கொஞ்ச நாட்களாக ஏன் ஒத்திசைவில் ஒரு பதிவுமில்லை, எழுதுவதுமில்லை?
November 29, 2024
…எனப் பலர் கேட்டிருக்கின்றனர்…
ஐயய்யோ! நாக்கூசாமல் புளுகிக் கொட்டக் கூடாது. அப்படி ஒருவரும் கேட்கவில்லை. ஏன், நானே கூடக் கேட்டுக்கொள்ளவில்லை.
(ஆனாலும் அனுதினமும் பலர் வந்து ஏதாவது புதிதாக ஒப்பேற்றப் பட்டிருக்கிறதா என பயபீதியுடன் வந்து பார்க்கிறார்கள் எனத் தெரிகிறது – பாவம்!)
பல பிரபல சககால தமிழ் எழுத்தாளன்களின் வழியொற்றி நானே எனக்கு இன்னுமொரு-புனைபெயரில் ஒரு உருகல் ‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா…’ கடிதம் எழுதிக்கொண்டு அதற்கு ஒரு மேதாவி பதிலையும் போட்டு மினுக்கிக் கொள்ளலாம் என்றால் அதற்கும் என் செல்ல சோம்பேறித்தனத்தைக் கைவிடவேண்டியிருக்குமே ஐயன்மீர்! நேர மேலாண்மையைக் கடைபிடிக்க வேண்டியிருக்குமே! இதெல்லாம் ஒத்துவருமா?
ஆகவே,
வழக்கம்போலவே ஏதேதோ காரியங்கள். க்ரஹஸ்தி வேலைகள். செஞ்சோற்றுக் கடன்கள். கண்டதையும் படித்துக் கொண்டிருப்பது. போக்கற்று என்னைத் (என்னைப் போய்!) தேடிவரும் பாவப்பட்ட இளைஞர்களுக்கு இலவச அறிவுரை மயம். ஓரிரு நவீனத்தொழில்நுட்ப சிறுதொழில்முனைவுகளுக்கு ஒத்தாசையாக இருப்பது போல உபத்திரவம் கொடுத்தல். சிலபல அநியாயத்துக்கு ஜொலிக்கும் நபர்களுடன் (ஓரிரு புத்தறிமுக இளைஞர்கள் உட்பட) தொடர்பு கொள்ளும் பாக்கியம். எத்தையாவது வடிவமைப்பு செய்கிறேன் பேர்வழி என நோண்டிக் கொண்டிருப்பது. எலான்மஸ்க் Xல் கொஞ்சம் காலக்ஷேபம். போதாக்குறைக்கு ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்ற அல்டிமேட் சான்றோர்களின் (ஸ்வாமி ஸர்வப்ரியாநந்தா உட்பட) விடியொக்களைப் பார்த்து ஆடியொக்களைக் கேட்டு விகசிப்பு, பெரும் திகைப்பு.
இசை. சிலசமயம் வசை.
…சில புத்துருக்கு தொழில்நுட்பங்களின் வசீகர சாத்தியக்கூறுகளில் சுகமான அதிர்ச்சி. சில ஆப்த நண்பர்களுடன் ஏறத்தாழ அனுதினமும் உரையாடும் சந்தர்ப்பங்கள். ஹாஸ்யங்கள்… வாழ்க்கையில் வேறென்ன வேண்டும், சொல்லுங்கள். கொட்டிக் கிடக்கின்றன பொக்கிஷங்கள்.
…அப்படியிப்படி. என…
அவ்வளவுதான்.
அதே சமயம்.
‘ஜேஜே: சில குறிப்புகள்’ நவீனத்தில் வருவது போல: ~~ “செய்து முடித்துவிடக்கூடிய காரியங்களையும் செய்யமுடியாமல் செய்துவிடும் இந்த அசட்டை… இது என்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.”
பார்க்கலாம்.
🙏🏾



