திரங்கள் – தேர்தல் பணியில் உள்ள அயர்வுகள்/அழுத்தங்கள் – தவிர்க்கவேமுடியாத தள்ளுமுள்ளுகள் – தலைவர்களின் கீழ்மைகள், அற்பத்தனங்கள் – திராவிடத்தமிழ் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் குடிகாரர்களின், பிரியாணி வியாபாரிகளின், 500ரூ நோட்டுகளின் பங்கு – ஊழல் பணத்திலேயே ஊழல் செய்து அமுக்கும் கீழ்மட்டத் தலைவர்கள் – முனகும் மத்தியதரவர்க்கத்தினரின் நொதுமல் நிலை – சாய்வு நாற்காலி அறிவுஜீவிகளின் ஆர்பாட்ட அலட்டல்கள் – ஒன்றையுமே துப்புரவாக அறிந்து கொள்ளாமல், அரசியல் வரலாற்றையே அறியாமல், பொத்தாம்பொதுவாக கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் வாக்காளர்கள் – இளைஞர்களின் நம்பவே முடியாத திகைக்கவைக்கும் அறியாமையும் ஜாதிவெறியும் – என, மேற்கொண்டும், இன்னமும் பலப்பல விதமான படிப்பினைகள். ஆனால், இவற்றைப் பற்றி நேரடியாக இதுவரை நான் ஒன்றும் எழுதவேயில்லை! (ஒத்திசைவு எனும் இந்த ஒரு வலைப்பூவை ஆரம்பித்தது கடந்த 2011 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்புதான் – இதனை ~ 2011 மார்ச் மாதத்தில்தான் தொடங்கினேன்)
ஆக, மேற்கண்ட மாதங்களில் என்னுடைய உழைப்பு என்பது தமிழகக் கந்தறகோளங்களின் மீதுமட்டுமே கவிந்திருந்தது. என் மனைவி, வெறுத்துப்போய்ச் சொன்னது போல எனக்கு அப்போது பிடித்திருந்தது சாதாரண வெறியல்ல, அது பேய்வெறிதான். :-(
-0-0-0-0-0-0-
நான் அப்போது எதிர்பார்த்தது – இந்த திமுக மிகக் குறைவான தொகுதிகளில்தாம் வெற்றி பெறுமென்று! ஆனால்… ஊழலிற் பெருவலி யாவுள, சொல்லுங்கள்?
ஆக திமுகவின் 18 தொகுதி வெற்றியென்பதை நான் (கொஞ்சம் குழந்தைத்தனமாகவே!) என்னுடைய சொந்தத் தோல்வியாகப் பார்த்தேன். நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் – சுய வெறுப்பினாலும் கையலாகாத்தனத்தினாலும் உழன்று கொண்டிருந்தேன். என்னுடைய நாற்பத்திச் சொச்ச வருடங்களில் இம்மாதிரி வேதனையை நான் அனுபவித்ததே இல்லை!
ஒரு இயந்திரம் போல வீட்டுவேலை செய்து கொண்டிருந்தேன்… மனமெல்லாம், மண்டையெல்லாம் ஒரே வன்முறை சார்ந்த எண்ணங்கள்.
ஆனால் நல்லவேளை, என் மனைவி என்னை விட, பலப்பல மடங்கு புத்திகூர்மையும் சாதுர்யமும் உடையவள்; என்னைவிட என்னை நன்றாகவே தெரிந்து /அறிந்து கொண்டவள். ஆகவே அவள் சொன்னாள் (=ஆணையிட்டாள்) – “டேய் ராம், நீ தோட்டத்துக்குப் போய் காய்கறிப் பாத்திகளை உருவாக்கலாமே? Take out your negativity man, and that is an ORDER!”
சாதகபாதகங்களை ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்கும் சமன மன நிலையில் நான் அப்போது நிச்சயமாக இருந்திருக்கவில்லை. ஆக, சிரமேற்கொண்டில்லாவிட்டாலும் கரமேற்கொண்டு, அவள் சொன்னசொல்படி உடனடியாகச் செய்ய ஆரம்பித்தேன்.
தோட்டத்தில் கட்டாந்தரையாக இருந்த, நிழலில்லாத பகுதியை தேர்ந்தெடுத்தேன். வடக்கு தெற்காக 18 அடி நீளம் – 3 அடி அகலம் – 3/4 அடி ஆழம் — என்கிற அளவில் ஒரே மாதிரியான நான்கு நீண்ட பாத்திக் குழிகளை வெட்டியமைத்தேன். பின் குழிகளுள்ளே (மட்கிய) உரத்தைப் போட்டு நன்றாகக் கலந்து, நான்கு மகாமகோ உயர்த்தப் பட்ட பாத்திகளை (raised beds) உருவாக்கினேன். கொஞ்சம் நீர் பாய்ச்சி, ஈரப் பதத்தைக் தக்க வைப்பதற்காக மூடாக்கும் போட்டேன். ஆக, படைபடைக்கும் வெயிலில் இரண்டு நாட்களில் வேலை முடிந்தது. மொத்தமாகச் சுமார் 20 மணி நேர வேலை. என்னுடைய வெறுப்பெல்லாம் திசைதிருப்பப் பட்டு, கடின உடலுழைப்பால் மழுங்கடிக்கப்பட்டு, கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது உபயோககரமாக ஆனது…
இப்படி இரண்டு நாள் கடின உழைப்புக்குப் பின், நானும் ஓரளவுக்காவது சமன நிலைக்கு வந்து, பழையபடி சிரித்துப் பேச ஆரம்பித்தேன்.
ஆக, ‘கருணாநிதி வெஜிடபிள் பேட்ச்சஸ்’ (Karunanidhi Vegetable Patches) எனச் செல்லமாக எங்களால் அழைக்கப் படும் இந்தக் காய்கறிப் பாத்திகளில் – சென்ற ஐந்து வருடங்களில் அவரை, தக்காளி, பீன்ஸ், நூல்கோல், கேரட், முள்ளங்கி, கொத்தவரை, கொத்தமல்லி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரைகள் எனப் பலவகை காய்கறிகள் காய்த்துள்ளன.
… இந்த நண்பர்களுடன் எப்போது உரையாடினாலும், ‘கருணாநிதிக் காய்கறிப் பாத்தி’யில் இப்போது என்ன காய்க்கிறது என்பது ஒரு மிக முக்கியமான அங்கம் வகிக்கும் ஒரு நகைச்சுவைக் கேள்வி. இப்போது யோசித்தால், காலத்தின் இடைவெளியில், இந்த பாத்திகளை அமைத்த விஷயமே நகைச்சுவையாகத்தான் இருக்கிறது!
ஹ்ம்ம்… எது எப்படியோ — எனக்குத் தெரிந்து, கலைஞர் கருணாநிதி அவர்களின் 75 வருடங்களுக்கு மேற்பட்ட தீரவேதீராத அரசியல்சமூகத் தொண்டினால், தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட (=விளைந்த) ஒரே நன்மை – இந்த காய்கறித் தோட்டம்தான். அதுவும், அது என் உபயம் மட்டுமேதான் என்பதை பணிவடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-0-0-0-0-0-
நடக்கப்போகும் இந்த 2014 ஏப்ரல் 24 தேர்தலில், நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, என் அனுமானத்தில் – இந்த முறை, என் உதவியெல்லாம்(!) இல்லாமலேயே, திமுகவின் நிலை பரிதாபமாக்கப் படும் எனத்தான் தோன்றுகிறது, இது என் விருப்பமும் கூட.
தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் – நிச்சயமாக நல்லதாகவே (=மோதி!) விஷயங்கள் நடக்கவேண்டும். ஆனால், அப்படி முழுவதும் நடக்க முடியாவிட்டாலும் தீயசக்திகள் ஒழிக்கப் படவேண்டும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.
ஏனெனில், நான் தமிழகத்தின், இந்தியாவின் — வளமான, சுபிட்சமான எதிர்காலத்தைப் பற்றி, அளவிலா நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
நீங்களும்தானே?
முன்குறிப்பு: 16 மே, 2014 செய்தி:
திமுக கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது! ;-)
March 6, 2014 at 13:33
// நிச்சயமாக நல்லதாகவே (=மோதி!) //
ஒன்று மோதி இல்லையானல் நல்லது இரண்டில் ஒன்று தானே இருக்க முடியும்?
நிச்சயம் மோதி இருந்தால் நல்லது இருக்க வாய்ப்பில்லையே
March 6, 2014 at 14:39
ஐயா இன்றைய (06/03/14) நிலவரப்படி தமிழ்நாட்டு நிலையை பார்த்தால்,அனேகமாக நீங்கள் இன்னொரு ‘கருணாநிதிக் காய்கறிப் பாத்தி’ அமைக்க வேண்டி இருக்கும் என நினைக்கிறேன்.
March 6, 2014 at 19:14
வினோத்……
கொஞ்சம் கண்ணைத்திறந்து உலகத்தை பார்க்க முயற்சி செய்யுங்கள்…..
நல்லது செய்யாமலா தொடர்ந்து மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
March 10, 2014 at 08:56
ஐயா அப்படியானால் உங்கள் கணக்குபடி 3 மூறை முதல்வரானால் நல்லவரா?
சரி அப்படி பார்த்தால் காங்கிரஸ் 60 வருடங்கள் ஏறக்குறைய 12 முறை அரசாண்டது.. அப்போ காங்கிரஸ் மோடியை விட ரொம்ப ரொம்ப ரொம்ப 4 மடங்கு நல்லது .. எனவே காங்கிரஸ், திமுக கூட்டணியை ஆதரியுங்க.. சரியா?
யோசித்து பேசுங்க… இல்லைனா வாங்கின காசுக்கு கூவுறிங்களோன்னு சந்தேகப்பட வேண்டி இருக்கும்
March 7, 2014 at 08:30
சான்றோன் சார்
கலைஞர் மோடி போல எந்த தேர்தலிலும் நிற்காமல் கையை காலை பிடித்து நேரடியாக முதல்வர் ஆனவரா.அவரை மக்கள் 4 முறை தேர்ந்தெடுத்ததாக ஞாபகம்.
கட்சி சொல்லி செய்தது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு ஆய்வாளர் கொலை செய்யப்பட்டதற்கு மொத்த திராவிட கட்சிகளையும் அரை நூற்றாண்டாக திட்டி கொண்டிருக்கிறீர்களே ,குஜராத்தில் எந்த மதம் என்று பார்த்து மாநிலத்தின் பல பகுதிகளில் கொலை வெறியாட்டம் ஆடியதை மறக்க வேண்டும் என்று அதே நேரத்தில் வாதிடுவது அநியாயம் என்று தோன்றவில்லையா
.கொலை வெறியாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் யாரும் சங்க/பஜ்ரங்/பா ஜ க ஆட்கள் கிடையாதா மாறுவேடத்தில் சென்ற திராவிட இயக்கத்தினர் என்று சொல்லி விட்டால் நம்ப தான் சங்க பரிவாரம் பல லட்சம் மக்களை தயார் செய்து வைத்து இருக்கிறதே.முதல் வெற்றி கொலை வெறி ஆட்டதிற்கு கிடைத்த வெற்றி.
இரண்டாம் வெற்றி குசர் பி என்ற பெண்ணும் அவர் குற்றவாளி கணவனும் கடத்தப்பட்டு ,குசர் பி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு ,எரித்து கொல்லப்பட்டதை ,அவள் கணவன் போலி என்குண்டேரில் கொல்லப்பட்டதை பெருமை பேசி வாங்கிய வெற்றி.9 சதவீதத்திற்கு மேல் இருக்கும் மக்களுக்கு ஒரு இடம் கூட போட்டியிட வாய்ப்பு தராமல் அவர்கள் மேல் விதைத்த வெறுப்பை அறுவடை செய்த வெற்றி.
பயனற்ற எதிர் கட்சியும் ,இஸ்லாமியர் மேல் தொடரும் வன்மமும் அதை மெருகேற்ற தொடரும் அவர்களின் ஒதுக்கலும்(மோடி இதுவரை ஒரு ராஜ்யசபா,லோக்சபா,சட்ட சபை தொகுதி கூட இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கியது கிடையாது)அது பெரும்பான்மை மக்களுக்கு தரும் போதையும் தந்தது அடுத்த வெற்றி
12 ஆண்டுகள் முதல்வராக அவர் சாதித்தது என்ன என்பதை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அவர் சாதனைகள் பல்லிளிப்பது மோடி ஆதரவாளர்களுக்கே புரியும் /தெரியும்
March 7, 2014 at 21:29
பூவண்ணன் ‘குசர் பி’ சகிதம் வந்து விட்டார்! SOS!! :-)
பெரியோர்கள் க்ருஷ்ணகுமார், சேஷகிரி, யயாதி, வெங்கட், பொன். முத்துக்குமார் அவர்களே! முடிந்தால் உடனே வியூகம் அமைத்து நண்பர் சான்றோன் அவர்களைக் காப்பாற்றுவீர்களாக! 8-)
பின்குறிப்பு: ‘வினோத்’ அவர்களின் வினோதமான பின்னூட்டத்தை விட்டுவிடவும். பாவம், அவரும் என்னதான் செய்வார்…
எப்படியும், தமிழனின் தலையாய உரிமைகளில் பின்னூட்டவுரிமையும் லைக்குரிமையும் முக்கியமானவை என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!
March 10, 2014 at 08:59
ஆமாம் கேள்வி கேட்பவர்களை விட்டு விடவும்.. இணையமாக போய்விட்டதே.. நேரில் கேட்டால் குறைந்தது மூக்கையாவது உடைக்கலாம்.
March 10, 2014 at 20:52
சேச்சே, மூக்கை உடைப்பது, முதுகில் தட்டுவது, ஆட்டோ அனுப்புவது, ஆளையே (மேலே) அனுப்புவது, கேள்வி கேட்பவர்களை ஒடுக்கிவைத்து ஆட்டம் போடுவது எல்லாம் வேறு கலாசாரம். இங்கு அதை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.
March 8, 2014 at 10:54
திரு.பூவண்ணன் போன்றவர்கள் அரைத்த மாவையே அரைப்பதில் மிக வல்லவர்கள்.தனக்கு பிடிக்காதது (மோதி அவர்களுக்கு பெருகி வரும் ஆதரவு)நடந்தால் அதை கண்கொண்டு பார்க்க மறுப்பவர்கள்.இன்று வரை 2002 சம்பவத்தை நீட்டி முழக்கி பேசும் இவர்கள்,அந்த
துரதர்சிஷ்டமான சம்பவத்திற்கு காரணமான சம்பவத்தை வசதியாக மறந்து விடுவார்கள்.ஒரு ஆலமரம் வீழ்ந்தால் அதன் அதிர்ச்சி மற்ற இடத்திற்கும் பரவும் என்று வம்படி பேசி 3000 க்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்வதற்கு காரணமான கட்சி தலைவரை போல் இல்லாமல் உடன் ராணுவத்தை அழைத்து கலவரத்தை அடக்கி (போலீஸ் துப்பாக்கி சூட்டின் மூலமே 200 க்கு மேற்பட்ட கலவரகாரர்கள் கொல்ல பட்டு இருக்கிறார்கள்)இன்றுவரை எந்த கலவரமும் நிகழாமல் பார்த்து கொண்டு இருப்பவர் மோதி அவர்கள்.
போலி(போளி!) என்கௌன்ட்டர் மூலம் வெற்றி பெற்றார் என்று ஒரு அபார கண்டுபிடிப்பு.(இதைதான் சொல்வார்கள் போலும் நம் ஊர் பக்கத்தில் “கேழ்வரகு நெய் ஒழுகினால் கேட்பவனுக்கு……)
அடுத்தது இத்தனை காலம்
மாய்மால போலி மதசார்ப்பின்மைவியாதிகளின் புரட்டு பிரசாரத்தால் மதி மயங்கி இருந்த முஸ்லிம் மக்கள் உண்மை நிலைமையை உணர்ந்து மோதிக்கு பெருவாரியாக வாக்களிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.அதன் பலன்தான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியாக முஸ்லிம் மக்கள் உள்ள salaya முனிசிபல் கார்பரேசன் தேர்தலில் 27 இடங்களையும் கைபற்றியது அதில் 24 பேர் முஸ்லிம்கள் ,காங்கிரசுக்கு பல இடங்களில் டெபொசிட் கூட கிடைக்கவில்லை.
” இஸ்லாமியர் மேல் தொடரும் வன்மமும் அதை மெருகேற்ற தொடரும் அவர்களின் ஒதுக்கலும்பெரும்பான்மை மக்களுக்கு தரும் போதையும் தந்தது அடுத்த வெற்றி” என்று குறிப்பிடபட்டிருக்கும் 2012 தேர்தலில் 32% முஸ்லிம் மக்கள் மோதிக்கு வாக்களித்து இருக்கிறார்களே,இவர்கள் எல்லாம் எந்த போதைக்கு ஆட் பட்டார்கள்?(ஒரு வேலை நமது “டாஸ் மார்க்கா” இருக்குமோ பூவண்ணன் தான் ‘தெளிவு’ படுத்தவேண்டும்).ஒரு கட்சி ஒருவரின் திறமையின் அடிப்படையிலும்,அவருக்கு வெல்ல வாய்ப்பு இருப்பதை பொறுத்தும்தான் MLA ,MP சீட் கொடுக்க முடியும். இப்பொழுது கீழ் மட்ட அளவில் கொடுத்து இருக்கிறார் இனி கொடுப்பார்.( ஒப்புக்காக MLA ,MP சீட் கொடுத்தால் மட்டும் போதும் போலிருக்கு இவருக்கு)
இறுதியாக கருணாநிதி உட்பட திராவிட கட்சிகளை இன்னும் தூக்கி பிடித்து கொண்டு இருக்கும் இவரை (தங்கள் வலைதளத்தில் வந்த பல விவரங்களை படித்த பின்னும்)திருத்த முடியாது என்று நன்கு தெரிந்த பின்னும் இந்த பின்னூட்டம் இட்டதன் காரணம் இதை படிக்கும் மற்றவர்கள் உண்மையை உணரட்டும் என்றுதான்.
March 10, 2014 at 07:58
சேஷகிரி சார்
STOCKHOLM SYNDROME என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா.அதை போல தான் சிலருக்கு தங்களை அடிமைபடுதுபவர்கள்/கொடுமைபடுதுபவர்கள் மீதும் அவர்கள் தங்களை உண்மையில் பாதுகாக்கிறார்கள் என்ற மாயை ஏற்படும்.
தன கட்சியில் இல்லாத குறிப்பிட்ட சாதியை சார்ந்த வெற்றி பெற கூடிய தலைவர்களை மாற்று கட்சிகளில் இருந்து வலைவீசி பிடிக்கும் பா ஜ க கட்சியில் இருக்கும் ஒரு சில இஸ்லாமியர்களில் ஒருவருக்கு கூட சட்டசபை,பாராளுமன்றம்,ராஜ்யசபை எதற்கும் இடம் வழங்காத போதும்,நாம் ஐந்து நமக்கு 25 என்று தேர்தல் பிரசாரங்களில் வெறுப்பை கக்கியவர் மீது சிலர் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதை GUJARAT SYNDROME என்று அழைக்கலாம்.வருங்காலத்தில் GUJARAT SYNDROME என்று இந்த கூட்டு மாய மனநிலையை பிரதிபலிக்கும் சொல் பல இடங்களில் பயன்படும்
March 10, 2014 at 16:48
அப்போ உங்களுக்கு பிடித்திருப்பது ‘கருணாநிதி SYNDROME ‘ மா அல்லது திராவிடர் SYNDROME ‘ மா அல்லது ‘மோதி PHOBIA ‘வா?
பி.ஜே.பி கட்சி தலைவர்களில் ஒருவரான திரு.ஷா நவாஷ் உசேன் இந்திய அரசாங்க வரலாற்றிலேயே மிக இளம் வயதில் முதன் முதலில் ‘காபினட் அந்தஸ்துடன் கூடிய மத்திய மந்திரி பதவி வகித்தவர்.
பி.ஜே.பி கட்சி தலைவர்களில் ஒருவரான திரு.முக்தர் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சர் ஆக பணி புரிந்துள்ளார்.
பி.ஜே.பி கட்சி தலைவர்களில் ஒருவரான திரு.சிக்கந்தர் பக்த்,மத்திய தொழில் துறை மந்திரியாகவும்,ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகவும் ,கேரளா ஆளுநராகவும் பணி புரிந்துள்ளார்.
March 10, 2014 at 20:54
// STOCKHOLM SYNDROME என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா.அதை போல தான் சிலருக்கு தங்களை அடிமைபடுதுபவர்கள்/கொடுமைபடுதுபவர்கள் மீதும் அவர்கள் தங்களை உண்மையில் பாதுகாக்கிறார்கள் என்ற மாயை ஏற்படும். //
பூவண்ணன் சார், உங்கள் பதிவில் இதுவரை நகைச்சுவை இல்லை என்ற குறையை இப்போது தீர்த்துவிட்டீர்கள்.
March 10, 2014 at 09:01
அட அப்படிபட்ட உத்தமர் பற்றி வன்சாரவின் வாக்கு மூலத்துக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?
ஒரு பெண்னை உளவு பார்க்க மானில காவல் துறையே பயன்படுத்டிய மர்மம் என்ன ?
March 9, 2014 at 08:29
அன்புள்ள ராம்,
உங்கள் கருணாநிதி நிந்தனை எமக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.
அவர் ஒரு தனி மனிதன் அல்ல. W G Grace போன்ற ஒரு பல்கலைக் கழகம். அவரை மானசீக குருவாக ஏற்று அரசியல் செய்யும் எங்கள் தலைவர் திரு அரவிந்த கேசரிவாலவறினார் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்கின்றோம்.
கருணாநிதியைப் பார்த்து எம் தலைவர் கற்றுக் கொண்டவை பல.
1. அவர் பெரியாரை மீறி அரசியலில் இறங்கினார். இவர் பெரியவர் அன்னா ஹசாரேவை மீறினார்.
2. அவர் மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். இவர் ஒரு நாள் தர்ணா செய்தார்.
3. தமிழ்த்தாய் மீது ஆணையிட்டு தனித்தமிழ் நாடு கேட்டார். இவர் தன் குழந்தைகள் மீது சத்தியம் செய்து மாறினார்.
4. அவர் ரயில் முன் படுத்து சத்யாகிரகம் செய்தார். இவர் ரயில் பவன் முன்.
5. அன்று கொல்றாங்கப்பா. இன்று குஜராத்தில் அடிக்கறாங்கப்பா.
6. அங்கு ‘நான் சூத்திரன்’. இங்கு ‘மேரி க்யா அவுகாத் ஹை. மே ஏக் சோட்டா ஆத்மி ஹூங்’
இவ்வாறு கலைஞரை அடி ஒற்றி வழி நடக்கும் எங்கள் தலைவர் ஒரு நாள் நாடாள நேரலாம். எச்சரிக்கை.
அப்படி ஏதாவது நடந்து விட்டால், அலெக்சாண்டரின் அரிஸ்டாட்டில் போல, கேசரிவாலறிவனாரின் கலைஞரும் போற்றப் படுவார் என்று உங்களை எச்சரிக்கிறேன்.
இவண் ,
Anti Kejriwal
March 9, 2014 at 09:36
அய்யோ அனானி!
கத்துவதனால் ஆயபயன் என்கொல் கேசரிவாலறிவன் நற்றாற் தொழார் எனின் — என்று சொல்லுகிறீரோ? புரிந்தது அய்யா, ஆனால், நான் வால் என்பதை வால் என்பதாக மட்டுமே அறிபவனதலால் நன்றியுடன் அன்னாரைத் தொழுது அதனை (அதாவது வாலாகப்பட்டதை) ஆட்டுகிறேன்.
அன்னார் சபர்மதி சென்று ஸாக்ஸ் பாதங்களுடன் சர்க்காவில் நூல் நூற்கும் காட்சி அலாதியாகவே இருக்கிறதல்லவா?
http://www.thehindu.com/todays-paper/tp-national/kejriwal-sellout-not-development-in-gujarat/article5765780.ece
March 10, 2014 at 10:55
http://kadayanallur.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/
கேஜிரி வாலுக்கு கேஜ்ரி வால்…
கேள்விக்கு என்ன பதில்.. டீ கடையில் டீ சப்பிட்டு கொண்ட்டே சொல்லவும்
March 10, 2014 at 05:24
என்ன சார்,
“மோதியைப் பற்றிய (ஏன், இந்தியாவைப் பற்றியுமே கூட!) பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?” இன்னும் முழுமையாகவில்லையா ? (மேற்படி தலைப்பில் ஒரு புத்தகமே தேவைப்படும் என்பதால் கேட்கிறேன்) உங்களது தளத்தில் இன்னும் கிடைக்கவில்லையே !
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
March 10, 2014 at 09:07
தங்கள் வலைத்தளத்தில் 08.03.14 அன்று நீங்கள் பதிவிட்ட கீழ் கண்ட தலைப்பில் வந்திருந்த கட்டுரையைக் காணோம்!
“மோதியைப் பற்றிய (ஏன், இந்தியாவைப் பற்றியுமே கூட!) பொய்ச் செய்திகள் எப்படி பரப்பபடுகின்றன? நாம் இவைகளை எப்படி புரிந்துகொன்டு எதிர் கொள்ளவேண்டும்?”
இதில் திரு.பூவண்ணன் அவர்களின் ‘சதி’ ஒன்றும் இருக்காது என நம்புகிறேன்!
March 10, 2014 at 18:58
நானும் இதையே தானே சார் சொல்கிறேன்.
மோடியை பற்றிய பொய்கள் எப்படி இந்தியா,உலகம் முழுவதும் பரப்பபடுகின்றன ,எப்படி இந்தியாவில் தான் முதலில் விமானம்,ராக்கெட் ,க்ளோனிங் முறைகள் எல்லாம் இங்கு பல ஆயிரம் வருடங்களாக இருந்தன என்ற நகைச்சுவைகளை போல மோடியின் சாதனைகள் என்று கூச்சமில்லாமல் வடிகட்டிய பொய்களை சொல்ல முடிகிறது.
ஆண் பெண் சதவீதம் ,பெண் சிசுகருகொலை ,பெண் கல்வி,குஜராத்திகள் ராணுவத்தில்,மத்திய அரசு பணிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மேலும் மோசமடைந்த நிலை,சீக்கிய விவசாயிகள் மீதான நிலத்தை பிடுங்கும் செயல்கள்,டாடாவிற்கு ,அதானிக்கு பல ஆயிரம் கோடி சலுகைகள் கொடுப்பது,10 வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தின் விமானத்தில் உரிமையோடு தனி பயணம் செய்து கொண்டு இருப்பது நியாயமான செயலா ,30 வயது பெண்ணை ATS பிரிவை சார்ந்த காவல்துறையினரை கொண்டு பல லட்சம் செலவு செய்து மாநிலத்திற்குள்,வெளி மாநிலங்களில் வேவு பார்த்தது ,அபப்டி பார்த்தவர்களுக்கு கட்சியில் பதவி ,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட குசர் பி,எந்த வித குற்ற பின்னணியும் இல்லாத 19 வயது கல்லூரிக்கு செல்லும் பெண்ணை போலி என்குண்டேரில் கொன்றது என்ற எதற்கும் பதில்கள் சொல்லாமல் குஜரத் தான் சிறந்த மாநிலம் என்று கிளிபிள்ளை போல கூவ பல ஆயிரம் பேரை தயார் செய்து வைத்திருப்பது உண்மையில் பெரிய சாதனை தான்
March 10, 2014 at 20:08
\\ ஒரு ஆலமரம் வீழ்ந்தால் அதன் அதிர்ச்சி மற்ற இடத்திற்கும் பரவும் என்று வம்படி பேசி 3000 க்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்வதற்கு காரணமான கட்சி தலைவரை \\
சேஷகிரி சார் நீங்கள் இன்னும் சரியாக அப்டேட் ஆகவே இல்லை.
1984ல் தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த படுகொலையில் காங்க்ரஸ் தலைகளுக்கு பங்குள்ளது — ன்று பப்பு மம்மியிடம் கூட கேழ்க்காது — அர்னாப்பிடம் டிவியில் கக்கியுள்ளது.
ஆனால் பூவண்ணன் சார் அவர்களின் கண்டுபிடிப்பாகப்பட்டது 1984ல் தில்லியில் நிகழ்ந்த படுகொலைகள் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையே நிகழ்ந்த கலவரம். பூவண்ணன் சாரிடம் இது சம்பந்தமாக வண்டி வண்டியாக உரலாயுதங்கள் உள்ளன. ஜாக்ரதை.
உரலுடையார் பொய்க்கஞ்சார்.
ஒரு ரவுண்டு — குசுர் பி – யாஹ் அல்லாஹ் ரெஹம் கர் – கௌஸர் பீ பற்றி நீங்கள் — போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் – இத்யாதி வக்காலத்து சம்பந்தமான நேரடி விஷயம் பற்றிப் பேசாது ராமசாமி சாருடன் கலாய் கலாய் என கலாய்த்தது நினைவுக்கு வருகிறது.
புதிய மொந்தையில் பழைய கள்.
பூவண்ணன் சார் கலக்குங்கள்.
March 10, 2014 at 20:33
அர்விந்த் கேஜ்ரிவால் — தனது வெறுப்பு டப்பாங்குத்து ப்ரசாரம் மூலம் முகநூல் பக்கங்களில் கேப்மாரிவால் – என்று செல்லப்பட்டம் பெற்றுள்ளார்.
\\ இங்கு ‘மேரி க்யா அவுகாத் ஹை. மே ஏக் சோட்டா ஆத்மி ஹூங்’ \\
அதெல்லாம் கேசரி வாலறிவனார் சமயத்துக்கு ஏத்தாப்போல் போடும் டப்பாங்குத்து. பய புள்ள இது வரை சர்க்காரி பங்களாவை காலி பண்ணவில்லை. 65 பங்கு வாடகையும் கொடுக்கவில்லை. Headlines Today வின் ராகுல் வாலறிவனாரை சோம்நாத் பாரதி பற்றி மொத்து மொத்தென மொத்த கடுப்பான வால் ராகுலின் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்று அசடு வழிந்ததே.
நரேந்த்ரபாய் அவர்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போது “அவுகாத் கயா தேல் லேனே”.
முன்னாள் முக்யமந்த்ரியை இன்னாள் முக்ய மந்த்ரி எப்படி பார்க்காமால் இருக்கலாம் என்று ஒரே அழுவாச்சியாக அழுதாரே.
இந்தப் புளுகுவால் தான் 49 நாள் முக்யமந்த்ரியாக இருந்தபோது தில்லியில் உள்ள எல்லா ஆஸ்பத்திரியிலும் மருந்துகள் கிடைத்ததாம்; போலீஸ் காரர்கள் யாரும் லஞ்சமே வாங்கவில்லையாம்; ஆர்.டி.ஓ ஆஃபீஸில் இருந்த தலால் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டார்களாம். இதை ஒவ்வொரு டிவியிலும் புளுகித் தள்ளியுள்ளார்.
டிவி காரங்க யாரேனும் கேமராவை எடுத்துக்கொண்டு போக நினைத்தாலும் இன்று தானே போக முடியும். நேற்று நடந்தது என வால் ஆப்படிப்பது தான் மெய். உலகமே பொய். ஃபோர்ட் ஃபவுண்டேஷன் சொல்லிக்கொடுப்பது தான் மெய்.
வால் வால்க.