ஜெயமோகன்(மஹாமஹோபாரதம்) = வெண்முரசு

January 2, 2014

மஹாபாரதம், உலகத்தின் பொக்கிஷங்களில் மகத்தானதொன்று என்பதில் ஒருவருக்கு ஐயமேயிருக்கமுடியாது. அதை நான் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதும் இல்லை.

மஹாபாரதம்

“In a short story by Jorge Luis Borges, the narrator buys from an enigmatic bookdealer an ancient tome written in an indecipherable Indian script: the Book of Sand, so named because like the sand it has no beginning and no end. Whenever he opens the book, he finds different paragraphs and different illustrations on pages whose shifting numbers make no sense. Soon he becomes obsessed by the book’s fathomless depths, and his evenings are spent consumed in its protean secrets. I suspect that when Borges wrote his story, he had the Maha·bhárata in mind.” (Into the Fray: An Introduction to the Maha·bhárata – By Vaughan Pilikian)

… ஒருகாலத்தில், அனுபவித்து அனுபவித்து, பரீட்சைக்குப் படிப்பது போல ஜுர வேகத்தில் பல மஹாபாரதங்களைப் படித்திருக்கிறேன். இங்கு, திளைத்திருக்கிறேன்  என்பதுதான் சரியான பதமாக இருக்கும். இனிமையான நாட்கள் அவை.

தட்டுத் தடுமாறி – எழுத்துக் கூட்டி, ஸம்ஸ்க்ருத, தமிழ் மூலங்களையும் உபகதைகளையும், தடுமாறாமல்  ஆங்கிலப் பிரதிகளையும் படிக்க  முயன்றிருக்கிறேன். யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் என்கிற ரீதியில் சில வருடங்கள் முன்பு ஒரு ஆங்கில மூலப் பதிவொன்றும் எழுதியிருந்தேன்.  (ebrahim alkazi, studying mahabharatha – some notes 31/03/2008)

சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் –  நண்பர் ஒருவருடன் வைத்த ‘பெட்’ காரணமாக  முழுவதுமாக ‘மெட்றாஸ் பாஷை’ கொச்சைத் தமிழில் சுமார் 46000 வார்த்தைகள் விரிந்த (அல்லது வெகுவாகச் சுருக்கப்பட்ட), சகஜமான வன்சொற்கள் மிகுந்த அப்பேர்க்கொத்த மவாபார்தத்தை, சூத்தில் சூடு வெச்சாமாரீ எள்தினேன். ’பெட்’டில் வெற்றி பெற்றேன் – கர்ணன், ஏகத்துக்கும் குந்தியைத் திட்டுவது நன்றாக வந்திருந்தது என்றாள் அவள்; இதைத் தவிர பாஞ்சாலி, பீமனைத் தவிர்த்து மற்ற பாண்டவர்களைப் படுகேவலமாக விமர்சித்ததும் அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால், சில நாட்களுக்குப் பின் யோசித்ததில், எனக்கு  ஒருவிதத்தில் மிகவும் சங்கடமாக இருந்தது. ஒரு மகோன்னதக் கலாச்சாரக் குறியீட்டை மலினப் படுத்துவதாகப் பட்டது. எரித்து விட்டேன்.  Good riddance.

ஆம். மஹாபாரதம் என் நெடுநாள் காதலி.

-0-0-0-0-0-0-0-0-0-

வாரத்துக்கு இருமுறை மின்னஞ்சல் பார்க்கும் பேறுபெற்ற நான், பொதுவாக திட்டிவரும் மின்னஞ்சல்கள் தாம் பெரும்பாலும் வருவதால் –  அசிரத்தையாகவே என் மின்னஞ்சல் பெட்டியை இன்று திறந்தால் – அதில், பல விஷயங்களுக்காக நான் மிகவும் மதிக்கும் ஜெயமோகன் எழுத ஆரம்பித்திருக்கும் மஹாபாரதத் தொடர் பற்றிய ஒரு அறிவிப்பு! மிக சந்தோஷமாகவே இருக்கிறது.

பிரமிப்பாகவும் இருக்கிறது. கொஞ்சம் குண்டு தைரியம் என்று சொல்லலாம் கூட. தொடர்ந்து பத்து வருடங்கள் முனையவேண்டும் – அதுவும் நம் தமிழில் – என்பது மிக மிக  அசாதாரணமான விஷயம். கன்னட, மலையாள, ஹிந்தி மொழிகளின் எழுத்துக் கலாச்சாரத்தை, அரசியலை (ஆப்த நண்பர்கள் மூலமாக) ஓரளவு அறிந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ள எனக்கு – இப்படி யாராவது இம்மொழிகளில் கிளம்பினால், மிகுந்த ஆச்சரியம் இருந்தாலும் – பிரமிப்பு  இருந்திருக்காது.

ஆனால், ஜெயமோகன் எழுதவிருப்பது நம் தமிழில். ஆக, தடைகளை, மனச்சலிப்பை, சராசரித்தனங்களை, தமிழ்ச்சூழலுக்கே உரித்தான அற்பப் பொச்சோதிபொச்சரிப்புகளை எதிர்கொண்டு அவரும் அவருடைய மஹாபாரதமும் பொலிய என் வாழ்த்துகள்.

ஆழமும் வீச்சும் மிக்க ஒரு ஆளுமையால்தான் மஹாபாரதத்தின் மஹோன்னதத்தை வெளிக் கொணர முடியும். இதற்கு அப்பாற்பட்டு, ஜெயமோகனிடம், கடும்-குவிந்த உழைப்பும், படிப்பறிவும், அனாயாசமாக நீளக் கட்டுரைகளை தொடர்ந்து வடிக்கும் திறனும் இருக்கின்றன. நம் தமிழ்ச் சூழலில் இவையனைத்தையும் ஒரளவுக்குப் பெற்றவர்கள் மிகக் குறைவு. இப்படியேயிருந்தாலும், மேலும் மேலும்  தனக்குத் தானே சோதனைகளைச் செய்துகொண்டு, குன்றிலிட்ட விளக்குக் குறிக்கோட்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து தன்னையும் சூழல்களையும் முன்னேற்றிக் கொண்டு செல்பவர்கள், மிகச் சொற்பம்.

இவர் தொடர்ந்து மேலெழும்ப வாழ்த்துகளும், முக்கியமாக நன்றியும்.

எனக்கு ஒரு குறிப்பு: வாரம் ஒரு முறையாவது வெண்முரசு-வைப் படிக்கவேண்டும். தொடர்ந்து, விடாமல்  படிக்கவேண்டும்.

-0-0-0-0-0-0-0-

இலியட், ஆடிஸ்ஸி குறித்த பதிவுகள்…

ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள் 12/10/2013

டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட் + கொஞ்சம் தவிப்பு) 15/10/2013

ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள் 13/10/2013

இகாரஸ்புத்திரன்(!), இகாரஸ்குமார்(!!) இன்னபிற – சில ‘டயரி’ குறிப்புகள் 16/10/2013

5 Responses to “ஜெயமோகன்(மஹாமஹோபாரதம்) = வெண்முரசு”

  1. சரவணன்'s avatar சரவணன் Says:

    ஜெயமோகனின் உழைப்பை மு.கருணாநிதியின் உழைப்புடன் மட்டுமே ஒப்பிட முடியும்!

  2. A.seshagiri's avatar A.seshagiri Says:

    மதிற்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்கள் “மகாபாரத தொடர்” எழுதுவது குறித்து நீங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு உங்களுக்கு மிக்க நன்றி.தங்களுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
    திரு. ஜெமோ அவர்களால் மிகவும் பாராட்டப்பட்ட திரு. செ.அருட்செல்வப்பேரரசன் அவர்கள் ஒரு வலைத்தளம் உருவாக்கி அதில் வேத வியாசரின் வட மொழி மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் திரு. கங்குலி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு இருந்த
    ‘மகாபாரதத்தை’ வரிக்கு வரி தமிழில் மிகுந்த பொருட் செறிவுடன் மொழி பெயர்த்து வருகிறார்.அதன் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன். இவர்களை போன்றோரை நாம் பெற்றது நம் பெரும் பாக்கியம்.
    http://mahabharatham.arasan.info
    https://www.facebook.com/arulselva.perarasan
    https://www.facebook.com/tamilmahabharatham

    —>>> அன்புள்ள சேஷகிரி, மிக்க நன்றி; அருட்செல்வப்பேரரசன் அவர்களைப் பற்றி நான் உங்கள் மூலம் அறிந்துகொண்டேன். தன்யனானேன். :-)

    உண்மைதான். இவர்கள்/இவைகளெல்லாம் நாம் பெற்ற பாக்கியம்தான். And, of course, we are living in exciting times!

    __ரா.


  3. இன்னிக்குப் போற இடமெல்லாம் மஹாபாரதம் குறித்தே படிக்க நேர்ந்தது! :)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *