[ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது!

February 25, 2016

இங்கிலாந்தில் வாழும் ஷகீல் ஹாஷிம் எனும், பதினெட்டு வயதேயாகும் இந்த இளைஞன், ஒரு பள்ளி மாணவன்; இந்தச் சிறு வயதிலேயே ‘த எகனாமிஸ்ட்,’  ‘த ஸன்’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் அளவுக்குத் திறன். இவன் போன்றவர்கள் (எல்லா விதங்களிலும்) வளர்ந்து, இஸ்லாமையும் முஸ்லீம் இளைஞர்களையும் கடைந்தேற்றுவார்கள் எனத்தான் படுகிறது.
Screenshot from 2016-02-25 07:49:02
இந்த இளைஞன், இங்கிலாந்தின் ‘ஸன்’ பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையின் மொழிமாற்றம் தான் இந்தப் பதிவு. பாரீஸ் நகாத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் நடத்திய படுகொலைகளுக்குப் பின், ஷகீல் 17 நவெம்பர் 2015 அன்று எழுதிய கட்டுரை வடிவிலுள்ள பகிரங்க அறிக்கை/கோரிக்கை இது. (=In wake of violence it’s time for a new version of Islam)

இந்த மொழிமாற்றத்தைச் செய்தது – முன்னமே இம்மாதிரி ஒரு பதிவுக்காக உழைத்தவர்தான்! (=அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள் 03/02/2016)

-0-0-0-மொழிமாற்றம் ஆரம்பம்-0-0-0-

வன்முறைகளுக்குப் பின்,  இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது!
[ஷகீல் ஹாஷிம்]

ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமாகிய நான், இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) அமைப்பு இஸ்லாமுடன் தொடர்புடையதுதான் என்று மற்ற முஸ்லிம்களுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கும் விளக்கம் கொடுத்துக் கொடுத்து வெறுத்துப் போய் விட்டேன்.
Screenshot from 2016-02-25 07:51:49
சமூக ஊடகங்களில்-வலைத்தளங்களில்,  பாரிஸ் மக்களுக்கு ஆதரவும், இணக்கமும் தெரிவித்து இடுகைகளும் செய்திகளும் குவிகின்றன.

இதைத் தொடர்ந்து இந்த ஐஎஸ் வெறியர்கள்  ‘உண்மையான முஸ்லிம்கள் அல்லர்‘ என்று கண்டித்தும் ‘ஐஎஸ் அமைப்பிற்கு இஸ்லாமுடன் எந்தத் தொடர்பும் இல்லை‘ என்று வற்புறுத்தியும் ஆயிரக்கணக்கான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன, எழுதப்படுகின்றன.

ஆனால் ஐஎஸ் அமைப்பின் நம்பிக்கை என்ன என்பதில் நமக்கு ஒரு தெளிவு வேண்டும். ஜிஹாத், இனப்படுகொலை மற்றும் உலகளாவிய ஒற்றைப்படை இஸ்லாமிய தேசம் போன்ற கருத்துக்கள் எல்லாம் எங்கிருந்தோ காற்றுவாக்கில் வந்து சேர்ந்தவை அல்ல. மேலும், ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு பக்ர் அல்-பக்தாதி சொந்தமாக இவற்றையெல்லாம் உருவாக்கும் திறன் கொண்டவர் அல்லர். இந்தக் கருத்துகளுக்கான வேர், உண்மையில் –  இஸ்லாமிலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் திரிக்கப்பட்ட விளக்கங்களிலும் உள்ளது.

ஆனால், பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்தக் கருத்துகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்காத அமைதி விரும்பிகள் தான்.

ஆனாலும் – இஸ்லாமின் ஒரு குரலாக வெளிப்படும் ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்திற்கு ஆதரவு அளிக்கும் கருத்துக்கள் என்பவை குர்ஆன் புத்தகத்திலும், இஸ்லாம் மத இறைத்தூதர் மொஹெம்மத் அவர்களால் சொல்லப்பட்டதாகக் கருதப்படும் சொற்களிலும் உள்ளவை என்பதே உண்மை.

ஆகவே – மனப்பிறழ்வு கொண்ட ஐஎஸ் வெறியர்களை தோற்கடிப்பது தான் நாம் இந்த வருடத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பணி. இதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டியது மிக அவசியம்.

ஐஎஸ் அமைப்பு கூறும் திரிக்கப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இஸ்லாம் (அது உண்மையில்லை என்றாலும்) என மற்றவர்கள் எண்ணக்கூடும் என்று பிரிட்டிஷ் முஸ்லிம்கள் கவலைப்படுவது நியாயம் தான்.

இம்மாதிரி [பாரிஸ்] போன்ற கொடூர செயல்களுக்குப் பின் இனவாதம், தவறான அபிப்ராயத்தினால் வரும் ஒரு தலைபட்ச மனச்சாய்வு ஆகியவை அதிகமாகக்கூடும். ஆனால் ஒருவருடைய இனமோ மதமோ,  நாம் அவரை மோசமாக நடத்துவதற்குக் காரணமாகக் கூடாது.

அதே சமயம், பிரச்சனைகளை உண்மையாக [நேர்மையாக] நாம் எதிர்கொள்ள, இந்தக் கவலைகள் எல்லாம் தடையாக இருப்பது தான் சிக்கல்.

அயான் ஹிர்ஸி அலி என்பவர், இஸ்லாமைச் சீர்திருத்த முனையும் ஒரு முன்னாள் முஸ்லிம். இவர் ட்விட்டர்-இல் சொன்னது – ” ஐஎஸ் அமைப்பிற்கும் இஸ்லாமிற்கும் தொடர்பு இல்லை என்றும், இதைப் பற்றி விவாதிப்பதே இஸ்லாமிய எதிர்ப்பு என்றும் முஸ்லிம்கள் கூறும் வரை அவர்கள் இஸ்லாமிய சீர்திருத்தத்திற்கு தயாராக இல்லை என்பதே உண்மை.” அவர் சொல்வது முற்றிலும் சரி.

…இந்தச் சூழலில் பெரும்பாலான முஸ்லிம்கள் செய்யும் தவறு இதுதான் – இனவாதத்திற்கு இலக்காக நேரிடுமோ என்று எண்ணி தற்காப்பாக முன்கூட்டியே அதற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுத்து விடுவது. இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம். (இம்மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது – விவாதமோ சமரசமோ உருவாவதை ஆரம்ப நிலையிலேயே தடை செய்து விடுகிறது.)

பொது இடங்களில் சற்றுக் கூடுதலான பாதுகாப்பு சோதனைக்கு ஆளாகும் பிரிட்டிஷ் முஸ்லிம் இங்கே பாதிக்கப்பட்டவர் அல்லர். ஆனால் – காரணமின்றி பாரிஸில் பலியான ஆண்களும், பெண்களும், மத்தியக் கிழக்கு நாடுகளில் லட்சக்கணக்கில் செத்துக்கொண்டிருக்கும் மக்களும் தான்.

நீங்கள் இந்தத் தீவிரவாதிகளை எவ்வளவு கண்டனம் செய்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை. இஸ்லாமை ஆய்வுக்கு உட்படுத்தி பிரச்சனையை அறிவது தான் நாம் செய்யவேண்டியது.

குர்ஆன்-இல் உள்ள வன்முறையைத் தூண்டும் வசனங்களை கண்டறிந்து அவை எல்லாம் அறவே நீக்கப்பட்ட ஒரு பிரதியை உருவாக்க வேண்டும். அவ்வசனங்களை அவை சொல்லப்பட்ட காலத்திலும் சூழ்நிலையிலும் நினைவில் கொண்டு படிக்க வேண்டும் என்று கூறுவது வீண் பேச்சு. இவற்றைத் தவறாகப் பொருள் கொள்ளவும் திரிக்கப்படவும் சாத்தியம் மிக அதிகம். அவற்றுக்கு நம் சமூகத்தில் எந்த இடமுமில்லை என்பதால் அவற்றை நீக்குவது ஒன்றே வழி.

இதைச் செய்த பின் உங்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நண்பர்களிடம் பேசுங்கள். சீர்திருத்தப்பட்ட ஒரு இஸ்லாமிய மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுவதாக சொல்லுங்கள்.

இப்படித்தான் ஐஎஸ் அமைப்பினரிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இஸ்லாமிற்கு மாற்றமும் சீர்திருத்தமும் தேவை. ஐஎஸ் அமைப்பை எதிர்கொள்ளும் முறை இதுவே.

இம்மாற்றங்களுக்கு நடைமுறையில் உதவ, பல வழிகள் உள்ளன. அதில் சிறந்தது ஒரு சமூகமாக (குழுவாக) இத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவது; இதில் அனைவரும் தம் பங்கினை ஆற்ற வேண்டியது மிக அவசியம். பிரிட்டிஷ் முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்வது போல் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து உதவுவது. இது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும். ஆபத்தான பாதையில் போகும் ஒருவரை முன்னரே கண்டு கொண்டால் சரியான நேரத்தில் திசை மாற்றி விட முடியும்.

இமாம்களுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. தங்கள் அமைப்பில்/குழுவில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து, அமைதியை உருவாக்கும் செய்திகளைப் பரப்பி மேம்பட்ட இஸ்லாம் வளர ஊக்கமளிப்பது அவர்கள் கடமை.

நமது மதம், இனம் என்ற வட்டத்தை விட்டு ஒரு சமுதாயமாக நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல்களை வெல்ல முடியும். அனைவரும் இணைந்து ஆற்ற வேண்டிய பணி இது.

ஐஎஸ் தீவிரவாத கும்பலுக்கு எதிராக இரு முனைகளில் நடத்த வேண்டிய போர் இது – அரசு ராணுவ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் கருத்துக்களால் தொடுக்கப்படும் போரை எதிர்கொள்ள முஸ்லிம்களாகிய நம்மால் மட்டுமே முடியும்.

அதற்கான முதல் அடியை நாம் எடுத்து வைப்போம்.

-0-0-0-மொழிமாற்றம் முடிந்தது-0-0-0-
பிற, தொடர்புள்ள பதிவுகள்:

 

4 Responses to “[ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது!”

  1. vignaani's avatar vignaani Says:

    இந்தப் பதிவுக்கும் இதற்கு முன் வந்த குரானும், ஹடீதும் (சுன்னாவும்) மாற்றத்துக்கு உள்ளாகலாம் என்ற ரட்வானின் கட்டுரை மொழிபெயர்ப்புக்கும் இஸ்லாமியர்கள் எதுவும் கருத்து சொல்லவில்லை; உங்கள் வாசசகர்களில் உள்ள (உள்ளனர் என்றே நான் நம்புகிறேன்) எதிர் லாவணி பாடாததே ஒரு நல்ல அறிகுறி; அவர்களிலும் நடுநிலை அறிவுஜீவிகள் இது போன்ற கருத்துக்களை வரவேற்கிறார்கள் என்பதே திருப்தி அளிக்கிறது. தங்கள் பணியைத் தொடருங்கள்..


    • அய்யா, எனக்கும் அதே நம்பிக்கைதான். எனக்கு தனிப்பட்ட முறையில் வந்துள்ள மின்னஞ்சல்கள்படி, ஆறு முஸ்லீம் இளைஞர்களாவது இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள் எனத்தான் நினைக்கிறேன்.

      சரி. இந்த மொழிமாற்றங்களுக்கு உதவ ஐந்தாறு பேர் ஓடிவந்திருக்கிறார்கள்; உங்களுடைய நன்றி அவர்களுக்குத்தான் போய்ச்சேர வேண்டும்.

  2. ravi's avatar ravi Says:

    whether this kid will be allowed to go further ?? thats my worry!!


Leave a Reply to vignaani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *